தேங்காப்பட்டணம்

வாழ்த்துரை

(14-10-2007 அன்று பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியின் போது யான் வாசித்தளித்த கவிதை)

ஒரு
மீனவக் குப்பத்தை
வானாளாவ உயர்த்திவைத்த
தீனோர்களுக்கு என் ஸலாம்

சாதிக்கென சங்கங்கள்
வீதிக்கொன் றிருக்கையிலே
ஆதியிலே அராபியரை
ஆரத் தழுவியதோர்

வேதமுறு மார்க்கமதாம்
சோதிமிகு இஸ்லாத்தை
ஆதியிலே – பாரத
மேதினியில் பரப்புதற்கு

காரணமாய் திகழ்ந்த
கடல் சூழ்ந்த இவ்வூர்க்கு
சங்கைமிகு இச்சங்கம்
சாலப் பொருத்தம்

என் ஆசான்
அப்துல் கபூர் அவர்களின்
உள்ளங்கவர் ஊர்
உங்கள் ஊர்

அந்த சந்தக்கவியை
நினைக்கையில் எல்லாம்
என் சிந்தையில் வந்து வந்து
இந்த ஊர் நிழலாடும்

வெள்ளித்திரை
வெற்றிகளுக்கே
வெற்றி விழா காணும்
வியாபார உலகில்

பழமை மிகு
பள்ளிக்கு பேர்போன
நல்லூரின் அமைப்புக்கு
இன்று வெள்ளி விழா !
மனந் துள்ளும் விழா!

தென்னைக்குள்
ஒளிந்திருக்கும்
இளநீருச் சுவைப்போல

தேங்கைக்கு
பல்வேறு
சுவைகள் உண்டு

இலக்கியத்தில்
இவர் பங்கு
ஏராளம் ஏராளம் !

இதற்கு
இன்பத்தமிழ் ஒன்றே
சான்றுரைக்கும் !

எண்ணற்ற அறிஞர்களை
ஈன்றெடுத்த பெருமைகள்
இவ்வூர்க்குண்டு !

பாலகவி
பக்கீர் சாகிப்
பாடிவைத்த
பாடல்களோ
பல நூறு .. ..

காலத்தால் அழியாத
காப்பியங்கள் வரலாறு.

குஞ்சுமூசா புலவரது
வாழ்த்து மாலை .. ..
குறையாத இன்பம் தரும்
இன்றும் நாளை.         

திருமலர் மீரான் முதல்
தேங்கை சர்புத்தீன் வரை
தீந்தமிழுக் காற்றியதோர்
மாபெரும் பங்கு.

மாலிக் இப்னு தீனாரின்
மகிமையினை பறைசாற்றும்
மாண்புகளை கூறிடவா?

‘அந்த அரபிக்கடலோரம்
உன் அழகைக் கண்டேனே !’ –என
அமுத கீதம் பாடிடவா?

‘நிங்கள்’ கேரளத்து நேசம்
உங்கள் பேச்சிலுண்டு வாசம்

தமிழுக்கு நீங்கள்
வார்த்த வார்த்தைகள்
வாசித்திட இயலாது ..!

கொசுவுக்கு ஒலுங்கென்று
சொல்லுவது
உங்களூரில் மட்டும்தான் !

– தேங்கா பட்டணம்
– தென்னை பட்டணம்
– தென் பட்டினம்
– தெற்கைபட்டினம்
– தர்ம பட்டணம்
– தேங்கை
– தேங்கையூர்
– குழந்தை நகர்

இவையாவும்
இவ்வூரின்
அழகுத் திருநாமங்கள்

– வண்டமிழ்
– தண்டமிழ்
– தீந்தமிழ்
– பைந்தமிழ்
– செந்தமிழ்
– இயற்றமிழ்
– இன்பத்தமிழ்
– முத்தமிழ்
– காவியத்தமிழ்

என்று விளங்கும்
எந்தமிழுக்கு
அடுத்தபடி ..

இத்தனை திருநாமங்கள்
இவ்வூருக்கு மட்டும்தான் !

வல்லிய பள்ளி .. .. ..!

விசாலம்
உங்கள் பள்ளியின்
பெயரில் மட்டுமல்ல

உங்கள்
மனதிலும்தான்.

இல்லாத குமர்களுக்கு
இல்வாழ்க்கை வகுப்பதுவும்;

கல்விக்கண் திறப்பதுவும்;
கரமுதவி நீட்டுவதும்;

மார்க்கப் பணிகளுக்கு
மனமுவந்து அளிப்பதுவும்;

பட்டியலிட்டாலும்
படித்து மாளாது.

நற்பணிகள் தொடரட்டும்;
நாயனவன் அருள்மழைகள்
நாள்தோறும் பொழியட்டும்.

அன்புடன்
அப்துல் கையூம்

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: