Archive for December, 2008

நாசமத்துப் போ

அப்துல் கையூம்
நன்றி : திண்ணை Thursday May 1, 2008
“உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?” – பாடலொன்றில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நம்மைப் பார்த்து கேட்கின்ற கேள்வி இது.

ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் அமெரிக்கன் வீசினானே அதுபோன்ற வலிமைமிக்க அணுகுண்டா அல்லது கண்டம் விட்டு கண்டம் பாய எந்நேரத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ராட்சஸ ஏவுகணைகளா என்று நாம் விடையைக் குடைவதற்கு முன்பே “நிலை கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குதான் அது!” என்று நாம் சற்றும் எதிர்பாராதவண்ணம் ஒரு பதிலைத் தருவான் அந்த பாட்டாளிக் கவிஞன்.

நயவஞ்சகர்களின் நாக்கு மட்டும்தான் கொடியதா? சிற்சமயம் நல்லவர்களின் நாக்கும் கொடிய ஆயுதமாக உருமாறி விடுகிறதே? கோபத்தில் கொந்தளிக்கும் சாபம் பலித்திருப்பதாகவும் பகர்கிறார்களே? உண்மைதானோ?

வரம்பு மீறி வீசப்படும் வசைமொழிகள் இருக்கிறதே அது அணுகுண்டைக் காட்டிலும் ஆபத்தானது; ஏவுகணையைக் காட்டிலும் நாசம் விளைவிக்கக் கூடியது. சிலர் கடுமையான வார்த்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கக்கி விடுவார்கள். கணநேர ஆத்திரம் அவர்களின் கண்களை மறைத்து விடும். அதன் பின்னர் அவர்கள் அறியாமல் சொன்னதை நினைத்து மனம் வருந்துவார்கள்.

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு”

என்று வார்த்தைகளின் கொடூரத்தன்மையை விளக்குவான் ஐயன் திருவள்ளுவன்.

மனமாரச் சொன்ன வாழ்த்தும், மனமெரிந்து சொன்ன சொல்லும் கட்டாயம் பலிக்கும் என்பார்கள். இரு மனங்களுக்குள் ஏற்படும் திருமண பந்தத்தை, ஊரறிய, உலகறிய ‘சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்’ என்று அழைப்பிதழ் அச்சடித்து, அனைவரையும் வரவேற்று, ஆனந்தம் அடைகிறோம். ஏன்? நான்கு பேர்கள் கூடி நின்று நாவால் முழங்கும் நல்லாசிகள் இளம் தம்பதியினரின் வாழ்க்கையில் வளம் சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பில்தான். “நூறாண்டு காலம் வாழ்க” என்றும் “பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என்றும் ஆன்றோர்களின் ஆழ்மனதிலிருந்து வரும் ஆசிகளுக்கு ஈடு இணையேது?

நான் பிறந்த மண்ணான நாகூரில் சில விசித்திரமான பழக்க வழக்கங்கள் காணக் கிடைக்கும். வாசலில் நின்று யாசகம் கேட்கும் ஆசாமிகளுக்கு ஈவதற்கு ஏதும் இல்லாதபோதும் கூட இல்லத்திலிருப்பவர்கள் இசைக்கின்ற பதில் நம் இதயத்தைக் கவரும்.

“மாப்பு செய்யுங்க பாவா” என்று மனம் நோகாத வண்ணம் கூறுவார்கள். “பாவா” என்றால் தந்தைக்குச் சமமான சொல். “மாப்பு செய்யுங்கள்” என்றால் மன்னித்துவிடுங்கள் என்று பொருள். ஒரு சாதாரண பிச்சைக்காரனிடம் சென்று தாங்கள் ஏதோ தகாத செயல் செய்து விட்டதைப் போன்று மன்னிப்பு கேட்பது விந்தையாக இருக்கிறதல்லவா? உயர்ந்த பண்பாட்டுக்கு இது ஒரு உன்னத அளவுகோள்.

“ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும்” – என் தாயார் எனக்கு அடிக்கடி கூறும் அறிவுரை இது. நம்மைச் சுற்றிலும் இரு வானவர்கள் இருக்கிறார்கள். நாமுரைக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் ‘அப்படியே ஆகட்டுமென்று’ ஆசி வழங்குகிறார்கள் என்பார். உள்ளத்திலிருந்து அல்லாமல் உதட்டளவில் உச்சரிக்கும் வார்த்தைகள் கூட ஒரு சில நேரத்தில் உண்மையாகி விடுவது இதனால்தான்.

நல்ல விஷயங்களை நடைமுறையில் இருப்பதைப்போன்று களைய வேண்டிய கேடு கெட்ட பழக்கங்களும் எங்களூரில் கண்கூடு.

“களிச்சல்லே போவா”, “கொள்ளையிலே போவா”, “படிய விழுகுவா”, “கட்டையிலே போவா”, “கசங்கொள்ளுவா”, “கர்மம் கொள்ளுவா”, “பலா கொள்ளுவா”, இதுபோன்ற வசைமொழிகள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதில் காணலாம். இதன் ஆழ்பொருளை உணருபவர்கள் ஒருக்காலும் இவ்வார்த்தைகளை தங்கள் நாவால் மொழியவே மாட்டார்கள்.

ஒருகாலத்தில் “டயேரியா” என்ற ஒரு கொடுமையான வியாதி பரவி தொடர்பேதி வந்து உயிரைக் குடித்தது. அவ்வியாதி வந்து மாய்ந்துப்போ என்ற அர்த்தத்தில் அமையப்பட்ட ஒரு சொற்றொடர் இந்த “களிச்சல்லே போவா” என்ற வசைமொழி. இன்னும் ஒரு படி மேல் சென்று “ஒரு களிச்சல்லே போவா” என்று திட்டுவார்கள். வியாதி தாக்கிய மாத்திரத்தில் உடனடியாக ஒரு வயிற்றுப்போக்கிலே நீ செத்து மடி என்ற பொருள் பதிந்த மிகக்கொடிய சொற்றொடர் அது.

கொள்ளை நோய் என்பது பிளேக் (Plague) நோயைக் குறிக்கும். ஒரு காலத்தில் இந்நோய் தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம். “கொள்ளையிலே போவா” என்றால் இதைத்தான் குறிக்கும்.

Brain Hemorrhage ஒரு மனிதனை தாக்கும் போது மூளைக்குச் செல்கின்ற நரம்பு மண்டலக் குழாய்கள் வெடித்துச் சிதறும். தடாலென்று கீழே விழுந்து இறந்து விடுவார்கள். இதைத்தான் “படிய விழுகுவாய்” என்று ஏசுவது.

மோசமான மரணமென்பது ‘கோமா’ ஸ்டேஜில் சென்று மடிவதுதான். மரணத் தருவாயில் இறை நாமத்தைக் கூட உச்சரிக்க இயலாது. கோமாவில் இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு மட்டுமே இருக்கும். மற்ற பாகங்கள் செயலிழந்து விடும். உணர்வு அறவே இருக்காது. உடம்பு மரக்கட்டையாக போய் விடும். அதைத்தான் “கட்டையிலே போவா” என்று வசை பாடுவது.

மிகக்கொடுமையான நோய்களில் ஒன்று குஷ்டம். பாதிக்கப்பட்டவனின் தேகத்தை சிறுகச் சிறுக குலைத்து அவன் மேனியழகை சிதைத்து விடும். “கசங் கொள்ளுவா“ “பலா கொள்ளுவா” “கர்மம் கொள்ளுவா” என்று சொல்லுவதும் இக்கொடிய நோய் தாக்கி அவலட்சணமடைந்து சாவாயாக என்ற பொருள்தான்.

பிற்பாடு இந்த உள்ளர்த்தங்களை உணரத் தொடங்கியதும் இத்தகைய வசைமொழிகள் குறையத் தொடங்கின. திட்டுவதிலும் ஒரு சுகம் இருக்கின்றது போலும். அந்த சுகத்தை இழக்க இவர்கள் தயாராக இல்லை. திட்டுகின்ற அதே கடுமையான பாணியில் சில நல்ல வார்த்தைகளையும் கூறத் தொடங்கினர். “அட நீ நல்லா இருப்பே” போன்ற வாசகங்கள் திட்டுகின்ற அதே தொனியில் இருக்கும். ஆனால் வாழ்த்துக்களாக இருக்கும்.

பற்பல ஊர்களில் “நீ நாசமாப் போவா” என்ற ஏசுதலை “நீ நாசமத்துப் போ” என்று சொல்லக் கேட்கலாம் “நாசம் அற்றுப் போ” என்றால் “நாசமெலாம் கலைந்து நீ நன்றாக இருப்பாயாக” என்று பொருள்.

பெரும்பாலான வீடுகளில் தம் பிள்ளைகள் வெளியே போகும்போது “நான் போகிறேன்” என்று விடைபகர்ந்தால் “அப்படிச் சொல்லக் கூடாது. போய் வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள்.

