Archive for November, 2007
M.G.K. NIZAMUDDIN Ex.MLA (Nagappattinam Constituency)
– எம். ஜி.கே. நிஜாமுதீன்
L.L.B. D.G. Ex. MLA
“அந்த நாள் ஞாபகம்” – இது நாகூரை பற்றி, நாகூர் மக்களுக்காக, நாகூரான் ஒருவனால் நெய்யப்பட்ட பட்டாடை. இதிலுள்ளவை நாகூரில் வாழ்ந்த, வாழும் அனைவருக்கும் தெரியும். ஆனால் உன் வண்டல் மண் மனது தான் நாகூரின் வரலாற்று விதைகளை விருட்சம் ஆக்கியிருக்கிறது.
நீ சொல்லிய அனைத்தும், நீ சொல்ல மறந்த தூய தமிழ்ச்சொல்லாம் “மறுசோறு”, சுவையான தாளுச்சா, எங்கும் காணமுடியாத “சீனிதுவையல்” , அதுவும் வாழைப்பழமும், புலவு சோறும் சேர்ந்து சஹானில் உருவாகும் “பஞ்சாமிர்தக்குளம்”, அதை நால்வர் பங்கு போட்டுக் கொள்ளும் பாங்கு, அரை அடி விட்டமுள்ள “ஜாங்கிரி”, ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் ஆஸாத், யூசுப் – பட்டரைகள். யாசகம் கேட்டுக் வருபவர்களிடம் கூட மாஃப் செய்யுங்கள் (மன்னியுங்கள்) என்று மரியாதை செய்யும் பண்பு அத்தனையும் ‘பிளாஷ்பேக்” ஆக “ஞாபகம் வருதே”.
உன் எழுத்தில் அழகும் உண்டு. “வெள்ளியிலே தகடு செய்து ஏய்ப்போர்” என்று கூறும் தைரியமும் உண்டு.
நாகூர் மண்ணை சுவைத்து பின் அசைபோட்டு ரசிக்கும் நீதான் நாகூரின் மண்ணின் மைந்தன். நீ மலராகி மணம் வீசும் போது மற்றவர்கள் ரசிக்கிறார்கள். நீ கிரெசன்ட் பள்ளியில் மொட்டாக இருக்கும்போதே நான் ரசித்தேன். நீ முளையிலேயே தெரியும் விளையும் பயிர்.
உன்னை கவிஞர்கள், நண்பர்கள், நீ அடையாளம் காட்டிய அனைவரும் பாராட்டுகிறார்கள் ஆனால் உன் ஒவ்வோர் அசைவிலும் ஆனந்தம் கண்ட உன் பாட்டி – என் தாயார் – உன்னைப் பார்த்து மகிழ, பாராட்ட இல்லாதது உன் துரதிஷ்டமே …!
என்ன.. உன் கண்ணீர் கன்னத்தில் உருண்டோடி வாய்க்குள் விழுந்து இனிக்கிறதா ..? அது பாசத்தின் கண்ணீர். இனிக்கத்தான் செய்யும். எனக்கும் அது இனிக்கிரது.. இதை எழுதும் போது.
டாக்டர் அ.அப்துல் ரஜாக்
பெருந்துறை – 17.07.2007