P – 99

இந்தியன் நீ ..
இந்தியனாக இரு

படிச்சு படிச்சு சொன்னேன்

காதிலே வளையம்
கையிலே காப்பு

கழுத்திலே தொங்கும்
கனத்த சங்கிலி

சப்பாத்தி கள்ளியாய்
சாயம் பூசிய கேசம்

அடக் கருமமே ..
அப்பாச்சி இந்தியனாம்

          – அப்துல் கையூம்

P- 100

அவனை
சட்டத்தில்
மாட்டி வைக்க

ஆணித்தரமாய்
வாதாடும் வக்கீல்

சைலன்ஸ் ..
சைலன்ஸ்

நீதிபதி கையில்
சுத்தியல்

          – அப்துல் கையூம்

P – 101

பால் வீதியில்
பூமி பானை

மூன்றில் இருபங்கு
நீரைக் கலந்தது
அந்த பால்காரன்?

          – அப்துல் கையூம்

P – 102

கூடவேயிருந்து
குழிப் பறிப்பு

நாக்கையே
கடித்து விடும்

பொல்லாத
பல் நண்பன்

          – அப்துல் கையூம்

P – 103

பல்லி ஒன்று
பலன் சொன்னது

மேற்கே பார்த்தது
கிழக்கே பார்த்தது

கூரை மேலிருந்தே
குறி சொன்னது

சற்றே நொடியில்
சறுக்கி விழுந்தது

ஆருட மேதையின்
அரை வால் போனது

அதற்கு வரும்
ஆபத்தை அறியாமலே ..

          – அப்துல் கையூம்

P – 104

விஸ்… ஸ்

வீட்டுக்குள்
ஒரு காலிப்பயல்

விசிலடிக்கும்
குக்கர்

          – அப்துல் கையூம்

P – 105

சுமைதாங்கி கல்
என் பெற்றோர்கள்

மைல் கற்கள்
என் ஆசிரியர்கள்

வாழ்க்கையில்
வழவழப்பான
கூழாங் கற்கள்
என் நண்பர்கள்

கண்ணே ..
உன்னை
ராசிக்கல் என்றேன்

நீ இட்டதோ
என் தலையில்
பாறாங்கள்

          – அப்துல் கையூம்

P – 106

எட்டணா சைஸில்
ஸ்டிக்கர் பொட்டு

ஒட்ட மறந்த
இரவு நங்கை

காலண்டர்
காட்டுது
அமாவாசை

          – அப்துல் கையூம்

P-107

எச்சில் நெசவு
உமிழ்நீர் கோலம்
கச்சிதப் பின்னல்
பூச்சிப் பொறி
பாழ்மனைத் தோரணம்
பாபிலோன் தொங்கு தோட்டம்
அதிசய நுட்பம்

கஜினிக்கே
பாடம் தந்த
சிலந்தி வலை   

          – அப்துல் கையூம்  

                                                                                               

இது அடுக்குமா..?

orator.jpg

வெள்ளையும்                                                  சள்ளையுமாய்                                                      வெளியே                                                            நடமாட்டம்.

சுத்தம்                                                           சட்டையில் மட்டும்                                           இருந்தென்ன லாபம் ?

சட்டைப்பைக்கு                                            சமீபத்திலுள்ள                                              சதைத்துண்டில் அல்லவா                                      வேண்டும் ?

மேடையில்                                                          அவருக்கு                                                            எடைக்கு எடை                                               நாணயமாம்.

அவரது                                                       நாணயத்திற்கு                                                    எடைக்கு எடை                                                        தரச் சொன்னால்

ஒரே ஒரு நாணயம்                                              தேறுவதே சந்தேகம்.

செப்படி வித்தையில்                                         சொல்லுவான்                                                  வாயிலிருந்து                                                          குருதி கொட்டுமென்று

இவர்களின்                                                              சொல் வித்தையில்                                                     வாய் திறந்தால்                                                வாக்குறுதிகள் அல்லவா                                    கொட்டுகிறது ?

ஏப்பம் விடுவது                                               இவர்களுக்கு                                                      எளிதான கலை.

மேடையில் சோடா ..                                             மற்றவை தெரிவதில்லை.

இவர்கள்                                                              துண்டு போடுவது                                                  தோளில் மட்டுமா ?

நாட்டையும்தான்                                              நம்மையும்தான்.

அடுக்கு                                                       இவர்களுக்கு பிடிக்கும்

அடுக்கு மொழிகள்

அடுக்கடுக்காய்                                                 பணக்கட்டு

அடுக்குமாடிக்                                                 கட்டிடங்கள்

இது                                                               அடுக்குமா என்று                                         கேட்காதீர்கள் ..!

          – அப்துல் கையூம்