சில வீடுகளில் பிள்ளைகளைப் பார்த்து “எங்காவது போய்த் தொலை” என்று திட்டுவார்கள். இதுவும் திருத்தப்பட வேண்டிய வழக்கங்களில் ஒன்று.

“எண்ணத்தின் அளவே செயல்” என்பார்கள். எண்ணங்களும் பேச்சுக்களும் நல்லவைகளாக இருந்தால்தான் நம்முடைய செயல்களும் நல்லதாக இருக்க முடியும்.

“யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”

என்பது புறநானூற்றுப் பாடல். யானையை வேட்டையாடி வருவேன் என்று காட்டுக்குப் போகின்றவனின் நோக்கம் நிறைவேறுவது திண்ணம். அவனுள் ஏற்படும் அந்த உயர்ந்த எண்ணத்தின் மனபலமானது அவனுக்குள் ஒரு உத்வேகத்தை உண்டு பண்ணுகிறது. முயலை வேட்டையாடி வருவேன் என்று போகின்றவன் வெறுங்கையோடுதான் வருவான். எண்ணம் எப்பொழுதும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டுமென்பது இப்பாடலின் கருத்து.

கம்பராமாயணம், பெரியபுராணம், நெடுநல்வாடை போன்ற நூல்களில் ‘வையம்,’ அல்லது ‘உலகம்’ என்ற மங்கல வார்த்தைகளோடு தொடங்குவதைக் காணலாம் இவைகளை “அமுதச் சொற்கள்” என்று பகுத்தறிந்து சொல்வார்கள்.

இதே ‘சென்டிமென்ட்’ தமிழ்த் திரையுலகிலும் பரவலாகவே காணப்படுகிறது. படப்பதிவின் ஆரம்பத்தில் “வெற்றி! வெற்றி! வெற்றி!” என்று சொல்வதைப் போன்றோ அல்லது “ஆத்தா நான் பாஸாயிட்டேன்” என்றோ வசனங்களை பதிவு செய்வது வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது.

‘தூறல்நின்னு போச்சு’ என்றெல்லாம் படப் பெயர் வைப்பது முறையல்ல. பலபேர்களின் வாயிலிருந்து இவ்வார்த்தைகள் வரப்போக மழையே இல்லாமல் போய்விட்டது என்று ‘டணால்’ தங்கவேலு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நல்ல வார்த்தைகள் மாத்திரமே நம் வாயிலிருந்து வெளி வரவேண்டுமென்பது அவரது ஆதங்கம்.

“பாடமாட்டேன்.. நான் பாடமாட்டேன்” என்ற ஒரு பாடலை நடிப்பிசைப் புலவர் K.R. ராமசாமி ஒரு படத்திற்காகப் பாடினார். அவரது வாக்கு பலித்ததாலோ என்னவோ மேற்கொண்டு அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. இத்தகவலை கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் சொன்னார்.

பாலச்சந்தர் இயக்கிய ‘நீர்க்குமிழி’ என்ற படத்திற்காக வி.குமார் இசையமைக்க பாடல் பதிவு தொடங்குகிறது. சீர்காழி கோவிந்தராஜன் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்று பாடத் தொடங்கியதும் மின்சாரம் நின்று போனதாம்.

டி.எம்.எஸ். மேடையில் எந்தப் பாடலை வேண்டுமானாலும் பாடுவார். ஒரே ஒரு பாட்டைத் தவிர. டி.ராஜேந்தரின் ‘ஒருதலை ராகம்’ என்ற படத்தில் அவர் பாடிய நேரம் பொல்லாத நேரம் போலும். “நான் ஒரு ராசியில்லா ராஜா” என்று அவர் பாடியதற்குப் பிறகு அவருக்கு இறங்குமுகம்தான்.

பெருந்தலைவர் காமராஜர் இறந்து போவதற்கு முன்பு கடைசியாக சொன்ன வார்த்தை “விளக்கை அணைத்து விடுங்கள்” என்பது. இதனை தீர்க்கதரிசன வார்த்தைகள் என்று சில பத்திரிக்கைகள் அப்போது எழுதின. ஒத்தமைவு (Coincidence) என்பதைத் தவிர வேறென்ன இதில் இருக்க முடியும்?

“அழிந்துடுவாய் வேண்டாம்; கெட்டுடுவாய் கெட்டுடுவாய் என்றால் கெட்டேபோவார்கள்” என்று கண்ணதாசன் ஒரு முறை கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட அறிவுரை வழங்குகின்ற கவிஞர் பிறிதோரிடத்தில்

“மன்னவன் பசியால் சாக
மடையர்கள் கொழுத்து வாழ
தென்னவர் நாடு செய்தால்
தீயில்தான் சாம்ப லாகும்
அன்னையே தமிழே இந்த
அறம் வெல்ல வேண்டு கின்றேன்”

என்று தென்னவர் நாடு தீயில் சாம்பலாகுமென அறம் பாடுகிறார். அவர் முரண்பாடுகளின் மொத்த உருவமென்பது இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகிறது.

பாரதி மாத்திரம் என்னவாம்? தமிழ் வாழ வேண்டும் என்ற உள்ளூர எண்ணம் கொண்டிருந்த அந்த மகாகவிஞன் ‘மெல்லத் தமிழினி சாகும்’ என்று சொல்லியிருக்கக் கூடாதுதான். இன்று ஊடகங்களில் உச்சரிக்கப்படும் தமிழை காது கொடுத்து கேட்கையில் பாரதியின் வாக்குதான் பலித்து விட்டதோ என்ற ஐயம்தான் எழுகிறது.

எனது நண்பர் ஒருவர் எதற்கெடுத்தாலும் “எழவு” என்ற வார்த்தையை பயன் படுத்துவார். “என்ன இது ஒரே எழவா போச்சு” – இது அவர் வாயிலிருந்து அடிக்கடி வந்து விழும் வாசகம். ஒருநாள் அவருடைய வீட்டில் உண்மையிலேயே ஒரு “எழவு” விழுந்து விட்டது, அதற்குப் பிறகு அவரது வாயிலிருந்து அந்த வார்த்தை அறவே போய் விட்டிருந்தது.

அறம் பாடிய புலவர்கள் என்று தமிழ் இலக்கியத்தில் நாம் படித்திருக்கிறோம். அறம் என்றால் தர்மம். அரம் என்றால் சாபம். அரம் பாடிய புலவர்கள் என்று சொல்வதே சரியான வழக்கு என்று சிலர் வாதாடுவதுண்டு. எது சரியான சொற்பதம் என்று ஆராய்ந்து நான் குழம்பிப் போனதுதான் மிச்சம். பிரபலமான படைப்பாளிகள் அனைவரும் “அறம்” என்றே கையாண்டிருப்பதால் நானும் “அறம்” என்றே இங்கே கையாண்டிருக்கிறேன்.

“அவன் பொடி வைத்து பேசுகிறான்” என்று பலர் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறோம். உள்ளர்த்தம் வைத்து பேசுவதைத்தான் இப்படிச் சொல்கிறோம். இதே போன்று அறம் வைத்து பாடுவதென்றால் பிறருக்கு கேடு ஏற்படும் வண்ணம் வசை பாடுவது.

அறம் பாடுவதில் பலவகை உண்டு. கடுமையான வார்த்தைகள் அறியாத வண்ணம் வாயிலிருந்து வந்து விழுந்து விடுவது முதல் வகை. போற்றுவது போலும் தூற்றுவது போலும் இருபொருள் பட பாடுவது இரண்டாவது வகை. வேண்டுமென்றே பிறர் நாசமடையும் வண்ணம் நேரடியாகவே சாபம் விடுவது மூன்றாவது வகை. தனக்குத்தானே தீமை உண்டாவதற்கு தானே அறம் பாடிக் கொள்வது நான்காவது வகை.

ஒரு தமிழ்ப் பண்டிதர் தன் மாணவனைப் பார்த்து கீழே அமர்ந்து படி என்ற அர்த்தத்தில் “இரும் படியும் பிள்ளாய்” என்று சொல்வதற்கு பதிலாக சேர்த்தாற்போல் “இரும்படியும் பிள்ளாய்” என்று சொல்லப்போக அவர் வார்த்தை பலித்து பிற்காலத்தில் அவன் இரும்படிக்கும் தொழிலாளியாக ஆகிவிட்டானாம். அறியாமல் வரும் வார்த்தைகள் சிற்சமயம் “சொற்பலிதம் “ ஆகி விடுவதுண்டு.

இன்னொரு தமிழ்ப்புலவர் தன் வறுமையை போக்க வேண்டி ஒரு தனவானிடம் சென்று ஒரு தொகை கேட்டிருக்கிறார். புலவரைப் பார்த்து “காசு என்றால் உனக்கு அவ்வளவு லேசாக போய் விட்டதா?” என்ற பொருளில் “காசா லேசா?” என்று இளக்காரமாக தனவான் கூறியிருக்கின்றார். பணம் படைத்தும் மனம் படைக்காத கருமியின் வார்த்தைகள் புலவரின் உள்ளத்தை முள்ளாய் தைத்துவிட “காசாலே சா” என்று அவர் சொன்ன வார்த்தைளை வைத்தே சாபம் விட்டாராம்.

பிறர் வாயிலிருந்து இதுபோன்ற வார்த்தைகள் வந்து வீழாத வண்ணம் நம்மை நாமே காத்துக் கொள்வது நம் தலையாய கடமை. ஏனெனில் வஞ்சிக்கப்பட்டவனின் உள்ளத்திலிருந்து வேதனை கலந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கு இறைவனின் சபையில் உடனடி அங்கீகாரம் கிடைத்து விடுகிறது.

தேரா மன்னா! செப்புவதுடையேன்” என்று பாண்டியன் நெடுஞ்செழியனின் சபையில் தன் கணவனுக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக வாதாடுகிறாள் கண்ணகி. தீர ஆராயாமல் தவறான ஒரு தீர்ப்பினை கோவலனுக்கு தந்து விட்ட மன்னன்

“யானோ அரசன், யானே கள்வன்
கெடுக என் ஆயுள்”

என்று தனக்குத்தானே அறம் பாடிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வை சிலப்பதிகாரத்தில் நாம் காண்கிறோம்.

அதே போன்று நல்லோரை விலக்கி தீயோரை தீக்கிரையாக்குவதற்கு கண்ணகி விடும் சாபம் இவ்வாறாக இருக்கிறது :

“பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டீர்
மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க ..”

என்று கண்ணகி விட்ட சாபத்தில் மதுரை மாநகரமே தீப்பிடித்த கதையை தன் காவியத்தில் வடிக்கிறார் இளங்கோவடிகள்.

முன்னொரு காலத்தில் நாகூரில் வாழ்ந்த இஸ்லாமியக் கவிஞர் ஒருவர் மீது வேறொருவர் பொய்வழக்கை தொடர்ந்து விட, வெகுண்டுப் போன கவிஞர்

“செல்லா வழக்கை என்மீது தொடுத்தானோ?
அல்லா விடுவானோ அம்புவீர்
நில்லாமல் போகும் அவன் வாழ்வும்…”

என்று அறம் பாட, பாடப்பட்டவரின் சந்ததியே சின்னா பின்னமாகி விட்டதாம்.

சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் தம்புச் செட்டி என்பவரிடம் ரமலான் மாதத்தில் பள்ளிவாயிலில் வினியோகிக்க வேண்டி மாம்பழம் தருவித்திருக்கிறார். அவை யாவுமே அழுகிப்போன பழங்களாக இருக்க பாவலருக்கு வந்ததோ கோபம்.

“கும்மியடிப் பெண்ணே கும்மியடி
தம்புச்செட்டி தலைதெறிக்க கும்மியடி”

என்று பாட அச்சமயம் மாடிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த செட்டியார் கீழே உருண்டு விழுந்தார் என்பார்கள்.

வேறொரு முஸ்லிம் புலவர் சாத்தான் குளம் என்ற ஊருக்கு வந்த போது அவருக்கு அங்கு கொடுமை நிகழ்ந்துப் போக மனம் புழுங்கி

“சாத்தான் குளத்தாரே சங்கைகெட்ட தீனோரே
சோத்தாரே நீங்கள் சுகம்பெறவே மாட்டீர்கள்”

என்று அறம் பாடிச் சென்றதாக ஏடுகள் பகர்கின்றன.

தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராக நக்கீரர் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். குயக் கொண்டான் என்னும் வடமொழிப் புலவனொருவன் தமிழகத்திற்கு வருகை புரிகிறான். தமிழ் மொழியை நீசர் பாஷை என்றும் வடமொழிக்கு நிகர் அது சற்றும் இல்லையென்றும் இழித்தும் பழித்தும் கூறுகிறான். தமிழைத் தரக்குறைவாக கூறுவதைக் கேட்ட நக்கீரருக்கு வந்த கோபத்தை கேட்கவா வேண்டும்? சினங் கொண்ட நக்கீரர்,

“முரணில் பொதியன் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி – அரணிய
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
ஆனந்தஞ் சேர்க்க சுவாஹா”

என்று அறம் பாடி விடுகிறார். வடமொழிப் புலவனின் உடல் தீயிற் பட்டால் போல எரியத் தொடங்கி விடுகிறது.

பாடுவார் முத்தப்பச் செட்டியார் என்ற புலவரொருவர் செட்டிநாட்டுப் பகுதியிலுள்ள செவ்வூர் என்ற ஊருக்குச் சென்றிருக்கிறார். நண்பகல் நேரம். புலவருக்கு கடும்பசி. அவரவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவரை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மனிதருக்கு வந்ததே கோபம்;

“எவ்வூர்க்குப் போனாலும் எத்தேசம் சென்றாலும்
செவ்வூர்க்குச் செல்ல மனம் செல்லாதே – அவ்வூரார்
பாத்திருக்க உண்பார்; பசித்தமுகம் பாரார்;
கோத்திரத் துக்கேற்ற குணம்.”
– என்று பாடி விட்டார்.

அட்டூழியம் புரிந்துக் கொண்டிருந்த லிங்காநாயக்கன் மீது பாடுவார் முத்தப்பச் செட்டியார் அறம் வைத்து பாடிய வசைப்பாடல் இதோ :

“பத்தலார்க்கு உதவுபதி எரசு மேவும்
பாக்கியனே இம்முடிலிங்கேந்த்ரா நின்,
தத்துவாம் பரிகளெங்கே கிரீடமெங்கே
தண்டிகை பல்லக்குமெங்கே தனந்தான் எங்கே,
மெத்தை கொண்ட வீடுமெங்கே யதனுள்மேவும்
மேலான பவுசோடு பண்டாரமெங்கே
சுத்தவீரங்களெங்கே சும்மா போச்சோ
தொப்பைவீரனை வதைத்த தோடந்தானே!”

என்று சபிக்க அவருடைய செல்வமும் பதவியும் பறிபோய் துன்ப நிலையை அடைந்தார் என்ற செய்தியை ஏடுகள் மூலம் அறிகிறோம்.

‘ஆசுகவி வீசு புகழ்க் காளமேகம்’ என்றும் ‘வசைக்கொரு காளமேகம்’ என்றும் அழைக்கப் பட்டவர் கவிக்காளமேகப் புலவர். அபார கவித்திறன் பெற்றிருந்த இப்புலவரை கண்டால் எல்லோருக்கும் குலை நடுங்கும். கோபம் வந்தால் புலவர் அறம் பாடிவிடுவார், எங்கே ஏதாவது கடுமையானதொரு வார்த்தை அவர் வாயிலிருந்து வந்து விடுமோ என்று அஞ்சி அவர் கேட்கும் முன்பே அவருக்கு உணவளிப்பார்களாம்.

ஒருநாள் நாகை வீதியில் சிறுவர்கள் சிலர் பாக்கு கொட்டைகளை வைத்து ‘கோலி விளையாட்டு’ விளையாடிக் கொண்டிருக்க, பசிபொறுக்க மாட்டாத காளமேகம் “சோறு எங்கே விக்கும்?” என்று கொச்சைத் தமிழில் சிறுவர்களுக்கு விளங்கும் வண்ணம் கேட்டிருக்கிறார்.

நாகை வாழ் சிறுவர்களுக்கு கிண்டல் பேச்சுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? “சோறு தொண்டைக் குழியிலே விக்கும்” (விக்கல் எடுக்கும்) என்று நக்கல் செய்து விட்டார்கள். சினமடைந்த புலவர் ஒரு கரித்துண்டை எடுத்து தெருச் சுவற்றில் எழுத ஆரம்பித்து விட்டார்.

“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு….”

என்று எழுதிக் கொண்டிருக்கும் போதே பக்கத்திலிருந்த கோவிலில் ‘ஆலயமணி’ ஒலிக்க புலவர் அங்கே பிரசாதம் வாங்கிச் சாப்பிட விரைகிறார். அதைக் கண்ட சிறுவர்கள் முற்றுப் பெறாமால் இருந்த வாக்கியத்தில்

“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு தமிழ் மணக்கும் நன்நாகை”

என்று எழுதி வைத்து விட்டனர். திரும்பி வந்து பார்த்த காளமேகம் திகைத்துப் போய் நின்று விட்டார். ஏனெனில்

“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு தெறிக்க …..”

என்று வசைபாடும் எண்ணத்தில் எழுதத் தொடங்கிய வரிகளை தலக்கீழாக மாற்றிவிட்ட சிறுவர்களின் சமயோசித புத்தியை எண்ணி வியந்துப் போகிறார்.

கண்ணதாசனின் அண்ணன் மகனுக்கு மகன் பிறந்திருந்தான். கவிஞர் தன் பேரக் குழந்தையைக் காணச் செல்கிறார். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்கிறார்.

“அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்”

என்று தொடங்கி குமுதம் இதழில் ஒரு பாட்டாகவே வடித்து விட்டார். அவர் எழுதிய ஏழே நாட்களுக்குள் அந்தக் குழந்தை இறந்து விடுகிறது.

“அவனை எழுப்பாதீர்;
அப்படியே தூங்கட்டும்
என்றே நான் எழுதியதன்
ஈரம் உலரவில்லை;
ஏழுநாள் ஆகுமுன்னே
இளங்கன்று தூங்கி விட்டான்!
அறம் பாடி விட்டேனோ!
அறியேன்”

என்று துடிதுடித்துப் போய் விடுகிறார். அறம் பாடும் திறம் தனக்குமுண்டு என்ற கவிஞரின் கற்பனையாகவும் இது இருக்கக் கூடும்

தண்டிவர்மனின் மகன், மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனுக்கு தன்மேல் அறம்பாடி கேட்கவேண்டும் என்ற விபரீத ஆசை வந்தது. நந்திவர்மனின் தம்பி, நாட்டை அபகரிக்க வேண்டி தன் தமையனின் தமிழார்வத்தை பயன்படுத்தி அறம் பாடுதலை கேட்க ஏற்பாடு செய்தான். அரண்மனையில் இருந்து மயானம் வரை நூறு பந்தல்கள் போடப்பட்டன. நூறாவது பந்தலின் மேல் நந்திவர்மனை இருத்தி புலவரைக் கொண்டு அறம் பாடசெய்தான். ஒவ்வொரு பாடலின் போதும் ஒரு பந்தல் எரிந்து போனது. இறுதியாக

“வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
வையகம் அடைந்ததுன் கீர்த்தி
கானுறுபுலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந் ததுன் கரங்கள்
தேனுறுமலராள் அரியிடம் சேர்ந்தாள்
செந்தழல் புகுந்ததுன் மேனி
யானுமென்கவியும் எவ்விடம் புகுவேம்
எந்தையே! நந்தி நாயகனே…”

என்ற பாடலை அப்புலவன் பாடியதும், பந்தல் தீப்பற்றி எரிந்தது. மன்னனும் தீயில் சிக்கி உயிர்நீத்தான். இதனை நந்திக்கலம்பகத்தில் காணலாம்.

“செய்யாத செய்த திருமலைரா யன்வரையில்
அய்யா அரனே அரைநொடியில் – வெய்யதழல்
கண்மாரி யால்மதனைக் கட்டழித்தாற் போல்தீயோர்
மண்மாரி யால்அழிய வாட்டு.”

என்று காளமேகம் அறம் பாட திருமலைராயன் ஆண்ட ஊரை நாசமுறச் செய்தான் என்ற தகவல் வேறு நமக்குக் கிடைக்கிறது.

அக்காலத்தில் அறம் பாடிய புலவர்கள் என்று பலபேர்கள் இருந்திருக்கிறார்கள். ஜவ்வாதுப் புலவர், ‘வெண்பாப்புலி’ வீர கவிராயர், வசைக்கவி ஆண்டான், சிங்கம்புணரி சித்தர் முத்தவடு நாதர், பாடுவார் முத்தப்பச் செட்டியார், கவிக் காளமேகம், இரட்டைப் புலவர்கள், என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.

இது தமிழ் மொழியின் சிறப்பென்றும், தமிழ் மொழியைக் கையாண்ட புலவர் பெருமான்களின் கவியாற்றல் என்றும் கற்றவர்கள் கருத்துரைக்கிறார்கள். இதனால்தானோ என்னவோ கவிபாடும் வல்லுனர்களிடம் கவித்திறனோடு சேர்த்து கர்வத்தையும் காண முடிகிறது. “படைப்பதினால் என் பெயர் இறைவன்” என்பார் கண்ணதாசன். பிறிதோரிடத்தில்

“கவிஞன் யானோர் காலக் கணிதம்
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை! அறிக!
நானே தொடக்கம்; நானே முடிவு!
நானுரைப்பது தான் நாட்டின் சட்டம்!”

இதனைக் கவிச்செருக்கு என்பதா? அல்லது தன் கவியாற்றலின் மேல் அவர் கொண்டிருந்த அதிகப் படியான மமதை கலந்த நம்பிக்கையா என்று சொல்லத் தெரியவில்லை. மேலும் அவர் நிதானத்தில்தான் இதை எழுதினாரா என்ற சந்தேகம்கூட பிறக்கிறது,

‘அறம் பாடுவது’ என்ற ஒரு துருப்புச்சீட்டினை வைத்துக் கொண்டே மக்களை அச்சுறுத்தி காரியத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில கீழ்த்தரமான புலவர்களும் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள். இம்முறைகேடுகளை தமிழ்த் தாத்தா உ.வே.சா. ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

எதற்குத்தான் அறம் பாடுவதென்ற ஒரு வரைமுறை இன்றியும் போயிருக்கிறது. காளமேகப்புலவர் இதற்கு நல்லதோர் உதாரணம். இஞ்சிகுடி என்ற ஒரு சிற்றூருக்கு அவர் சென்றிருந்த சமயத்தில் கலைச்சி என்ற தாசியிடம் உறவு கொள்ள ஆசைப் பட்டிருக்கிறார். இவரை அவள் உதாசீனப் படுத்த உடனே அவள் மீது அறம் பாடி விட்டார்.

“ஏய்ந்த தனங்கள் இரண்டும்இரு பாகற்காய்
வாய்ந்தஇடை செக்குலக்கை மாத்திரமே – தேய்ந்தகுழல்
முக்கலச்சிக் கும்பிடிக்கும் மூதேவியாள் கமலை
குக்கலிச்சிக் கும்கலைச் சிக்கு.”

அவலட்சணம் பொருந்திய மூதேவி கலைச்சியை நாய்தான் விரும்பும் என்ற அர்த்தத்தில் பாடலை முடித்திருப்பார். பயந்துப் போன கலைச்சி அவருடைய ஆசைக்கு இணங்க காளமேகம் ‘பல்டியடித்து’ அவளைப் புகழ்ந்து தொலைத்தாராம்.

தகாத செயல்களுக்குக் கூட தமிழ் மொழியின் தெய்வீகத் தன்மையை புலவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் அது தமிழுக்கே இழுக்குதானே?

அல்லலுற்றவன் அழுத கண்ணீர் கொடுஞ்செயல் புரிந்தவனை அழித்துவிடும் என்பது இயற்கையின் விதி. அந்த சாபம்/ அறம் தமிழில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. தமிழுக்கு மட்டுமே அந்த ஆற்றலுண்டு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தவறு செய்தவனை தண்டிக்க இறைவனுக்கு தமிழ்ப் புலவனது பரிந்துரைதான் தேவை என்பதில்லை. தமிழின் சிறப்பாக கூறப்படும் அறம் பாடும் கலையில் மிகைப் படுத்தப்பட்ட சில விஷயங்கள் காப்பிய நடைக்காக மெருகேற்றப்பட்டு இருப்பதென்னவோ முற்றிலும் உண்மை.

——————————————————————————–

காதலர் தினம்

அப்துல் கையூம்

Thursday February 14, 2008

உலகெங்கும் இருக்கின்ற சின்னஞ் சிறுசுகள் அத்தனைப் பேர்களுடைய வயிற்றெரிச்சலையும் ஒட்டுமொத்தமா ஒரேநாளில் வாங்கி கொட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழி.
வெரி சிம்பிள். “காதலர் தினம் ஒழிக”வென்று ஒரே ஒரு கூப்பாடு போட்டால் போதுமானது. இளசுகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நம்மை மன்சூர் அலிகான் மாதிரி வில்லனாக்கி விடுவார்கள்.

“ஏன் அப்பு? இந்த மாதிரி பிரச்சாரம் பண்ணுறதுக்கு எத்தனை பேரு கும்பளா கெளம்பி இருக்கீகே?” என்று இவர்கள் கேட்பது நம் காதில் விழுகிறது.

“காதலர் தினம் வேண்டுமா..
என்று வாதாடவே உங்களுக்கே
இந்த தினம் தேவைப்படும்போது
என்னைப் போன்ற
உண்மைக் காதலர்கள்
கொண்டாடுவதில்தான்
என்னய்யா குற்றம்..?”

இது ஜீவா தம்பி எழுதிய கவிதை. தம்பிகளா! வருஷம் முழுக்க 365 நாளும் காதல் செய்யுங்க. லீப் வருஷமா இருந்தா 366 நாளும் காதலிலே திளையுங்க. யாரு வேணாம்னு சொன்னது?

இன்னும் சொல்லப் போனால் காதல் சமாச்சாரத்திலே நம்ம முன்னோர்கள் சங்க காலத்திலேயிருந்தே ரொம்ப விவரமான பேர்வழிகளாகத்தான் இருந்திருக்காங்க.

தொல்காப்பியம், திருக்குறள், குறுந்தொகை இதிலே எல்லாம் பார்த்தோம்னா காதல் சமாச்சாரத்திலே நம்ம ஆளுங்க சும்மா பூந்து விளையாடி இருப்பாங்க.

காதல் வேணாமுன்னோ, காதலிக்கிறது பாவமுன்னோ எந்த கலாச்சாரமும் சொல்லலீங்க. “அன்பு காட்டுங்கள்; பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்” அப்படித்தான் அனைத்து பண்பாடுகளும் அறிவுறுத்துது.

காதலர் தினம் கொண்டாடுறதுக்கு பல திசைகளிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு வருது. ஏன்னு யோசனை பண்ணிப் பார்த்தா அவுங்க சொல்லுறதுலேயும் நியாயம் இருக்கத்தான் செய்யுது.

“இது கலாச்சார சரிவு, மேலை நாட்டினருடைய வியாபார யுக்தி, இளைய சமுதாயத்தை சீரழிக்கிற செயல், நம் பண்பாட்டை பாழ்படுத்த வந்த சைத்தான்” அப்படின்னு சொல்லுறாங்க.

காதலர் தினம்ங்குற பேருல உலகம் பூரா நடக்குற ஓவர் ஆக்டிங் கூத்தை வச்சுத்தான் இதை தடை செய்யுங்கன்னு அவர்கள் போர்க்கொடி தூக்கி இருக்காங்க.

இதுபோன்ற கட்டாயாத் தடை விதிப்பதினாலே இந்த மோகம் சட்டுன்னு மறைஞ்சுடும்னு நெனக்கிறீங்களா? ஊஹும். அப்படி எந்த அற்புதமும் நடந்திடும்னு எனக்குத் தோணலே. நம்ம பசங்கக்கிட்ட “இத செய்யாதேடா தம்பி”ன்னு சொன்னா ஒண்ணுக்கு ரெண்டா செய்வானுங்க. இதுதான் இப்ப உள்ள மென்டாலிட்டி. பக்குவமா சொன்னா புரிஞ்சுக்குவாங்க.

இந்த நாளு வந்துடுச்சுன்னா பூ வியாபாரிங்க, உயர்தர உணவு விடுதிங்க, நட்சத்திர ஹோட்டலுங்க, கிரீட்டிங் கார்ட்ஸ் வியாபாரிங்க, நகைக்கடைக் காரங்க, எல்லாத்துக்கும் நரி முகத்துலே முழிச்ச மாதிரின்னு வச்சுக்குங்க. கல்லாப்பெட்டி நெரம்பி வழியும்.

ஒதுக்குப்புறத்தை தேடும் காதல் ஜோடிகள், ‘கேன்டி’களோடும், பூங்கொத்துகளோடும் அலையும் காதலர்கள், ‘கேன்டில் நைட் டின்னர்’ என்ற பெயரில் நெருக்கங்கள், இதெல்லாம்தான் இன்னிக்கு இவங்களோட முக்கிய குறிக்கோள்; பிரதான பொழுது போக்கு அம்சம் etc., etc.,

ரொம்பவும் அட்வைஸ் கொடுத்தால் நம்மையும் இவர்கள் அந்த பொல்லாத தாத்தாமார்கள் லிஸ்டிலே சேர்த்திடுவாங்களோங்குற பயம்தான். வேறென்ன?

பெருசுங்க அப்படி என்ன பொல்லாத காரியங்கள் பண்ணுனுச்சுன்னு கேக்குறீங்களா? அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க? அதுக அடிச்ச லூட்டி ஒண்ணா ரெண்டா? கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பார்க்கிறேன். யப்பப்பா.. அதுங்க ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா? மைனர் செயினை மாட்டிக்கிட்டு; அதுலெ புலிநகத்தெ தொங்க விட்டிடுக்கிட்டு; மல்லுவெட்டி என்ன? சில்க் ஜிப்பா என்ன? ரேக்ளா இல்லேன்னா வில்லுவண்டி கட்டிகிட்டு கூத்தியாளு வீட்டுக்கு விசிட் அடிக்கறது என்ன? இதுக கெட்ட கேட்டுக்கு ஒண்ணுக்கு ரெண்டு சின்ன வீடுங்க – ஸ்டெப்னி – வேற?

அந்த காலத்துலே அப்பாக்காரரு வீட்டுக்குள்ளே வந்தாலே பூகம்பம் கெளம்பும். அம்மா அவுங்க காலை கழுவுறதுக்கு செம்புலே தண்ணியை தூக்கிக்கிட்டு ஓடுவாங்க. அவரு உள்ளே நுழையும் போதே எள்ளும் கொள்ளும் வெடிக்கும். வீண் ஜம்பத்துக்கும் அதட்டலுக்கும் குறைச்சலிருக்காது. கெடந்து வானத்துக்கும் பூமிக்குமாக குதி குதின்னு குதிப்பாரு.

இவ்வளவுக்கும் வயலிலே சும்மா வெட்டியா கயித்து கட்டில்லே ஜாலியா உக்காந்து நடவு நடுற பொம்பளைங்களை சைட் அடிச்சிட்டு வந்திருப்பாரு. அதுக்குப் போயி இவ்வளவு ஓவர் பந்தா பண்ணுவாரு. இவரு ஒரு பைசா சம்பாதிச்சிருக்க மாட்டாரு, அவரோட அப்பா சம்பாதிச்சு வச்சிட்டுப் போன சொத்தாக இருக்கும்.

இந்த ஜெனரேஷன்லே பொறந்த நாம சிக்கனமா பட்ஜெட் லைஃப் நடத்துறோம். புள்ளைங்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்து வளர்க்குறோம். நம்மளோட கருத்தை அவங்கங்கிட்ட திணிக்கிறது கெடயாது. நல்லது கெட்டது பசங்களுக்கு நல்லாவே புரியுது.

இப்பல்லாம் புருஷன்மாருங்க மனைவிக்கு கிச்சன்லே ஹெல்ப் பண்ணுறாங்க. கால் கூட அமுக்கி விடறாங்க. பசங்களுக்கு ஹோம்வொர்க் சொல்லிக் கொடுக்குறாங்க, ஸ்கூல்லே போயி விட்டுட்டு வர்றாங்க. அப்பாவும் புள்ளையும் ஒண்ணா உக்காந்து டிவி பாக்குறாங்க. சல்மான்கான் கத்ரீனா கேஃப்பை பிரிஞ்சதுலேந்து, சஞ்சய் தத் வேற கல்யாணம் முடிச்சிக்கிட்ட விஷயம் வரைக்கும் ஓப்பனா டிஸ்கஸ் பண்ணுறாங்க.

நல்ல சமத்தான பொண்ணா பாத்து தேர்ந்தெடுத்து அப்பா அம்மா சம்மதத்தோட தாராளமா காதலிங்க. யாரும் வேணான்னு சொல்லலை. அவுங்களை கன்வின்ஸ் பண்ண வைக்கிறதுக்கும் ஒரு கெட்டிக்காரத்தனம் வேணும். பக்குவமா எடுத்துச் சொல்லணும். முதல்லே அம்மாக்கிட்ட சரண்டர் ஆயிடனும். அது ரொம்ப அவசியம். ஈஸியா கிரீன் லைட் விழுந்துடும்.
அதை விட்டுப்புட்டு “டார்லிங் ஐ லவ் யூ”ன்னு சொல்லி பத்திரிக்கை, ரேடியோ, டிவின்னு விளம்பரம் செஞ்சு தம்பட்டம் அடிக்கனுமாங்குறதுதான் என்னோட கேள்வி.

அந்த காலத்துலே, அப்பாவுக்கு முன்னாடி முகத்தை ஏறெடுத்து பார்த்து பேசக்கூட தைரியம் இருக்காது. தலையை குனிஞ்சுக்கிட்டேதான் பேசணும். தப்பித் தவறி தலையை தூக்குனா “என்னடா மருவாதி கெட்டத்தனமா முறைச்சு முறைச்சு பாக்குறே? முழியை பேத்துடுவேன்” அப்படின்னு எகிறுவாரு.

இப்பல்லாம் அப்பிடியா? அப்பாவும் மகனும் தோள்ளே கைபோட்டுக்கிட்டு ப்ரெண்ட்ஸ் மாதிரி பழகுறாங்க. பயந்து நடுங்க வேண்டிய தேவையே இல்லை. குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தேர்ந்தெடுத்துட்டு வந்து “டாடி! இந்த பெண்ணைத்தான் நான் விரும்பறேன்” னு சொன்னா மாட்டேன்னா சொல்லப் போறாரு?

