குள்ளநரி

நான் என் கூட்டத்தாருடன் காட்டில் நிம்மதியாக  வசித்து வருகிறேன். என்னை ஆங்கிலத்தில் FOX என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

ஏனோ தெரியவில்லை…  தமிழர்கள் மாத்திரம் என்னை தரக்குறைவாகவே மதிக்கிறார்கள். எனக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? குள்ளநரி… ஆமாம், குள்ளநரி…

மனிதாபமானமுள்ள யாரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்று பெரியவர்கள் பாடி வைத்து விட்டுப் போன பிறகும், இவர்கள் என் உருவத்தை வைத்து எடை போடுகிறார்கள்.

“கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக்கூடாது”. இப்படி ஒரு பழமொழியை வேறு எழுதி வைத்திருக்கிறார்கள். குள்ளமாக இருந்தால் என்ன? அது என் குற்றமா? என்னை விட குள்ளமான பிராணிகள் உலகில் இல்லையா?

உயரத்தில் குறைந்தவர்கள் பாரதப் பிரதமராகக் கூட ஆகி இருக்கிறார்களே?   “லிட்டில் மாஸ்டர்” கவாஸ்கர் கிரிக்கெட்டில் பிரகாசிக்கவில்லையா? சார்ளி சாப்ளின் தான் சோகமாக இருந்த நேரத்திலும் உலகத்தாரை சிரிக்க வைக்கவில்லையா?

தட்டச்சு பயில வேண்டுமென்றாலும் மேலை நாட்டினர் முதலில் என் பெயரை எழுதச் சொல்லித்தான் கற்றுக் கொடுக்கிறார்கள்.

“The quick brown fox jumps over the lazy dog”

இந்த வாக்கியத்தைத்தான் முதலில் அடித்து பழக வேண்டும்.                   35 எழுத்துக்கள் உள்ள இந்த வாக்கியத்தில் அத்தனை ஆங்கில எழுத்துக்களும்  அடங்கியுள்ளன.  எப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவத்தை இவர்கள் எங்களுக்கு  கொடுத்திருக்கிறார்கள் என்பதை கவனித்தீர்களா?

அந்த வாக்கியத்தை கூர்ந்து கவனித்தீர்களேயானால் என்னை ஒரு வீரனாகவே வர்ணித்திருப்பார்கள்.

கணிணியில் ஒரு மென்பொருள் நுட்பத்திற்கு FOX-PRO என்று என் பெயரையே அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

Fox news channel, Fox sports, Fox Racing, Fox Movies என்று என் பெயரில் ஏராளமான சேனல்கள் வேறு. இங்கு நரி சேனல் என்ற பெயரில் தொடங்கினால் அது நிச்சயம் ஓடவே ஓடாது.

FUR என்ற எங்களுடைய ரோமம் நிறைந்த தோலுக்காக வேட்டையாடி காசு பார்க்கும்  அநியாயத்தை எதிர்த்து அங்கு போர்க்குரல் எழுப்புகிறார்கள்.  

இங்கு என்னடாவென்றால், நீதிக்கதை என்ற பெயரில் சின்னஞ்சிறு பாலகர்கள் நெஞ்சிலும் விஷத்தை பாய்ச்சி வைத்திருக்கிறார்கள்.

பாட்டி ஒன்று வடை சுட்டுக் கொண்டிருந்ததாம். காகம் அதை கொத்திக்கொண்டு போனதாம். குள்ளநரி அதனிடம் சென்று “காக்கா காக்கா ஒரு பாட்டு பாடேன்” என்றதாம். காகத்தின் வாயிலிருந்து வடை கீழே ‘பொத்’தென்று விழுந்ததும்,  அதை எடுத்துக்கொண்டு தந்திரமாக குள்ளநரி ஓடி விட்டதாம்.

நாங்கள் எல்லோரும் ஏமாற்று பேர்வழிகளாம். இதுதான் அந்த கதையின் சாராம்சம். என்ன அநியாயம் இது? மனிதர்களுடைய சகவாசமே வேண்டாம் என்று ஒதுங்கிதான்  ‘அக்கடான்னு’ நாங்கள் காட்டில் இருக்கிறோம். மீண்டும் எங்களை வம்புக்கிழுத்தால் என்ன செய்வது?

இன்னொரு கதையும் உண்டு. உயரே இருந்த திராட்சைக் கொத்து எனக்கு  அகப்படவில்லையாம். உடனே நான் “சீச்..சீ இந்த பழம் புளிக்கும். இதை தின்றால் பல் கூசும்” என்று நான் சொன்னேனாம். இதை யார் பார்த்தார்கள்? அதை முதலில் சொல்லட்டும்.

