
இதயத்தின் முகவரி சொன்னவர்
ந. மம்மது
1916 மார்ச் இருபத்தி ஒன்றாம் நாள் தும்ரான் கிராமம் (தும்ரான் என்ற வட்டாரம் இன்றைய பீகார். பௌத்த விகாரங்கள் நிறைந்த மாநிலம் பீகார். (விகார் – பிகார் – பீகார்) திராவிட மொழியமைப்பில் வகரம் பகரமாவது இயல்பு. (வங்காள தேசம் – பங்களாதேஷ்)
இனி செய்திக்கு வருவோம். தும்ரான் கிராமத்தில் மேற்சொன்ன நாளில், ஒரு சின்னஞ்சிறிய வீட்டில் ஒரே அமைதி. ‘ஆண் குழந்தை’ என்றொரு குரல் உள்வீட்டிலிருந்து; பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருப்பெயரால்) என்று மற்றொரு குரல் ஆசுவாசப்படுகிறது. பின்னால் பிஸ்மில்லாகான் என்ற பெயரே நின்று நிலைத்து விடுகிறது. சிறுவயதில் கமருதீன் என்றும் அழைத்துள்ளார்கள்.
பிஸ்மில்லாகானின் முன்னோர்கள் அரண்மனை இசைக்காரர்கள். குறிப்பாக தும்ரான் இராஜதானிக்கு. இளைய பிஸ்மில்லாகான் இருபதாவது வயதில் கங்கைக்கரை காசிக்கு செல்கிறார். காசி விசுவநாதர் ஆலயத்தில் அவருடைய மாமா அலிபக்ஸ் (விலாயத்து) இசைச் சேவையில் ஈடுபட்டிருந்தார். அவரே பிஸ்மில்லாகானிற்கு செனாய் ஆசானாகிறார்.
எழுபது ஆண்டுகள் காசியிலும், கங்கைக்கரையிலும் ஏன் உலகமெல்லாம் சுழன்றடித்த அந்த இசைத் தென்றல் 2006 ஆகஸ்ட் 22ம் நாள் செனாய் இசையில் இரண்டறக் கலந்து விட்டது.
1947 ஆகஸ்ட் 15 முதல் இந்திய சுதந்திரதின விழாவில் பிஸ்மில்லாகானின் இசைக் கருவியிலிருந்து எழுந்த காஃபிதாட், கேட்ட செவிகளையும் அது சங்கமமான இதயங்களையும் கிறுகிறுக்க வைத்து விட்டது.
காஃபி – தொல்காப்பியம் கூறும் மருதயாழ், சிலம்புச் சுட்டும் கோடிப்பாலை, இன்றைய கரகரகப்பிரியா. ஏழெழுத்து மொழிக்கு காலமேது, வட்டாரமேது, நாடேது, மதமேது, சாதியேது.
இசைக் கருவிகளால் புகழ் பெற்றவர்கள் பலர். வீணை தனம்மாள், வயலின் குன்னக்குடி, தவுல் வலையப்பட்டி, தபலா சாகிர் உசேன் கலைஞர்களால் உன்னதமடைந்த வாத்தியங்களும் உண்டு. இராசரத்தினம் பிள்ளையால் நாகசுரம் புகழடைந்தது. இரவிசங்கரால் சிதார் சிறப்பு பெற்றது. அதைப் போல் பிஸ்மில்லா கானால் செனாய் உன்னத மடைந்தது.
முகவீணை என்ற கட்டைக் குழலை விட நீளம் அதிகமானதும் நாகசுரத்தை விட நீளம் குறைந்தது மான ஒரு நடுத்தர வாத்தியம் செனாய். இராசரத்தினம் பிள்ளை தொடக்க நாளில் வாசித்தது திமிரி நாயனம் என்ற சுருதி அதிகமுள்ள நாகசுர வாத்தியம். திமிரியும் செனாயும் சுருதி கூடியவை. ஓரளவு ஒத்தநாதம் கொண்டது என்று கூறலாம். (இராசரத்தினம் பிள்ளை, பிஸ்மில்லாகான் இருவரும் சந்தித்துக் கொண்டபோது பிஸ்மில்லா கானிடமிருந்து செனாய் கருவியை வாங்கி அற்புதமாக இராசரத்தினம் பிள்ளை வாசித் ததைக் கேட்டு பிஸ்மில்லாகான் புகழ்ந்திருக்கிறார்.)
திமிரியை நீளம்கூட்டி சுருதி குறைத்து இடைப்பாரி நாயன மாக்கிய பெருமை இராசரத்தினம் பிள்ளைக்கும் மதுரை எம்.கே.எம். பொன்னுச்சாமி பிள்ளைக்கும் உரியது. செனாய் நாதத்தோடு இராசரத்தினம் பிள்ளை தொடக்க காலத்தில் வாசித்தது திமிரி நாயனம். மதுரை எம்.கே.எம். பொன்னுச்சாமி பிள்ளை வாசித்தது இடைப்பாரி நாயனம். சேக் சின்னமவுலானா சாகிப் வாசித்தது நீண்ட இன்னும் சுருதி குறைந்த பாரி நாயனம். (இசைக்கருவிகளின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க சுருதி குறைந்து விடும்.)
நம் நாகசுரத்திற்கும் செனாய் கருவிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. நாகசுரத்தைப் போல செனாய் இரட்டையாகவே (துணை செனாயுடன்) இசைக்கப் படுகிறது. நாகசுரத்திற்கு சுருதிக் கருவியாக ஒத்து இருப்பது போல செனாய்க்கு ஒத்து செனாய் இசைக்கப் படுகிறது.
மணவிழாவிலும் உள்ளூர் விழாக்களிலும் செனாய் வாத்தியத்தை அரங்க இசைக் கருவியாக உலக மன்ற அளவில் உயர்த்திய பெருமைக் குரியவர் பிஸ்மில்லா கான்.
முதன் முதலில் இந்துஸ்தானியில் ஆலாபனைக் கேட்டால் குமட்டிக் கொண்டு வரும். இசையின் சுரங்களை எழுத் தெழுத்தாக மெதுவான முதல் நடையில் (Low tempo) கேட்கும் போது ஒலிம்பிக் தரத்திற்கு எழுந்து ஓடத் தோன்றும். மெதுவான நடையில் இசை கேட்டு நமக்கு பழக்கமில்லை. நம் பாடல்கள் பக்தி, மெல்லிசை, திரைப்படப்பாடல் யாவும் இரண்டாம் காலத்தில் (மத்திம காலம்; வாரநடை) அமைந்தவை. மத்திம கால சாகித்தியங்கள் என்ற சொல்லாடலும் உண்டு. முதல் நடையில் பாடல் கேட்கும் நம் பழக்கத்தை மழுங்கடித்து விட்டார் கள் ஒட்டுமொத்த தமிழ் இசையாளர்கள். இதற்கு முதல் சுழி போட்டது போல் “முதல் நடை ராகத்தை தாழ்ந்த செலவுடையது…” என்பார் அடியார்க்கு நல்லார். அதாவது அது இசைக்கு ஏற்ற நடையல்ல என்ற தொனியில்.
தேவாரம் என்பதிலுள்ள வாரம் என்பதற்கு நெடுநாளாகவே நம் அறிஞர்கள் சரியான பொருள் கூறவில்லை என்று வி.ப.கா சுந்தரம் (தமிழிசைக் கலைக் களஞ்சியம் / பக்.147 / III) கூறுகிறார். தெய்வத்திற்கு சூடிய பாமாலை – ஆரம்; எனவே தே+ஆரம்= தேவாரம் என்றே கூறிவந்தார்கள். ஆனால் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிப்பது. வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது. இவ்வாறு தான் நாம் தேவாரத்தை பாடி வந்தோம். “பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். நம் கிராமத்து தாய்மார்கள் மாரடித்து ஒப்பாரி பாடுவது, ஓடப்பாட்டு ஆகியவை முதல் நடையில் தான் அமைந் திருக்கும். தலாட்டும் அப்படியே. முதல் நடையில் ஓரெழுத்தாக பாடினால் வார நடையில் (இரண்டாம் காலம்) ஈரெழுத்தாக பாட வேண்டும். அவ்வாறு இரண்டெழுத்தாக அடக்கி பாடுவதால் அதற்கு அடக்கியல் வாரம் என்ற பெயரும் உண்டு.
இந்த முறை இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 2500 ஆண்டு பழமை உடையது. “முதல் விழியா யினும் யாப்பினும் சிதையும் / வல்லோன் புணரா வாரம் போன்றே” (தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபு / 109). “வாரம் பாடும் தோரிய மடந்தையும்” (சிலம்பு ஊர்க் காண்காதை 14:155) எழுத் தெழுத்தாக முதல் நடையில் ஆலாபனை செய்து, பிறகு இரண்டாம் காலத்தில் பாடும் மரபை பிஸ்மில்லாகானின் செனாய் இசையில் கேட்கலாம். இளங்கோ அடிகளும் சிலம்பில் அரங்கேற்றகாதையில் இதைக் குறிப்பிடுகிறார். “வாரநிலத்தைக் கேடின்று வளர்த்து ஆங்கு / ஈரநிலத்தில் எழுத்து எழுத்தாக” ( 3:67/68 ஈரநிலம் – முதல் நடை – விளம்ப/சௌக்ககாலம் – முதல் வாரம்; வாரநிலம் – இரண்டாம் நடை – வாரநடை மத்திம காலம் – இரண்டாம் வாரம்) இவ்வாறு நம்முன்னோர் இசை பற்றி கூறிய விசயத்தை கை விட்டு விட்டோம். இன்றும் காலைப்பண், மாலைப் பண், பொதுப்பண் மரபுகளையும் கைவிட்டு விட்டோம்.. மத்திம காலம் என்ற இரண்டாம் காலத்தை மட்டும் நாம் கை கொண்டதே நம்மால் நீண்ட நேரம் ஆலாபனை செய்ய முடியாததற்கு ஒரு காரணம். (சுருதிக்கு நின்று பாடுவதில்லை என்பது முக்கியக் குறை. குரல் வளத்தை (Voice culture) பெருக்குவ தில்லை என்பது மற்றொரு குறை. இந்துஸ்தானியில் இருக்கிறது.)
பாலைப்பாணி – கொன்றை யந்தீங்குழல் – கொன்றைக் குழல் – சுத்த சாவேரியை பதினைந்து நிமிடம் ஆலாபனை செய்ய நம்மிடம் ஆள் கிடையாது. ஆனால் பிஸ்மில்லா கான், ரவிசங்கர், ஜஸ்ராஜ், பீம்சன் ஜோஷி இவர்கள் ஒருமணி நேரத்திற்கு மேலாக ஆலாபனை செய்வார்கள். துவிஜா வந்தியைக் கூட முக்கால் மணி நேரம் ஆலாபனை செய்கிறார்கள்.
பேகாக் (பியாக்) பண் – மிக விரிவாக செனாயில் பண்ணக் கூடியவர் பிஸ்மில்லாகான். பாரம்பரியமான பண்கள் மட்டுமல்ல புதிய பண்களான சங்கரா, பகாடியிலும் விரிவாக இனிமையாக பாடக் கூடியவர். தலைவர்கள் யாராவது இறந்து விட்டால் நம் வானொலி அழத் தொடங்கி விடும். “இருபத்தி நான்கு மணிநேரமும் தொடர்ந்து அழ முடியுமா? ஒரு தலைவர் இறந்த அன்று வானொலியை திருப்பிப் பாருங்கள்” என்றார் கவிஞர் கண்ணதாசன்.
நமது தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சோக ரசத்தை கொண்டுவர வடநாட்டு செனாயும், சிதாரையும் பிடித்துக் கொண்டார்கள். நம் திரைப் படங்களில் சோக காட்சிகளில் செனாயை அழவைப்பார்கள். இவ்வாறு செனாய் என்பதை சோக வாத்தியம் ஆக்கிவிட்டார்கள். செனாய் என்றாலே சோகம் என்ற மனப்பதிவை ஏற்படுத்தி விட்டார்கள். ஆனால் செனாய் வடநாட்டில் திருமணங்களிலும் இன்பமான விழாக்களிலும் வாசிக்கப்படும் மங்கள வாத்தியம்.; நம் நாகசுரம் போல. வடநாட்டில் மங்களமானது தென்னாட்டில் சோகமாகி விடுகிறது. வடதமிழ்நாட்டில் முகவீணை நாடகங்களில் மங்கள வாத்தியம் தென் தமிழ்நாட்டிலோ இழவு வீட்டில் வாசிக்கப்படுகிறது.
ஓர் உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். முதல் காலமான மெதுவான வேகத்தில் ‘லலித்’ பண் செனாயில் வரும் போது கான்சாகிப் நம் இதயத்தை பிழிந்து தான் விடுகிறார்.
நாள்தோறும் ஐந்து வேளை தொழக்கூடியவர் பிஸ்மில்லாகான். அவரிடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைந்த மகாஉன்னதம் எது? என்று கேட்டபோது, “ஒவ்வொரு நாள் காலைப் பொழுதும் என்னுடைய செனாய் இசை கேட்டு காசி விஸ்வநாதர் ஆலயக் கதவுகள் திறக்கின்றன. இதுவே நான் வாழ்க்கையில் அடைந்த உன்னதம்” என்று கூறினார்.
பாலாஜி கோயில், சங்கத் மோட்சர், கங்கா மாயா, சரஸ்வதி ஆகியவற்றோடும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. கங்கையையும், காசி யையும் பிஸ்மில்லாகான் நேசித்தது அவருடைய சூஃபிய தன்மையின் அடையாளம். அவர் கங்கை மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார். ஒரு சூஃபியின் இறைக் காதல் போல. கங்கா மாயா என்பது அவர் ஈடுபாடு கொண்டிருந்த கங்கா தெய்வம். தொன்று தொட்டே இந்தியர் – திராவிட பூர்வக் குடியினரின் விருத்திக் கலாச்சாரம் என்ற தாந்திரீக கலாச்சாரம் நீர் அடையாளம்.
‘இழந்த சொர்க்கம்’ பாடிய மில்ட்டன் ஒரு தூய கிறித்தவன். அவர் தேவனைத் தவிர பிற தெய்வங்களில் நம்பிக்கை கொள்ளாதவன். ஆனால் காப்பியம் பாடும் போது முதலில் இசை தெய்வமான ‘மியூஸ்’என்ற தெய்வத்தை அழைத்தாக வேண்டும். உடனே மில்ட்டன் Heavenly muse என்பதாக ஒரு தெய்வத்தையே புதிதாக படைத்துக் கொள்கிறான். பிஸ்மில்லாகான் இசைத் தெய்வம் சரஸ்வதியை வந்தனம் செய்து கொள்கிறவர். முதல் இந்தியக் குடியரசு விழாவில் டெல்லி செங் கோட்டையை நோக்கி ஊர்வலம் செல்கிறது. நேரு உள்ளிட்ட இந்தியப் பெருந்தலைவர்கள் உடன் செல்கிறார்கள். அந்த ஊர்வலத்தில் பிஸ்மில்லாகான் செனாய் இசைக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த இசை செவ்வியல் அல்ல. கங்கையில் ஓடம் வலிக்கும் சாதாரண ஏழைகளின் ஓடப்பாட்டை செனாயில் இசைக்கிறார்.
ராக்பெல்லர் பவுண்டேசன் அவருக்கு அமெரிக்க குடியேற்றம் அளிக்க முன்வந்த போது, “என்னுடைய கங்கையையும் காசியையும் அமெரிக்காவுக்கு கொண்டு வர முடியுமா?” என்று கேட்டவர். மற்ற கலைஞர்களைப் போல புகழ் பெற்றதும் டெல்லி, பம்பாய் என்று அவர் குடியேறவில்லை. ஏன் மருத்துவத்திற்கு கூட பிஸ்மில்லா கான் காசியை விட்டுச் செல்ல வில்லை.
புகழ்பெற்ற வயலின் மேதை எல்.வைத்தியநாதன், தன்னுடைய குழுவினருக்காக பத்து விமானப் பயணச்சீட்டும், ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க ஏற்பாடு செய்ததையும் பிஸ்மில்லாகான் ஏற்க மறுத்துவிட்டார். அண்டை வீட்டுக்காரர் தகரக் கூரைக்கு தண்ணீர் ஊற்றி கோடையில் வெப்பம் தணித்து வாழும் போது, தன்னுடைய வீட்டை குளிர் வசதி செய்ய பிஸ்மில்லாகான் ஒப்புக் கொள்ளவில்லை. காசியின் நெருக்கடி மிகுந்த தெருவில் எந்த வசதியும் இல்லாத வீட்டில் ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்தவர் பிஸ்மில்லாகான். அவர் நெடிய சிந்தையுடன் ஒருமுறை கேட்ட கேள்வி “மானிடம் கடவுளால் படைக்கப் பட்டிருந்தால் மனித உறவில் சமத்துவம் இல்லையே ஏன்?”. ஒரு சூஃபியால் மட்டுமே இப்படி யெல்லாம் கேட்க முடியும்.
பிஸ்மில்லாகான் வாங்கிய விருதுகள்
1956 சங்கீத நாடக அகாடமி விருது
1961 பத்மஸ்ரீ விருது, தேசிய பண்பாட்டு நிறுவனம் வழங்கிய பாரத செனாய் சக்கரவர்த்தி விருது
1968 பத்மபூசன் விருது, பத்மவிபூசன் விருது
1980 மத்திய பிரதேச அரசின் தான்சேன் விருது
1981 காசி இந்து பல்கலைக்கழகம், சாந்தி நிவேதின் பல்கலைக்கழகம், மராத்வாடா பல்கலைக்கழகம் என பல பல்கலைக் கழகங்கள் வழங்கிய டாக்டர் பட்டங்கள்.
பிஸ்மில்லாகான் பிறந்த 1916ல் பிறந்தவர்கள் தான் எம்.எஸ்.சுப்புலட்சுமி, ரவிசங்கர், லதாமங்கேஸ்கர். இந்த நால்வருக்கிடையிலும் உள்ள ஒற்றுமை நால்வருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
நன்றி : புதிய காற்று செப்டம்பர் 2006