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதுக்காக இந்து முன்னணி காரங்க 500 மஞ்சக் கயிறு (நல்ல வேளை மாஞ்சாக் கயிறு கொடுக்கலே) வாங்கி வச்சிருக்காங்க. காதலருங்கக்கிட்ட கொடுத்து கட்டுங்கப்பா தாலி; கொட்டுங்கப்பா மேளம்ன்னு சொல்லப் போறாங்களாம்.

முன்னமாவது பசங்க ‘பொக்கே’யும் கையுமா அலைஞ்சானுங்க. இப்ப மஞ்சக் கயிறு அதுவுமால்லே அலைவானுங்க?
தடுப்பு ஊசி போடுறது கேள்விபட்டிருக்கோம். இவுங்க ‘காதலர் தினம் தடுப்பு கமிட்டி’ன்னு அமைச்சு, பொது இடங்கள்ளே அத்துமீறி நடக்கிற இளைஞர் இளைஞிகளை போலீசுலே புடிச்சு கொடுக்கப் போறாங்களாம். இதுவும் ஒரு விதத்துலே அத்து மீறல்தானுங்களே?

பொது இடத்துல நடக்குற அழிச்சாட்டியங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், காவல்துறையும் மாவட்ட அரசு அதிகாரிகளும் இருக்கறப்போ முன்னணி காரங்களும் பின்னணி காரங்களும் இப்படி செய்யுறது நல்லாவா இருக்கு?

இந்தக் கூட்டத்துக்குள்ளே சமுக விரோதிகளும் பூந்துக்கிட்டு போலீஸ்லே புடிச்சு கொடுக்கப்போறேன்னு இளம்ஜோடிகளை அலைக்கழிக்க இம்சை அரசனா மாறுனா என்னாங்க செய்யிறது?

ஒரு சில இடத்துலே திருடனுங்களை புடிக்கிறோமுன்னு சொல்லிப்புட்டு வெளியூர்லேந்து வந்த அப்பாவி பசங்களை திருடன்னு நெனச்சி அடிச்சே கொன்னுப்போட்ட சம்பவமெல்லாம் நடந்திருக்குதானே?

சரி. விஷயத்துக்கு வருவோம். லவ் பண்ணறதுக்கு நாள் நட்சத்திரம் பார்க்கணுமா? பிப்ரவரி 14 – காதல் பொறந்த தினமா என்ன? யாரோ ஒரு வெள்ளைக்காரன் சொல்லிட்டு போயிட்டான். அதுக்காக இந்த ஒரு நாளை புடிச்சு வச்சிக்கிட்டு ஜம்பம் அடிக்கிறது எனக்கு என்னவோ சரியா படலீங்க.

சமீபத்தில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பு இது. போன வருஷம் அமெரிக்காவிலிருந்து மட்டும் ஒரு பில்லியன் கிரீட்டிங் கார்ட்ஸ் இந்த மாசத்துலே சேல்ஸ் ஆனதாம். இதை வாங்குவது 85 சதவிகிதம் பொம்பளைங்கதானாம்.

புள்ளைகளா ! உங்களை வச்சு காசு பண்ணுறதுக்காக யாரோ செய்த வியாபார தந்திரம் இதுன்னு உங்களுக்கு தோணலியா?

1960-ஆம் ஆண்டுலே சுவீடன் நாட்டுலே இருக்குற ஒரு பூக்கள் உற்பத்தி செய்யுற கம்பேனி ‘அனைத்து இதயங்கள் தினம்’ங்குற பேருலே இந்த நாளை பிரபலப்படுத்தி பெரிய அளவிலே காசு பண்ணுனுச்சு.

ஜப்பான், கொரியா நாட்டிலே சாக்லெட் வியாபாரம் நன்றாக சூடு பிடித்திருக்கிறதாம். இந்த நாளிலே பெண்கள் தங்களுடன் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆண்களுக்கு சாக்லெட் வாங்கி கொடுக்க வேண்டுமென்பது எழுதப் படாத சட்டமாக ஆகிவிட்டது. இதற்கு எசப்பாட்டு பாடும் விதமாக மார்ச் மாதம் 14-ஆம்தேதி ஆண்கள் வெள்ளை நிற சாக்லெட் வாங்கித் தர வேண்டும். இந்த நாளுக்கு ‘வெள்ளை தினம்’ என்று பெயர்.

டென்மார்க் மற்றும் நார்வே நாட்டுலே இதுக்கு பேரு Valentinsdag. அங்கே அவ்வளவு விமரிசையா கொண்டாடலேன்னாலும் ஜோடியா போயி ரொமாண்டிக் டின்னர் சாப்பிடறதுக்கும், பிரியாமனவர்களுக்கு சிவப்பு ரோஜா கொடுக்குறதுக்கும், ரகசிய காதலன்/காதலிக்கு வாழ்த்து அட்டைங்க கொடுக்கறதுக்குமாக இந்த நாளை ஒதுக்கி வச்சிருக்காங்க.
காதலர் தினம்ங்குற பேருல நடக்குற கூத்து, கும்மாளம், நம்ம நாட்டுக்கு ஒரு கலாச்சார சீரழிவுங்குறது உண்மைதானுங்களே? நியு இயர் கொண்டாட்டம்னு சொல்லி நட்சத்திர ஹோட்டலுக்கு முன்னாடி குடி போதையிலே நடந்த செக்ஸ் வக்கிர காட்சிகளையெல்லாம் இந்த டிவி காரங்க காட்டத்தானே செய்தாங்க.

அதே சமயம் தாக்கரே ஆளுங்க கிரீட்டிங்ஸ் கார்டு விக்கிற கடைக்குள்ளார புகுந்து சூறையாடுறதும் கலாட்டா பண்ணுறதும் பெரிய அநியாயமுங்க அவருக்கு தாக்கரேன்னு பேரு வச்சது தப்பாப் போச்சுன்னு நெனக்கிறேன். (பால் தாக்கரே, ராஜ் தாக்கரே எல்லாரும் ஒரு குட்டையிலே ஊறுன மட்டைதானுங்களே?) அவங்க ஆளுங்களுக்கு சான்ஸ் கெடச்சா போதும்னு ‘உன்னை தாக்குறேன்; என்னை தாக்குறேன்’னு வரிஞ்சு கட்டிக்கிட்டு நிக்குறாங்க. இதுலே பாவம் நம்ம Big B வேற. இந்த ‘தாக்குற’ கோஷ்டிங்க கிட்ட மாட்டிக்கிட்டு ‘திரு-திரு’ன்னு முழிக்கிறாரு.

காதல் என்பது இரண்டு மனங்களோட சங்கமம். அந்த கெமிக்கல் ரியாக்ஷன் எல்லோர் முன்னாடியும் நடந்தா அது சங்கடம். சங்கடம் அவுங்களுக்கு மாத்திரம் இல்லே. அத பார்க்குற மத்தவங்களுக்கும் தர்ம சங்கடம்.

காதல் என்பது காதலன் காதலி மேலே வைக்கிற அன்புக்கு மாத்திரம் சொல்றதில்லே. அண்ணன் தங்கச்சி மேலே வச்சிருக்கிற பாசத்துக்கு பேரும் காதல்தான். அம்மா, அப்பா மேலே நாம வச்சிருக்கிற அன்புக்கு பேரும் காதல்தான்.

“Thinking of You”, “You Are Mine” “Forget me not” அப்பிடின்னு பத்திரிக்கையிலே விளம்பரம் பண்ணி நம்மோட காதலை ஊரறிய உலகறிய தம்பட்டம் அடிக்கனுமா என்ன? காதலென்ன பாக்கெட் ஷாம்பூவா. விளம்பரம் செய்வதற்கு?

எங்க அம்மாக்கிட்ட நான் போயி அம்மா ப்ளீஸ் “Forget-me-not” ன்னு சொன்னேன்னு வச்சுக்குங்க “அட கிறுக்குப்பய மவனே! இவ்ளோ நேரம் நல்லாத்தானே இருந்தே? திடீர்ன்னு உனக்கு என்னாச்சு?”ன்னு கேப்பாங்க.

தீபாவளி எதுக்கு கொண்டாடுறீங்கன்னு கேட்டா நீங்க டக்குன்னு சொல்லிடுவீங்க. பொங்கலு எதுக்கு கொண்டாடுறீங்கன்னு கேட்டா அதுக்கும் பதிலு சொல்லிடுவீங்க. வாலண்டைன் டே எதுக்கண்ணே கொண்டாடுறீங்கன்னு கேட்டா சரியான பதிலு வராது.

எதுக்காக கொண்டாடுறோம்னு தெரிஞ்சுக்காமலேயே, எல்லாரும் கொண்டாடுறாங்க அதுக்காக நாமளும் கொண்டாடுறோம்னு கொண்டாடுறது சரிதானான்னு சொல்லுங்க.
இந்த காதலர் தினம் பிஷப் புனித வாலண்டைன் ஞாபகார்த்தமா கொண்டாடுறாங்க. கிபி 269 ரோம் நாட்டிலே வீர மரணம் அடைஞ்சதா சொல்றாங்க. வாலன்டைன் பாதிரியார் பல காதலர்களுக்கு துணை நின்று அவர்களோட காதலை நிறைவேற்றி வச்சாராம். அவர் மறைந்த தினம் இதுதானாம்.

நம்ம ஊருலே கல்யாணம் நடத்தி வைக்கிற வைக்கிற டவுன் காஜி இப்ராஹிம் ஹாஜியாரோ அல்லது புரோகிதர் சேஷகோபாலன் சாஸ்திரியோ அல்லது திருமண பதிவாளர் ராமசாமியோ இறந்துட்டாருன்னு வச்சுக்குங்க. அந்த நாள்தான் காதலர் தினம்னு சொன்னா எப்படி இருக்கும்?

எந்த வாலண்டைன் பேருல இதை கொண்டாடுறாங்க என்பது இன்னும் சர்ச்சையாகவே இருக்குது. ஜாப்ரி சாஸர் காலத்துலே வாழ்ந்த வாலண்டைனா? ஆரோலியன் சக்கரவர்த்தி ஆட்சிகாலத்திலே வாழ்ந்த Valentine of Temi-யா? சரியாகத் தெரியாது.

இதே பிப்ரவரி 14 தேதியிலே ஆப்பிரிக்காவிலே இன்னொரு வாலண்டைன் பாதிரியார் தன் சகாக்களுடன் ஆப்ரிக்காவில் கொல்லப்பட்டார் என்கிற செய்தியை கத்தோலிக்க கலைக்களஞ்சியத்திலே காண முடியுது,

காதல் கதையோடு சம்பந்தப்பட்டது ரோம் நகரத்தை சேர்ந்த வாலண்டைன்தான்னு போலண்டிஸ்ட் என்கிற அறிஞர் அடிச்சு சொல்லுறாரு.

பறவைகள் தங்களுக்குள் காதலை அறிவிப்பதும் கல்யாணம் பண்ணிக் கொள்வதும் இந்த மாதத்தில்தான் என்று வேறு கதை கட்டி விட்டிருக்காங்க.

சித்திரைத் திருநாள், பொங்கல் இந்த கொண்டாட்டத்துக்கெல்லாம் ஒரு பின்னணி இருக்கு. யாரோ செய்கிறார்கள் என்பதற்காக கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் புரிவதற்கல்ல காதல். காலம் முழுக்க புரிய வேண்டியது காதல்.

ஒரு விவரமான தம்பி இணயத்தில் எழுதியிருந்த கவிதையொன்று என்னை மிகவும் கவர்ந்தது.

காதலர் தினம்
பிப் 14
குழந்தைகள் தினம்
நவம்பர் 14
கூட்டி கழித்துப் பார்
கணக்கு சரியாய் வரும்!!!

தம்பி நன்றாக கணக்கு போட்டிருக்கிறது. Dating என்ற அம்சமும் இந்த நாளில் வைத்திருப்பது அதற்காகத்தானோ என்று புரியவில்லை.

இந்த காலத்து புள்ளைங்க படிச்சவங்க. படிச்சவங்க மாத்திரம் இல்லீங்க. உலகத்தை நல்லா புரிஞ்சவங்களாவும் இருக்காங்க. வாழ்க்கையிலே தடம் மாறுனா அதோட பாதிப்பு என்னவா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும். எய்ட்ஸை பத்தி கேட்டா நமக்கு பாடம்கூட அவங்க நடத்துவாங்க.

இதைக் கொண்டாடுவதா; வேண்டாமா? நமது கலாச்சாரத்துக்கு இது ஏற்றதா; இல்லையா?
முடிவு எடுக்க வேண்டியது நீங்கதான் புள்ளைங்களா.

The Ball is in your court.
________________________________________
vapuchi@hotmail.com

வாழ்த்துக்கள்


கவிஞர் இதயதாசன்
அண்ணா திடாவிட முன்னேற்றக் கழகம்
துணை செயலாளர், மாவட்ட இலக்கிய அணி
24/19, ஜடையினா ஹாஜியார் தெரு, புலவர் கோட்டை,
செல்லிடை: 9486601182/ 04365-251716
நாகூர் – 611002

அன்பின் நண்ப ..

அறிவுடை கவிஞா
அந்த நாள் ஞாபகம்
அப்துல் கையூம்
ஆக்கிய பொங்கலை
அள்ளியும் உண்டேன்.

அசையா தமர்ந்து
அனைத்தையும் சுவைத்தேன்
எண்ணக் குவியலில் இருந்ததைக் கொஞ்சம்
வண்ண வார்த்தையால்
வருணித்தீரே …!

வழக்குச் சொல்லை,
வசைமொழிக் கூற்றை
கணக்காய்ச் சமைத்து
பந்தியும் இட்டீர் ..!

திரைக்கடல் தாண்டியும்
திருத் தமிழ்ப்பணியை
நுரைப் பூவாக்கி
நுகரவும் வைத்தீர்
நவீன
‘கட்ட பொம்மனே’ !

தமிழை மறந்த
தமிழர் சபையில்
அமிழ்தம் தமிழை
அளவே செய்தீர் !

தங்கக் கடையில்
சங்கத்தமிழை;
பாலை மண்ணில்
பதியம் போட்டீர்…!

நீ
வாழிய வாழியவே !

என்றும் நிறைவுடன்
இதய தாசன்
20.08.07

என் அன்பிற்கினிய ஆசான்

Crescent Residential School - First Batch

Crescent Residential School - First Batch

 

அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன்

திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ்

 

திருவிதாங்கோடு ஈந்த தீந்தமிழ்ப் பாவலனை என் ஆசான் என்று கூறிக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுத்து வரும் அவரது கன்னித்தமிழை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற பாவேந்தனின் பாடலை மெய்ப்பிக்கும் வகையில் அவரது தீந்தமிழ்ப்பேச்சில் தேன்பாகு போன்ற ஒரு இனிமை கலந்திருக்கும்.

 

இன்று ஒரு மாபெரும் கல்வி நிறுவனமாக கிளைகள் படர்ந்து வண்டலூரில் இயங்கி வரும் கிரசென்ட் பள்ளியின் வரலாற்றுப் பின்னணியை இங்கே நினைவு கூறுவது அவசியம்.

1969-ஆம் ஆண்டு என்னையும் சேர்த்து 19 மாணவர்களின் எண்ணிக்கையுடன் துவங்கப்பட்ட பள்ளி அது. பிறைப்பள்ளியிலிருந்து புறப்பட்ட முதல் அணிவகுப்பு நாங்கள். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் ஹாரிங்டன் சாலையில் “நமாஸி வில்லா” என்ற வாடகை வீட்டில்தான் இந்த சுடர்மிகு விடியல் துவங்கியது. ‘காயிதே ஆஸம்’ முஹம்மது அலி ஜின்னா, அல்லாமா இக்பால் போன்ற பெருந்தலைவர்கள் தங்கிச் சென்ற ஒரு பணக்கார குடும்பத்தின் இல்லம் அது.

 

பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் என்ற ஒரு மாமனிதரை எங்கள் பள்ளிக்கு முதல்வராக பெற்றது நாங்கள் செய்த அரும்பெரும் பேறு என்றுதான் கூற வேண்டும். அந்த இல்லத்தில் ஒரு பகுதியில்தான் பேராசிரியரின் குடித்தனம். தன் அன்புத்துணைவியார் மற்றும் அருமை மைந்தன் ஜமால் முகம்மதுடன் வசித்து வந்தனர். அந்த அம்மையாரின் கைப்பக்குவத்தில் தயாராகும் அறுசுவை பண்டங்களை பலமுறை சுவைபார்த்த பாக்கியம் என் நாவுக்குண்டு.

 

ஆறாம் வகுப்பு முதல் மெட்ரிக் வரை – ஆறு ஆண்டுகள் – அந்த மனிதருள் மாணிக்கத்தின் அரவணைப்பில் நாங்கள் வளர்ந்தோம். அது ஒரு குருகுல வாசம் போன்ற அமைப்பு. இருபத்து நான்கு மணிநேரமும் ஒரு தமிழ்க்கடலின் அருகாமையில் இருந்துக்கொண்டு தமிழ்ச்சுவையை பருகிய அனுபவங்களை எழுத்தினில் வடிக்க இயலாது. அரிய மார்க்க ஞானங்களை அவரிடமிருந்து நாங்கள் பெற முடிந்தது.

 

ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள்.  கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிறையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள்.

 

பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மென்மேலும் தூண்டி விட்டது. கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில் “மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்” என்று முடிவுறும் என் கவிதையை கவியரசும், பேராசிரியரும் வெகுவாக ரசித்து பாராட்டினார்கள்.

 

அதே பள்ளியில் தமிழாசிரியராக இருந்து எங்களை ஊக்குவித்த மற்றொரு ஆசான் புலவர் நாஞ்சில் ஷா அவர்கள். ‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை வழங்கியவர். நாஞ்சில் ஷாவின் மாண்பினை கவியரசு கண்ணதாசன் இவ்வாறு புகழ்ந்தார்.

 

நாஞ்சில் ஷா காட்டுகின்ற

நல்ல நபி நாயகத்தை

வாஞ்சையுடன் பார்த்தபின்னர்

மற்றவற்றைக் கற்பதற்குக்

கடைகடையாய் ஏறிக்

கால்வலிக்க நான் நடந்தேன்;

 

எத்தனையோ அற்புதங்கள்

எத்தனையோ அதிசயங்கள்

அன்னை ஆமினா

அளித்தமகன் வாழ்க்கையிலே!

 

இவ்விரண்டு நாஞ்சில் நாட்டு நற்றமிழ் நாவலர்களின் நாவாற்றலில் நான் நனைந்து மகிழ்ந்த நாட்களை நினைவு கூறுகையில் என் நெஞ்சமெலாம் தேனாய் இனிக்கும்.

 

கல்லூரி முதல்வர் பதவியை துறந்து விட்டு எங்களைப் போன்ற பிஞ்சு மாணவர்களுக்கு பாடம் நடத்த வந்த பேராசிரியரை “பிழைக்கத் தெரியாத மனிதர்” என்றே பலரும் விமர்சித்தனர். அதை அவர் ஒரு பதவி இறக்கமாகவே கருதவில்லை. அதற்கு மாறாக எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் முனைப்பாகச் செயல்பட்டார்.  

 

“உயர்ந்த மலையின் உச்சிப் பனியாய்

அமர்ந்த பதவியை அர்ப்பணித்து விட்டுப்

பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளம்

இறையருட் கவிமணி உள்ளம் !

 

அதனாலேதான் ..

கல்லூரி முதல்வர் பதவியைத் துறந்து

அரும்பு நிலாக்களை அரவணைப்பதற்கென

பிறைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பை

நிறைவுடன் ஏற்று நடத்திக் காட்டினார்.”

 

பேராசிரியரின் மனோபாவத்தை அறிந்து மனதாரப் புகழ்ந்த அவரது ஆத்மார்த்த ரசிகர் கபூர்தாசனின் வரிகள் இவை. இதனை எழுதிய கவிஞருக்கும் பேராசிரியருக்கும் ஏற்பட்ட ஒரு தெய்வீக நட்பை இங்கே விவரித்தே ஆக வேண்டும். இலக்கிய ஏட்டில் பதிவு செய்யப்பட வேண்டிய சுவையான நிகழ்வு இது. கபிலர் பிசிராந்தையாருக்கிடையே இருந்த நட்புக்கும், ஒளவையார் அதியமானுக்கிடையே இருந்த நட்புக்கும் இணையானது இந்த இலக்கிய பிணைப்பு,

 

பள்ளி அரையாண்டு விடுமுறையின்போது நான் என் சொந்த ஊர் நாகூர் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது பேராசிரியர் என்னை அழைத்தார்கள். அவர்கள் வசம் கத்தை கத்தையாக கடிதங்கள் இருந்தன. பேராசிரியரின் கவிநடையில் காதல் ஏற்பட்டு மனதைப் பறிகொடுத்த ஒரு ரசிகரின் மடல்கள் அது. பேராசிரியரின் சொல்வண்ணத்தில் சொக்கிப்போய் மதுவுண்ட வண்டாய் ரீங்காரமிடும் கவிநயம் சிந்தும் காதல் கடிதங்கள் அவை. நாளடைவில் இந்த இலக்கியக் காதல் முற்றிப்போய் தன் இயற்பெயரை மாற்றி “கபூர் தாசன்” என்று மாற்றி கொண்டார் அந்த ரசிகர்.

 

“தம்பி! நீ உன் ஊருக்கு அருகாமையிலிருக்கும் காரைக்காலுக்குச் சென்று இந்த முகவரியில் இருக்கும் நபரைச் சென்று சந்தித்து வா!” என்று என்னை பணித்தார்கள். நான் நேரில் சென்று விசாரித்தபோது அந்த வாசகரின் இயற்பெயர் செ.மு.வாப்பு மரைக்காயர் என்று தெரிய வந்தது. நான் கபூர் சாகிப்பிடமிருந்து வந்திருக்கும் மாணவன் என்று என்னை அறிமுகம் செய்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட பூரிப்பை பார்க்க வேண்டுமே! தன் ஆத்மார்த்த நாயகனிடமிருந்து வந்த தூதுவனாக என்னைக் கண்ட மாத்திரத்திலேயே  உணர்ச்சிவசப்பட்டுப் போனார். பேராசிரியரின் உடல்நலம் குறித்து விசாரித்து அவரது சொல்லாற்றலைப் புகழ்ந்து மணிக்கணக்காக பேச ஆரம்பித்து விட்டார். பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசனைப் போன்று, அந்த பாரதிதாசனுக்கும் ஒரு தாசன் சுப்பு ரத்தின தாசன் (சுரதா) போன்று இந்த கபூர்தாசனின் குருபக்தி கண்டு வியந்துப் போனேன்.  

 

பிறைப்பள்ளியில் எங்களுக்கு தமிழ் பாட வகுப்பு முதல்வரே நடத்துவார். தமிழ் வகுப்பு என்றாலே எங்களது உற்சாகம் பன்மடங்காகும். அந்த கம்பீரத் தோற்றம், அடுக்குத் தொடரில் அதறும் தொனி, அடலேறு போன்ற ஒரு மிடுக்கு, கடல் மடை திறந்தாற்போல் ஊற்றெடுக்கும் அந்த அருந்தமிழ் நடை, கேட்போரை கிறுகிறுக்க வைக்கும்.

 

“அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

உடையான் சடையன்”  என்று சடையப்ப வள்ளலைப் புகழும்போதும்

 

“உமறு குமுறிடில் அண்ட முகடும் படீரென்னும்

உள்ளச்சம் வையும் பிள்ளாய்”  என்ற உமறுப் புலவரின் உரையை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கும் போதும் சிங்கத்தின் கர்ஜனையை கேட்பது போலிருக்கும்.

 

தபலா அதிர்வு போலத்

தாளம் பிசகாக் கதியில்

சபையில் ஒலிக்கும் பேச்சில் கபூர்

சந்தனம் கமழச் செய்வார் – என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்

 

“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு. பேராசிரியரைப் பற்றி குறிப்பிடுகையில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுவார் :

 

“திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!

ஆனால் அப்துல் கபூரோ

ஆமா எவர்க்கும் போடாத அரிமா!

 

எங்கள் முதல்வர் எழுதி நாங்கள் தினமும் இறைவணக்கப் பாடலாக பாடிக் கொண்டிருந்த “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என்ற பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நாட்டம் வந்தது. நாகூர் ஹனீபா அவர்கள் ஐந்து மாணவர்களைத் அவர்களுடன் சேர்ந்து சேரிசை (‘கோரஸ்’)  பாட தேர்ந்தெடுத்தார்கள். அந்த ஐந்து மாணவர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமையைச் சேர்த்தது. “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” பதிவரங்கத்தில் ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது.

 

“இம்மை வாழ்வின் சோதனையில்

இதயப் பொறுமை தந்திடுவாய் !

வெம்மை நெருப்பை விட்டெம்மை

விலக்கித் தடுத்துக் காத்திடுவாய் !

செம்மை பொழியும் சுவனத்தின்

செழிக்கும் இன்பம் ஈந்திடுவாய் !

எம்மை நல்லோர் நற்குழுவில்

என்றும் சேர்ப்பாய் இனியோனே !”

 

என்று அந்த வெண்கலக் குரலோன் இசைமுரசு இசைக்க நாங்களும் சேர்ந்து பாடினோம். இவ்வரிகளின் கருத்தாழத்தை செவிமடுத்த இந்து மதத்தைச் சார்ந்த இசையமைப்பாளரின் கண்கள் பனித்து விட்டன.  “எத்தனை சக்தி வாய்ந்த வார்த்தைகள் இவைகள்?” என்று செயலிழந்துப் போனார்.

 

தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான். உருது மொழியில் நடைபெறும் “முஷாயிரா” போன்று தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.

 

தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா. பேராசிரியர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டி தன் “திராவிட நாடு” பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று  தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது. கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

இறையருட் கவிமணி அவர்கள் பன்மொழியில் புலமை பெற்றிருந்தார்கள். தமிழ், மலையாளம், அரபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர்கள் அடைந்திருந்த திறன் அளவிடற்கரியது. தக்கலையில் இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம் நிறுவி இறுதி மூச்சுவரை இலக்கியத் தொண்டாற்றி வந்தார்கள்.

 

பலகாலம் முன்பு ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாக தட்டெச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:

 

ஈகைத் திருநாள்

இன்பம் தருக;

இறையருள் பொழிக !

 

அந்த காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.

 

– அப்துல் கையூம்