இவர்களுடைய கற்பனைக்கெல்லாம் ஒரு அளவே கிடையாதா? யாராவது குதர்க்கமாக ஏதாவது செய்தால் அவனுக்கு “குள்ளநரி புத்தி” என்று நையாண்டி வேறு. நயவஞ்சகத்தனத்திற்கு பெயர் “நரித்தன”மாம். அடக்..கடவுளே..

இப்படி பேசுகிற இவர்கள் அதிர்ஷ்டம் என்று கூறி எங்கள் நகத்தை நரிக்கொம்பு என்று கழுத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். ஆடு பகை, குட்டி உறவாம். இது எப்படி இருக்கு?

குறவர்கள் எத்தனையோ மிருகங்களை வேட்டையாடுகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு நரிக்குறவர்கள் என்று கேலிப்பெயர். நரி என்றால் அவ்வளவு இளக்காரமா?

“நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க” என்ற சினிமா பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். வாத்தியார் பாட்டு.

“நரிக்கொம்பு வித்தாலும் விப்போமுங்க
ஆனா நரி போல வஞ்சனைகள் செய்ய மாட்டோம்” – என்று வரும்.

அட .. பாவிகளா..! நாங்க எப்போ வஞ்சனைகள் செய்தோம்? யாருடைய சொத்தை நாங்க கொள்ளை அடிச்சோம்? யாருடைய வயிற்றெரிச்சலை
நாங்க கொட்டிக்கிட்டோம்? மனசாட்சியே இல்லாமல் இப்படி எழுதுறீங்களே?

இதைத்தான் என்னுடைய போன்சாய் கவிதை நூலிலே இப்படி குறிப்பிட்டிருந்தேன் :

மனிதா…. நீ
 
மறைந்திருந்து தாக்கினால் -அது
கொரில்லா தாக்குதல்
 
பேச்சு மாறினால் – அது
பச்சோந்தித்தனம்
 
பொய்ச் சொன்னால் – அது
கரடி விடுதல்
 
குறுக்கு புத்தி – அது
குரங்கு புத்தி
 
நயவஞ்சகம் – அது
நரித்தனம்
 
நீலிக் கண்ணீர் – அது
முதலைக் கண்ணீர்
 
என்ன அநியாயம் இது?
 
விவகாரம் புரிவது நீ
வீண்பழி மட்டும்
விலங்கினத்துக்கா?         

என்று எழுதி இருந்தேன்.
 

“இங்கிலீஷ்காரனை பார்த்தியா? அவனுடைய அகராதிக்கு கூட நம்மோட பெயரைத்தான் ‘டிக்ஷநரி’ என்று வைத்திருக்கிறான்” என்று என் நண்பர்கள் மத்தியில் நான் கடிஜோக் அடிப்பது உண்டு. ஹி..ஹி..ஹி….

ஆங்கிலேயர்கள் அழகான இயற்கை காட்சிகளைக் கண்டால் “சீநரி” என்கிறார்கள். முன்னறிவு கொண்ட நோக்குத்திறனை “விஷநரி” என்கிறார்கள். இயந்திரத்தை “மெஷிநரி” என்கிறார்கள். நல்ல நல்ல வார்த்தைகளுக்கு எங்களுடைய பெயர். அவர்களுக்கு எவ்வளவு உயர்ந்த மனசு?

தஞ்சை மாவட்டத்தில் நரிமனம் என்ற ஊரில்தான் எண்ணெய் கிடைக்கிறது. இது தெரிந்தால் இப்படி இவர்கள் கேலி பேச மாட்டார்கள்.

கவியரசர் வைரமுத்துவுடைய விலங்கு என்ற கவிதையை ஒவ்வொரு மனிதனும் படித்துப் பார்க்க வேண்டும். அதில் அவர் சொல்லுவார் :

மனிதா
விலங்கை வணங்கு

ஒவ்வொரு விலங்கும்
உன் ஆசான்

யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல் இல்லை

காட்டுக்குள்
மூட நம்பிக்கை இல்லை

அங்கே
நெருப்புக்கோழி கூடத்
தீ மிதிப்பதில்லை

ஒவ்வொரு வரிகளும் சுறுக்கென்று மனதை குத்தும்.இதை ஒருவன் படித்துணர்ந்தால் பிறகு எங்களைப் போன்ற இனத்தை இழிவாக பேசவே மாட்டான்.

இனியாவது இவர்கள் விலங்கபிமானத்தோடு நடந்துக் கொள்ளட்டும்.

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: