தேடல்கள் .. ..

(மே 2006-ல் பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தில் தேடல்கள் தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் வாசித்தளித்த கவிதை)

தேடல்கள் புதிதல்ல..

வாழ்க்கையே நமக்கு
வரிசையாய் தேடல்கள்தானே?

இரையைத்தேடியும்
இறையைத் தேடியும்
இலக்கைத் தேடியும்
இலக்கங்களைத் தேடியும்
கலைந்து போகும் காலங்கள்

பிறந்த பொழுதிலிருந்து
தேடத் தொடங்குகிறோம்

தவிக்கின்ற பசிக்கு
தாயின் மார்புக்குள்
முகம் புதைத்து
மாய்ந்து மாய்ந்து
சேயொன்று
வாய் குவித்து
எதையோ தேடும் .. ..

தேடல் நாடகம்
அங்குதான் தொடக்கம்

மரணப் படுக்கையிலே
மல்லாந்து படுத்திருக்கும்
தகப்பனின் விழிகள் ..

சாகும் தருவாயில்
தேகம் உயிர்ப் பிரிய
கண்கள் வெளிர
கைகள் தளர
ஓடிக் களைத்திட்ட
உடற் சூடு தணிய
நாடி நரம்புகள்
ஆடி ஒடுங்கிட
மூச்சுக் காற்று
முனகலுடன்
பிரியமானவர்களை கண்டு
பிரியாவிடை கூறுதற்கு
கண்கள் அலைபாயும் .. ..

அது – ஒரு மனிதனின்
இறுதித் தேடல்

தேடலுக்கு எல்லை உண்டா?
என்றால் இல்லை ..
தேடலுக்கு வானமே எல்லை

தேடலுக்கு வயது உண்டா?
என்றால் இல்லை
தேடலுக்கு மரணமே எல்லை

வீடு போ.. போ.. என
விடை பகர
காடு வா.. வா .. என்
கரம் கொடுக்க
மண்ணறைக்குள்
மறையும் வரை
தொடரும் தேடல்

திருவிழா நெரிசலில்
திசைமாறிய சிறுவர்களை
வலைபோட்டு தேடும்
ஒலிபெருக்கி அறிவிப்பு
மட்டுமா தேடல்?

திக்குத் தெரியாத காட்டில் -உன்னை
தேடித் தேடி அலைந்தேனே என்று
கண்ணபிரானைத் தேடி
கவிதையிலே பொருள் வடித்த
கவிராஜன் பாரதியின்
தேடலும் ஒரு தேடல்

பூஜ்ஜியத்திலிருந்துக் கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனை

இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம்தேடி
எங்கேயோ அலைகின்றாய்
ஞானத் தங்கமே என்று

பரம்பொருளின் தேடலை
பாட்டாக வடித்தானே
ஒரு ஞானக் கிறுக்கன்
அவன் தேடலும் ஒரு தேடல்

தேடும் நேயர் நெஞ்சங்களில்
குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும்
உணவளிப்பவன் என

பாறைக்குள் ஒளிந்திருக்கும்
தேரைக்கும்
பக்குவமாய் இரையை
பகிர்ந்தளித்தானே அந்த
முக்காலமும்அறிந்த
முழுமுதற் அரசன்

அவனைத் தேடுதல்
அது ஆன்மீகத் தேடல்

முகவரிகள் தொலைந்தனவோ
முகிலினங்கள் அலைகிறதோ
முகவரிகள் தொலைந்ததினால்
அது மழையோ? – இது ஒரு
தீந்தமிழ்க் கவிஞனின்
தேடல் கற்பனையின்
ஊடகப் படிமம்

தேடலும் ஒரு சுகம்

காதலாகட்டும்
கைகளின் சில்மிஷமாகட்டும்
கவிதையில் மறைந்திருக்கும்
கருத்தாழம் ஆகட்டும்

தேடலும் ஒரு சுகம்

ஆய கலைகள்
அறுபத்தி நான்கிலும்
தேடாத சுகங்கள்
ஆயிரம் உண்டு

எல்லா தேடலும் சுகமா?
என்றால் இல்லை …

சில தேடல்கள்
சில்லென்று ரத்தத்தை
உறைய வைக்கும் …
உள்ளத்தை உருக வைக்கும்
நெஞ்சை பிழிய வைக்கும்..
இதயத்தை நெகிழ வைக்கும்

புல்புல்கள் இசைக்கும்
காஷ்மீர மண்ணில்

மனதைக் கல்லாக்கி
மடிந்த உடல்களை
இடிந்த இடிபாடுகளiல்
ஒடிந்த கை கால்களோடு
விடிய விடிய ஒவ்வொன்றாய்
உருவி எடுத்தோமே – அது

உலகத்தை அழ வைத்த தேடல்

இறுதிப் பயணமென அறியாமல்
இரயில் பயணம் செய்தவரை

ஆந்திர மண்ணில்
ஆற்றில் தத்தளித்த
அகோர பிணங்களை
அலசித் தேடினோமே – அது

அனைவரையும்
அதிர வைத்த தேடல்

டிசம்பர் 26

கிளiஞ்சல்களைத் தேடிய
கடற்கரை மணலில்
கிழிந்துப் போன
மனித உடல்களைத்
தேடினோமே

அது அகிலத்தையே
அலற வைத்த தேடல்
ஒரு சிலம்பின்
தேடலில் பிறந்ததுதான்
சிலப்பதிகாரம்

ஒரு சீதையின்
தேடலில் பிறந்ததுதான்
இராமாயணம்

ஒரு கணையாழியின் தேடலில்
காப்பியமானதுதான் சாகுந்தலம்

லைலாவைத் தேடிய
மஜ்னுவின் தேடல்
காதல் சாம்ராஜ்ஜியத்தின் – ஒரு
காப்பியத் தேடல்

ஞானத்தின் தேடலில்தான்
ஒரு சித்தார்த்தன்
புத்தனானான்

கலிங்கத்துப் போரில்
குருதி படிந்த மண்ணில்
தேடிய தேடலில்
சாம்ராட் அசோகன்
புத்த துறவியானான்
வார்த்தைகளின் தேடல் கவிதை
வர்ணங்களின் தேடல் வானவில்
வாலிபத்தின் தேடல் காதல்
வயிற்றுப்பசியின் தேடலே
வாழ்க்கையின் ஓட்டம்

யமுனை நதி தீரத்தில்
ஒரு சலவைக்கல் சங்கீதம்

அது மும்தாஜின் நினைவால் எழுந்த
ஒரு முகலாய அரசனின் தேடல்

காதல் தோல்வியென்றும்
கடன் தோல்வியென்றும்
காரணங்கள் காட்டி

மரணத்தின் தேடலில்
மடிந்த கோழைகள்தான்
எத்தனை எத்தனை?

ஜீவியும், விஜியும், சில்க்கும்
ஷோபாவும், மோனலும்

தவறான தேடலின்
சரியான உதாரணங்கள்

எல்லோரும்
எங்கேயோ
எதையோ ஒன்றை
எப்போதும் தேடுகிறோம்

இழப்பினாலும் தேடல் வரும்
தேவையினாலும் தேடல் வரும்

வாழ்க்கையே தேடல்
தேடலே வாழ்க்கை

மண்ணைத் தேடியதில்
கண்டது வைரம்

கடலைத் தேடியதில்
கிடைத்தது முத்து

விடியல்களைத்தேடும்
முதிர்க் கன்னிகள்

முதியோர் இல்லத்தில்
முடங்கிக் கொண்டு
முழுமையான பாசத்தை தேடும்
முதுமையுற்ற பெற்றோர்கள்

புன்னகையை தனக்குள் தேடும்
பொட்டிழந்த இளம் விதவைகள்

ஒவ்வொரு கண்டுபிடிப்பும்
ஒவ்வொருத்தனின் தேடல்தானே

அரசியல்வாதிகளiடம்
ஓழுக்கத்தை தேடுகிறோம்
அகப்படவில்லை

தேர்தலில்
நியாயத்தை தேடுகிறோம்
தென் படவில்லை

மனிதனிடம்
மனித நேயத்தை தேடுகிறோம்
மருந்தளவும் கிடைக்கவில்லை

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

இல்லாதது எது?

‘அதை’ அவன் மறந்து வெகு நாட்களாயிற்று.

இந்தப் பிரபஞ்சத்துக்கே மூல வித்தான ‘அதை’ மறந்து—ஏன் அதை மறுத்தும்—இந்தப் பிரபஞ்சத்தையே தனதாக்கிக் கொள்ளப் போட்டியிட்டு முன்னேறி முன்னேறி வெற்றி கொள்ளும் அவன், வெறியும் கொண்டு, அந்த வெறியில் தன்னை மறந்து தன், பிறவியை மறந்து, தன் காரியத்தில் கண்ணாய் இருந்து கொண்டிருப்பதைக் கண்ட ‘அது’ தானே அவன் எதிரில் வந்து திடீரென்று பிரசன்னமாயிற்று.

அப்பொழுதும் அவன் ‘அதை’க் கவனிக்கவில்லை.

அணுவைப் பிளப்பதில் வெற்றி கண்ட அவனது தீட்சண்ய மிக்க விழிகள், அண்டங்களையெல்லாம் துருவி ஆராய்வதில் முனைந்திருந்தன. அவனைச் சுற்றிலும் நவ நவமான, மிக நவீன யந்திரங்களும், வேகத்தை—தூரத்தை—காலத்தைத் துல்லியமாய் அளக்கும் கருவிகளும் இருந்தன. கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் சுழலும் கிரகங்களில் என்னென்ன நிகழ்கின்றன என்று கண்முன் காட்டும் கருவி ஒன்றில், அவன் முகம் குனிந்திருந்தது. அவனது இரு செவிகளையும் அடைத்திருந்த கருவியின் வாயிலாக அவன் மற்றொரு உலகத்துச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் எதிரில் வந்து தனது பிரசன்னத்தை உணர்த்தியும் அவன் தன்னை ஏறிட்டுக் காணாதிருப்பதைக் கண்டு, ‘அது’ கோபம் கொள்ளும் நேரத்தில்; குனிந்திருந்த அவன் தலையும், அதில் பஞ்சாய் நரைத்திருந்த சிகையும், ‘அதன்’ பார்வையில் பட்டது.

‘ம்…..இன்னும் இவன் இதை வெல்லக் கற்றுக்கொள்ளவில்லையே’ ‘ என்ற நினைவில் கொஞ்சம் சமாதான முற்றது அது; மூப்பையும் மரணத்தையும் வெல்ல இயலாத இந்த மனித ராசியிடம் போய் நமது கோபத்தைக் காட்ட வேண்டாம் என்று அமைதி அடைந்தது அது.

ஒரு காலத்தில் தனது பிரசன்னத்துக்காக, வாழ்க்கையையும், மனித பந்தங்களையும் துறந்து, வனமேகி, எண்ணற்ற காலம் கண்மூடித் தவமிருந்து காணமுயன்று தோற்ற —அல்லது வென்ற அந்த மனிதனின் வாரிசா இவன்?……

‘எதிரில் வந்து—வலுவில் நிற்கும் என்னை ஏறிட்டுப் பாராத இவன் விழிகள் குருடோ?….. இல்லை….. இல்லை;….. இவன் பார்வை, இவனுக்கு எட்டாத தூரத்தில் நான் இருத்திய கிரகங்களை— எனது திரைகளையும் விலக்கிப் பார்க்கின்றன…. அந்த விஷயத்தில் இவன் வென்றுதான் விட்டான்…..

“ஏ’ ஜீவாத்மாவே என்னைப்பார்’….”

‘அது’ அழைத்த குரல், அவன் செவியுட் புகாதவாறு அந்தக் கருவிதான் அவன் காதை அடைத்துக் கொண்டிருக்கிறதே….’

ஔ¢யுருவாய், ஒலியுறுவாய், உருவற்ற உருவாய் அவன் எதிரே பிரசன்னமாகியிருந்த ‘அது’, தன் இருப்பை அவனுக்கு உணர்த்த முயன்றது.

திடீரென்று கண்களைப் பறிக்கும் பிரகாசமும், செவிப்புலனைப் போக்கும் இடியோசையும்— அவனது காரியத்துக்கு இடைஞ்சல் விளைவித்தன.

‘அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் யந்திரங்களிலோ, அந்தக் கருவிகளிலோ ஏதேனும் கோளாறு நிகழ்ந்து விட்டிருக்குமோ’ என்ற பதைபதைப்பில் அவற்றின் இயக்கத்தை அவசர அவசரமாய் நிறுத்திவிட்டு, அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் கேந்திர ஸ்தானத்தைப் பரிசீலித்தான், அந்தக் கிழட்டு விஞ்ஞானி.

எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ‘பின் எங்கிருந்து வந்தன அந்தப் பெரு வௌ¢ச்சமும், இடி முழக்கமும்’ என்று அவன் தனது நரைத்த தலையை–நரம்புகள் நௌ¢ந்து சருமம் சுருங்கிய கரத்தால் சொறிந்து கொண்டே யோசித்தான். அப்பொழுது….

“ஏ ஜீவாத்மாவே….” என்ற குரல் கேட்டுத் தனது நரைத்த சிறிய தாடியை ஒரு விரலால் நெருடிக்கொண்டே, புருவத்தைச் சுளித்தவாறு கண்களை மூடி சிரம் நிமிர்த்தி அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் நடுவில் ஒற்றை மரமாய் நின்று திகைத்தான் அவன்.

“ஏ ஜீவாத்மாவே, என்னைப்பார்’ ” என்ற அதன் குரல் எட்டுத் திக்குகளிலிருந்தும் பிறந்து எதிரொலியின் கனபரிமாணங்களுடன் அவ்வாராய்ச்சிக் கூடத்தின் மையத்தில் நின்றிருந்த அந்த மனிதனை வியூகம் அமைத்துத் தாக்குவது போல் ஒலித்தது.

“யார் நீ?….” என்று முகட்டை நோக்கி நிமிர்ந்த தலையைத் தாழ்த்தாமல், இமைகளையும் திறக்காமல் கேட்டான்.

“நான்தான் பரமாத்மா’ ”

“ஓ’ வழி தவறி வந்து விட்டாய்….இந்த உன் சுய அறிமுகம், அதோ பக்கத்திலிருக்கிறதே மாதா கோயில், அல்லது தூரத்தில் இருக்கிறதே ஒரு மசூதி, அல்லது உன்னையே கல்லாக்கி சிறை வைத்திருக்கிறதே கலைக்கோயில் ஒன்று, அங்கே ஔ¢த்தால் அவர்கள் சாபல்ய முறுவார்கள்…..போ, என் காரியத்துக்குக் குந்தகம் செய்யாதே’ ”

“ஏன் விஞ்ஞானியான உன்னிடத்தில் வேலை இல்லை என்கிறாயா?”

“ஆம்; எனக்குத்தான் உன்னிடம் வேலை இருக்கிறது” என்றான் அவன். அவன் பதில் அதற்குப் புரியவில்லை.

அதன் மௌனத்தைக்கண்டு, வாய் அடைத்து நிற்கும் பரமாத்மாவின் நிலையைக் கண்டு அந்தக் கிழவன் தனக்குள் சிரித்துக் கொண்டே சொன்னான்:

“உனக்கு தெரியாத பாஷையை– தெரிய அவசியமில்லாத பாஷையை நீ ஏன் பேசுகிறாய்? மனிதனின் பாஷையை பேச நீ முயன்றால், அதுவும் மனிதனிடமே பேச முயன்றால், நீ தோற்றுத்தான் போவாய். உனது பாஷையையும், உனது பேச்சையும் உற்றுக் கேட்டு உணர்ந்து கொண்டிருக்கிறேன் நான். மலையில் தவழும் அருவியில் உன் பேச்சைக் கேட்டு, அதன் ரகசியத்தை அறிந்து, அதிலிருந்து மின்சாரம் கண்டோம். இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை ஊதி ஊதி சுழலும் வாயு மண்டலத்தில் உன் மொழியைக் கேட்டு இருதயத்தின் துடிப்பெல்லாம் அதில் பிரதிபலிக்கும் அதிசயத்தைக் கண்டுபிடித்து வானொலியையும், அதைச் சார்ந்த எண்ணற்ற பல சாதனைகளையும் சாதித்தோம்.

புரியாதா பாஷையாய் எட்டாத் தொலைவிலிருந்து கண் சிமிட்டும் தாரகைகள் என்னும் உனது நயன பாஷைகளையும் புரிந்து செயல்பட முயன்று, எங்களுக்கு நீ விதித்த எல்லையையும் மீறி, உன்னால் பூட்டி வைக்கப்பட்ட கோடானு கோடி வானத்து ரகசியங்களை எல்லாம் கொண்டு வந்து, இந்த எளிய புழுதிபடிந்த பூமியில் போட்டு உடைத்துக் கொண்டிருக்கும் எங்கள் பாஷையை நீ பேச முயல்வது வீண். நீ உனது பாஷையை பேசிக்கொண்டே இரு. ஒரு நாள் உன் குரலிலிருந்து நீயே சிக்கிக் கொள்வாய். உன்னைத் தேடி வந்து உன்னைச் சிறைப் பிடிப்பதோ, அல்லது நீயே இல்லை என்று உணர்த்துவதிலோதான் எனக்குப் பெருமை. உனது பிரசன்னம் எங்களுக்குத் தேவையற்றது. அதைத்தான் நான் குறிப்பிட்டேன். உனக்கு என்னிடம் வேலையில்லை. எனக்கு உன்னிடம் வேலை இருக்கிறதென்று.”

அவன் இன்னும் தன் கண்களை மூடிக்கொண்டே பேசுவது அதற்கு வியப்பளித்தது.

“என்னைப் பார், பிறகு நம்புவாய்” என்றது அது.

“முடியாது. நீ என் கண்களுக்குத் தெரிந்தால், அது வெறும் ஜாலமாகிவிடும். கண்ணும், செவியும், வாயும், மூக்கும், மெய்யுணர்வும் அல்ல உன்னை நிர்ணயிப்பது. இவற்றுக்கெல்லாம் எஜமான் என் அறிவு. அறிவின் கருவிகளே இந்தப் புலன்கள் யாவும், என் கண்ணுக்கு நீ தெரிந்தால், என் அறிவு உன்னை மறுத்து உன்னை தோலுரித்து நீ யார் என்று எனக்குச் சொல்லிவிடும்; இந்த நிமிஷம் வரை நீ, நீயல்ல; நீ எனது பிரமை.”

“நீ நாஸ்திகனா?” என்று கேட்டது அது.

“இல்லை” என்றான் அவன்.

“நீ ஆஸ்திகன்தானே?” என்றது அது.

“அதுவுமில்லை” என்றான் அவன்.

அது மீண்டும் வாயடைத்து மௌனமாயிற்று.

அவன் சிரித்தவாறே சொன்னான்:

“நான் மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்வேன். நீ போய் உனக்கு தெரிந்த உனது பாஷையில் பேசிக் கொண்டிரு. அல்லது அறிவின் பாஷையை நம்பாது அர்த்தமற்ற முணுமுணுப்புடன் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘ஆஸ்திகர்’களிடம் போய்ப் பேசு. அல்லது உன்னை மறுத்து உன்னைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்கும் ‘நாஸ்திகர்’களிடம் போய்ப் பேசு—இருவரும் நம்பிவிடுவார்கள். அவர்களின் தீராத விவகாரமாவது தீர்ந்து தொலையும் ஆம்; அகண்டத்திலுள்ள கோளங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்து–அந்த ஆகர்ஷணத்தில் ஸ்திதி பெற்றிருப்பது போலத்தான், இந்த ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஒருவரின் தர்க்கத்தில் மற்றொருவர் இழுத்துக் கொண்டும், பறித்துக் கொண்டும் இருப்பதால் இருக்கை கொண்டுள்ளனர். என் காரியம் அதுவல்ல, அறிவும் கரமும்தான் மனிதருக்குத் தேவை. அவற்றின் காரியங்கள் முற்றிலும் முடிந்த பிறகு, ஆத்மாவைப் பற்றி யோசிக்கலாம். நீ போ’ ”

“ஏ’ அறிவாத்மாவே…..உன் அறிவின் வல்லமையும் கரங்களின் நுண்மையும் ஒருபுறம் இருக்கட்டும். நீ துருவித் துருவி ஆராய்வதாகவும் கண்டுபிடிப்பதாகவும் பெருமையடித்துக் கொள்கிறாயே, அந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அவற்றின் நியதிக்குட்பட்ட போக்கையும் காண உன் மனம் வியப்படைய வில்லையா? அந்த வியப்புக்கு மூல வித்தான அர்த்தமுள்ள ஓர் வஸ்துவைப் பற்றி எண்ணிப் பார்க்கையில், உனக்கொரு பிரமிப்பு விளையவில்லையா? அந்த பிரமிப்பால் உன் அறிவும் கரமும் குவிந்து அடக்கமுறவில்லையா? அந்தச் சக்தியின்முன் தாளத்திற்குட்பட்ட சங்கீதம்போல், பிரபஞ்ச இயக்கத்தையே ஒரு நியதிக்குட்படுத்தி, இணைத்து இயக்கும் அந்தப்பேராற்றலின் முன் நீ மிகவும் அற்பம் என்று உனது கண்டுபிடிப்பே உணர்த்தவில்லையா?”

“இல்லை, ‘நான்’ எனபது முன்னு மற்ற பின்னு மற்ற இடைநிலை என்று எண்ணி, தனக்கு இருபுறமும் தொடர்ந்து வந்ததும் வருவதுமான சங்கிலிகளைத் துண்டித்துக்கொண்டு, தன்மயமான ‘நான்’ மட்டுமே ஸ்திரப்படுத்த முயன்று உன்னைத் தொழுதுகொண்டு இருக்கும் மூடாத்மாக்களுக்குத்தான் அவ்வித பிரமிப்பு உண்டாவது சாத்தியம். ஆனால் நான், இந்த நூற்றாண்டில் வாழும் ‘நானா’கிய எனக்கு வெகு சாதாரணமாய் இருக்கும் எத்தனையோ விஷயங்கள், எனக்கு முந்தைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த ‘நான்’களுக்குப் பிரமிப்பாய்த் தோன்றி, அந்த மயக்கத்தில் உன் காலடியில் அவர்கள் வீழ்ந்தனர் என்று அறிந்தவன். ஆனால் இன்று எனக்குப் புரியாத புதிர்கள் எத்தனை கோடி இருப்பினும் அவற்றுக்காக இந்த வினாடி நான் பிரமிப்புற்ற போதிலும் இவை யாவும் தௌ¢வடையும், எனக்குப் பின்னால் வரும் ‘நான்’களுக்கு ரொம்ப அற்பமான உண்மைகளாய் விளங்கும் என்று நம்புகிறேன். அதனால்தான் எவ்வித மயக்கத்துக்கும் ஆளாகாமல், உன் காலில் விழாமல் என் காரியத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கெல்லாம் அடிப்படை எங்கள் அறிவுப் புலன். ஒரு நீண்ட முடிவற்ற சங்கிலியின் ஒரு கண்ணியாக விளங்கும் நான், எனது கருமத்தை நிறைவேற்றுவதைத் தவிர மற்ற எதைப்பற்றிய பிரமைகளையும் லட்சியப்படுத்த மறுக்கிறேன். எனக்குப் பின்னால் வரும் ‘நான்’என்ற கண்ணி ஒவ்வொன்றும் அவ்விதமே செயல்படும். இந்த ‘நானென்னும்’ கண்ணிகளில் ஏதோ ஒன்று, வரப்போகும் ஏதோ ஒரு காலத்தில் ஆற்ற வேண்டிய காரியங்கள் அனைத்தையும் முடித்து. பின், வழி தெரியாமல் திகைத்து நின்றுவிடுமானால், அப்போது நீ எதிர்ப்படுவாயானால், அந்த ‘நான்’ ஒருவேளை உன் காலில் விழலாம். ஆனால் அவ்விதம் நிகழப் போவதில்லை. ஏனெனில் அறிவு என்ற எமது மகத்தான புலன், எந்த அமைப்பிலும் சிக்கி ‘இவ்வளவே’ என்ற வரையறையில் நிற்கத் தகுந்தது அல்ல. இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விரிந்ததோ, அத்தகைய விரிவு மிகுந்தது அறிவு. ஆகையினால் அந்த ‘நான்’ என்ற அறிவின் முன் ‘நீ’ என்ற பிரமைதான் மண்டியிட வேண்டும்—ஆம்; மானுடம் வெல்லும். பிரமைகள் நீங்கும்; அல்லது விளக்கப்படும்.”

‘அது’ அவனது பிரசங்கத்தைக் கேட்டு, அரை மனத்துடன் சிரித்துவிட்டு, பின்னர் கேட்டது.

“அறிவின் அடிமையே…உன் சர்வ வல்லமை பொருந்திய அறிவு, உனது ஊன் பொதிந்த உடம்புக்கு உட்பட்டதுதானே?”

“ஆம்’ ”

“சரி, உன் உடம்புக்கு ஏற்படும் நோய், மூப்பு, மரணம் என்ற விதியின்படி அதுவும் செத்துவிடுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அந்த அறிவால் இந்த விபத்துகளைத் தடுத்துவிட முடியும் என்றுகூட நீ நம்புகிறாயா?”

“இல்லை, நான் அவ்விதம் நம்பவில்லை; அதற்கு அவசியமுமில்லை. ஏனெனில் என்னை மட்டுமே—எனது அறிவை மட்டுமே–முன்னுமற்ற பின்னுமற்ற அனாதியாய் எண்ணித் தவிக்கும் மூடாத்மா அல்ல நான். எனக்கு நோயும், மூப்பும், மரணமும் ஏற்படலாம். அதனால் என்ன? நான் இளமை இழந்து மூப்படைவதால் மனித குலமே இளமை இழந்து மூப்படைந்து விடுகிறதா? நான் மரணமுற்று விடுவதால்–உலகமே அஸ்தமித்துவிடப் போகிறதா? என் அறிவு நைந்து போவதால், மனித குலத்தின் அறிவே நைந்துவிடப் போகிறதா? அப்படி இருக்கும் பட்சத்தில் எங்கள் அறிவு அதற்கும் ஒரு மார்க்கம் அமைத்திருக்கும். அது அவசியமில்லை என்பதினாலேயே அந்த முயற்சியில் நாங்கள் இறங்கவில்லை. தனி மனிதன் இறந்து படலாம். அவனது அறிவும், அதன் ஆற்றலும் அழிந்துவிடுவதில்லை. மனித அறிவே ஸ்திரமாய், சிரஞ்சீவியாய் இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் சக்தி பெற்றது……”

“போதும் போதும் உங்கள் அறிவின் பெருமை’ விஷயத்துக்கு வருவோம்” என்று சொல்லிவிட்டு, ‘அது’ சில வினாடிகள் அமைதியாய் இருந்தது.

அந்த அமைதியான வினாடிகளில் ‘அது’ மனிதனின் அறிவின் மீது கொண்டுவிட்ட பொறாமையும், அந்த அறிவை அபகரிக்க வழி தெரியாமல் பொருமும் ஏக்கமும் வௌ¢ப்பட்டன.

சற்று நேரத்துக்குப் பின் வஞ்சகமும், தன்னகங்காரமும் மிகுந்து கர கரக்கும் குரலில் ‘அது’ அவனை மிரட்டியது.

“அற்ப மனிதனே, சாகப் பிறந்தவனே இந்த நிமிஷம் உன் உயிரை நான் எடுத்துக்கொள்ள முடியும். சம்மதம்தானா?”

அந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த கிழட்டு விஞ்ஞானி ஒரு வினாடி திகைத்தே போனான். தனது அனுபவத்தை நம்பவும் முடியாமல், தன் உயிரை இழக்கவும் மனமில்லாமல், குழம்பி நின்றவன் ‘சரி விவகாரம் என்று வந்தாகிவிட்டது. பார்த்துவிடுவோம்’ என்று எண்ணி, தௌ¢வான குரலில் சொன்னான்:

“நான் சாவதற்கு அஞ்சவில்லை. நான் முக்கியமான சில கண்டுபிடிப்புகளைக் குறித்துக் கொண்டிருக்கிறேன். எனது குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு பல சாதனைகளைப் புரியலாம்; அவற்றை முடித்தபின் நான் சாகத் தயார்” என்று அவசர வேகமாய் ஓடித் தன் இருக்கையில் அமர்ந்து, ‘போனை’ எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு அந்தக் கருவிகளை இயக்க ஆரம்பித்தான்.

“நில்….நில்’ சாவு என்றதும் அவ்வளவு அவசரமா? அப்படி முன்னறிவிப்போடு சாவு வருவதில்லை. நான் வந்ததற்கான காரியத்தை உன்னிடம் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை….என்னை நீ கண் திறந்து பார்க்காவிட்டாலும் போகிறது. செவி திறந்து, கவனமாய்க் கேள் நான் உன் உயிரைப் பறித்துச் செல்ல வரவில்லை. உனக்கு, மனிதர்களாகிய உங்களுக்கு முன் யோசனை இல்லாமல் அதிகப்படியான புலன்களை அளித்து விட்டதாக நான் உணர்கிறேன். அதனால் நீங்கள் துன்பப்படுகிறீர்கள். ஆகையினால் உனக்கு இருக்கும் புலன்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு விடுவது என்று தீர்மானித்து விட்டேன். என் தீர்மானத்தின்படி உனது ஆறு புலன்களாகிய கண், மூக்கு, வாய்….செவி, மெய், அறிவு ஆகியவற்றில் ஒன்றை நான் எடுத்துக் கொள்ளப் போவது நிச்சயம். ஏனெனில் எதை நீ இழக்கப் போகிறாயோ, அது எனக்கு அவசியம் தேவை. ஆனால், ஒரு சலுகை தருகிறேன். இவற்றில் எதை நீயே இழக்கச் சம்மதிக்கிறாயோ, அதையே நான் எடுத்துக் கொள்வேன். சீக்கிரம் சொல்” என்றது ‘அது’

‘ஒன்றை நான் எடுத்துக் கொள்ளப் போவது நிச்சயம்’ என்ற அதன் குரலும், ‘அது எது என்று நீ தீர்மானம் செய்’ என்ற சலுகையும் அவனை வெகுவாய்ச் சிந்திக்க வைத்தன.

‘அறிவை இழக்கக் கூடாது. கண்களை இழக்க முடியாது. அதைப்போலவே செவிப் புலன், மெய்யுணர்வு வாய்—ம். இவற்றில் எதை இழந்தாலும் பயனற்றுபோகும் வாழ்க்கை. வேண்டுமானால், மூக்கை இழந்து விடலாமா? மோப்ப உணர்வு இல்லாவிட்டால் உண்ண முடியாதே; உண்ணா விட்டால் உடல் நைந்து போகும்—நோய், மூப்பு, மரணம்–இவ்விதம் குழம்பிய கிழவன் ‘அது’ இவ்விதம் கேட்பதில் ஏதோ சூது இருக்கிறது என்று சந்தேகப்பட்டான்.

ஆம்; மனிதனின், அவன் அறிவின் மிகச் சிறப்பான அம்சமே இந்தச் சந்தேகப்படும் குணம்தான். சந்தேகம் ஆராய்ச்சிக் கருவியாய் அமைகிறது. அதிலிருந்தே யூகம் பிறக்கிறது; செயல் விளைகிறது.

ஆகையால் ‘உன் சித்தத்துக்கு ஏற்ப எதையாயினும் எடுத்துக் கொள்’ என்று கூறி விடலாமா, என்று யோசித்தான். அவ்விதம் சொன்னால் அடுத்த வினாடியே தான் இழக்கப் போவது தன் அறிவு என்பதையும் அவன் உணர்ந்தான்….அறிவினும் உயர்ந்த புலன் ஒன்று தனக்கு விளையலாகாதா என்று கற்பனை செய்தான்.

கிழவனின் முகத்தில் புன்னகை ஔ¢வீசிற்று; “ஏ பரமாத்மாவே, உனது சித்தப்படி என்னிடம் இப்போதுள்ள ஆறு புலன்களில் எதை வேண்டுமானாலும் நீ எடுத்துக் கொள்ளலாம். ஆனால்….ஆனால்…..”

“சீக்கிரம் சொல்….” என்று தன் விருப்பத்துக்கே அவன் விட்டு விட்ட மகிழ்ச்சியில், அவனது அறிவுப் புலன் மீது எண்ணம் கொண்டுவிட்ட அது, பேராசையுடன் பரபரத்தது.

அதன் பேராசையை அறிந்து கொண்ட கிழவன் மூடிய கண்களுடன், முகத்தில் விளைந்த ஏளனச் சிரிப்புடன் சொன்னான்.

“உனக்கு இவ்வளவு அவசரம் கூடாது. சொல்வதை முழுக்கக் கேள். மனிதன் தானடைந்ததைத் திரும்பத் தர மாட்டான். கேட்பது நீயாக இருப்பதால் சம்மதிக்கிறேன். சரி, என்னிடம் இருக்கும் புலன் ஒன்றை, எனக்கு அது தீங்கு பயக்கிறது என்பதாலும், உனக்கு வேண்டுமென்பதாலும் நீ எடுத்துக்கொள்ளப் போகிறாய். என்னையே ‘எது’ என்று தீர்மானித்து நான் தருவதைக் கொள்வதாகச் சலுகை தந்தாய். அந்தச் சலுகையை நான் விட்டுக் கொடுக்கிறேன். உன் இஷ்டப்படி எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சலுகையை நான் விட்டுக் கொடுப்பதால் எனது ஒரு வேண்டுகோளை நீ புறக்கணிக்காமல் இருக்கவேண்டும்” என்றான் அவன்.

‘இவனுடைய சர்வ சக்தியான அறிவையே நாம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். இவன் வேறு எதை வைத்துக் கொண்டு என்ன செய்து விடப் போகிறான்’ என்று எண்ணி “உனது வேண்டுகோள் என்ன?” என்றது ‘அது’

கிழவன் அமைதியாக ஒவ்வொரு வார்த்தையாய்ச் சொன்னான். “எனது புலனை எடுத்துக் கொள்ள வந்து விட்ட மூல சக்தியே….நான் அனுமதித்து விட்டேன். எனது வேண்டுகோளை நிறைவேறுவதற்கு முன்பே, உனது காரியத்தை நீ நடத்திக் கொள்ளலாம். எனது புலன்களில் ஒன்றை நீ எடுத்துக் கொள்வதற்கு முன், எனது வேண்டுகோளைத் தீர்க்கமாய்ப் பரிசீலித்துவிட்டுக் காரியம் செய். எனது வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமல் எடுத்துக் கொண்டதையே திருப்பித் தந்து பெரும் தோல்விக்கு உள்ளாகாதே, கேள்; இதுவே என் வேண்டுகோள்; என்னிடம் இருக்கின்ற புலன்களில் ஒன்றை எடுத்துக் கொள்; என்னிடம் இல்லாத புலன் ஒன்றை பதிலுக்குத் தா’….”

பரமாத்மா பேரமைதியில் ஆழ்ந்து யோசித்தது: ‘இல்லாத புலன்….இல்லாத புலன்….இல்லாத புலன். இல்லாததை எப்படிச் சிருஷ்டிப்பது….?’

‘அறிவுப் புலனை எடுத்துக் கொண்டு பதிலுக்கு என்ன புலனைத் தருவது….தர முடியுமா? தந்தால் அறிவினும் சக்தி மிக்கதாய் அது மாறினால்?……இல்லாதது எது?….ம், மானுடன் சொல்வான்; அவன் பாஷையை நான் பேச முயன்றது சரியன்று…இருக்கிறவனிடம் இருக்கின்றதை கேட்டால், இல்லாதவனிடம் இல்லாததைக் கேட்டது சரிதான்…’ என்ற என்ற கடைசி முணு முணுப்புடன் ‘அது’ தன் பிரசன்னத்தைக் கலைத்துக் கொண்டு, அங்கு இல்லாமலாகி எங்கும் நிறைந்து கலைந்தது…..

கிழவன் இடி போன்ற குரலில் சிரித்தான்.

“நீ சாவாய்….அதை நீ வெல்ல முடியாது” என்று பதில் குரல் எங்கிருந்தோ வந்து ஒலித்தது.

“என்னால் தான் சாக முடியும்…..உன்னால் முடியுமா? நான் செத்தால் எனக்கு சந்ததி உண்டு. உனக்கு யாரிருக்கிறார்கள்” என்று சிரித்தவாறே, திடீரென்று மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டு–மரணத்திற்கு முன் ஏற்பட்ட இந்த கற்பனைகளிலிருந்து விடுபட்டு, அந்த ஆராய்ச்சிக் கூடத்தில், தன் இருக்கையினின்றும் கீழே விழுந்தான் அந்தக் கிழட்டு விஞ்ஞானி. முன்னறிவிப்பு இல்லாமல் வந்த கோழை மரணம், விஞ்ஞானியின் உடலைக் குளிரத் தழுவிக் கொண்டது.

அந்த ஆராய்ச்சிக் கூடத்தில், கரு கருவென சுருண்ட சிகையுடன் ஒரு இளைஞன்—முன்னவனின் சந்ததி–இப்பொழுது அமர்ந்திருந்தான். அவன் விழிகள் ஏகாந்த வௌ¢யில் சுழலும் எண்ணற்ற ரகஸியங்களின் புதிய உண்மைகளைக் கண்டு கொண்டிருக்கின்றன. அவன் செவிகளை அடைத்திருந்த கருவியின் மூலம், புதிய புதிய செய்திகளை முதன் முதலில் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

ஆனால் இதுவரை எங்கேயும் ஔ¢யாகவோ, ஒலியாகவோ ‘அது’ இவன் வழியில் குறுக்கிடவில்லை.

‘அது’ தன் பாஷையில் தன் விதியை நொந்து கொள்கிறது. அந்த பாஷையின் அர்த்தத்தையும் இவனே கண்டு தேர்கிறான். அதன் பெருமையை தானும் அறிந்து, அதற்கும் உணர்த்துகிறான். இவனே மானுடன்’

முன்னும் பின்னும் உள்ள மனிதகுல வம்சாவளிச் சங்கிலியில் ஒரு கண்ணி இவன். இவனுக்கு இல்லாதது எது, மரணம் உட்பட?…….

நீ இன்னா ஸார் சொல்றே?

நான் ஒண்ணும் ‘லூஸ்’ இல்லே. அதுக்காக என்னெ நான் புத்திசாலின்னு சொல்லிக்கறதா இன்னா… எனக்குக் குடுத்திருக்கிற வேலையை ஒழுங்காகத்தான் செய்யிறேன். அதிலே ஒரு சின்ன மிஷ்டேக் சொல்ல முடியாது. எங்க முதலாளிக்கு மானேஜர் ஸாருக்கு எல்லாருக்கும் என்கிட்டே ரொம்பப் பிரியம்.

அதான் ஸார்… நவஜோதி ஓட்டல்னு சொன்னா தெரியாதவங்க யாரு? அந்த ஓட்டல்லே மூணாவது மாடியிலே நான் இருக்கேன்… பேரு பாண்டியன். சும்மா ரோட்டுக்கா போய்க்கிட்டிருக்கும் போதே அப்படிப் பார்த்தா நா உங்க கண்ணிலே ஆம்பிட்டுக்குவேன்… ஆனா நம்பகிட்டே ஒரு பழக்கம்… அது நல்லதோ, கெட்டதோ… யாருக்கிட்டேயும் அனாவசியமா பேசிக்க மாட்டேன். நான் பேசறதே இல்லே… பின்னே என்னா ஸார், பேசறதுக்கு இன்னா இருக்குது! ரொம்பப் பேசறவனெ நம்பவே கூடாது ஸார்! அவனுக்குப் புத்தியே இருக்காது. பேசாம இருக்கிறவனையும் நம்பக் கூடாது… ஏன்னா அவன் பெரிய ஆளு ஸார்… சமயம் வாச்சா ஆளையே தீர்த்துப் பிடுவான்.

“அந்தா பெரிய ஓட்டல்லே நீ இன்னாடா பண்றே பாண்டியா?”ன்னு கேப்பீங்க. ஐயாதான் மூணாவது மாடியிலே வெயிட்டர் பாய். இன்னா ஸார், வெயிட்டர் பாயின்னா கேவலமா பூடுச்சா… நீ கூடப் போட மாட்டே ஸார், அந்த மாதிரி ‘ஒயிட் டிரஸ்’; இடுப்பிலே கட்டியிருக்கிற பெல்டு இருக்கே, அசல் சில்க், சார் சில்க்! பொத்தானெல்லாம் சும்மா பளபளன்னு… ஒரு தடவை வந்து நம்மெ கண்டுகினு போ சார்… யார் வேண்ணாலும் வரலாம்… ரூம் வாடகைதான் பதினைஞ்சு ரூபா… மாசத்துக்கான்னு கேக்காதே… இவன் யாரோ சுத்த நாட்பொறம்னு கேலி பண்ணுவாங்க… ஒரு நாளைக்குப் பதினைஞ்சு ரூபா நைனா; ரூமெல்லாம் படா டமாசா இருக்கும்… சோபாவுங்க இன்னா, கட்டிலுங்க இன்னா… கண்ணாடிங்க இன்னா – பாத்ரூம்லே கண்ணாடிங்க வேற – ஷவர்பாத், ‘சுட்’ தண்ணி, ‘பஸ்’ தண்ணி – வேற இன்னா வோணும்! மணி அடிச்சா நா ஓடியாந்துருவேன்… ஒரு தடவை வந்து தங்கிப் பாரு சார். படா மஜாவா இருக்கும்… வந்தா மூணாவது மாடியிலே தங்கு சார்… அப்பத்தான் நான் கண்டுக்குவேன் – மத்த பசங்க மாதிரித் தலையை சொறிஞ்சிக்கினு ‘பக்சிஸ்’ கேக்க மாட்டேன்… குடுத்தாலும் வாங்கிக்க மாட்டேன் – அதிலே நா ரொம்ப ஸ்டிரிக்ட்!

மூணாவது மாடியிலேருந்து ‘ரூப் கார்டனு’க்கு போறது ரொம்ப சுளுவு… நான் ஏன் இம்மா ‘கம்பல்’ பண்ணிக் கூப்ட்றேன்னு யோசிக்கிறியா சார்? ஒரு விசயம், ஒண்ணு கேக்கணும்; அதுக்குத்தான். இன்னா விசயம்னு கேப்பீங்க… வந்தாத்தானே சொல்லலாம்…

மின்னே மாதிரி இல்லே இப்போ… மின்னேல்லாம் புச்சா யார்னாச்சம் வந்துட்டா, ‘சார் ஒரு கடுதாசி எழுதணும் ஒரு கடுதாசி எழுதணும்’னு காயிதத்தைக் கையிலே வெச்சிக்கினு படா பேஜார் குடுப்பேன்… இப்ப அப்படி எல்லாம் இல்லே, நீங்க பயப்படாம வர்லாம்.

கடுதாசின்னு சொன்னப்புறம் ஞாபகம் வருது சார், எங்கிட்ட அந்த மாதிரி எல்லாருகிட்டயும் எழுதி வாங்கின கடுதாசி நெறைய கெடக்குது… எல்லாம் நனைஞ்சு, எழுத்தெல்லாம் கலைஞ்சி பூட்டுது சார்… எப்பிடி நனைஞ்சிது?… அழுது அழுது நனைஞ்சி போச்சி. இப்பல்லாம் நா அழுவறதே இல்லே – அதெல்லாம் நெனச்சா சிரிப்பு வருது. அப்பல்லாம் எனக்கு என்னமோ ஒரு வேகம் பொறந்துடும். கடுதாசி எழுதலேன்னா தலைவெடிச்சிப் போற மாதிரி.

கடுதாசி யாருக்குன்னு கேக்கறியா? ஊர்லே இருக்கிற எங்க மாமனுக்குத்தான். எங்க மாமனை நீங்க பார்த்ததில்லியே சார்… அவரு பெரிய ஜவான்… மீசையெப் பாத்தாவே நீங்க பயந்துடுவீங்க. அவரெ நெனச்சா இப்பக்கூட எனக்குக் கொஞ்சம் ‘தில்’லுதான்… தோ, இம்மா ஒசரம், நல்ல பாடி… அந்த ஆளு பட்டாளத்துக்குப் போனவரு ஸார்… சண்டையிலே கொலை யெல்லாம் பண்ணியிருக்காராம். பத்து ஜப்பான்காரன்களைக் கையாலே புடிச்சு அப்படியே கழுத்தை நெரிச்சிக் கொன்னுப் போட்டாராம். அவருதான் சார் எங்க மாமன்! – ஏன் சார்!… எனக்கு ஒரு விசயம் ரொம்ப நாளா கேக்கணும்னு – கொலை பண்ணா ஜெயில்லே பிடிச்சிப் போடறாங்களே… பட்டாளத்துக்குப் போயி கொலை பண்ணா ஏன் சார் ஜெயில்லே போடறதில்லே? மாமனைப் புடிச்சி ஜெயில்லே போடணும் சார். அப்போ பாக்கறத்துக்கு ரொம்ப நல்லாயிருக்கும்! கம்பிக்கு அந்தப் பக்கம் மாமன் நிக்கும். நான் இந்தப் பக்கம் நின்னுக்கிட்டு, ‘வேணும் கட்டைக்கு வேணும்; வெங்கலக் கட்டைக்கு வேணும்’னு ஒழுங்கு காட்டிக்கிட்டுச் சிரிப்பேன்… அம்மாடி! அப்போ பாக்கணும் மாமன் மூஞ்சியை… மீசையெ முறுக்கிட்டுப் பல்லைக் கடிச்சிக்கினு உறுமினார்னா – அவ்வளவுதான்… நான் நிப்பனா அங்கே? ஒரே ஓட்டம்! ஹோ; எதுக்கு ஓடணும்? அதுதான் நடுவாலே கம்பி இருக்கே… பயப்படாம… நின்னுக்கிட்டுச் சிரிப்பேன். மாமனுக்கு வெறி புடிச்சி, கோவம் தாங்காம கம்பியிலே முட்டிக்கும் – ஜெயில் கம்பி எம்மா ஸ்ட்ராங்கா போட்டிருப்பாங்க? இவுரு பலம் அதுக்கிட்டே நடக்குமா? மண்டை ஒடைஞ்சி ரத்தம் கொட்டும்…

சீ! இது இன்னா நெனைப்பு?… பாவம் மாமன்… என்னமோ கோவத்திலே என்னை வெட்டறதுக்கு வந்துட்டது. அதுக்கு எம்மேலே ரொம்ப ஆசை. அம்மா, அப்பா இல்லாத என்னை வளர்த்து ஆளாக்கினது அதுதானே… மாமன் கிட்டே ஒனக்கு ஏண்டா இம்மாம் கோவம்னு கேப்பீங்க.

இதான் சார் விசயம் – மாமனுக்கு ஒரு மவ இருக்கா சார். அவளெ நான்தான் கண்ணாலம் கட்டிக்கணும்னு மாமன் சொல்லிச்சி. நா மாட்டேன்னிட்டேன். அது இன்னா சார் கண்ணாலம் கட்டிக்கிறது? முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். அவன் இன்னா ஆளு? படா கில்லாடியாச்சே, உடுவானா? ஆச்சா போச்சா அறுத்துப் புடுவேன்; வெட்டிப் புடுவேன்னு மெரட்னான் – அவன் பிளான் இன்னா தெரியுமா? கத்தியெக் கையிலே வெச்சிக்கினு ‘கட்டுடா தாலியெ’ன்னு சொல்றது. இல்லேன்னா ஒரே வெட்டு; கலியானப் பந்தல்லியே என்னெப் பலி குடுத்துடறதுன்னு… இதெக் கேட்டவுடனே எனக்குக் கையும் ஓடலே, காலும் ஓடலே… அவன் செய்வான் சார், செய்வான்… இந்த நியூஸ் எனக்கு யாரு குடுத்தான்னு கேளுங்க… எங்க மாமன் மவதான். அதுக்கு எங்கிட்டே ரொம்பப் பிரியம் சார். ரெண்டு பேரும் சின்னத்திலிருந்து ஒன்னா வெளையாடினவங்க சார். அது வந்து அழுதுகிட்டே சொல்லிச்சி ‘மச்சான் என்னெக் கண்ணாலம் கட்டிக்க ஒனக்கு இஸ்டம் இல்லாட்டிப் போனாப் பரவாயில்லே; இஸ்டமில்லாம கட்டிக்கிட்டு இன்னா பிரயோசனம்? மாட்டேன்னு சொன்னா ஒன்னெ வெட்டிப் போடுவேன்னு அப்பன் சொல்லுது, அப்பன் கொணம்தான் ஒனக்குத் தெரியுமே. நீ எங்கேயாவது போயிடு மச்சான்’னு வள்ளி அழுவும்போது – அதான் அது பேரு – ஒரு நிமிசம் எனக்குத் தோணிச்சி; இவ்வளவு ஆசை வெச்சிருக்காளே, இவளையே கட்டிக்கினா இன்னான்னு. ஆனா அந்தக் கொலைகாரன் மவளைக் கட்டிக்கிட்டா, அவன் ‘ஆன்னா ஊன்னா’ வெட்டுவேன் குத்துவேன்னு கத்தியெத் தூக்கிட்டு வருவானேன்னு நெனைச்சிக்கிட்டேன். அன்னைக்கு ராவோட ராவா ரயிலேறி மெட்றாஸீக்கு வந்துட்டேன். ரயில் சார்ஜீக்கு கையிலே கொஞ்சம் பணம் கொடுத்தது வள்ளிதான். பாவம் வள்ளி! எங்கனாச்சும் கண்ணாலம் கட்டிக்கினு நல்லபடியா வாழணும்…. அந்த விசயம் தெரிஞ்சிக்கிறதுக்குத்தான் சார் கடுதாசி எழுதணும். அடிக்கடி தோணும். தோணும் போதெல்லாம் யாருகிட்டேயாவது போயி, சொல்லி எழுதச் சொல்றது. எழுதி எங்கே அனுப்பறது? அப்புறம் மாமனுக்குத் தெரிஞ்சிதுன்னா என்னெத் தேடிக்கிட்டு வந்துட்டா இன்னா பண்றதுன்னு நெனைச்சிக்கிட்டு பேசாம வெச்சிக்குவேன். ஆனா பாவம், வள்ளிப் பொண்ணை நெனச்சா வருத்தமா இருக்கும். அவளைக் கண்ணாலம் கட்டிக்காம போனோமேன்னு நெனச்சா அழுகை அழுகையா வரும். நானே கண்ணாலம் கட்டிக்காம ஓடியாந்துட்டேனே. வேற எவன் வந்து அவளைக் கட்டிக்கப் போறான்? யாருமே கண்ணாலம் கட்டாம அவ வாழ்க்கையே வீணாப்பூடுச்சோ? நெனச்சா நெஞ்சே வெடிச்சிப் போற மாதிரி வருத்தமா இருக்குது சார். ஹம்… பொண்ணுன்னு ஒருத்தி பொறந்தா அவளுக்குப் புருசன்னு ஒருத்தன் பொறக்காமலா பூட்றான்!… எல்லாத்துக்கும் கடவுள்னு ஒருத்தன் இருக்கான் சார்…

அந்தக் கடுதாசியிலே ஒண்ணை எடுத்துப் படிக்கிறேன் கேக்கிறியா சார்?

“தேவரீர் மாமாவுக்கு, சுபம். உன் சுபத்தையும் உன் மவள் அன்புமிக்க வள்ளியின் சுபத்துக்கும் எழுத வேண்டியது. உன் மவளை நான் கட்டிக்கலேன்னு மனசிலே ஒண்ணும் வருத்தம் வெச்சிக்காதே! இவ்வளவு நாளு வள்ளிக்குக் கண்ணாலம் காச்சியெல்லாம் நடந்து, புள்ளைக்குட்டியோட புருசன் வூட்லே வாழும்னு நெனைக்கிறேன். இன்னா பண்றது? நா கொடுத்து வெக்கலே… அதுக்காக எனக்கு ஒண்ணும் வருத்தம் கெடையாது. இந்த சென்மத்திலே இல்லா காட்டியும் அடுத்த சென்மத்திலே நான் வள்ளியெத்தான் கண்ணாலம் கட்டிக்குவேன். ஆனா அப்பவும் அவளுக்கு அப்பனா வந்து நீயே பொறக்காம இருக்கணும். இங்கே நான் ஏதாவது நல்ல பொண்ணா பாத்துக்கிட்டிருக்கேன். கெடைச்சதும் ஒனக்குக் காயிதம் போடறேன். சமாச்சாரம் வந்ததும் நேரிலே வந்து எனக்குக் கண்ணாலம் கட்டிவெக்க வேணும்னு கேட்டுக் கொள்கிறேன்… இப்படிக்கு, உன் அக்கா மவன் பாண்டியன்…”

– நான் சொன்னதை அப்படியே எழுதிக் கொடுத்தார் சார், அவரு. யாருன்னு கேக்கிறியா?… எத்தினியோ பேரு எழுதிக் குடுத்தாங்க. யாருன்னு சொல்றது. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கடுதாசி எழுதும்போது சொன்னதைத்தான் அப்பிடியே ஞாபகம் வெச்சுக்கிட்டு திருப்பிச் சொன்னேன். இல்லேன்னா, நான் ரொம்பப் படிச்சிக் கிழிச்சேன்.

.. நெனச்சிப் பாத்தா வள்ளிப் பொண்ணுக்கு என்னம்மோ துரோகம் பண்ணிட்ட மாதிரித் தோணுது. அந்த சமயத்திலே தனியா குந்திக்கினு அழுவேன்.

நம்ம மானேஜர் இல்லே சார் – ஐயிரு அவுரு என்னெப் பாத்து ஒருநாள் சொன்னாரு ‘இவன் ஒரு கேரக்டர்’னு… அப்படின்னா என்னான்னு எனக்குத் தெரியலை.

நான் ரொம்ப அழகு சார். நெசமாத்தான்… என்னை மாதிரி இன்னொரு அழகான மனுசனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லே. நான் அவ்வளவு அழகு சார் – என்னெப்பத்தி நானே எப்படி சார் ஒரேயடியா சொல்லிக்கிறது? அதுக்குத்தான் சொல்றேன் ஒரு தடவை இங்கே வந்துட்டுப் போங்கன்னு.

கடுதாசி எழுதற பழக்கத்தை எப்படி உட்டேன்னு கேளுங்க, சுகுணா இல்லே சார், சுகுணா – சினிமாவிலே ‘ஆக்டு’ குடுப்பாங்களே, பெரிய ஸ்டார் – அந்த அம்மாவை நீங்க பார்க்காமயா இருந்திருப்பீங்க? படத்திலேயாவது பாத்து இருப்பீங்களே… அதான் அந்த அம்மா படம் எல்லா பத்திரிகையிலேயும் வந்துச்சே – கார் ஆக்சிடன்டுலே செத்துப்போன உடனே – அதுக்கு முதல் நாளு நம்ம ஹோட்டல்லே இங்கேதான் மூணாவது மாடியிலே ஒன்பதாம் நம்பர் ரூம்லே தங்கி இருந்தாங்க. பாவம்! பத்து வருசத்துக்கு முந்தி அந்த அம்மாவுக்கு இருந்த பேரும் பணமும்… ஹ்ம்! எல்லாம் அவ்வளவுதான் சார். ஆனா நேர்லே பாத்தா அடாடாடா! ‘ஸம்’னு இருப்பாங்க சார். அவங்களுக்கு கடைசி காலத்திலே சான்ஸே இல்லியே, ஏன் ஸார்?

நான் யாரு கிட்டேயும் பேசாதவன். ஆனா அவுங்க கிட்டே மட்டும் ஏனோ ரொம்பப் பேசுவேன். அவுங்களுக்கும் எங்கிட்டே ரொம்ப ஆசை – அதுக்காகத்தான் இங்கே வந்திருந்தாங்களாம். எதுக்கு? – அதான் பழைய மாதிரி மறுபடியும் பேரும் பணமும் எடுக்கிறதுக்காக… என்னென்னமோ திட்டமெல்லாம் போட்டாங்க… யார் யாரோ வருவாங்க, பேசுவாங்க… நமக்கு அதெல்லாம் இன்னா தெரியுது? அவுங்க யார் யாரையோ புடிச்சி சினிமா படம் பிடிக்கறதுக்குப் பிளான் போட்டாங்க சார். அதிலே ஒரு ஆளு என்னைக் கேட்டான் சார்: ‘ஏம்பா, நீ படத்திலே ஆக்ட் குடுக்கிறியா, ஹீரோ பர்சனாலிடி இருக்கே’ன்னு. நானும் ‘ஈஈ’ன்னு இளிச்சிக்கிட்டு நின்னேன். அப்புறம் அந்த சுகுணா அம்மாதான் சொன்னாங்க: ‘பாண்டியா, நீ குழந்தை. சினிமாவெல்லாம் உனக்கு வேணாம்; அது உன்னைப் பாழாக்கிடும்’ – அப்படீன்னு. அவ்வளவுதான்! நமக்கு ஒதறல் எடுத்துக்கிச்சி. அந்த ஆசையை விட்டுப் பிட்டேன்.

ரெண்டு மூணு நாளிலே நான் ரொம்ப சினேகம் ஆயிட்டேன். அவங்களோட, வள்ளி மேலே வந்த ஆசை மாதிரி அவங்க மேலேயும் லேசா ஒரு ஆசை உண்டாயிடுச்சி. ஜன்னல் வழியா அவுங்க மொகம் தெரியற இடத்திலே நின்னு அவங்களையே பாத்துக்கிட்டிருப்பேன். அவுங்களும் பாப்பாங்க. அவுங்க சிரிப்பாங்க; நானும் சிரிப்பேன்.

அன்னக்கிப் பாத்து எனக்கு மாமாவுக்குக் கடுதாசி எழுதணுமிங்கிற ஆசை வந்தது. காயிதத்தை எடுத்துக்கிட்டு, சுகுணா அம்மாகிட்டே போனேன். அந்த அம்மா சந்தோசமா கூப்பிட்டு உக்காரச் சொல்லிக் கடுதாசி எழுத ஆரம்பிச்சாங்க. அப்ப அவுங்க பக்கத்திலே ஒரு புஸ்தகம் இருந்தது. அது இங்கிலீஷ் புஸ்தகம். எனக்குப் படிக்கத் தெரியாதே ஒழிய, எது இங்கிலீசு எழுத்து, எது தமிழ் எழுத்துன்னு நல்லாத் தெரியும். இங்கிலீசு எழுத்துத்தான் சார் ரொம்ப அழகு; தமிழ் நல்லாவேயில்லே, என்னமோ புழு நெளியற மாதிரி… அந்த சுகுணா எப்பவுமே ஏதாவது பொஸ்தகத்தைப் படிச்சிகினே இருப்பாங்க – நா அவங்களைக் கேட்டேன்: “நம்ம ஐயிருல்லே – மேனேஜர் – அவரு என்னைப் பார்த்து, ‘இவன் ஒரு கேரக்டர்’னு சொன்னார், அப்படின்னா என்னா அர்த்தம்”னு. சுகுணா சிரிச்சிக்கிட்டே சொன்னாங்க: “அவரு சொன்னதிலே ஒண்ணும் தப்பில்லே” அப்படீன்னா…

… அவங்க சொன்ன அர்த்தத்தை அப்படியே எனக்குத் திருப்பிச் சொல்ல வரல்லே. அனா அர்த்தம் மட்டும் புரிஞ்சு போச்சு. நான் இன்னா சார் அப்பிடியா?

அந்தச் சுகுணா சொல்வாங்க. என் கண்ணு ரொம்ப அழகாம்; என் உதடு கீழ்உதடு இல்லே. அது ரொம்ப ரொம்ப அழகாம்; நான் மன்மதனாம். எனக்கு அவுங்க அப்படிச் சொல்லும்போது உடம்பெல்லாம், என்னமோ செய்யும். எனக்கு அவுங்க மேலே ஆசை – ஆசைன்னா, காதல் உண்டாயிருச்சி; போ சார், எனக்கு வெக்கமா இருக்கு.

அன்னக்கிக் கடுதாசி எழுதறப்போ நான் என் மனசுக்குள்ளே இருந்த ஆசையைச் சொல்லிப்பிட்டேன். கொஞ்சம்கூடப் பயப்படலே! அவுங்க முகத்தைப் பார்த்தப்போ அப்படி ஒரு துணிச்சல்; ஆனா எல்லாம் பொசுக்குனு போயிடுச்சி சார். என் மூஞ்சியையே பார்த்துக்கிட்டிருந்துட்டு திடீர்னு என்னெக் கட்டிப் புடிச்சி, அவுங்க – அந்த சுகுணா – ‘ஓ’ன்னு அழுவ ஆரம்பிச்சுட்டாங்க சார். எனக்கும் அழ வந்திடுச்சு. நானும் அழுவறேன். அவுங்களும் அழுவறாங்க… எனக்கு ‘ஏன்’னே புரியலே. அப்புறம் அவுங்க சொன்னாங்க… அது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.

“நான் பாக்கியசாலிதான்! ஆனா என்னோட இந்த வெளிவேஷத்தைக் கண்டு நீ மயங்காதே. நான் வெறும் சக்கை… விஷச் சக்கை… ஒரு மனுஷனுக்குத் தரக்கூடிய இன்பம் எதுவும் எங்கிட்டே இல்லே. உன்னை அடையறதுக்கு நான் குடுத்து வெக்கலே… அந்தப் பாக்கியம் இருந்தும் இல்லாம போன மாதிரி, அடுத்த ஜென்மத்திலாவது நாம்ப ஒருத்தரை ஒருத்தர் அடையலாம்…”. இன்னும் என்னென்னமோ சொல்லிக்கினெ என் கையிலே மொகத்தைப் பொதைச்சுக்கிட்டு கதறிட்டாங்க கதறி – யாரு அவங்க? – பெரிய சினிமா ஸ்டாரு சார்!… பாவம் அடுத்த நாளு அநியாயமா பூட்டாங்களே சார்! அவுங்க குடுத்த மோதிரம் ஒண்ணு – தோ- விரல்லே கெடக்கு… ஆனா, அந்த அம்மா ஐயிரு என்னைச் சொல்றமாதிரி – அவங்களே ஒரு கேரக்டருதான் சார். ஆனா, அவுங்க செத்தப்போ நான் வருத்தப்படவே இல்லை சார்! நான் எப்ப சாகறதுன்னுதான் அடிக்கடி யோசிக்கிறேன் சார்; இதிலே இன்னொரு கஷ்டமும் இருக்கு. அடுத்த ஜென்மத்திலே நா யாரைக் கண்ணாலம் கட்டிக்கறது? வள்ளியையா, சுகுணாவையா?…

இந்த ஜென்மத்திலே நான் சொகமாத்தான் இருக்கேன். அடுத்த ஜென்மத்தை நெனைச்சிக்கினா ஒண்ணுமே புரியலை சார்…

இதெப்பத்தி உங்களை ஒரு வார்த்தை கேக்கலாம்னுதான் சார் இந்தப் பக்கம் வந்தா வாங்கன்னு சொல்றேன். இங்கே இருக்கிறவங்க, கேட்டா சிரிக்கிறாங்க சார்…

“நீ ஒரு ‘கேரக்டர்” தான்”னு சொல்றாங்க. பார்க்கப் போனா ஒலகத்திலே ஒவ்வொரு மனுஷனும் ஒரு ‘கேரக்டர்’ தான்! நீ இன்னா சார் சொல்றே…?

(எழுதப்பட்ட காலம்: 1959)

நன்றி: ஜெயகாந்தன் ஒரு பார்வை – டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியன்,
கலைஞன் பதிப்பகம், சென்னை – 600 017. முதல் பதிப்பு: 2000, 

யுக சந்தி

கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள்.

“பாட்டி…பாட்டி’ பையைத் தூக்கியாரட்டா? ஓரணா குடு பாட்டி.”

“வண்டி வேணுங்களா அம்மா?”

“புதுப்பாளையம் வக்கீல் குமாஸ்தா ஐயர் வீடுதானுங்களே….வாங்க, போவோம்” —என்று பல்வேறு வரவேற்புக் குரல்களுடன் அவளை இறங்கவிடாமல் தடுத்து நின்ற வண்டிக்காரர்களையும், கூலிக்காரச் சிறுவர்களையும் பார்த்துக் கனிவோடு சிரித்துவிட்டுப் பாட்டி சொன்னாள்:

“எனக்கு ஒண்ணும் வேண்டாம்பா..சித்தே வழியை விட்டேள்னா நான் மெள்ள நடந்தே போயிடுவேன்…. ஏண்டாப்பா, வீட்டெக் கூடத் தெரிஞ்சு வெச்சிருக்காய்… நான்தான் மாசம் ஒருதடவை வர்றேனே, என்னிக்கு வண்டியிலே போனேன்?” என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி, அவர்களை விலக்கி வழியமைத்துக் கொண்டு தணலாய்த் தகிக்கும் வெயிலில், முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, இடுப்பில் ஏற்றிய சுமையுடன் வறுத்துக் கொட்டிய புழுதி மண்ணை அழுந்த அழுந்த மிதித்தவாறு ஒரு பக்கமாய்ச் சாய்ந்து சாய்ந்து நடந்தாள் பாட்டி.

பாட்டிக்கு வயது எழுபது என்றாலும் சரீரம் திடமாய்த்தான் இருக்கிறது. மூப்பினால் ஏற்பட்ட ஸ்தூலமும், அதனால் விளையும் இளைப்பும் வீட்டுக்குப் போன பின்தானே தெரியும்?…

அவள் கணிப்பில் நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து பரந்து ஓடுகிறார்கள்.

மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள்.

அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வரண்ட பாலையாய் மாறிப் போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? என்ன செய்தால்தான் என்ன?

தகிக்கின்ற புழுதியில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் புதைய, அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள் பாட்டி.

வழியில் சாலையோரத்தில் — நான்கைந்து மனிதர்கள் நின்று சுகம் காண வாகாய் முளைத்த பெருங்குடைபோல் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது ஒரு சிறிய வேப்பமரம்.

அந்த நிழலில் ஒற்றையாய்ச் சற்றே நின்றாள் பாட்டி.

எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் –சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்– காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன.

“என்னப்பனே மகாதேவா” என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்தக் குளுமையை அனுபவித்தாள் பாட்டி.

பாட்டியின் முக்காடிட்ட வட்டமான முகத்தில் ஒரு குழந்தைக்களை குடிகொண்டிருந்தது. இந்த வயதிலும் அவள் சிரிக்கும்போது வரிசைப் பற்கள் வடிவாய் அமைந்திருந்தது ஓர் ஆச்சரியமே’ அவள் மோவாயின் வலதுபுறத்தில் ஒரு மிளகை விடவும் சற்றுப் பருத்த அழகிய கறுப்பு மச்சம்; அதன்மீது மட்டும் கருகருவென இரண்டு முடி– இவ்வளவையும் ஒருசேரப் பார்த்தவர்கள், இவள் இளவயதில் எப்படி இருந்திருப்பாள் என்று எண்ணாமல் இருக்க முடியாது.

பாட்டியின் பொன்னிறமான மேனியில் அதிக நிறபேதம் காட்டாத நார்ப்பட்டுப் புடவை காற்றில் படபடத்து; புடவையிலிட்ட முக்காட்டின் விளிம்பெல்லாம் குத்துக் குத்தாய் லேசாகத் தலைகாட்டும்– மழித்து நாளாகிவிட்டதால் வளர்ந்திருக்கும்– வெள்ளி முடி. கழுத்தில் ஸ்படிக மாலை. நெற்றியில் வியர்வையால் கலைந்த விபூதிப் பூச்சு. புடவைத் தலைப்பால் முகத்தையும், கைகளையும், மார்புக் குவட்டின் மடிப்புகளையும் அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டாள். அப்போது வலது விலாப்புறத்தில் இருந்த சிறிய பவழம் போன்ற சிவப்பு மச்சம் வௌ¢த் தெரிந்தது.

—மீண்டும் நிழலிலிருந்து வெயிலுக்கு வந்து புழுதி மண்ணிலிருந்து, பழுக்கக் காய்ந்த கெடிலநதிப் பாலத்தின் கான்கிரீட் தளவரிசையில் பாதங்களை அமைதியாகப் படிய வைத்து, அசைந்து அசைந்து அவள் வரும்போது…..

பாலத்தின்மீது கிராதியின் ஓரமாக, பாட்டியம்மாள் மீது பட்டுவிடக் கூடாதே என்ற பய உணர்வோடு ஒதுங்கி நின்று கையிலுள்ள சிறு தகரப்பெட்டியுடன் கும்பிட்டான் ஒரு பழைய பழகிய —நாவிதன்.

“பாட்டியம்மா….எங்கே, நெய்வேலியிலிருந்தா?” என்று அன்புடன் விசாரித்தான்.

“யாரு வேலாயுதமா?….ஆமா’ ….உன் பெண்டாட்டி குளி குளிச்சுட்டாளா?” என்று ஆத்மார்த்தமாய் விசாரித்தாள் கிழவி.

“ஆச்சுங்க…ஆம்பளைப் பையன்தான்.”

“நல்லாயிருக்கட்டும்….பகவான் செயல்….’ இது மூணாவது பையனா?”

“ஆமாமுங்க” என்று பூரித்துச் சிரித்தான் வேலாயுதம்

“நீ அதிர்ஷ்டக்காரன்தான்…எந்தப் பாடாவது பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா?” என்றதும் வேலாயுதம் குடுமியைச் சொறிந்தவாறு சிரித்தான்.

“அட அசடே, என்ன சிரிக்கிறாய்? காலம் வெகுவாய் மாறிண்டு வரதுடா; உன் அப்பன் காலமும் உன் காலமும் தான் இப்படிப் பொட்டி தூக்கியே போயிடுத்து… இனிமே இதொண்ணும் நடக்காது…. புருஷாள் எல்லாம் ஷாப்புக்குப் போறா… பொம்மனாட்டிகள்லேயும் என்னை மாதிரி இனிமே கெடையாதுங்கறதுதான் இப்பவே தெரியறதே….ம் …எல்லாம் சரிதான்; காலம் மாறும்போது மனுஷாளும் மாறணும்…. என்ன, நான் சொல்றது?” என்று கூறி ஏதோ ஹாஸ்யம் பேசிவிட்ட மாதிரி பாட்டி சிரித்தாள். பதிலுக்கு அவனும் சிரித்தான்.

“இந்தா, வெயிலுக்கு ரெண்டைக் கடிச்சிண்டு போ” என்று இடுப்பிலிருந்த பையில் பிதுங்கி நின்ற இரண்டு வெள்ளிரிப் பிஞ்சுகளை எடுத்து அவனது ஏந்திய கைகளில் போட்டாள்.

“பஸ்லே வரச்சே அணாவுக்கு நாலுன்னு வித்தான்…. கொழந்தைங்களுக்கு ஆகுமேன்னு ஒரு நாலணாவுக்கு வாங்கினேன்” என்று அவள் சொன்னதும், வேலாயுதம் ஒரு கும்பிடு போட்டுவிட்டு —தன்னை அவள் கடக்கும்வரை நின்று பின்னர் தன் வழியே நடந்தான்.

சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த கௌரியம்மாள், தனது பத்து வயதில் இந்தக் கடலூரில் நன்கு செயலில் இருந்த ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள். பதினாறு வயதில் கையிலொரு குழந்தையுடன் கைம்மைக் கோலம் பூண்ட பின், இத்தனை காலமாய்த் தன் மகனையும், தன் புருஷன் பங்கில் கிடைத்த வீட்டையும் விட்டு எந்த ஊருக்கும் சென்றதில்லை.

எனினும் தன் மகன் வயிற்றில் பிறந்த மூத்தமகள் கீதா, மணக்கோலம் பூண்டு பத்தே மாதங்களில், தரித்திருந்த சுமங்கலி வேடத்தை, நாடகப் பூச்சைக் கலைப்பது போல் கலைத்துவிட்டுக் குடும்பத்தை அழுத்தும் பெருஞ் சோகமாய்க் கதறிக் கொண்டு தன் மடியில் வந்து வீழ்ந்து குமுறி யழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசி சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கௌரிப் பாட்டி. தன் அரவணைப்பில், தன் அன்பில், தனது கண்ணீரில், தனது ஒட்டுதலில் அவளை இருத்திக் கொள்வதையே தன் கடமையாக ஏற்றுக் கொண்டாள். அதுவரை கீதாவின்மீது, மகன் பெற்ற குழந்தை என்ற பாசம் மட்டுமே கொண்டிருந்த பாட்டி— கணவன் இழந்த நாள் முதல் தன் உயிரையே மகன் மீது வைத்திருந்த அந்தத் தாய்—அதை மாற்றிக் கொண்டது கீதாவுக்கு வெறும் ஆறுதல் தரும் பொருட்டன்று.

கௌரிப் பாட்டி தனது இறந்த காலத்தின் நிகழ் காலப் பிரதிநிதி யெனத் தன்னையே அவளில் கண்டாள்.

பாட்டியின் மகன் கணேசய்யர் தந்தையின் மரணத்தை— அதனால் விளைந்த அத்யந்த சோகத்தை உணராதவர் அவரது மனைவி பார்வதி அடிக்கடி ரகசியமாகக் கடிந்து கொள்வதற்கு ஏற்ப அவர் ஒரு ‘அம்மா பிள்ளை’ தான்.

விதவையாகிவிட்ட கீதாவைப் பற்றிப் பலவாறு குழம்பிக் குழம்பிப் பின்னொரு நாள் ஹைஸ்கூல் படிப்போடு நின்றிருந்த அவளை, உபாத்திமைப் பயிற்சிக்கு அனுப்ப யோசித்து, தயங்கித் தயங்கித் தன் தாயிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவரது முடிவை வெகுவாகப் பாராட்டி அவள் ஏற்றுக் கொண்டதும், கௌரிப் பாட்டியை அவரால் அளக்கவே முடியவில்லை.

—பாட்டியம்மாள், மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை எண்ணி மனத்துள் பூரித்தாள்…

பயிற்சி முடித்துப் பல காலம் உள்ளூரிலே பணியாற்றி வந்த கீதாவுக்குப் போன வருஷம்– புதிதாகப் பிறந்து வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகிய— நெய்வேலிக்கு உத்தியோக மாற்றல் வந்தபோதும் கணேசய்யர் குழம்பினார்.

“அதற்கென்ன? நான் போகிறேன் துணைக்கு….” என்று. பாட்டியம்மாள் இந்தத் தள்ளாத காலத்தில் மகனையும் குடும்பத்தையும் துறந்து தனிமைப்பட தானே வலிய முன் வந்ததற்குக் காரணம், எங்கே முப்பது வயதைக்கூட எட்டாத தன் கீதா வைதவ்ய இருட் கிடங்கில் அடைப்பட்டுப் போவாளோ என்ற அச்சம்தான்.

இந்த ஒரு வருஷ காலத்தில், நீண்ட விடுமுறைகளின் போது இருவரும் வந்து தங்கிச் செல்வது தவிர, சனி–ஞாயிறுகளில் நினைத்தபோது புறப்பட்டு வந்துவிடுவாள் பாட்டி. அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவளது வாடிக்கையான நாவிதன் வேலாயுதத்தையும், அதற்கு முன் அவன் அப்பனையும் தவிர, வேறு எவரிடமும் பாட்டியம்மாள் தலை மழித்துக் கொள்ளப் பழக்கப் படாததுமாகும்.

இப்போது வழியில் எதிர்ப்பட்ட வேலாயுதம், நாளைக் காலை அவள் வீட்டில் வந்து நிற்பான் என்று பாட்டிக்குத் தெரியும். வரவேண்டும் என்பது அவனுக்கும் தெரியும் அது வாடிக்கை.

ஒரு மைலுக்கு குறைவான அந்தத் தூரத்தை அரை மணி நேரமாய் வழி நடந்து அவள் வீட்டருகே வந்தபோது கணேசய்யர் முகத்தில் தினசரிப் பத்திரிக்கையைப் போட்டுக் கொண்டு முன் கூடத்து ஈஸிச்சேரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் திறந்து வைத்த தகர டின்னும் முறத்தில் கொட்டிய உளுத்தம் பருப்புமாய், மூக்குத்தண்டில் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டு கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் மருமகள் பார்வதி அம்மாள். கம்பி அழி வைத்து அடைத்த முன்புறக் குறட்டின் ஒரு மூலையில், வெயிலுக்கு மறைவாய்த் தொங்கிய தட்டியோரமாய்ச் செருப்புகள் இறைந்து கிடக்க, வாய்க்குள் ஏதேதோ பொருளற்ற சம்பாஷணைகளைத் தான் மட்டும் ராகமிழுத்து முனகியவாறு குடும்ப விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தாள் கடைசிப் பேத்தியான ஆறு வயது ஜானா.

— பாட்டி வந்து நின்றதை யாருமே கவனிக்காதபோது, கம்பிக் கதவின் நாதாங்கியை லேசாக ஓசைப்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சிறு ஒலியில் விளையாட்டு சுவாரஸ்யத்தோடு திரும்பிப் பார்த்த ஜானா, அன்பில் விளைந்த ஆர்வத்தோடு ‘பாட்டி’ என்ற முனகலுடன் விழிகளை அகலத்திறந்து முகம் விகஸித்தாள்.

“கதவெத் தெறடி” என்று பாட்டி சொல்வது காதில் விழுமுன், “அம்மா அம்மா… பாட்டி வந்துட்டாம்மா, பாட்டி வந்துட்டா’…” என்று கூவியவாறு உள்ளே ஓடினாள் ஜானா.

கதவைத் திறக்காமல் தன் வரவை அறிவித்தவாறு உள்ளே ஓடும் குழந்தையைக் கண்டு பாட்டி சிரித்தாள்.

கணேசய்யர், முகத்தின் மேல் கிடந்த பத்திரிகையை இழுத்துக் கண் திறந்து பார்த்தார். குழந்தையின் உற்சாகக் கூப்பாட்டால் திடீரென்று எழுந்து சிவந்த விழிகள் மிரண்டு மிரண்டு வெறிக்க ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர். அதற்குள் “ஏண்டி சனியனே இப்படி அலறிண்டு ஓடிவறே’ ” என்று குழந்தையை வைதுவிட்டு “வாங்கோ… வெயில்லே நடந்தா வந்தேள்…… ஒரு வண்டி வெச்சுக்கப்படாதோ? ” என்று அங்கலாய்த்தவாறே மரியாதையோடு எழுந்தோடி வந்து கதவைத் திறந்தாள் பார்வதி.

“இதோ இருக்கிற இடத்துக்கு என்ன வண்டியும் வாகனமும் வேண்டிக் கெடக்கு? அவனானா பத்தணா குடு, எட்டணா குடும்பான்…” என்று சலித்துக் கொண்டே படியேறி உள்ளே வந்த தாயைக்கண்டதும் “நல்ல வெயில்லே வந்திருக்கயே அம்மா, பார்வதி’… அம்மாவுக்கு மோர் கொண்டு வந்து கொடு” என்று உபசரித்தவாறே ஈஸிசேரியிலிருந்து எழுந்தார் கணேசய்யர்.

“பாவம். அசந்து தூங்கிகொண்டிருந்தே… இன்னும் செத்தே படுத்திண்டிறேன்…” என்று அவரைக் கையமர்த்தியவாறே, ஈஸிசேரின் அருகே கிடந்த ஸ்டூல் மீது பையை வைத்து விட்டு முற்றத்திலிறங்கித் தொட்டித் தண்ணீரை அள்ளிக் கை கால் முகம் அலம்பி, தலையிலும் ஒரு கை வாரித் தௌ¢த்துக் கொண்டாள் பாட்டி, பிறகு முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு கூடத்து ஸ்டாண்டிலிருந்த சம்புடத்தை எடுத்து “என்னப்பனே… மகாதேவா” என்று திருநீற்றை அணிந்துக்கொண்டு திரும்பி வரும் வரை, கணேசய்யர் ஈஸிசேரின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அந்த ஈஸிசேர் பாட்டிக்கு மட்டுமே உரிய சிம்மாசனம். அவள் வீட்டிலில்லாத போதுதான் மற்ற யாரும் அதில் உட்காருவது வழக்கம். அவள் ஈஸிசேரில் வந்து அமர்ந்தபின் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டு விசிறினார் கணேசய்யர். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள்போல் பாட்டி உட்கார்ந்ததும் அவள் மடியில் வந்து ஏறினாள் ஜானா.

“பாட்டி வெயில்லே வந்திருக்கா…சித்தே நகந்துக்கோ… வந்ததும் மேலே ஏறிண்டு…” என்று விசிறிக்
கொண்டிருந்த விசிறியால் ஜானாவைத் தட்டினார் கணேசய்யர்.

“இருக்கட்டும்டா….கொழந்தை’ நீ உக்காந்துக்கோ…. என்று குழந்தையை மடிமீது இழுத்து இருத்திக் கொண்டாள் பாட்டி.

‘இப்ப என்ன பண்ணுவியாம்’ என்று நாக்கைக் கடித்து விழித்துத் தந்தைக்கு அழகு காட்டினாள் ஜானா.

ஜானாவை மடியில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஸ்டூலின் மேலிருந்த பையை எடுத்து அதனுள்ளிருந்த வெள்ளிரிப் பிஞ்சுகளை வரிசையாகத் தரையில் வைத்து ஜானாவின் கையில் ஒன்றைத் தந்தாள். முறுக்கிச் சுருட்டி வைத்திருந்த மாற்றுப் புடவையை கொடியில் போடுவதற்காகப் பக்கத்தில் சற்று தள்ளி வைத்தாள். பிறகு பையைத் தலை கீழாகப் பிடித்து அதனுள்ளிருந்த மூன்று படி பச்சை வேர்க் கடலையைக் கொட்டியபோது, அதனூடே ஒரு கவர் விழுந்தது.

“ஆமா, மீனாவும், அம்பியும் எங்கே? காணோம்?” என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு ‘இதெ உங்கிட்டே குடுக்கச் சொன்னா கீதா” என்று கவரை நீட்டினாள் பாட்டி.

இருபது வயது நிறைந்த பெண்ணை அம்பியின் துணையோடு மாட்டினி ஷோ பார்க்க என்னதான் பக்கத்திலிருந்தாலும் —எப்படி சினிமாவுக்கு அனுப்பலாம் என்று தாய் கோபித்துக் கொள்வாளோ என்ற அச்சத்தோடு கவரை வாங்கியவாறே, “ஏதோ அவள் படிச்ச நல்ல நாவலாம். படமா வந்திருக்குன்னு காலையிலிருந்து உசிரை வாங்கித்து ரெண்டு சனியன்களும். மாட்டினி ஷோ தானே…. போகட்டும்னு அனுப்பி வெச்சேன்” என்றார் கணேசய்யர்.

“ஓ’ தொடர் கதையா வந்துதே….அந்தக் கதை தானா அது?… பேரைப் பார்த்தேன்…” என்று ஒரு பத்திரிக்கையின் பெயர், ஓர் எழுத்தாளரின் பெயர் முதலியவற்றைக் குறிப்பாகக் கேட்டாள் பாட்டி. “இதுக்காகப் போய் ஏன் கொழந்தைகளை சனியன்னு திட்டறாய்?… நோக்கும் எனக்கும் சினிமான்னா என்னன்னே தெரியாது…. இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. நம்ம கொழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனச்சிக்கோ…” என்று மகனுக்குப் புத்தி சொல்லிவிட்டு, “கவர்லே என்ன சொல்லு– அவளைக் கேட்டப்போ, ‘அப்பா சொல்லுவா’ ன்னு பூடகமா குடுத்து அனுப்பிச்சாள்” என விளக்கினாள் பாட்டி.

கவரை உடைத்து, கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு அதனுள்ளிருந்த ஒரே காகிதத்தில் சுருக்கமாக எழுதியிருந்த வாசகங்களை படிக்க ஆரம்பித்ததும் — கணேசய்யரின் கைகள் நடுங்கின; முகமெல்லாம் ‘குப்’பென வியர்த்து உதடுகள் துடித்தன. படித்து முடித்ததும் தலை நிமிர்ந்து எதிர்ச் சுவரில் தொங்கிய கீதாவின் மணக்கோல போட்டோவை வெறித்துப் பார்த்தார்….

தாயினருகே அமர்ந்து இனிமையான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடனிருந்த கணேசய்யரின் முகம் திடீரென இருளடைந்தது’ நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டு தாயின் முகத்தை வெறித்துப் பார்த்தார். அவர் கையிலிருந்த கடிதம் கீழே நழுவியதைக்கூட அவர் கவனிக்கவில்லை.

‘என்ன விபரீதம்’ ‘ என்று துணுக்குற்ற பாட்டியம்மாள், தரையில் விழுந்த அக்கடிதத்தை வௌ¢ச்சத்தில் பிடித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்; அவளால் கண்ணாடியில்லாமலே படிக்க முடியும்’

“என் அன்பிற்குரிய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கு….

இந்த கடிதத்தை எழுதுகையில் ஆறு மாதங்கள் தீர்க்கமாய் யோசித்து தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தபின் தௌ¢ந்த மனத்தோடுதான் எழுகிறேன். இந்தக் கடிதத்திற்குப் பிறகு உங்களுக்கும் எனக்கும் கடிதப் போக்கு வரத்தோ, முகாலோபனமோ கூட அற்றுப் போகலாம் என்பதும் தெரிந்தே எழுதுகிறேன்.

என்னோடு பணி புரியும் ஹிந்தி பண்டிட் திருராமச்சந்திரன் என்பவரை வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்ததுதான். ஆறுமாத காலமாய் நான் எனது உணர்ச்சிகளோடு– இது பாபகரமான காரியம் என்ற ஓர் அர்த்தமற்ற உணர்ச்சியோடு– போராடித்தான் இம் முடிவுக்கு வந்தேன். உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்துக்கு ஆட்படமுடியாமல் வேஷங்கட்டித்திரிந்து, பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தமுப்பது வயதில்– இவ்வளவு சோதனைகளைத் தாங்காமல்– இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்தே– இப்போதே செய்தல் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்…

என் காரியம் என் வரைக்கும் சரியானதே’

நான் தவறு செய்வதாகவோ, இதற்காக வருந்த வேண்டுமென்றே, உங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென்றே கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது… இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வௌ¢ச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப்பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன்.

இந்தக் காலத்தில் யார் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது. ஒரு வேளை நீங்கள் என் முடிவை ஆதரித்தா… இன்னும் ஒரு வாரமிருக்கிறது… உங்களை, உங்கள் அன்பான வாழ்த்தை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் உங்களைப் பொறுத்தவரை’கீதா செத்துவிட்டாள்’ என்று தலை முழுகி விடுங்கள்.

ஆமாம்; ரொம்பச் சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து ‘தியாகம்’ செய்துவிட்டார்கள்? ஏன் செய்யவேண்டும்?

உங்கள் மீது என்றும்

மாறாத அன்பு கொண்டுள்ள

கீதா”

“என்னடா.. இப்படி ஆயிடுத்தே?” என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவோ செய்யவோ சக்தியிழந்தவளாய் ஏக்கம் பிடித்து வெறித்து விழித்தாள் பாட்டி.

“அவ செத்துட்டா…தலையெ முழுகிட வேண்டியது தான்” என்று நிர்த்தாட்சண்யமான குரலில் உறுதியாகச் சொன்னார் கணேசய்யர்.

பாட்டி திகைத்தாள்’

–தாயின் யோசனைக்கோ, பதிலுக்கோ, கட்டளைக்கோ, உத்தரவுக்கோ காத்திராமல் அந்த ‘அம்மாப் பிள்ளை’ முதன் முதலில் தானே ஒரு தீர்மானத்துக்கு வந்தது இது தான் முதல் தடவை.

“அப்படியாடா சொல்றே?” என்று கண்களிரண்டும் நீர்க்குளமாக, வயோதிக நெஞ்சு பாசத்தால் துடிக்க, நெஞ்சில் கை வைத்துக் கேட்டாள் பாட்டி.

“வேறே எப்படியம்மா சொல்லச் சொல்றே?…நீ பிறந்த வம்சத்திலே இந்தக்குடும்பத்திலே… ஐயோ…’ ” என்று இந்த அவலத்தைக் கற்பனை செய்யமுடியாமல் பதறினார் கணேசய்யர்.

‘நான் பிறந்த யுகமே வேறேடா’ என்ற வார்த்தை பாட்டிக்கு வாயில் வந்து நின்றது. அப்பொழுது தான் பாட்டிக்கு ஓர் அரிய உண்மை இவ்வளவு காலத்திற்குப் பின் புரிந்தது:

‘என் மகன் எனது சொல்லுக்கும் எனது உத்தரவுக்கும் காத்திருந்தது வெறும் தாயன்பால் மட்டுமல்ல; நான் ஒரு யுகத்தின் பிரதிநிதி. அது ஆசாரமான யுகம்; நான் பிறந்தது சாஸ்திரத்துக்கு அஞ்சி நடந்த குடும்பத்தில்… அதுபோல் தன் குடும்பமும் நடக்க — நடத்தி வைக்கத் தன்னால் ஆகாவிடினும் என்னால் ஆகும் என்ற நம்பிக்கையில்– அந்த யுகத்தை அந்த ஆசார ஜீவிதத்தைக் கௌரவிப்பதன் பொருட்டே என் சொல்லே, என் வார்த்தையை அவன் எதிர்பார்த்திருந்தான்…’ என்று தன்னைப்பற்றியும், தன் மகனின் மூர்க்கமான தீர்மானம் பற்றியும், தனித்துப்போன அன்பிற்குரிய கீதாவைப்பற்றியும் எண்ணி மௌனமாய் வாயடைத்து உட்கார்ந்தாள் பாட்டி.

அப்போது அங்குவந்து அவர்களை விபரீதச் சூழ்நிலைக்கு ஆட்படுத்தியிருக்கும் அந்தக் கடிதத்தை எடுத்து படித்த பார்வதி “அடி, பாவி மகளே…என் தலையிலே தீயை வெச்சுட்டியேடி’ ” என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.

பாட்டி, தன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படித்தாள்….

“ரொம்ப சுய நலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப்-பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து, ‘தியாகம்’ செய்து விட்டார்கள்?’ –பாட்டிக்குச் ‘சுருக்’ கென்றது…..உதட்டைக் கடித்துக் கொண்டாள்….

இந்த வார்த்தைகளின் அர்த்தம் மற்றவர்களுக்குப் புரியாது. பாட்டிக்குப் புரியும்.

கீதா, பதினெட்டு வயதில் நெற்றியிலிடும் திலகத்தை மறந்தது போல், கூந்தலில் சூடும் பூவைத் துறந்தது போல்– ‘அது அவள் விதி யென்று சொல்லி அவள் சோகத்தையே மறந்து விடவில்லையா, அவளைப்பெற்ற தாயும் தந்தையும்?… கீதா இப்படியாகி வந்த பிறகுதானே பார்வதி, அம்பியையும் ஜானாவையும் பெற்றெடுத்தாள்’…

–அதற்கென்ன அது தான் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை இயல்பு.

வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி அரிப்பதுபோல் அரித்து அரித்துப் புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை, கனவுகளை அவர்கள் அறிவார்களா?

ஆனால்…

கீதாவைப் போல் அவளை விடவும் இள வயதில் அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஹிந்து சமூகத்தின் வைதவ்யக் கொடுந் தீயில் வடுப்பட்டு வாழ்விழந்து, அந்த நினைவுகளையெல்லாம் கொண்டிருந்த, அந்தக் கனவுகளை யெல்லாம் கண்டிருந்த, அந்த ஆசைகளை யெல்லாம் கொன்றிருந்த கௌரிப் பாட்டி, அவற்றை யெல்லாம் கீதாவிடம் காணாமலா, கண்டுணராமலா இருந்திருப்பாள்?

அதனால்தான் கணேசய்யரைப் போலவோ, பார்வதி அம்மாளைப் போலவோ… கீதா இப்படி நடந்து கொள்ளப் போவதைப் அறிந்து.. அவளை வெறுத்து உதறவோ, தூஷித்துச் சபிக்கவோ முடியாமல் ‘ஐயோ’ என்ன இப்படி ஆய்விட்டதே’… என்ன இப்படியாய் விட்டதே’ என்று கையையும் மனசையும் நெறித்துக் கொண்டு தவியாய்த் தவிக்கிறாள் பாட்டி.

பொழுது சாய்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் மாட்டினி ஷோவுக்குப் போயிருந்த மீனாவும் அம்பியும் வீடு திரும்பினார்கள். வாசற்படியில் கால் எடுத்து வைத்த அம்பி, கூடத்து ஈஸி சேரில் சாய்ந்து படுத்து ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்திருக்கும் பாட்டியைக் கண்டதும் சட்டென்று நின்று திரும்பிப் பின்னால் வரும் மீனாவிடம்,

“பாட்டிடீ…” என்று ரகசியமாக எச்சரித்தான்.

‘எங்கே? உள்ளே இருக்காளா, கூடத்தில் இருக்காளா?’ என்று பின் வாங்கி நின்றாள் மீனா.

“சிம்மாசனத்தில்தான் சாஞ்சிண்டு தூங்கறா…” என்றான் அம்பி.

மீனா தோள் வழியே ‘ஸ்டைலாக’ கொசுவித் தொங்கவிட்டிருந்த தாவணியை ஒழுங்காய்ப் பிரித்து, இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, மேலாடை ஒழுங்காக இருக்கிறதா என்று ஒரு முறை கவனித்த பின் தலையைக் குனிந்து சாதுவாய் உள்ளே நுழைந்தாள்.

உள்ளே வந்த பின்தான் பாட்டி தூங்கவில்லை என்று தெரிந்தது. அப்பா ஒரு பக்கம் நாற்காலியிலும் அம்மா ஒரு பக்கம் முகத்தில் முந்தானையைப் போட்டுக் கொண்டு விம்மியவாறு ஒரு மூலையிலும் விழுந்து கிடப்பது என்ன விபரீதம் என்று புரியாமல் இருவரும் திகைத்து நின்றனர்.

அப்போது ஜானா சிரித்துக் கொண்டே அம்பியிடம் ஓடி வந்தாள். “பாட்டி வெள்ளிரிப் பிஞ்சு வாங்கியாந்தாளே…” என்ற ஜானாவின் குரல் கேட்டுப் பாட்டி திரும்பிப் பார்த்தாள் மீனாவை.

“எப்ப வந்தேள் பாட்டி?” என்ரு கேட்டுவிட்டு “என்ன விஷயம்– இதெல்லாம் என்ன?” என்று சைகையால் கேட்டாள் மீனா.

பாட்டியின் கண்கள் குளமாயின.

மீனாவைப் பார்க்கும்போதுதான் அவளுக்கு இன்னொரு விஷயமும்– கணேசய்யர் கீதாவைத் தலை முழுகச் சொல்வதன் காரணம், பார்வதியம்மாள் கீதாவைச் சபிப்பதன் நியாய ஆவேசம் இரண்டும்–புரிந்தது பாட்டிக்கு.

அங்கே கிடந்த அந்தக் கடிதத்தை மீனா எடுத்துப் படித்தாள்.

“அதை நீ படிக்க வேண்டாம்’ என்று தடுக்க நினைத்தாள் பாட்டி. பிறகு ஏனோ ‘படிக்கட்டுமே’ என்று எண்ணி மீனாவின் முகத்தையே உற்றுக் கவனித்தாள்.

மீனாவின் முகம் அருவருப்பால் சுளித்தது.

“அடி நாசமாப் போக” என்று அங்கலாய்த்தவாறே தொடர்ந்து கடிதத்தைப் படித்தாள். அவள் தோள் வழியே எக்கி நின்று கடிதத்தைப் படித்த அம்பி கூட விளக்கெண்ணெய் குடிப்பது போல் முகத்தை மாற்றிக் கொண்டான்.

வீடே சூன்யப் பட்டது. ஊரெல்லாம் பிளேக் நோய் பரவிக்கிடக்கும் போது வீட்டில் ஒரு எலி செத்து விழக்கண்டவர்கள் போல் ஒவ்வொருவரும் மிகுந்த சங்கடத்தோடு இன்னொருவர் முகத்தைப் பார்த்தனர்.

இரவு முழுதும் கௌரிப் பாட்டி தூங்கவில்லை. சாப்பிடவில்லை; கூடத்து ஈஸிசேரை விட்டு எழுந்திருக்கவும் இல்லை.

மகனைப் பார்த்தும் மருமகளைப் பார்த்தும், மற்றப் பேரக்குழந்தைகளைப் பார்த்தும், கீதாவை நினைத்தும் பெருமூச் செறிந்து கொண்டிருந்தாள்.

‘வழக்கத்துக்கு விரோதமாய் என்னை வழியனுப்ப பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, பஸ் புறப்படும் போது முந்தானையால் கண்களைக் கசக்கிக் கொண்டாயடி கீதா? இப்போதல்லவா தெரிகிறது… பாட்டியை நிரந்தரமாப் பிரியறமேன்னுட்டு, பாவம் கொழந்தெ கண்கலங்கி நின்னுருக்கேன்னு… இப்பன்ன புரியறது… கண்ணிலே தூசு விழுந்திருக்கும்னு நினைச்சேனே பாவி’–

‘என்னடி இப்படி பண்ணிட்டியே’ ‘ என்று அடிக்கடி தன்னுள் குமுறிக் குமுறிக் கேட்டுக் கொண்டாள் பாட்டி.

விடிகின்ற நேரத்துக்குச் சற்று முன்பு தன்னையறியாமல் கண்ணயர்ந்தாள். கண்மூடிக் கண் விழித்தபோது மாயம் போல் விடிவு கண்டிருந்தது.

தெருவாசற்படியின் கம்பிக் கதவோரமாக கைப் பெட்டியுடன் வந்து காத்திருந்தான் வேலாயுதம்.

கண் விழித்த பாட்டி– நடந்த தெல்லாம் கனவாகி விடக்கூடாதா என்று நினைத்து முடிக்கு முன் ‘இது உண்மை’ என்பது போல் அந்தக் கடிதம் ஸ்டூலின் மீது கிடந்தது.

அந்த கடிதத்தை எடுத்து மீண்டும் படித்தாள் பாட்டி. அப்போது அறைக்குள்ளிருந்து வந்த கணேசய்யர், இரவெல்லாம் இதே நினைவாய்க் கிடந்து மறுகும் தாயைக் கண்டு தேற்ற எண்ணி “அம்மா வேலாயுதம் வந்திருக்கான்… அவள் செத்துட்டானு நெனைச்சித் தலையை செரைச்சி தண்ணிலே போயி முழுகு…” என்றார்.

“வாயை மூடுடா…” என்று குமுறி எழுந்தாள் பாட்டி. காலங் கார்த்தாலே அச்சான்யம் பிடிச்ச மாதிரி என்னபேச்சு… இப்ப என்ன நடந்துட்டுதுன்னு அவளைச் சாகச் சொல்றே?…” என்று கேட்டுவிட்டு, தாங்க முடியாத சோகத்துடன் முகமெல்லாம் சிவந்து குழம்பக் கதறியழுதாள் பாட்டி. பிறகு சிவந்த கண்களைத் திறந்து ஆத்திரத்துடன் கேட்டாள்.

“என்னடா தப்புப் பண்ணிட்டா அவ?… என்ன தப்புப் பண்ணிட்டா, சொல்லு,’ என்று தன் தாய் கேட்பதைக் கண்டு, கணேசய்யருக்கு ஒரு விநாடி ஒன்றுமே புரியவில்லை.

“என்ன தப்பா?…… என்னம்மா பேசறே நீ? உனக்குப் பைத்தியம் புடிச்சிடுத்தா?” என்று கத்தினார் கணேசய்யர்.

அடுத்த விநாடி தன் சுபாவப்படி நிதானமாக மகனின் முகத்தைப் பார்த்தவாறு, அமைதியாக யோசித்தாள் பாட்டி. தன் மகன் தன்னிடம் இப்படிப்பேசுவது இதுவே முதல் தடவை.

பாட்டி மெல்லிய குரலில் நிதானமாய்ச் சொன்னாள்: “ஆமாம்டா… எனக்குப் பைத்தியந்தான் … இப்பப் பிடிக்கலைடா… இது பழைய பைத்தியம்? தீரமுடியாத பைத்தியம்… ஆனால் என்னோட பைத்தியம்– என்னோட போகட்டும் அந்தப் பைத்தியம் அவளுக்குப் ‘படீர்’ னு தௌ¢ஞ்சிருக்குன்னு அதுக்கு யார் என்ன பண்றது?…… அவதான் சொல்லிட்டாளே– என் காரியம் என் வரைக்கும் சரி, வேஷம் போட்டு ஆடி அவப் பேரு வாங்காம விதரணையா செஞ்சிருக்கேன்னு…”

“அதனாலே சரியாகிடுமா அவ காரியம்?” என்று வெட்டிப் பேசினார் கணேசய்யர்.

“அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான்… அதுக்கென்ன சொல்றே?” என்று உள்ளங் கையில் குத்திக் கொண்டாள் பாட்டி.

“சாஸ்திரம் கெட்ட மூதேவி. ஆசாரமான குடும்பத்துப் பேரைக் கெடுத்த சனி — செத்துத் தொலைஞ்சுட்டானு தலையை முழுகித் தொலைன்னு சொல்றேன்” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினார் கணேசய்யர். பாட்டியம்மாள் ஒரு விநாடி தன்னையும் தன் எதிரே நிற்கும் மகனையும் வேறு யாரோ போல் விலகி நின்று பார்த்துவிட்டு, ஒரு கைத்த சிரிப்புடன் கூறினாள்.

“நம்ம சாஸ்திரம்…ஆசாரம்’ அப்படீன்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம்?….அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தையடா…எனக்குப் பதினைஞ்சி வயசுடா’ என் கொழந்தை, என் மொகத்தெப் பார்த்துப் பேயைப் பார்த்ததுபோல் அலறித்தேடா….’ பெத்த தாய் கிட்டே பால்குடிக்க முடியாத குழந்தை கத்துவே; கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே…. அப்படி என்னை, என் விதிக்கு மூலையிலே உட்காத்தி வெச்சாளேடா’ அந்த கோரத்தை நீ ஏண்டா பண்ணலே கீதாவுக்கு?…..ஏன் பண்ணலே சொல்லு” என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்கும்போது, கணேசய்யரும் கண்களை பிழிந்து விட்டுக் கொண்டார்’ அவள் தொடர்ந்து பேசினாள்.

“ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர் புடவைக் கட்டிக்கச் சொல்லித்தோ? தலையைப் பின்னிச் சுத்திண்டு பள்ளிக்கூடம் போய்வரச் சொல்லித்தோ? தன் வயித்துக்குத் தானே சம்பாத்திச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரின்னேன், ஏன்?…. காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்’ நான் பொறந்த குடும்பத்தலேன்னு சொல்றயே…. எனக்கு நீ இருந்தே’ வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. சீதா பண்ண காரியத்தை மனசாலே கூட நெனக்க முடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாவும் இருந்தது. இப்போ முடியலியேடா…. எனக்கு உன் நிலைமையும் புரியறது—அவளும் புரிஞ்சுதானே எழுதி இருக்கா….உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா? அவளுக்கு அது வேண்டாம்னுட்டா….ஆனா, டேய் கணேசா…. என்னெ மன்னிச்சுக்கோடா… எனக்கு அவ வேணும்’ அவதாண்டா வேணும்…. எனக்கு இனிமே என்ன வேண்டி இருக்கு’ என் சாஸ்திரம் என்னோடேயே இருந்து இந்தக் கட்டையோட எரியும்…. அதனாலே நீங்க நன்னா இருங்கள்…. நான் போறேன்…. கீதாவோடேயே போயிடறேன்…. அது தான் நல்லது. அதுக்காக நீ உள்ளூரத் திருப்திப் படலாம்—யோசிச்சுப் பாரு இல்லேன்னா அவளோட சேத்து எனக்கும் ஒரு முழுக்குப் போட்டுடு’ நான் வர்ரேன்” என்று கூறியவாறே மாற்றுப் புடவையைச் சுருட்டிக் காக்கிப் பைக்குள் திணித்தவாறு எழுந்தாள் பாட்டியம்மாள்.

“அம்மா’ ஆ….” என்று கைகளைப் கூப்பிக்கொண்டு தாரை தாரையாய்க் கண்ணீர் வடித்தார் கணேசய்யர்.

“அசடே….எதுக்கு அழறே? நானும் ரொம்ப யோசிச்சுத்தான் இப்படி முடிவு பண்ணினேன்… என்ன பண்ணினாலும் அவ நம்ம கொழந்தேடா” என்று மெதுவாய்ச் சொல்லிவிட்டு உட்புறம் திரும்பிப் பார்த்தாள். “பார்வதி நீ வீட்டெச் சமத்தாப் பார்த்துக்கோ…” என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பாட்டி.

“எனக்கு உடனே போயி கீதாவைப் பார்க்கணும்” என்று தானே சொல்லிக் கொண்டு திரும்பும்போது, வாசற்படியில் நின்றிருந்த வேலாயுதத்தைக் கண்டாள் பாட்டி.

“நீ போடாப்பா….நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு” என்று அவனிடம் நாலணாவைத்தந்து அனுப்பினாள்.

‘இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை—அதற்கென்ன? உலகத்தில் என்னென்னமோ மாறுகிறது’ நான் ஒரு நாவிதனைக்கூட மாற்றிக்கொள்ளக் கூடாதா?’ என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள். இடுப்பில் பையை வைத்துக் கொண்டு வாசற்படியிலிறங்கிய பாட்டி, ஒரு முறை திரும்பி நின்று “நான் போயிட்டு வரேன்” என்று மீண்டும் விடை பெற்றுக்கொண்டாள்.

அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துக்கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்…..

வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால்?……

ஓ’ அதற்கு ஒரு பக்குவம் தேவை’
 

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு!

பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மேற்கு மூலையில், பனை ஓலைகளால் வேயப்பட்ட சின்னஞ்சிறு குடிசை ஒன்று இருக்கிறது.

அதில் தான் ஆண்டி வசிக்கிறான். குடிசைக்கு முன்னே வேப்ப மரக் கிளையில் கட்டித் தொங்கும் தூளியில் அவன் செல்ல மகன் இருளன் சுக நித்திரை புரிகிறான்.

அதோ அவன் மனைவி முருகாயி வேலியோரத்தில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.

ஆம்; ஆண்டிக்கு மனைவியும் மகனும் உண்டு. அவன் பெயர் மட்டும் தான் ஆண்டி. அவன் இருக்கும் அந்த இடம் தூரத்துப் பார்வைக்குத்தான் நந்தவனம்.

ஆண்டி ஒரு வெட்டியான். அவன் வாழும் இடம் இடுகாடு. அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக் குழி வெட்டுவது அவன் தொழில். அதற்காக முனிசிபாலிடியில் மாதம் ஏழு ரூபாய் சம்பளமும், அந்த இடுகாட்டிலேயே வசிக்க ஒரு வீடும் தந்திருக்கிறார்கள்.

ஆண்டி ‘ஒரு மாதிரியான’ ஆள்; பைத்தியம் அல்ல. மகிழ்ச்சி என்பது என்னவென்றே தெரியாத மனிதர்கள் எப்பொழுதும் குஷியாகப் பாடிக்கொண்டே இருக்கும் அவனை ‘ஒரு மாதிரி’ என்று நினைத்தார்கள். அவன் உடம்பில் எப்பொழுதும் அலுப்போ, சோர்வோ ஏற்படுவதே இல்லை. வயது நாற்பது ஆகிறது; இருபது வயது இளைஞனைப்போல் துறுதுறு வென்றிருப்பான்.

அர்த்தம் புரிந்தோ புரியாமலோ அவன் வாய், உரத்த குரலில் சதா ஒரு பாட்டை அலப்பிக்கொண்டே இருக்கும்.

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி…’

குழி வெட்டும் வேலை இல்லாத சமயத்தில் அவன் நந்தவன வேலையில் ஈடுபடுவான். அவன் உழைப்பால் தான் அந்த இடுகாடு கூட ‘நந்தவன’ மாகி இருக்கிறது. அவனுக்குச் சோகம் என்பது என்ன வென்றே தெரியாது.

செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போதும் சரி, பிணங்களுக்கு குழி பறிக்கும் போதும் சரி – சலனமோ, சங்கடமோ ஏதுமின்றி, உரத்த குரலில் கழுத்து நரம்புகள் புடைக்க அந்தப் பாட்டை தனது கரகரத்த குரலில் பாடுவான்.

அவனைப் பொறுத்தவரை அந்தப் பாட்டிற்கு அர்த்தம் கிடையாது; வெறும் பழக்கம்தான்.

அது புதைக்கும் இடமாதலால் பெரும்பாலும் குழந்தைகளின் பிரேதம்தான் அங்கு வரும்.

‘மூன்றடி நீளம் மூன்றடி ஆழ’க் குழிகள் வெட்டுவது ஆண்டிக்கு ஒரு வேலையே அல்ல.

தலையின் இறுகக் கட்டிய முண்டாசுடன், வரிந்து கட்டிய வேட்டியுடன், கால்களை அகட்டி வைத்துக் கொண்டு நிற்பான். அவன் கையிலுள்ள மண்வெட்டி அனாயாசமாகப் பூமியில் விழுந்து மேற்கிளம்பும். ஒவ்வொரு வெட்டுக்கும் ஈர மண் மடிந்து கொடுக்கும். பூமியே புரண்டு கொடுக்கும்.

‘… கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக்… கூத்தாடிப்… போட்டுடைத்தாண்டி…’

அந்தக் ‘கூத்தாடி’ என்ற வார்த்தையை அழுத்தி அழுத்தி உச்சரித்தவாறு பூமியின் மார்பை அவன் பிளக்கும்போது அவனை யாராவது கண்டால் அந்தப் பாட்டின் பொருள் தெரிந்துதான் அவன் பாடுகிறான் என்றே எண்ணத் தோன்றும்.

உண்மையில் அந்தப் பாட்டுக்கு உரிய பொருள் அவனுக்குத் தெரியவே தெரியாது.

அவன் அந்தப் பாட்டை, எங்கு எப்பொழுது கற்றுக் கொண்டான்?

நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக்கொண்டு முதன்முதலில் உச்சரித்தோம் என்று சொல்ல முடியுமா? ஆனால், ஏதோ ஒரு விசேஷமான வார்த்தையைக் குறிப்பாக எண்ணினோமானால் நம்மில் எவ்வளவோ பேர் சொல்லி விடுவோம்.

ஆண்டி இந்தப் பாட்டை எப்பொழுது எங்கு முதன் முதலில் கேட்டான்? சற்று நினைவு கூர்ந்தால் அவனால் சொல்லிவிட முடியும்.

—·—·—·—·

ஒரு நாள் காலை, கயிற்றுக் கட்டிலில் உறக்கம் கலைந்து எழுந்த ஆண்டி, தன் கண்களைக் கசக்கிவிட்ட பின் கண்ட காட்சி அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

குடிசை வாசலில், கிழிந்த கோரைப் பாயில், வழக்கத்திற்கு மாறாக இன்னும் உறக்கம் கலையாமல் தன்னை மறந்து கிடக்கிறாள் முருகாயி.

அவன், தான் எழுந்தபின் அவள் தூங்கிக் கொண்டிருப்பதை, கலியாணம் ஆகி இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் ஒருநாள் கூடப் பார்த்ததில்லை.

“ஏ… முருவாயி…” என்று குரல் கொடுத்தான்.

அவள் எழுந்திருக்கவில்லை; புரண்டு படுத்தாள்.

அவன் கயிற்றுக் கட்டிலை விட்டு எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தான்.

‘உடம்பு சுடுகிறதோ’ என்ற நினைப்பில் அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

“முருவாயி…” என்று மறுபடியும் உலுப்பினான்.

மயங்கிக் கிறங்கிய நிலையில் முருகாயி கண்களைத் திறந்தாள். எதிரில் புருஷன் குந்தி இருப்பதைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்து பேந்தப் பேந்த விழித்தாள்.

“என்ன முருவாயி… ஒடம்புக்கு என்னா பண்ணுது?” என்று பதறினான் ஆண்டி.

“ஒண்ணுமில்லே… கையி காலெல்லாம் கொடைச்சலா இருக்கு… ஒடம்பு பூரா அடிச்சி போட்ட மாதிரி… கிர்னு தலை சுத்துது…” என்று சொல்லும்போதே கறுத்த இமைகள் ஒட்டி ஒட்டிப் பிரிந்தன.

“கனா ஒண்ணு கண்டேன்.”

“என்ன கனா புள்ளே?”

முருகாயி கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே கொட்டாவி விட்டாள்.

“கனாவிலே ஒரு பூச்சி… கறுப்பா… சின்னதா…” அவள் உடல் ஒருமுறை குலுங்கிற்று.

“உம்…”

“சொல்லும்போதே திரேகம் சிலுக்குது மச்சான்… அந்தக் கறுப்புப் பூச்சி நவுந்து வந்து எங் கையி மேலே ஏறுச்சி… ஏறினவுடனே அது மஞ்சளா மாறிச்சி – ஊஹீம் மஞ்ச நெறமில்லே… தங்க நெறம்… அப்பிடி ஒரு சொலிப்பு சொலிச்சது… அது எங் கையிலே வந்து குந்திக்கிட்டு… ‘என்னெத் தின்னுடு என்னெத் தின்னுடு’ன்னு சொல்லிச்சு.”

“உம் அப்புறம்?…”

“தின்னுடு தின்னுடுன்னு சொல்லிக்கிட்டே எங்கையெ கொறிக்க ஆரம்பிச்சது. எனக்கு என்னவோ புத்திக் கொளம்பிப்போய் ஒரு ஆவேசம் வந்திடுச்சி… சீ, இந்த அல்பப் பூச்சி வந்து என்ன தைரியமா நம்மகிட்டே வந்து ‘தின்னுடு தின்னுடு’ன்னு சொல்லுது பாத்தியா?… நாம்ப திங்கமாட்டோம்கிற தைரியம் தானேன்னு நெனைச்சி…”

– அவள் முகம் சிவந்தது, சுளித்தது!

“ஒடம்பெல்லாம் கூசுது மச்சான். அந்தப் பூச்சியெ ரெண்டு விரல்லே தூக்கிப் பிடிச்சி வாயிலே போட்டு ‘கச முச’ன்னு மென்னு…வ் வோ ஓ!…”

– அவள் சொல்லி முடிக்கவில்லை, குடலை முறுக்கிக் கொண்டு வந்த ஓங்கரிப்பு பிடரியைத் தாக்கிக் கழுத்து நரம்புகளைப் புடைக்க வைத்தது; தலை கனத்தது; மூச்சு அடைக்க, கண்கள் சிவக்க,

“வ் வோ ஓ!…”

“மச்சான்… மச்சான்… அந்தப் பூச்சி வவுத்துக்குள்ளே ஓடுது மச்சான்…”

மறுபடியும் ஓர் பலத்த ஓங்காரம். அடி வயிற்றைப் பிசைந்துகொண்டே தலை குனிந்து உட்கார்ந்தாள். வாயெல்லாம் வெறும் உமிழ் நீர் சுரந்து ஒழுகியது.

“மச்சான்… வவுத்திலே பூச்சி”

– ஆண்டி புரிந்து கொண்டான். அவன் உடல் முழுதும் இன்பக் கிளுகிளுப்பு ஓடிப் பரவியது.

பதினைந்து வருஷமாய் வாய்க்காதது…

எத்தனையோ காலம் நினைத்து நினைத்துப் பார்த்து, ஏமாந்து ஏமாந்து, இல்லை என்ற தீர்க்கமான முடிவில் மறந்தே போனபின்…

– உடலை குலுக்கி, குடலை முறுக்கி ஓங்கரித்தாள்… முருகாயி.

– “ஆ… அதுதான் ஹாஹா… முருகாயி அதுதான்… ஹாஹா!” ஆண்டி சிரித்தான்.

“வ்வோ ஓ!…”

– குத்திட்டுத் தலை குனிந்து உட்கார்ந்திருந்த முருகாயியை உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஆண்டி சிரித்தான்.

“ஹாஹாஹ்ஹா… அதுதான் புள்ளே, அது தான்.”

பலத்த ஓங்கரிப்புடன் வந்த சிரிப்பைத் தாங்க முடியாது தவித்தாள் முருகாயி.

“மச்சான் வவுத்தைப் பொறட்டுதே. தாங்க முடியலியே ஐயோ!…” என்று பதறினாள்.

“சும்மா, இரு புள்ளே, நம்ம வடிவேலு வைத்தியர் கிட்டே போயி எதனாச்சும் மருந்து வாங்கியாறேன்” என்று மேல் துண்டை உதறித் தோள்மீது போட்டுக் கொண்டு கிளம்பினான் ஆண்டி.

முருகாயி சிரித்தாள்.

“ஏ! சும்மாத்தானே இரு மச்சான். யாராவது சிரிக்கப் போறாங்க”

“நீ படற அவஸ்தையைப் பார்க்க முடியலியே புள்ளே…”

“நீ ஏன் பாக்கிறே?…அந்தாலே தள்ளிப்போய் நின்னுக்க…”

ஆண்டி மனசுக்குள் கும்மாளியிடும் மகிழ்ச்சியுடன் இடுகாட்டின் கேட்டருகே நின்றான்.

அப்போதுதான் அந்தச் சாலை வழியே சென்ற காவி தரித்த பண்டாரம் ஒருவன் தன்னை மறந்த லயத்தில் அந்தப் பாட்டைப் பாடியவாறு நடந்தான்.

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.”

இதுவரை அனுபவித்தறியாத ஒரு புதிய உணர்வில் மகிழ்ச்சியில் லயித்து தன் நிலை மறந்து நின்ற ஆண்டியின் மனத்தில், தாள லயம் தவறாமல் குதித்தோடி வந்த அந்தப் பாட்டின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாய்ப் பதிந்தன.

அதைப் பதிய வைப்பதற்காகவே பாடுவதுபோல் அந்தப் பண்டாரம் அந்த நான்கு வரிகளையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு நடந்தான்.

அன்றுமுதல் தன்னையறியாமல் ஆண்டியும் அந்தப் பாடலைப் பாடிக் குதிக்க ஆரம்பித்தான்.

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி”

ஆயிரக்கணக்கான மனித உடல்கள் மாண்டபின் புதையுண்ட அந்த மயான பூமியில் ஒரு மனிதன் பிறந்தான்.

ஆண்டிக்கு ஒரு மகன் பிறந்தான்.

தாயின் கருவில் அவன் ஜனித்த அந்த நாளில் பிறந்த குதூகலம் ஆண்டிக்கு என்றும் மறையவில்லை.

பொழுதெல்லாம் தன் செல்வ மகனைத் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினான்.

நூற்றுக்கணக்கான குழந்தைகளின் சவங்களுக்குக் குழிபறித்த ஆண்டியின் கரங்கள் தன் செல்வ மகனை மார்போடு அணைத்து ஆரத் தழுவின.

– தனது மதலையை மார்புறத் தழுவி மகிழ்ந்த ஆண்டியின் கரங்கள் ஊரார் பிள்ளைகளின் சவங்களுக்குக் குழி பறித்தன.

ஊராரின் புத்திர சோகம் அவனுக்குப் புரிந்ததே இல்லை.

ரோஜாச் செடிக்குப் பதியன் போடும் சிறுவனைப் போல பாட்டுப் பாடிக்கொண்டே குழி பறிப்பான்.

அருகிலிருக்கும் அந்தப் பச்சைச் சிசுவின் பிரேதத்தைப் பார்த்தும் – அதோ பக்கத்தில், பீறிவரும் அழுகையை அடக்கிக் கொண்டு நிற்கும் அந்தத் தகப்பனைப் பார்த்தும் – நெஞ்சில் ஈரமில்லாமல் பசை இல்லாமல் பாடிக் கொண்டிருக்கிறானே…

சீசீ இவனும் ஒரு மனிதனா!… அதனால்தான் அவனை எல்லோரும் ‘ஒரு மாதிரி’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

குழி பறித்து முடித்தபின் நேரே தன் குடிசைக்கு ஓடுவான். தூளியில் உறங்கும் இருளனைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவான்; கூத்தாடுவான்.

அந்த மகிழ்ச்சிக்கு, குதூகலத்திற்கு, பாட்டிற்கு, கும்மாளத்துக்கெல்லாம் காரணம் இருளன்தானா?

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்…

எத்தனையோ பெற்றோரின் ஆனந்தத்துக்கு, கனவுகளுக்கெல்லாம் புதை குழியாயிருந்த அந்த இடுகாட்டில் மரணம் என்ற மாயை மறந்து, ஜனனம் என்ற புதரில் மட்டும் லயித்துக் குதித்துக் கொண்டிருந்த ஆண்டியின்…

ஆண்டியின்… – சொல்ல என்ன இருக்கிறது?

இருளன் ஒருநாள் செத்துப் போனான்.

வாடியிருந்து வரம் கேட்டு, காத்திருந்து தவமிருந்து காலம் போன ஒரு நாளில், எதிர்பாராமல் – நினைவின் நப்பாசை கூட அறுந்துபோன ஒரு காலமற்ற காலத்தில் வாராமல் வந்து அவதரித்து, ஆசை காட்டி விளையாடி கனவுகளை வளர்த்த இருளன், எதிர்பாராமல் திடீரென்று இரண்டு நாள் கொள்ளையிலே வந்ததுபோல் போய்விட்டான்.

ஆசைகளையும் கனவுகளையும், பாழுக்கும் பொய்மைக்கும் பறி கொடுத்த முருகாயி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புரண்டு புரண்டு அழுதாள்.

எத்தனையோ சோகங்களின் திரடுகள் கரடு தட்டி மேடிட்டுப்போன அந்த மயான பூமியில் தனது பங்கிற்காக அந்தத் தாய் ஒப்பாரி வைத்து அழுதாள்.

வேப்ப மரத்தடியில், கட்டித் தொங்கும் வெறும் தூளியினருகே, முழங்கால்களில் முகம் புதைத்துக் குந்தி இருக்கிறான் ஆண்டி.

எங்கோ வெறித்த விழிகள்… என்னென்னமோ காட்சிகள்… எல்லாம் கண்டவை… இனி, காண முடியாதவை…

அதோ இருளன்! –

வேலியோரத்தில் தவழ்ந்து சென்றதும்… தூளியிலிருந்து உறக்கம் கலைந்த பின் தலையை மட்டும் தூளிக்கு வெளியே தள்ளித் தொங்க விட்டுக் கொண்டு, கன்னம் குழையும் சிரிப்புடன் ‘அப்பா’ வென்று அழைத்ததும்…

செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் போது அவனறியாமல் பின்னே வந்து, திடீரென்று பாய்ந்து புறம் புல்லி உடலைச் சிலிர்க்கவைத்து மகிழ்வித்ததும்…

எதிரிலிருக்கும் தட்டத்துச் சோற்றில், வேகமாய்த் தவழ்ந்து வந்து – தனது பிஞ்சுக் கைகளை இட்டுக் குழப்பி விரல்களுக்கிடையே சிக்கிய இரண்டொரு, பருக்கைகளை வாயில் வைத்துச் சுவைத்துச் சப்புக்கொட்டி, கைதட்டிச் சிரித்துக் களித்ததும்…

நெஞ்சோடு நெஞ்சாய்க் கிடந்து இரவு பகல் பாராமல் நாளெல்லாம் உறங்கியதும்…

– பொய்யா?… கனவா?… மருளா?… பித்தா?… பேதைமையா?

ஆண்டி சித்தம் குலைவுற்றவன் போல் சிலையாய் உட்கார்ந்திருந்தான்.

இருளன் தவழ்ந்து திரிந்த மண்ணெல்லாம், அவன் தொட்டு விளையாடிய பொருளெல்லாம், அவன் சொல்லிக் கொஞ்சிய சொல்லெல்லாம் ஆண்டியின் புலன்களில் மோதி மோதிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன.

அதோ குடிசையினுள்ளே அந்தச் சிறு பாலகனின் சடலம் ஊதிப் புடைத்துக் கிடக்கிறது. வாயிலும் கண்களிலும் ஈக்கள் மொய்க்கின்றன. நெற்றியில் சாந்துப் பொட்டு; கறுத்துப் போன இதழ்களுக்கிடையே பால் மணம் மாறாத இளம் பற்கள் மின்னித் தெரிகின்றன. கையையும் காலையும் அகல விரித்துக் கொண்டு…

– ஆழ்ந்த நித்திரையோ?…

‘இல்லை செத்துப் போய்விட்டான்.’

வெகுநேரம் தன் செல்வ மகனின் – இனிமேல் பார்க்க முடியாத மகனின் – முகத்தை வெறித்துப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான்.

வேர்வைத் துளிகள் நெற்றியில் சரம் கட்டி நின்றன.

மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டு மண்வெட்டியை எடுத்தான். கால்களை அகட்டி நின்று, கண்களை மூடிக் கொண்டு மண்வெட்டியை ஓங்கி, பூமியில் பதித்தான்.

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி!’

அந்தப் பாட்டு!… அவன் பாடவில்லை.

ஊரார் பிணத்துக்குக் குழி பறிக்கும்போது மனசில் அரிப்போ கனமோ இல்லாமல் குதித்து வருமே அந்தப் பாட்டு…

‘பாடியது யார்?’…

மீண்டும் ஒருமுறை மண்வெட்டியை உயர்த்தி பூமியைக் கொத்தினான்.

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’

– மீண்டும் அந்தக் குரல்!…

‘யாரது!…’

புலன்களை எல்லாம் அடக்கிக் கொண்டு மீண்டும் மண்வெட்டியால் பூமியை வெட்டினான்.

மீண்டும் ஒரு குரல்:

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி…”

‘ஐயோ! அர்த்தம் புரிகிறதே!’…

– ஆண்டி மண்வெட்டியை வீசி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

தூணைப் பிளந்து வெளிக் கிளம்பிய நரசிம்மாவதாரம் போன்று, பூமியை, புதைகுழி மேடுகளைப் பிளந்து கொண்டு ஒரு அழகிய சின்னஞ்சிறு பாலகன் வெளிவந்தான்.

கைகளைத் தட்டித் தாளமிட்டவாறே ஆண்டியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே பாடியது சிசு!

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி…
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி…”

குரல்கள் ஒன்றாகி, பலவாகி, ஏகமாகிச் சங்கமித்து முழங்கின.

அந்த மயான பூமியில் எத்தனையோ காலத்திற்கு முன் புதையுண்ட முதற் குழந்தை முதல் நேற்று மாண்டு புதையுண்ட கடைசிக் குழந்தைவரை எல்லாம் உயிர்பெற்று, உருப்பெற்று ஒன்றாகச் சங்கமித்து, விம்மிப் புடைத்து விகஸித்த குரலில் – மழலை மாறாத மதலைக் குரலில் – பாடிக்கொண்டு கைத்தாளமிட்டு அவனைச் சுற்றிச் சூழ நின்று ஆடின. வான வெளியெல்லாம் திசைகெட்டு தறிகெட்டுத் திரிந்து ஓடின.

ஆண்டி தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தான்.

அதோ, அவன் இருளனும் அந்தப் பாலகர் நடுவே நின்று நர்த்தனம் புரிகிறான். தாளம் போடுகிறான்.

பாட்டுப் பாடுகிறான்.

என்ன பாட்டுத் தெரியுமா?…

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’

அடைத்துப் புடைத்து நெருக்கிக்கொண்டு ஓடும் சிசுக்களின் மகா சமுத்திரத்தில் தன் இருளனை தாவி அணைக்க ஓடினான்…

இருளனைக் காணோம்… தேடினான், காணோம்… இருளனை மட்டும் காணவே காணோம்…
அந்தச் சிசுக்கள் யாவும் ஒன்றுபோல் இருந்தன.

என்னுடையது என்றும், இன்னொருவனுடையது என்றும், அவன் என்றும், அதுவென்றும் இதுவென்றும் பேதம் காண முடியாத அந்தச் சமுத்திரத்தில் இருளனை மட்டும் எப்படி இனம் கண்டுவிட முடியும்!…

ஆண்டி தவித்தான்!

ஆ!… என்ன தவிப்பு… என்ன தவிப்பு…

பன்னீர் மரத்தடியில் பிள்ளையின் பிணத்தருகே முகம் புதைத்து வீழ்ந்து கிடக்கும் ஆண்டியைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஓடினாள் முருகாயி.

அவனைப் புரட்டி நிமிர்த்தி மடிமீது வைத்துக் கொண்டு கதறினாள்.

அவன் விழிகள் மெல்லத் திறந்தன.

– தெய்வமே! அவனுக்கு உயிர் இருந்தது; அவன் சாகவில்லை.

இன்னும் கூட அவன் அந்த ‘நந்தவன’த்தில் தான் வாழ்கிறான். ஆனால் முன்போல் இப்போதெல்லாம் பாடுவதில்லை.

இடுகாட்டிற்கு வரும் பிணங்களைப் பார்க்கும் போதெல்லாம் ‘கோ’வென்று கதறி அழுகிறான். ஊராரின் ஒவ்வொரு சோகத்திற்கும் அவன் பலியாகிறான்! ஆனால் இப்பொழுதும் ஊரார் அவனை ஒருமாதிரி என்றுதான் சொல்லுகிறார்கள்!

(எழுதப்பட்ட காலம்: செப்டம்பர் 1958)

நன்றி: இனிப்பும் கரிப்பும் (சிறுகதை தொகுப்பு) – ஒன்பதாம் பதிப்பு: அக்டோபர் 1994 –
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை -1
 

துறவு

“எங்கே, போனவங்களெ இன்னங் காணலியே…..” என்று முனகிக்கொண்டே, வாசற்படியை ஒரு கையால் பற்றியவாறு, பாதித்தெருவரை உடம்பை வளைத்து நீட்டித் தெருக்கோடி வரை பார்த்தாள் பங்கஜம் அம்மாள்.

அப்பொழுதுதான் அடுத்த வீட்டு வாசலில், சேலைத் தலைப்பில் ஈரக் கையைத் துடைத்துக்கொண்டு வந்து நின்றாள் மரகதம்.

“என்ன மரகதம்….பகலெல்லாம் காணவே இல்லியே? வேலை சாஸ்தியோ?” என்று ஆரம்பித்தாள் பங்கஜம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே அக்கா; என்னவோ நெனப்பிலேயே நேரம் போயிடுச்சி…”

அந்த இரண்டு வீடுகளையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் அந்தச் சாய்வுத் திண்ணையின் இரு புறங்களிலும் இருவரும் உட்கார்ந்து கொண்டனர்.

—இரண்டு பெண்கள் கூடிப் பேசுவதென்றால் அந்தப் பரஸ்பர இன்பம் அவர்களுக்கல்லவா தெரியும்?

“மணி எட்டு இருக்குமா?” என்றாள் பங்கஜம்.

“இப்பத்தானே ஏழரை அடிச்சிது? வேலையெல்லாம் ஆச்சுதா?…”

“ஆச்சு…. வேலை ஆயி என்ன பண்றது? ‘பொழுதோட வீட்டுக்கு வந்தமாம், சாப்பிட்டமாம்’கிற பேச்சேதான் எங்க வூட்டு ஐயாவுக்கு கெடையாதே’ கோயிலும் கொளமும் சுத்திப்பிட்டு ராத்திரி மணி ஒம்பதோ, பத்தோ?—அவுக போறதுமில்லாம அந்தப் பய சோமுவையும் கூட்டிக்கிட்டுப் போயிடறாவ….”

“சோமு வீட்டிலே இல்லே?—குரல் கேட்டுதே’ ”

–மரகதம் பேச்சை வளர்க்கவே அப்படிக் கேட்டு வைத்தாள்.

“அவன் அடிக்கிற கூத்தை எங்கே போயிச் சொல்றதம்மா… பக்தி ரொம்ப மீந்து போச்சி…வௌக்கு வெச்சா வீட்டிலே தங்கமாட்டேங்கிறான். உபந்நியாசம் கேக்கப் போயிடறான்….போன வருசமே பெயில்…எப்பப் பார்த்தாலும் சாமியும், பாட்டும்தான்…. கறி திங்கமாட்டானாம்; முட்டைகூட வேண்டாம்கிறான்….அவுகளுக்கோ அந்த வாசமில்லாம சோறு எறங்காது. இவனோ, அதைத் தொட்ட கையைக் களுவாம, சோத்தெத் தொடாதேங்கிறான்…இந்த ரெண்டு பேருக்கும் ரெண்டு சமையல் பண்ண என்னால் ஆகுமா?…. கெடக்குக் களுதைன்னு வெறும் ரஸத்தோட விட்டுட்டேன் இன்னக்கி….”

“என்ன அக்கா சமையல்?”

“ஆறு மணிக்குமேலே குப்பம்மா வந்தா, கடைக்குப் போறேன்னா… ஒரு எட்டணாவெ குடுத்து அனுப்பிச்சேன், ஆறணாவுக்கு— தோ…இத்தினி இத்தினி நீளத்துக்கு எட்டு கெளுத்தி வாங்கியாந்தா…அதோட ரெண்டு மாங்கா கெடந்தது, அதையும் போட்டுக் கொளம்பு வச்சேன்… அவனுக்குத் தொட்டுக்க என்ன பண்றதுன்னு ஒண்ணுந் தோணலே… வெறும் ரசத்தோட விட்டுட்டேன்… எனக்கு ஒண்ணுமே முடியலே… காத்தாலே இருந்து ரெண்டுத் தோளும் என்னா கொடைச்சல்’ அப்படியே இத்துப் போவுது… சின்னப்பையன் ரமணி வேறே ராவிக்கெல்லாம் இருமித் தொலைக்கறான்… தூக்கமா வருது? இந்த லெட்சணத்திலே ரெண்டு கறி, ரெண்டு கொளம்பு வைக்க யாராலே முடியும்? பிள்ளையா பொறந்ததுவ, இருக்கறதைச் சாப்பிடணும்…’அது வேணாம், இது வேணாம்’…சைவமாம், சைவம்’…இவனும் இவன் சைவமும்…நான் என்னத்தைப் பண்ண…மூஞ்சியை மூணு மொளம் நீட்டிக்கிட்டு வெறும் ரசத்தை ஊத்தித்திங்கும்…ஹ்உம்…

–பங்கஜம் அம்மாள் மூச்சுவிடாமல் கொட்டி அளந்து சலித்துப்போய்ப் பெருமூச்செறிந்தாள்’ மரகதம் ஆரம்பித்தாள்:

“அதை ஏன் கேக்கறீங்க அக்கா….எங்க வீட்டிலே இருக்கறவரு… மத்தியானம் அப்பிடித்தான், பாருங்க…. காலையிலே ஆபீசுக்குப் போகும்போது, ‘முருங்கைக்காய் சாம்பார் வச்சி, உருளைக்கிழங்கு வறுவல் பண்ணு’ன்னு சொல்லிட்டு போனாவ….பதினோரு மணி வரைக்கும் சாம்பாரை வச்சி, சாதத்தையும் வடிச்சிட்டு உக்காந்திருந்தேன், உக்காந்திருந்தேனோ அப்பிடி உக்காந்திருந்தேன். கட்டையிலே போற காய் கறிக்காரனைக் காணவே இல்லை….மணியோ பதினொண்ணு ஆயிடுச்சி. அதுக்கு மேலே யாரைப் புடிச்சிக் கடைக்கு அனுப்ப? அவுவ பன்னெண்டு மணிக்கெல்லாம் வந்து எலையெப் போடுன்னு பறப்பாவளேன்னு, ரெண்டு வாளக்காய் கெடந்தது; அதை வறுத்து வச்சேன்…எலை முன்னே வந்து உக்காந்ததும் மனுசனுக்கு ஏன்தான் அப்பிடி ஒரு கோவம் வருமோ, ஆண்டவனே….’எளவெடுத்த வாளைக்காய்க் கருமந்தானா?ன்னு தட்டோட வீசி, எறிஞ்சாவ பாருங்க…நா என்னக்கா பண்ணுவேன் என்று சொல்லும்போதே கண்களை முந்தானையால் கசக்கிக்கொண்டாள், கடைசியிலே….நானும் அதெக் கையாலே தொடலே…அப்பிடியே கெடக்கு….”

மரகதம் எதையெதையோ சொல்லி வருத்தப்படவே, பங்கஜம் பேச்சைத் திருப்பினாள்:

“அது கெடக்கு…ஒன் நாத்தனார் முளுவாம இருந்து ‘அபார்ஸ’னாயி ஆசுபத்திரியிலே கெடக்கான்னியே….என்னாச்சு?…காயிதம் வந்துதா…”

மரகதம் குரலின் தொனி இறங்கி ஒலிக்கப் பேசினாள்:

“பாத்தீங்களா, மறந்தே போனேனே…அபார்ஸனும் இல்லே, கிபார்ஸனும் இல்லே…. அவளுக்குத்தான் ஏழுமாசம் ஆயிடுச்சே…என்னாநடந்துதோ…. காத்தாலேருந்தே வயித்துப் புள்ளெ அசையிலியாம்—தடபுடலா போயி ஆசுபத்திரிக்கிக் கொண்டு போயிருக்காவ…. வயித்தை அறுத்து…..

—-மிகவும் மும்முரமாக சம்பாஷணை ‘கிளைமாக்ஸ்’ அடையும் தருணத்தில் வாசற்படியில் செருப்பின் மிதியோசை கேட்டது’ –சப்தத்திலிருந்தே, வருவது தன் கணவர்தான் என்பதைப் புரிந்துக்கொள்வாள் பங்கஜம்—ரெண்டு பெணகளும் எழுந்து நின்றனர்.

பங்கஜம் அம்மாளின் கணவன் சதாசிவம் பிள்ளையும், மகன் சோமுவும் திருநீறு துலங்கும் நெற்றியுடன் சிவப் பழங்களாய் உள்ளே நுழைந்தனர்.

மரகதம் குரலைத் தாழ்த்தி ரகசியம் பேசுவது போல் கூறினாள்:

“ராஜியை அனுப்புங்க அக்கா…..வாளைக்காய் குடுத்தனுப்பறேன் சோமுவுக்கு…”

“எதுக்கம்மா? என்று தயங்கினாள் பங்கஜம்.

“தம்பிக்குத்தான்…கெடக்கு, ராஜியை அனுப்புங்க அக்கா…..” என்று புன்னகையுடன் கூறிவிட்டு உள்ளே போனாள் மரகதம்.

அடுக்களைக்கு வந்த பங்கஜம், மகனுக்கும் கணவனுக்கும் இலையிட்டு, மணைபோட்டு….

“ஏட்டி, ராஜி’ அடுத்த வீட்டு அக்கா, என்னமோ தாரேன்னா…போயி வாங்கியா…” என்றாள்.

“என்னது?….என்ன வாங்கியாரச் சொல்றே, இன்னேரத்திலே….” என்று அதட்டல் குரல் போட்டார் பிள்ளை.

“அதுவா? நீங்க பெத்து வச்சிருக்கீங்களே சைவப்பளமா, ஒரு பிள்ளை, அதுக்கு, சாதத்துக்குத் தொட்டுக்க ஒண்ணுமில்லே…அதுக்காவத்தான்…இல்லாட்டி தொரை கோவிச்சிக்குவாரில்லே….” என்று இரைந்தாள் பங்கஜம்.

—அவளுக்குத் தெரியும், பிள்ளையிடம் எந்தச் சமயத்தில் எந்த ஸ்தாயியில், எந்த பாவத்தில் குரலை முடுக்கிப் பேசினால், சொன்னதை அவர் ஏற்றுக்கொள்வார் என்று.

முற்றத்தில் கைகால் அலம்பிக்கொண்டிருந்த சோமு இந்த அஞ்ஞானிகளுக்காக வருந்துவதுபோல் மெல்லச் சிரித்தான். பிறகு, மாடத்திலிருந்த திருநீற்றை அள்ளிப் பூசிக்கொண்டு கூடத்திலிருந்த திருநீற்றை அள்ளிப் பூசிக் கொண்டு கூடத்திலிருந்த படங்களின் முன் நின்று ‘அருட்சோதி தெய்வமென்னை’ என்று கசிந்துருக ஆரம்பித்தான்.

சோமுவுக்கு வயது பதினைந்துதான்—அதுதான் மனிதனுக்குப் ‘பித்து’ப் பிடிக்கும் பருவம்.

—அது சமயப் பித்தாகவோ, கலைப் பித்தாகவோ, அரசியல் பித்தாகவோ அல்லது பெண் பித்தாகவோகூடப் பிடிக்கலாம்’

சோமுவுக்கு அங்க வளர்ச்சிகளும், ஆண்மை முத்திரைகளும் ஏற்படும் பருவம் அது. முகம் குழந்தை மாதிரிதான் இருந்தது. உடலிலும் மனசிலும் சதா ஒரு துடிப்பும் வேகமும் பிறந்தது. மனம் சம்பந்தமில்லாத ஸ்தாயிகளிலெல்லாம் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது. உலகையும், வாழ்வையும் அறிய உள்ளம் பரபரத்தது. ஏதோ ஒரு இடத்தைத் தொட்டவுடனே எல்லா இடத்தையும் தொட்டுவிட்டதாக எண்ணி இறுமாந்தது. ‘தான் புதிதாக அறிந்த விஷயங்கள் எல்லாம் புதிதாகப் பிறந்தவை’ என்று நம்பி, அவற்றை மற்றவர்கள் அறியமாட்டார்கள் என்ற எண்ணத்தினால், மற்றவர்களைவிடத் தன்னை உயர்த்திப் பாவித்தது. மனசில் வாழ்வும், உற்றாரும், உறவினரும் —எல்லாமே வெறுப்புத்தான், சதா நேரமும் ‘சிடுமூஞ்சி’யும் கலகலப்பின்மையும், எதையோ நினைத்து ஏங்குவதுபோலவும், ஏகாந்தத்தை நாடுவதும்…. வீடே வெறுத்தது’

சோமுவுக்கு வேதாந்தப் பித்துதான்’

பொழுதோடு வீட்டுக்கு வராமல் பள்ளிக்கூடத்திலிருந்து ஓடக்கரைக்கும், கொய்யாத் தோப்புக்கும் போய் விளையாடிவிட்டு இரவு ஏழு மணிக்கோ, எட்டு மணிக்கோ வீடு திரும்பி, ஆடிய களைப்பில் உண்ட மயக்கத்துடன் உறங்கிப் போவதையே வழக்கமாக கொண்டிருந்த சோமு போன வருஷம் எட்டாம் வகுப்பில் ‘கோட்’ அடித்து விட்டான்.

வீட்டில் வசவுகளும் கண்டிப்பும் அதிகமாகி இனிமேல் பள்ளிக்கூடம் விட்டவுடன் நேரே வந்து வீட்டு வாசலைத்தான் மிதிக்கவேண்டும் என்ற கட்டளை பிறந்தது. இரவு சாப்பாடு வரை படிக்கவேண்டும் என்ற தண்டனை வேறு.

வீட்டுக் கூடத்தில் அவனது தம்பிகளான சீனாவும் ரமணியும் கொஞ்ச நேரம் படித்துவிட்டு, மற்ற நேரமெல்லாம் தங்கை ராஜியுடன் விளையாடிக்கொண்டிருக்க, சோமு மட்டும், துயரமும் கவலையும் தோய்ந்த முகத்துடன்

— புத்தகத்தையும், சன்னல் வழியே வௌ¢யுலகத்தையும் பார்த்தவாறு — தந்தையின் உத்தரவை மீற முடியாமல் படித்துக் கொண்டிருப்பதைக் கண்ட பங்கஜம் அம்மாளுக்குப் பாவமாய் இருந்தது.

“போதும்’ நீ படிச்சிக் கிளிக்கிறது. கொஞ்சம் காத்தாட வௌ¢யிலே போயி வா….உம்…” என்று அவன் கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கி வைத்தாள்.

சோமு தந்தையை எண்ணித் தயங்கி நின்றான்.

“நீ போயிட்டு வா….அவுக வந்தா நா’ சொல்லிக்கிறேன், அவுக மட்டும் வீட்டிலேயேதானே இருக்காவ?…. கோயிலுக்கு போவாம அவுவளாலே, ஒரு நாளு இருக்க முடியுதா?…. நீயும் போயி அந்த நடராஜா கிட்டே ‘எனக்கு நல்ல புத்தியெயும், தீர்க்காயுசையும், படிப்பையும் குடுடா ஆண்டவனே’ன்னு வேண்டிக்கிட்டுவா….அவுவ வந்தா நான் சொல்லிக்கறேன்.

அவள் சொல்லி முடிக்கும் முன் சட்டையை மாட்டிக் கொண்டு ஒரே ஓட்டம்….

“சீக்கிரம் வந்துடுடா சோமு…” என்று இரைந்து கூவிச் சொல்லும் தூரத்துக்குப் போய்விட்டான் அவன். காதில் விழுந்ததோ, என்னவோ…

எட்டு மணிக்கு, சதாசிவம் பிள்ளை வரும்போதோ, “சோமு எங்கே?….” என்று கேட்டுக்கொண்டு வந்தார்.

“ஆமா…. சோமு சோமுன்னு அவனை வறுத்துக் கொட்டிக்கிங்க…. அவனுக்கு மட்டும் வீடே கதியா?….. நான்தான் என்ன பாவம் பண்ணிப்பிட்டோ இந்த ஜெயில்லே கெடக்கேன்…. ஒரு கோயில் உண்டா, கொளம் உண்டா?…. திருநாள் உண்டா, பெருநாள் உண்டா?…. என் தலைவிதி ஒங்களுக்குகெல்லாம் உளைச்சிக் கொட்டிச் சாகணும்னு….. என் வயித்திலே பொறந்தததுக்குமா, அந்த பாவம்…. பிள்ளையப் பார்த்தா பாவமா இருக்கு…. என்ன தான் அதிகாரம்னாலும் இப்பிடியா?” என்று கண்ணைத் துடைத்து. மூக்கைச் சிந்தி, முந்தானையை மடக்கி, முன்கையை நீட்டிக்கொண்டு எழுந்து வந்தாள் பங்கஜம்.

“எங்கே சோமுன்னுதானே கேட்டேன்” என்று பம்மிப் பதில் கொடுத்தார் பிள்ளை.

—-இனிமேல் விஷயத்தைத் தெரிவித்தால் ஒன்றும் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு சாந்தமான குரலில் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னாள் பங்கஜம்;

“கோயிலுக்கு போயிருக்கான்… நான் தான் அனுப்பிச்சேன். நீங்க அவனை ஒண்ணும் மூஞ்சியைக் காட்டாதீங்க. பையனைப் பார்த்தா பாவமா இருக்கு….”

முற்றத்தில் இறங்கி கால் அலம்பிக்கொண்டிருந்த பிள்ளை, “சரி, சரி, நானே நெனச்சேன்… நாளையிலேருந்து வடக்கே இருந்து ஒரு பெரிய மகான் வந்து ‘லெக்சர்’ பண்ணப்போறார்…. அவர் பேரு அருளானந்தராம்…. பெரிய இவுராம்….”

பங்கஜம் தந்த டவலில் முகம் துடைத்துக்கொண்டார் மாடத்திலிருந்த திருநீற்றை எடுத்துப் பூசிக்கொண்டார். “சரி, எலையெப் போடு…..என்ன வச்சிருக்கே?….” என்று சொல்லிவிட்டு, படங்களுக்கு முன்னே கரம்கூப்பி நின்றார்.

“கத்திரிக்காய் வதக்கிக் கொளம்பு….அப்பளம்’ ”

—கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்த அவர் முகத்தில் ஒரு சுளிப்பு’…..

சேவிப்பு முடிந்தது; முகம் கடுகடுத்தது’

“என்னடி வச்சிருக்கேன்னே….”

“கத்திரிக்காய் வதக்கிக் கொளம்பு; அப்பளம்’ ”

“சனியன்…..ரெண்டு கருவாடு கூடவா கெடைக்கலே….அதுகூடப் போட்டுக் கொதிக்க வைக்க… சீ சீ, நாளு பூரா மனிசன் கொரங்குத் தீனியா திம்பான்….” என்று சலித்துக் கொண்டார்.

—-சதாசிவம் பிள்ளை சிவபக்தர்; நர மாமிசம் கேட்காமலிருக்கிறாரே போதாதா?….

மறுநாளிலிருந்து சோமு தந்தையுடன் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்தான்.

‘சாமி ஆண்டவனே….இந்த வருஷம் நான் பாஸாகணும்’ என்று ஆரம்பித்த பக்தி, ஜீவகாருண்யமே திறவுகோல் என்று வளர்ந்து, ‘வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்’ என்று சோமுவின் மனத்தில் கனியலாயிற்று.

சுவாமி அருளானந்தரின் பிரசங்கம் தொடர்ந்து இருபத்தியேழு நாட்கள் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது அல்லவா?….

சோமுவுக்கு ஞானம் பொழிய ஆரம்பித்தது.

‘ஆமாம்….தாய் தந்தை, உடன்பிறந்தார், செல்வம், சுற்றம், உலகம் எல்லாம் பொய்தானே…. சாவு வரும்; அது மட்டும்தான் உண்மை. அந்த பெரிய உண்மைக்கு நேரில் இவையெல்லாம் அற்பப் பொய்’

‘படிப்பு ஏன்?….சம்பாதனை எதற்கு?…..

‘முடிவில் ஒருநாள் செத்துப்போவேனே…. அப்பொழுது இவற்றில் ஏதாவது ஒன்று….யாராவது ஒருவர் என்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியுமா, என்ன?….

‘தாய் அல்லது தந்தை இவர்களில் யாரேனும். யாராயிருந்தாலும் முடிவில் எல்லோரும் ஒருநாள் செத்துப் போவார்கள்…இவர்களில் யாரையாவது நான், அல்லது என் கல்வி, எனது சம்பாதனை காப்பாற்ற இயலுமா என்ன?….

‘முடியாது’ ‘
‘அப்படியானால் இவர்களுக்கும் எனக்கும் என்ன உறவு?….நான் யார்?….இவர்கள் யார்? வீடு என்பதும், பந்துக்கள் என்போரும் அந்நியர் என்போரும், இன்பம் என்பதும் துன்பம் என்பதும்…..

‘எல்லாம் வெறும் பொய்’ ‘

‘மரணத்தை மனிதன் வெல்லமுடியாது. ஆனால் ஆசைகளைத் துறப்பதன் மூலம் மனிதன் கடவுளை அடையமுடியும்.

‘கடவுளை அடைவது என்றால்?…..

‘கடவுளை அடைவது என்றால்— உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இப்படிப்பட்ட பாசபந்தச் சுழலில் சிக்கி, பாவகிருத்தியங்கள் புரிந்து மீளா நரகத்தில் விழாதிருக்க, பிறவி நீத்துக் கடவுளின் பாதாரவிந்தைகளை அடைந்து…..

‘ஆமாம்….ஆசைகளைத் துறக்கவேண்டும்’ இந்த அற்ப வாழ்வில் ஆசைகொள்ள என்ன இருக்கிறது?….’

—அந்த இளம் உள்ளம் ஏகாந்தத்தை நாடித் தவித்தது. அவன் கற்பனையில் ஒரு தவலோகமே விரிந்தது…..

….ஹிமவானின் சிகரத்தில், பனிச் செதில்கள் பாளம் பாளமாய், அடுக்கடுக்காய் மின்னிப் பளபளக்கும் அந்தப் பாழ்வௌ¢யில், மேகம் திரண்டு ஒழுகுவதுபோன்ற—ஹிமவானின் புத்திரி கோதிவிடும் வெண் கூந்தல் கற்றைபோல் விழும் — நீரருவியில், அதன் அடிமடியில் ஓங்காரமாய் ஜபிக்கும் பிரணவ மந்திர உச்சாடனம் போன்ற நீர்வீழ்ச்சியின் இரைச்சலில், சிவனின் புகழ்பாடும் எண்ணிறந்த பறவை இனங்களின் இன்னிசையில்…. எதிலுமே மனம் லயிக்காமல், பற்றாமல், உலகத்தின் அர்த்தத்தையே தேர்ந்த பெருமிதத்தில், தௌ¢வில் மின்னிப் புரளும் விழிகளை மூடி, இயற்கையின் கம்பீரத்துடன் நிஷ்டையில் அமர்ந்திருக்கிறாரே அந்த ரிஷிக் கிழவர்…. அவர்தான் லோக குரு’

—அருளானந்த சுவாமிகள்விட்ட கவிதாநயம் மிகுந்த சரடு சோமுவைப் பின்னிப் பிடித்துக் கொண்டது.

அங்கே சென்று லோக குருவைத் தரிசித்து அவர் பாதங்களிலே வீழ்ந்து, அவருக்கு பணிவிடை செய்ய வேண்டுமாம். அதையே பிறவியின் பயனாகக் கொள்ள வேண்டுமாம். மற்றக் கருமங்கள் யாவையும் மறந்து ஆசைகளை, பந்தங்களை, தன்னை, உலகை யாவற்றையும் துறந்து…..

—துறந்துவிட்டால் லோக குருவாகப்பட்டவர் சோமுவை ஒரே தூக்காகத் தூக்கி, இமயமலைக்கு மேலே, எவரஸ்டையும் தாண்டி, கைலாயத்திற்கும் அப்பால் சுவர்க்கத்திற்கு அனுப்பி விடுவாரல்லவா?….

“சம்போ மஹாதேவா’…..” என்றவாறு படுக்கையை விட்டு எழுந்தான் சோமு.

“ஏது, பிள்ளையாண்டான் இன்னக்கி இவ்வளவு விடிய எழுந்திரிச்சிட்டாரு. வா வா’ எண்ண தேச்சுக்க….” என்று கூப்பிட்டாள் பங்கஜம்.

‘இந்த கட்டைக்கு இதெல்லாம் எதற்கு?’ என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது. ‘இன்றைக்கு ஒரு நாள்தானே’ என்ற சமாதானத்தில் அவன் ஒன்றும் பேசவில்லை.

‘என்ன நாளைக்கு?…. நாளைக்கு என்ன ஆய்விடப்போகிறாய்?’

அதை நினைக்கும்பொழுதே மாய வாழ்வை உதறியெறிந்த எக்களிப்பு முகத்தில் தோன்றியது.

“ஏ, மூதி’ நிஜாரோட நிக்கிறதைப் பாரு… போயி கோமணத்தைக் கட்டிக்கிட்டு வா…”

“அப்பா’ தலையிலே எவ்வளவு முடி?… முடி வெட்டிக்கிட்டா என்னா?…” என்று முனகிக்கொண்டே தலையில் எண்ணெயை வைத்துத் தேய்த்தாள்.

‘முடி வெட்டிக் கொள்வது என்ன, மொட்டையே அடித்துக்கொள்ள வேண்டியதுதான்’ ‘ என்று மனம் முணகியது.

–அவனுக்குத் தலைமுடி ஒரே அடர்த்தி. சுருள் சுருளாக, வளையம் வளையமாக, வாரிவிட்டால் வங்கி வங்கியாக…

“ஒங்க தாத்தாவுக்குத்தான் இந்த மாதிரி சுருட்டை முடி…”

–மகனின் முடிப் பெருமையைப்பற்றி அவள் அடிக்கடி பேசிக் கொள்வாள்’

‘எல்லாப் பெருமையும் நாளைக்கு…’

–“சம்போ மகாதேவா” என்று சோமுவின் மனம் கோஷித்தது.

‘நாளைக்கு…நாளைக்கு’ என்று மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது.

அந்த ‘நாளை’ யும் வந்தது.

மூன்று மாதங்களுக்குமுன் ஒரு ‘பிளாஸ்டிக் பெல்ட்’ வாங்கவேண்டுமென்ற பெரும் லட்சியத்திற்காக, பள்ளிக் கூடத்தருகே விற்கும் வேர்க்கடலை, பட்டாணி, நாவற்பழம் இத்தியாதி வகையறாக்களைத் தியாகம் செய்து கிடைத்த காசையெல்லாம் சேர்த்துவைத்த செல்வம் மேஜை டிராயரில் ‘புரூக்லாக்ஸ்’ டப்பியன்றில் இருந்தது, அதை எடுத்து எண்ணிப் பார்த்தான். கிட்டத்தட்ட ஒரு ரூபாய்’ அந்தப் ‘பாப மூட்டை’ யைச் சுமக்க மனமில்லாமல் தர்மம் செய்து விடுவது என்று தீர்மானத்தான் சோமு.

கொஞ்ச காலமாகவே அவன் தனது நண்பர்களை–அவர்கள் ஞானமேதுமறியா ஈனஜன்மங்கள் என்பதனால்–விட்டு விலகி ஒதுங்கி நடந்தான்.

உபாத்தியாயரோ–‘மாணவர்களோடு சேர்ந்து கொச்சையாகவும் விரசமாகவும் கேலி பேசி மகிழும் அந்தத் தமிழ் வாத்தியார் இருக்கிறாரே, அவர் ரௌத்ரவாதி நரகத்துக்குத் தான் போகப்போகிறார்’ என்று டிக்கட் கொடுத்த புக்கிங் கிளார்க் மாதிரி முடிவு கட்டிவிட்டான் சோமு.

‘ஊனைத் தின்று ஊனை வளர்க்கும் தகப்பனார் என்ன கதி ஆகப்போகிறாரோ?’ என்று வருந்தினான்.

தாயா?–அது ஒரு மூடாத்மா…

‘இந்த அஞ்ஞான இருளில் அமிழ்ந்து கிடக்கும் மானிடப் பிறவிகளுக்கு மெய்ஞ்ஞான தீபத்தின் ஔ¢ என்றுதான் கிட்டுமோ?…’

‘ஸ்வாமி அருளானந்தரும், அவருக்கும் மேலாக ஹிமாலயத்தின் அடிவாரத்தில் தபஸில் லயித்திருக்கும் லோக குருவு இவ்விருவருக்கும் அடுத்தபடியாய்த் தானும் ஆகவேண்டிய பிறவி லட்சியம்…’
‘சம்போ மஹாதேவா’ ‘

அடுத்த நாள் அதிகாலை, சட்டை நிஜார் அனைத்தையும் துறந்து–இடையில் ஒரு துண்டு மட்டும் உண்டு–மடியில் தனது ‘மாயா செல்’ வத்தை முடிந்துகொண்டு, எல்லோரும் எழுந்திருக்கும் முன்னே சித்தார்த்தன் கிளம்பிச் சென்றது போல் நழுவினான் சோமு.

வௌ¢யிற் கலக்க எண்ணி, வீட்டை வௌ¢யேறிய சோமு நேரே மேலச் சந்நிதிக் கோபுரத்தடிக்குப் போனான்.

அங்கே ஒரு டஜன் பண்டாரங்கள் நின்றிருந்தன. அவர்கள் எல்லோருக்கும் தலைக்கு ஓரணாவாகத் தனது செல்வத்தைத் தானமிட்டுவிட்டு, தில்லைநாயகனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நேரே குளத்தங்கரைக்கு ஓடினான். அங்கே அரசமரத்தடியில் காலையிலிருந்து தவமிருக்கும் ‘பழனிநாத’ னிடம், இருந்த சில்லரையைக் கொடுத்துவிட்டுக் குரு உபதேசம் கொள்வதுபோல் குனிந்து உட்கார்ந்தான்.

‘குரு’ அவன் காதில் குனிந்து கேட்டார்:

“என்ன தம்பி…மொட்டையா?”

“ஆமாம்…”

வேணாம் தம்பி… கிராப்பு அளகா இருக்கே’…”

–மாயையை வென்ற ஞானிபோல் அவனைப் பார்த்துப் புன்னகை பூத்தான் சோமு.

‘மகனே’ என்றழைத்து உபதேசம் செய்யப் போவது போல் இருந்தது அவன் தோற்றம்.

“அப்பனே…முடியை இழக்க யோசனை செய்கிறோமே, முடிவில் ஒருநாள் இந்தச் சடலத்தையே வைத்து எரிப்பார்களே அதைப்பற்றிச் சிந்திக்கிறோமா?… முடிதரித்த மன்னர்கள் எல்லாம்கூட முடிவில் ஒருநாள் பிடி சாம்பராய்த்தானே போனார்கள்” என்று ‘குரு உபதேசம்’ செய்துவிட்டுக் குனிந்து கொண்டான்.

–அவனுக்குத் தான் பேசியதை நினைக்கும்போது, பேசியது தான்தானா என்றே ஆச்சரியமாய் இருந்தது. ‘என்ன ஞானம்’ என்ன ஞானம்’ ‘ என்று தன்னையே மனசுக்குள் பாராட்டிக் கொண்டான்.

‘பேசிப் பயனில்லை; ஞானம் முற்றிவிட்டது’

நினைத்த நாவிதன் அவனைப் ‘பக்குவ’ப்படுத்த ஆரம்பித்தான்.

உச்சந்தலைக்குக் கீழே நாவிதனின் கத்தி ‘கருகரு’வென்று வழிந்து இறங்கும்போது எதிரில் பெட்டியின்மீது சாத்தி வைத்திருந்த கண்ணாடியில் முகம் கோரமாய்த் தெரிந்தது.

அதைப் பார்த்த சோமுவின் கண்கள் ஏன் கலங்க வேண்டும்?…..

‘சம்போ மகாதேவா’ என்று மனசுக்குள் முனகி, தன்னை அடக்கிக் கொண்டான்.

பிறகு, குளத்தில் இறங்கி நாலு முழுக்குப்போட்டு விட்டு ‘ஜெய் சம்போ’ என்ற குரலுடன் கரையேறினான்.

பாசம், பந்தம், சுற்றம் சொந்தம், செல்வம், செருக்கு யாவற்றையும் இழந்த ஏகாங்கியாய் அவன் வடதிசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

—-ஆமாம்; இமயமலை அங்கேதான் இருக்கிறது’

‘இமயமலை இங்கிருந்து ஆயிரம் மைல் இருக்குமா?…..இருக்கலாம்’ ‘

‘ஒரு மனிதன் ஒரு நாளைக்குக் குறைந்தது பத்து மைல் நடக்க முடியாது?….நிச்சயமாக முடியும்’ ‘

‘அப்படியானால் மொத்தம் நூறு நாட்கள்—அதாவது மூன்று மாதமும் பத்து நாட்களும்….’

‘இரண்டாயிரம் மைலாக இருந்தால்…. அதுபோல் இரண்டு மடங்கு’…. எப்படி இருந்தாலும் போய்விட வேண்டியதுதானே’…..பிறகு, என்ன யோசனை?….’

‘போகும் வழியெல்லாம் எவ்வளவு புண்ணிய ஷேத்திரங்கள்’…. எவ்வளவு தெய்வ பக்தர்கள்’…. எவ்வளவு மகான்கள்’…. எவ்வளவு முனிவர்கள்’……

சோமு தனது புனித யாத்திரையைத் துவங்கி ஆறு மணி நேரமாகி இருந்தது. போகும் வழியில்…..ஆம்; ஹிமாலயத்தை நோக்கிப் போகும் வழியில்தான்—-குறுக்கிடுகிறது பரங்கிப்பேட்டை’

அந்த நகரில் அன்று சந்தை’

சோமு கடைத்தெரு வழியாக நடந்து வந்துக்கொண்டிருந்தான்.

கிராமத்து மக்கள் கும்பல் கும்பலாகப் போவதும் வருவதுமாய்….ஒரே சந்தடி’

மூட்டை முடிச்சுகளுடன் பறந்து பறந்து ஓடுகிறவர்கள், கூடைச்சுமைகளுடன் ஒய்யாரமாய் கைவீசி நடக்கிறவர்கள், தோளில் உட்கார்ந்து கொண்டு கரும்பு கடிக்கும் பிள்ளைச் சுமையுடன் துள்ளி நடப்பவர்கள், கட்டை வண்டிகளில் அழிகம்பைப் பிடித்துக்கொண்டு நகத்தை கடித்தவாறு சிரித்துச் செல்லும் கிராமத்து அழகிகள், தெரு ஓரங்களில் குந்தி இருந்து வியாபாரம் செய்பவர்கள், கூடியிருந்து பேசி மகிழ்பவர்கள், வியாபராம் செய்தவாறு வேடிக்கை பேசுபவர்கள், விலை கூவியவாறு பாட்டுப் பாடுபவர்கள். வேடிக்கை பார்த்தவாறு வழிவட்டம் போடுபவர்கள், கேலி பேசிவாறு ‘கேளிக்கை’க்கு ஆயத்தமாகிறவர்கள்— மனிதர்கள் திருநாள்போல் மகிழ்ந்திருந்தனர். வாழ்வின் உயிர்ப்பு எத்தனையோ கோலத்தில் வளைய வந்துகொண்டிருந்தது அங்கே.

வாய்க்காலைத் தாண்டுவது போல் வாழ்க்கையைத் தாண்டிவிடலாம் என்று எண்ணி வந்த சோமு அந்தச் சந்தையைக் கடக்கும்போது — வாழ்க்கையின் அந்தக் காட்சிகளில் தன்னை மறந்து லயித்துவிட்டான்.

அதோ, அந்த மர நிழலில் — ஓர் இளம்பெண் நாவல் பழத்தை அம்பாரமாய்க் குவித்து வைத்துக்கொண்டு விலை கூவி விற்கிறாள். நாவல் பழ நிற மேனி; அந்தக் கருமேனியில் —அவள் முகத்தில் முத்துப் பற்ற்களும், அவற்றிற்கு வரம்பமைத்த வெற்றிலைச் சாறூரும் உதடுகளும் எல்லோரையும் வலிய அழைத்து நாவற்பழம் தருகின்றன. அவளது கண்கள் வௌÿபுள்ளிÿளை வெளேரென்று. அவற்றின் நடுவே இரண்டு நாவற்பழங்களைப் பதித்து வைத்ததுபோல் புரளும் கருவிழிகள்…..

அந்த விழிகள் சோமுவை, நாவல்பழத்தை வெறித்து நோக்கிய சோமுவின் விழிகளை நோக்கின.

“கல்கண்டு பளம்…..கருநாவப் பளம்….படி ஓரணா, படி ஓரணா….” என்று பாட்டுபாடி அவனை அழைத்தாள்.

‘படி ஓரணா…. பரவாயில்லையே …பள்ளிக்கூடத்துக்கு எதிரே வண்டியில் வைத்து நாலைந்து பழங்களைக் கூறுகட்டி கூறு காலணா என்று விற்பானே….’ என்ற நினைவும் வரவே சோமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

—அவனுக்கு நாவற்பழம் என்றால் உயிர்’ அதுவும் உப்புப் போட்டு தின்பதென்றால்?….

அவன் வாயெல்லாம் நீர் சுரந்தது’

அதுவும் இந்தப் பழங்கள்’….

கன்னங்கறேலென்று, ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு….. கனிந்து லேசாக வெடித்த பழங்கள்… வெடிப்பின் இடையே சில பழங்களில், கறுமையும் சிவப்பும் கலந்த பழச்சாறு துளித்து நின்றது, பக்கத்தில் ஒரு சிறு கூடையில் உப்பும் வைத்திருந்தாள்…

கும்பலில் இருந்தவர்கள் காலணாவும் அரையணாவும் கொடுத்துக் கைநிறைய வாங்கிச் சென்றனர். சிலர் உப்பையும் சேர்த்துக் குலுக்கித் தின்றனர்.

அதோ, ஒரு கிழவர்….

அவர் வாயைப் பார்த்ததும் சோமுவுக்குச் சிரிப்பு வந்தது, அவர் மூக்குக்கும் மோவாய்க்கும் இடையே ஒரு நீளக்கோடு அசைந்து நௌ¢ந்துகொண்டிருந்தது. அதுதான் உதடு, வாய், பற்கள் எல்லாம்….

“அரையணாவுக்கு பளம் குடு குட்டி’ ” அந்தக் கிழவர் பொக்கை வாயால் ‘பளம்’ என்று சொல்லும்போது வௌ¢யே தெரிந்த நாவையும் வாயின் அசைவையும் கண்ட சோமுவுக்குச் சிர்ப்புப் பொத்துக்கொண்டு வந்தது.

ஒரு காகிதத்தில் நாவல்பழத்தைப் பொறுக்கி வைத்து ஒரு கை உப்பையும் அள்ளித் தூவிக் கிழவரிடம் கொத்தாள் நாவற்பழக்காரி.

“ஏ, குட்டி, கௌவன்னு ஏமாத்தப் பாக்கிறியா? இன்னம் ரெண்டு பளம் போடுடி…வயசுப் புள்ளைவளுக்கு மட்டும் வாரி வாரிக் குடுக்கிறியே…” என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டே கேட்டார் கிழவர்.

“அடி ஆத்தே….இந்தக் கெழவனுக்கு இருக்கற குறும்பைப் பாரடி அம்மா’ ” என்று கையைத் தட்டிக் கன்னத்தில் வைத்துக்க்கொண்ட நாவர்பழக்காரி கண்களை அகல விரித்தவாறு சிரித்தாள்.

“மீதி சில்லறை குடு குட்டி…என்னமோ ஆம்படையான் சம்பாதிச்சுக் குடுத்த காசு கணக்கா வாங்கிப் போட்டுக்கிட்டு நிக்கறியே….” என்றார் கிழவர்.

“ஏ, தாத்தா…என்னா வாய் நீளுது….” என்று கிழவர் கன்னத்தில் லேசாக இடித்தாள் பழக்காரி.

“பாத்தியா…ஒரு ஆம்பிளை கன்னெத்தெ தொட்டுட்டா…எம்மேலே அம்மாம் பிரியமா, குட்டி…? ஒங்கப்பங்கிட்டே சொல்லி நாளு பாக்கச் சொல்றேன்…எந்தப் பய கால்லேயாவது சீக்கிரம் கட்டாட்டி நீ எம்பின்னாலே வந்துடுவே போல இருக்கே…” என்று சொல்லிக் கிழவர் அனுபவித்துச் சிரித்தார். பழக்காரி வெட்கத்தினால் இரண்டு கைகளினாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.

“போ…தாத்தா’ ” என்று கண்டிப்பதுபோல் கிழவரைப் பார்த்தாள்.

கிழவர் சிரித்துக்கொண்டே, கையிலிருந்த பழங்களில் ஒன்றை எடுத்து–உப்பில் நன்றாக அழுத்தி எடுத்து–இரண்டு விரல்களால் வாய்க்கு நேர உயர்த்திப் போட்டுக் குதப்பிச் சப்பிக் கொட்டையைத் துப்பினார்…

‘அடெ, இத்தினூண்டு கொட்டை’ பழம், நல்ல பழம் தான்’ –கிழவரின் வாயசைப்பையும் சுவை ரசிப்பையும் கவனித்து அனுபவித்த சோமு வாயில் சுரந்த எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.

இந்த மொட்டைத்தலைச் சிறுவன் தன்னையே கவனித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்த கிழவர்.

“இந்தாடா, பையா…” என்று சோமுவிடம் ஒருகை பழத்தை அள்ளிக் கொடுத்தார்.

சோமுவுக்குச் செவிட்டில் அறைந்ததுபோல் இருந்தது’ அந்த நாவற்பழக்காரி அவனைப் பார்த்தாள். சோமு, கிழவனையும், நாவற்பழக்காரியையும் மாறி மாறிப்பார்த்தான். அவனுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது’
“நா ஒண்ணும் எச்சப் பொறுக்கி இல்லே…” என்று அவனிடம் நீட்டிய கிழவரின் கையிலிருந்த பழத்தைத்
தட்டிவிட்டான்.

கிழவர் சிரித்தார்:

“அட, சுட்டிப்பயலே…என்னமோ ஒன்னெப் பாத்தா ஆசையா இருந்தது…எம் பேரப்பையன் மாதிரி…கோவிச்சிக்கிட்டியே…நான் ஒன் தாத்தா மாதிரி இல்லே…” என்று வாஞ்சையுடன் அவன் தலையைத் தடவிக் கொடுத்தார்.

சோமுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“ஒங்க தாத்தாவுக்குத்தான் இந்தமாதிரி சுருட்டை மயிர்” என்று சொல்லும் அவன் தாயின் குரல் செவிகளில் ஒலித்தது.

“இந்தாடா பையா…ஏதுக்கு அளுவுறே? நீ யாரு வூட்டுப் பையன்…” என்றார் கிழவர்.

சோமு ஒன்றும் பதில் பேசவில்லை.

“ஒனக்கு என் கிட்டே கோவம், இல்லே?…பரவாயில்லே…தாத்தாதானே…இந்தா, பழம் தின்னு…”

“ஊஹ்உம்…எனக்கு வேணாம்’

“சேச்சே… அப்பறம் எனக்கு வருத்தமா இருக்கும். ஒண்ணே ஒண்ணு’ ” என்று அவன் கையில் வைத்தார். அவனால் மறுக்க முடியவில்லை. அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு அந்த இடத்தில் நிற்க முடியாமல் நகர்ந்தான்.

“பாவம்…யாரோ அனாதை’ மொகத்தைப் பாத்தா பாவமா இருக்கு…”

‘நான் அனாதையா?…பிச்சைக்காரனா?…’ வாயிலிருந்த பழத்தைச் சுவைத்துக் கொட்டையைத் துப்பினான். ‘அந்தக் கிழவனின் முகத்தில் அறைவதுபோல் நானும் ஒரு காலணாவுக்குப் பழம் வாங்கித் தின்றால்?…’

‘திங்கலாம்…காசு?…’

–அவன் தனது மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டே நடந்தான்.

அதோ, அந்த மரத்தடியில் வேர்க்கடலை, பட்டாணி வறுக்கிறார்கள். அப்பா’…என்ன வாசனை?…

–திடீரென அவன் மனசில் மின்னல்போல் அந்த எண்ணம் விசிறி அடித்தது.

‘நாம் எங்கே போகிறோம்?…நமது லட்சியம் என்ன?

–அவனுக்கு நெஞ்சில் ‘திகீல்’ என்றது. அவனே தேர்ந்துகொண்ட அந்த முடிவு அவனை இப்பொழுது முதல் தடவையாக மிரட்டியது’ ஒருகணம் சித்தம் கலங்கியது; உணர்வற்று நின்றான், உடலிலும் நெஞ்சிலும் ஒரு துடிப்புப் பிறந்தது. தன்னை ஏதோ ஒன்று பின்னாலிருந்து திரும்ப அழைப்பதுபோல் உணர்ந்தான். அந்த அழைப்பின் பாசம், பிடிப்பு…அதிலிருந்து பிய்த்துக்கொண்டு விலகிவிட எண்ணிக் கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஓட்டமாய்ச் சந்தைத் திடலைவிட்டு ஓடினான்…கடைத்தெருவைக் கடந்து சாலை வழியே வந்தபின் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

வெகுதூரத்தில், வாழ்வின் கீதம்போல் ஒலிக்கும் சந்தை இரைச்சல் அவன் காதுகளில் மெல்லெனக் கேட்டுக் கொண்டே இருந்தது.

அவன் ஏன் அழுதுகொண்டே நடக்கிறான்?…

சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் சாலையில் கிட்டத்தட்ட, பதினைந்தாவது மைலிலுள்ள ஆலப்பாக்கத்தருகே புழுதி படிந்த உடலுடன் நடக்க முடியாமல் தளர்ந்து தள்ளாடி நடந்து வருவது–ஹிமாலயத்தை நாடிச் செல்லும் ஞானச் செம்மல் சோமுதான்.

நடக்க முடியவில்லை; வயிற்றைப் புரட்டுகிறது ஒரு சமயம், வலிக்கிறது மறுசமயம்…பசிதான்’

–சுமைகளை உதறி எறிந்துவிட்டு வந்த சோமுவுக்கு,

சோறில்லாமல் வெற்றுடல் சுமையாய்க் கனக்கிறது’

இனிமேல் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது என்ற ஸ்தம்பிப்பு’ நிற்கிறான்…பார்வை வெகுதூரம் வரை ஓடி வழியை அளக்கிறது….

பார்வை மறைகிறதே…..கண்ணீரா? பசிக் கிறுகிறுப்பா?….

இமயமலைக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கிறது’

சிரமப்பட்டு ஒரு அடி எடுத்து வைக்கக் காலை அசைத்தவுடன் காலில் பெருவிரலிலிருந்து அடித்தொண்டை வரைக்கும் ஒரு நரம்பு–கொரக்குப் பிடித்து சுண்டி இழுப்பது போல்….

“ஆ?….என்ன வலி’…..” பல்லைக் கடித்துக்கொண்டு தரையில் மெல்ல உட்காருகிறான்.

—-எத்தனை நாழி?….

எழுந்திருக்க மனமும் வரவில்லை; உடலும் வரவில்லை.

இருள் பரவ ஆரம்பித்தது;

மேற்குத் திசையில் வானம் சிவந்து கறுத்தது. அந்தச் சாலையின் நெடுகிலும் வளர்ந்து படர்ந்திருந்த ஆல விருக்ஷத்தின் விழுதுகள் சடைசடையாய் ஆடிக்கொண்டிருந்தன. இருளைக் கண்டதும்…. பாவம், பிள்ளைக்குப் பயத்தால் மனத்தில் உதறல் கண்டுவிட்டது.

அந்தச் சாலையில் விளக்குகளும் கிடையாது. ‘இன்று நிலாவும் இல்லை’ என்று சொல்வதுபோல் நான்காம் பிறை கடைவானில் தலைக்காட்டிவிட்டு கீழிறங்கிக் கொண்டிருந்தது. ‘எங்காவது ஒரு குடிசை கண்ணுக்குத் தெரிகிறதா?’ என்று பார்த்தான்….ஹஉம், இன்னும் இரண்டு மைலாவது நடக்க வேண்டும்.

‘இரவு படுக்கை?…..’

—வீட்டில் படுக்கும் மெத்தையும், பஞ்சுத் தலையணையும், கம்பளிப் போர்வையும் நினைவுக்கு வந்தன…. ‘இதெல்லாம் என்ன விதி’…..’

‘பசிக்கிறதே’….’

‘யார் வீட்டிலேயாவது போயி, சம்போ மகாதேவான்னு நிக்கிறதா என்ன?’

‘யாராவது பிச்சைக்காரன்னு நெனைச்சி வெரட்டினா?….’

வீட்டில்–மெய்ஞ்ஞானம் கைவரப்பெறாத அம்மா, பாசத்தை விலக்க முடியாமல், மகனென்ற மாயையில் சிக்கி பக்கத்தில் அமர்ந்து பரிந்து பரிந்து சோறிட்டுப் பறிமாறுவாளே—அந்த அம்மா, ஆசை அம்மா—அவள் நினைவு வந்ததும்….

“அ…ம்….மா…” என்று அழுகையில் உதடுகள் விம்மித் துடித்தன’

‘சீ’ இதென்ன பைத்தியக்காரன்போல் ஓடிவந்தேனே’ இதென்ன கிறுக்கு?….’ என்று தன்னையே சினந்துகொண்டான்.

இந்நேரம் ஊரில், வீட்டில் அம்மா, தன்னைக் என்னென்ன நினைத்து, எப்படியெப்படிப் புலம்பி அழுவாள்…..

அப்பா? அவர் ஊரெல்லாம் தெருத் தெருவாய் அலைந்து திரிந்து எல்லோரிடத்திலும் ‘சோமுவைப் பார்த்தீர்களா சோமுவை…’ என்று விசாரித்தவாறு சாப்பிடாமல் கொள்ளாமல் ஓடிக் கொண்டிருப்பார்…

‘ஐயோ’ என்னால் எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்’ ‘ என்று எண்ணிய சோமு.

“அம்மா’…நா வீட்டுக்கு வந்துட்றேன் அம்மா…ஆ…ஹ்உ…ம்…” என்று ஜன நடமாட்டமே இல்லாத அந்தச் சாலையில், திரண்டு வரும் இருளில் குரலெடுத்துக் கூவி அழுதான்.

சிறிது நேரம் மனம் குமுறி அழுது சோர்ந்தபின், மனம் தௌ¢ந்து புத்தி செயல்பட ஆரம்பித்தது.

நேரமோ இருட்டுகிறது, நடந்துவந்த வழியை எண்ணினான். ‘மீண்டும் திரும்பி நடப்பதென்றால் வீட்டுக்குப் போய்ச் சேருவது எப்போது?……எப்படியும் விடியற்காலையிலாவது வீட்டுக்குப் போயாக வேண்டுமே…இந்த இருட்டை, ராத்திரியைக் கழிப்பது எங்கே?…

அவனுக்கு அழுகை வந்தது.

‘இதெல்லாம் என்ன விதி?’

“விதியல்ல கொழுப்பு’ ” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வாய்விட்டுச் சொன்னான்.

பக்தி வெறியும் வேதாந்தப் பித்தும் சற்றுப் பிடி தளர்ந்தன.

‘பெற்றோர்க்கும் எனக்கும் என்ன பந்தம்?’

‘பெற்ற பந்தம்தான்’ பந்தமில்லாமலா என்னை வளர்த்தார்கள்? நான் சிரிக்கும்போது சிரித்து, அழும்போது அழுது…’

‘பாசத்தை யாரும் வலியச் சென்று ஏற்காமலே பிறக்கிறதே…அதுதானே

பந்தம்’ ‘

‘ஆமாம் பந்தங்கள் இருந்தால்தான், பாசம் கொழித்தால்தான் பக்தியும் நிலைக்கும்.’

‘பந்தமும் பாசமும் பொய்யென்றால், ஸ்வாமி அருளானந்தரின் மீதும், லோக குருவின்மீதும், பரம்பொருளின் மீதும் கொண்டுள்ள பக்தி…அதுவும் ஒரு பாசம்தானே?’

சாலையில் கவிந்திருந்த இருளில் மரத்தடியில் அமர்ந்து தன்னைச் சூழ்ந்து பின்னிக்கொண்டிருந்த வேதாந்தச் சிக்கல்களையும், தத்துவ முடிச்சுகளையும் அவிழ்த்து, சிக்கறுத்துத் தள்ளித்தள்ளித் தன்நிலை உணர்ந்துகொண்டிருந்த சோமு, இருளும் நன்றாகப் பரவிவிட்டது என்று உணர்ந்தான்.

கண்ணுக்கெட்டிய தூரம் இருளின் கனம்தான் தெரிந்தது. வெகு தொலைவில் ரயில் சப்தம் கேட்டது. வானத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரச் சிதைவு இருளின் கருமையை மிகைப்படுத்திக் காட்டின. யாரோ ஒரு பிரம்ம ராக்ஷஸனின் வரவுக்காக ‘பாரா’க் கொடுத்து திண்டுமுண்டான ராக்ஷசக் கூட்டம் அணிவகுத்து நிற்பதுபோல் அசையாமல் தோன்றும் மரங்களின் கரிய பெரிய பரட்டைத் தலைகளின் மீது ஜிகினா வேலை செய்ததுபோல் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாய் மொய்த்தன…..

திடீரென் ‘சரசர’வென்ற அந்தச் சப்தம்’…..எங்கிருந்து வருகிறது?….

சோமுவின் கண்கள் இருளைக் கிழித்து ஊடுருவின…. காதுகள் கூர்மையாயின….

‘எங்கே’….என்னது?…..’

‘அதோ….அதுதான்; அதுவேதான்’ ‘

—சாலையின் வலது புறத்தில்—சோமு உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நேரே பத்தடி தூரம் தள்ளி—கடலைக் கொல்லையிலிருந்து மேலே உயரும் சாலைச் சரிவில், உதிர்ந்து நிரவிக் கிடக்கும் ஆலிலைச் சருகுக் குவியலின் நடுவே, நெல்லுக் குத்தும் மர உலக்கை ஒன்று லாகவம் பெற்று நௌ¢வதைப்போல நகர்ந்து வந்தது….இருளில்கூட என்ன மினுமினுப்பு’

“பாம்பு’….தப்பு….தப்பு…..சர்ப்பம்…. சர்ப்ப ராஜன்….” வாய் குழறிற்று. காலும் கையும் தன் வசமிழந்து உதறின. சாய்ந்து உட்கார்ந்திருந்த அடிமரத்தில் முதுகை ஒட்டிக் கொண்டு எழுந்தான். எழுந்திருக்கும்போது மொட்டைத் தலையில் ‘நறுக்’கென்று மரத்தின் முண்டு இடித்தது.

-அந்த ‘உலக்கை’ மேட்டில் ஏறி, சாலையின் குறுக்கே நீண்டு நகர்ந்தது. நீளக் கிடந்து நகர்ந்த அந்த உலக்கை ஒரு துள்ளுத் துள்ளிச் சாடி நௌ¢ந்தது.

“வ்வோ….மொ….ழொ….ழொ….” வென்று பயந்தடித்துக் குளறினான் சோமு. உலக்கையின் சாட்டத்தைத் தொடர்ந்து கிளம்பிய தவளை ஒன்றின் பரிதாப ஓலம் சில வினாடிகளில் ஓய்ந்து போயிற்று.

‘ஏறுமயில்….ஏறிவிளையாடு முகம் ….ஒன்று” என்று ‘பய-பக்தி’க் குரலில் முருக ஸ்தோத்திரம் செய்தான் சோமு.

அந்த ‘உலக்கை’ சாலையின் மறு இறக்கத்தில் ‘சரசர’வென்ற ஓசையுடன் இறங்கி மறைந்தது.

திடீரென அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. ‘திடீரென மரத்தின் மீதிருந்து ஒரு ‘உலக்கை’ சுருண்டு விழுந்து தன் மீது புரண்டு சாடி….’

“ஐயோ’….”

தலையைத் தொட்டவாறு தொங்கும் ஆல விழுது. நாக்கை நீட்டித் தலையை நக்கும் பாம்புபோல்….

இன்னும் கொஞ்ச நேரத்தில் பாம்பின் படம் மொட்டைத்தலையின் மீது கவிந்து, ‘பொத்’தென அடித்து, மேலெல்லாம் புரண்டு, சுற்றி, இறுக்கி….

திடுதிடுவென இருண்ட சாலையின் நடுவே ஓடினான். கால் நரம்புகள் நொந்து வேதனை தந்தன….முழங்காலுக்குக் கீழே ஒரே பதட்டம்…ஓடிவந்த வேகத்தில் முழங்கால் மடங்க, குப்புற விழுந்தான்.

முன்காலில் அடிபட்டவுடன் கண்கள் இருண்டன….

அவன் தன் நினைவின்றி, பசி மயக்கத்தில், நடந்த களைப்பில் மிருதுவான செம்மண் புழுதியில் அசைவின்றிக் கிடந்தான்.

அடுக்கடுக்காய்த் திரண்டு வந்த இருள் திரட்சி அவன் மீது கனமாகக் கவிந்தது’

ஜல்….ஜல்….ஜல்…..ஜல்…..

‘அது என்ன சப்தம்? கைலயங்கிரியில் தாண்டவமாடும் சர்வேச்வரனின் கழலொலி நாதமா?….’

‘தூரத்தில், வான்முகட்டில் கேட்கிறதே…’

‘ஜல்….ஜல்…’

“தா…தா…ஹேய்….”

‘ஜல்…ஜல்….ஜல்….’

“ஹாவ்….ஹாவ்…..அதார்ரா அவன், நடுரோட்டிலே படுத்துக் கெடக்கிறது?….” என்ற வண்டி ஓட்டுபவனின் குரலைத் தொடர்ந்து,

“எறங்கிப் போயிப் பாரேண்டா….நில்லு, நானும் வாரேன்….” என்ற மற்றொரு குரலும் சோமுவின் செவியில் விழத்தான் செய்தன….அனால் அவை எங்கோ சந்தையில் ஒலிக்கும் தூரத்துக் குரல்கள்போல் தோன்றின.

வண்டியிலிருந்து இறங்கிய மனிதர், வண்டிக்குக் கீழே புகை மண்டி எரியும் ராந்தல் விளக்கை அவிழ்த்துக் கொண்டு அவனை நெருங்கினார்.

சோமுவின் மூடிய இமைகளினூடே வௌ¢ச்சத்தின் சாயை படரவே, கனத்து அழுத்திக்கொண்டிருக்கும் இமைகளைத் திறந்தான்….ஔ¢பட்டுக் கண்கள் கூசின. இமைகள் பிரிந்து பிரிந்து ஒட்டின. அவன் கைகளை ஊன்றி எழுந்து உட்கார்ந்தான். உட்கார்ந்ததும் கண்களைக் கசக்கிக் கொண்டு விம்மி விம்மி அழுதான்….

“அடடே….சந்தையிலே பாத்த பையனில்லே நீ…..”

சோமு அழுவதை நிறுத்திவிட்டு வௌ¢ச்சத்தில் அவர் முகத்தைப் பார்த்தான்.

—ஆமாம்; சந்தையில் நாவற்பழம் தந்த பொக்கை வாய்க் கிழவர்’

“ஒனக்கு இவனைத் தெரியுமா, தாத்தா?” என்றான் வண்டி ஓட்டி வந்த வாலிபன்.

“தெரியாம என்னா? ஒன்ன மாதிரி ஒரு பேரன்’ ”

“நீ யாருடா, பயலே… இங்கே எப்படி வந்தே?….அதுவும் இந்நேரத்திலே…எந்த ஊரு… என்னாடா பையா, எல்லாத்துக்கும் அளுவுறே…. சேச்சே…. ஆம்பிளைப்புள்ளே அளுவறதாவது… எனக்கு வெக்கமா இருக்கு…..சரி, நீ எங்கூட வா….தோ, பக்கத்திலேதான் வூடு இருக்கு; போயிப் பேசிக்கலாம்…வவுத்தெப் பசிக்குதடா, கெழவனுக்கு…உம் வா’….” என்று அருகே இழுத்து அணைத்துக்கொண்டார் கிழவர்.

இருக்கும் சொந்தத்தை உதறிவிட எண்ணிய சோமுவும், எல்லாரிடமும் சொந்தம் பாராட்டும் கிழவரும் ஒருவரையருவர் ஒரு கணம் பார்த்துக்கொண்டனர். கிழவர் சிரித்தார்.

அந்த இரட்டை மாட்டுக் கட்டை வண்டியில் கூடைகளும், வாழையிலைச் சருகுகளும் குப்பைபோல் நிறைந்திருந்தன. உயரமான வண்டியின் சக்கரங்களில் காலை வைத்துத் தாவியேறினார் கிழவர்.

சோமுவால் ஏற முடியவில்லை; கிழவர் கைகொடுத்தார். கிழவரின் பேரன் வண்டியை ஓட்டினான். மடியிலிருந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டே சோமுவிடம் பேச்சுக் கொடுத்தார் கிழவர்:

“பையா….நீ எங்கேருந்து வாரே….எங்கே போறே….கேக்கறத்துக்குச் சொல்லு…..”

“நா….நா’….வந்து….இமயமலைக்குப் போலாமின்னு….” அவனுக்குத் தொண்டை அடைத்தது.

“இமயமலையா?….அது எங்கேல’யிருக்கு?…..”

“அதான் தாத்தா…நீ கைலாசம்னு சொல்லுவியே….” என்று குறுக்கிட்டான் அவர் பேரன்.

“அடெ பைத்தியக்காரப் புள்ளே….அந்த மலைக்கி இந்தச் சரீரத்தோட போவ முடியுமா’லே…. காரைக்காலம்மையாரே தலையாலே நடந்தில்லே போனாவ….நாமெல்லாம் செத்தப்புறம்தான் போவமுடியும்…நீ பசலை…இன்னம் எவ்வளவோ அனுபவிக்கக் கெடக்கு…படிச்சி, சம்பாதிச்சு, கலியாணம் காச்சின்னு கட்டிக்கிட்டு, புள்ளெக் குட்டியெல்லாம் பெத்து, என்னெ மாதிரி ஆனப்புறம் இந்தப் புத்தி வந்தா சரிதான்….இப்பவேவா?….இது என்னடா, கிறுக்குத்தனமால்லே இருக்கு….எனக்குக்கூட இல்லே அந்த மாதிரிப் புத்தி வரமாட்டேங்குது…” என்று சொல்லிக்கொண்டிருந்த கிழவர் ஏதோ பழைய நிகழ்ச்சியில் லயித்தவர்போலச் சிரித்துக் கொண்டார்.

“தாத்தா’….’ என்று சோமுவின் குரல் ஒலித்தது.

“என்னலே…” என்று கிழவர் அவன் தோள்மீது கைவைத்தார்.

அவன் விம்மி விம்மி அழுதான்.

“தாத்தா இனிமே….நா’ எங்கேயும் போகமாட்டேன், தாத்தா…வீட்டிலே இருந்துகிட்டே சாமியெல்லாம் கும்பிட்டுக்குவேன் தாத்தா….அம்மா அப்பாகிட்டே சொல்லிக்காம இனிமே எங்கேயும் போகமாட்டேன்… நீங்க மட்டும்….என்னெ எப்படியாச்சும் செதம்பரத்திலே கொண்டுபோய் சேர்த்திடணும்….தாத்தா….நாளைக்கே, நான் வூட்டுக்குப் போயிடணும் ஒங்களெ நா’ மறக்கவே மாட்டேன் தாத்தா….” என்று கெஞ்சிக் கெஞ்சி அழுதான் சோமு.

கிழவர் சிரித்தார்.

“என்ன தாத்தா சிரிக்கிறீங்க….என்னெக் கொண்டு போயி விடமாட்டீங்களா?…. செதம்பரத்துக்கு வேண்டாம், புவனகிரியிலே விட்டாகூட போதும். அங்கேருந்து போயிடுவேன்…..”

சோமுவுக்கு தான் வந்த வழியை…தூரத்தை….நினைக்கும்போது மலைப்பாய் இருந்தது. வந்ததுபோல் திரும்பி நடந்து போய்விடமுடியாது என்று தோன்றிற்று.

‘கிளாஸ் டீச்சர் ராதாகிருஷ்ணய்யர் எவ்வளவு அன்பாகப் பேசுவார்…. எவ்வளவு செல்லமாகக் கொஞ்சுவார்….ஒருநாள் கூட ‘ஆப்ஸன்ட்’ ஆகாதவன் என்று புகழ்ந்து பேசுவாரே…. இரண்டு நாட்கள் வராவிட்டால் வீட்டிலிருந்து போய் அவரைக் கேட்கமாட்டார்களா?…. அவரும் வருத்தப்படுவாரே… ஸார், நா’ இனிமே இப்படிச் செய்யவே மாட்டேன்….’

‘….ஐயோ’ வண்டி இன்னும் வடக்கே போய்க்கொண்டிருக்கிறதே’ யார் இந்தக் கிழவன்? என்னை கொண்டுவிடவும் மாட்டேன் என்கிறான்…இன்னும் அதிக தூரத்துக்கு இழுத்துக் கொண்டு போகிறானே….’

“தம்பி…வீணா மனசைப் போட்டுக் கொளப்பிக்காதே’ மூணு மணிக்கு எவனாவது செதம்பரத்துக்கு எலைக்கட்டு ஏத்திக்கிட்டுப் போவான்…அப்போ உன்னையும் எளுப்பி வண்டியிலே ஏத்திவுடறேன்…. நீ போயிடலாம்…ராவிக்கு எங்கவூட்லே சாப்பிட்டுட்டுப் படுத்துக்க… நானும் ஒன் வயசிலே இப்படி ஓடியிருக்கேன்….அப்புறம்தான் தெரியும் அந்த சுகம்’….” என்று சொல்லிவிட்டுக் கிழவர் பழைய நினைவுகளில் லயித்துக் தனக்குள் சிரித்துக்கொண்டார்…..

—அவன் முகத்திலும் வாழ்வின் சுவைபோல் சிரிப்புப் பூத்தது’

விடிவுக்கால இருள் மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருந்தது.

புவனகிரியின் எல்லையில் ‘கடக் கடக்’ கென்று இரட்டை மாட்டுக் கட்டை வண்டியன்று ஏற்றியிருந்த இலைக்கட்டுச் சுமையுடன் நகர்ந்துக்கொண்டிருந்தது. கழுத்து மணி ‘சலசல’த்தது; சக்கரத்தின் ஓசை விட்டுவிட்டுக் கிறீச்சிட்டது.

இலைக்கட்டுகளின்மேல், குளிருக்குக் கோணிப்பையைப் போர்த்தியவாறு உறக்கமும் விழிப்புமாய் உட்கார்ந்திருந்த சோமுவுக்கு ஊர் நெருங்குவதில் பயமும் மகிழ்ச்சியும் தோன்ற உறக்கம் கலைந்தது.

‘சிதம்பரம் 1 மைல்’ ‘ —-என்ற கைக்காட்டி மரத்தைக் கண்டவுடன்,

“ஐயோ’—-” என்று குதூகலிக்கும் குரலில் கூப்பிட்டான் சோமு.

வண்டிக்காரன் நுகத்தடியில் கால்களை உந்திக் கொண்டு, மாடுகளின் மூக்கணாங்கயிற்றை வலிந்திழுத்தான்; வண்டி நின்றது.

வண்டியிலிருந்து, சக்கரத்தைப் பற்றித் தொத்திக் கீழே இறங்கிய சோமு வண்டிக்காரனின் முன் கைகூப்பி நின்றான்.

“ஐயா, ஒனக்குக் கோடி நமஸ்காரம்…இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். தாத்தாகிட்ட போயி இதைச் சொல்லு….அவுரு தங்கமான தாத்தா…” சோமுவின் குரல் தழுதழுத்தது….கண்களில் கண்ணீர் மல்கியது.

வண்டிக்காரன் வாய்விட்டு, மகிழ்வோடு சிரித்தான்:

“தம்பி….வண்டி ஒறவு. வண்டியோடப் போயிடக் கூடாது…நா’ வாரா வாரம் சந்தைக்கு வருவேன்….தாத்தாகூட வருவாரு….மாருகட்டுலே அந்த மேக்கால கேட்டு இருக்குல்ல…. அங்கதான்….வந்து பாக்கிறியா?….”

“அவசியம் வாரேன்…தாத்தாவுக்கு என் நமஸ்காரத்தைச் சொல்றியா?…நா’ போயிட்டு வாரேன்” என்று வார்த்தைகளைச் சொல்லி முடிக்காமல் வைகறை வானத்தை புலர் பொழுதின் வெள்ளி¢ய வான்வௌ¢யை, இருளிலிருந்து ஔ¢யை நோக்கி ஓடி மறைந்தான் சோமு.

தெருக்களின் நடுவே வரும்போது வீடுகளின் முன்னே பெண்கள் சாணம் தௌ¢த்துக் கொண்டிருந்தனர்.

இடையில் ஒரு முழத் துண்டு மட்டும் தரித்த சோமு, குளிருக்கு அடக்கமாய், கைகளை மார்பின் குற்க்காகத் தோளில் சேர்த்துக் கட்டியவாறு வேக வேகமாய் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

அவன் வீட்டருகே நெருங்கும்போது, பங்கஜத்தம்மாள் வாசலில் கோலமிட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள். வாசலில் நின்று, கோலத்தை ஒருமுறை கவனித்துவிட்டு…உள்ளே திரும்பும்போது சோமு ஓட்டமாய் ஓடிவந்து வாசலில் நின்று “அம்மா’ ” என்று விக்கும் குரலில் கூப்பிட்டான்.

அந்தக் குரல் அவள் செவியில் அரைகுறையாகவே விழுந்தது…..

“போ போ….விடிஞ்சுதா–அதுக்குள்ளே…..?” என்று திரும்பினாள்’

பிரஷ்டம் செய்யப்பட்ட பாபியைப்போல் வாசலில் நின்று,

“அம்மா…. நாம்மா…சோமு” என்று கூறிய சோமு ‘ஓ’வென்று அழுதுவிட்டான்.

“அடப்பாவி….இதென்னடா கோலம்’….” என்று கையிலிருந்த கோலப் பொடி டப்பாவைப் போட்டு விட்டு ஓடிவந்து பிள்ளையை வாரியணைத்துக் கொண்டாள் பங்கஜம்’

“நா’….நா’…..பண்டாரமா போயிடலாம்னு…நெனைச்சி…நெனைச்சி…போனேம்மா… போனா..போனா வழியிலே ஒன் ஞாபகம் வந்திடுச்சிம்மா…ஆ…ஆ…” என்று குரலெடுத்து அழுதவாறு தாயை இறுக அணைத்துக்கொண்டு விக்கினான் சோமு.

“பைத்தியக்காரப் புள்ளே…. என்னெ விட்டுட்டு நீ போலாமா?… ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லே’ன்னு நீ படிச்சதில்லையா?….வா… உள்ளே வாடா….” என்று ஒரு கையில் அவனை அணைத்துக் கொண்டு, மறு கையால் கண்களைத் துடைத்துக் கொண்டான் பங்கஜம்.

உள்ளே—-போகும்போதே, “பாத்தீங்களா, உங்க பிள்ளையை….அத்தை வீட்டுக்குப் போயிருப்பான்னீங்களே —-சந்நியாசம் போயிட்டுத் திரும்பி இருக்கு….” என்று கண் கலங்க சிரித்துக்கொண்டே கூவினாள் அவன் தாய்.

“ஏண்டா, ஒனக்கு நல்ல எளுத்து நடுவே இருக்கையிலே கோண எளுத்து குறுக்கே போச்சி?…. அட, பரதேசிப்பய புள்ளே…. அளகா இருந்த கிராப்பை எடுத்துப்பிட்டு….சரி சரி, அந்த மட்டிலே வந்து சேந்தியே… கண்ணும் மூஞ்சியும் பார்க்க சகிக்கலே….போ…. போயி, பல்லை வௌக்கி மூஞ்சி மொகத்தைக் களுவிப்பிட்டுச் சாப்பிடு….அடியே, வட்டிலெ எடுத்துவச்சி பழையதைப் போடு….இந்தா, நானும் வந்துட்டேன்” என்று சாமி கும்பிடக் கூடத்துக்குச் சென்றார் சதாசிவம் பிள்ளை.

அண்ணனைக் கண்டதும், அப்பொழுதுதான் படுக்கையிலிருந்து எழுந்த இரண்டு தம்பிகளும், ராஜியும் அவனிடம் ஓடிவந்து அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு,

“எங்கேண்ணா போயிட்டே நேத்தெல்லாம்?….” என்று விசாரித்தனர்.

ராஜி அவன் மொட்டைத் தலையைப் பார்த்து வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள்.

அவனுக்கு வெட்கமாயும், வருத்தமாயும் இருந்தது’

“இங்கே பாரும்மா, ராஜியை…என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கறா” என்று கத்திக்கொண்டே அவனைப் பிடிப்பதற்கு ஓடினான்…..

கூடத்தில் சுவாமி படத்தருகே நின்று, நெற்றியில் திருநீற்றை அள்ளிப் பூசிக்கொண்டு. கண்மூடி கரம்கூப்பி,

“ஆங்காரம் தனை அடக்கி ஆணவத்தைச் சுட்டெரித்துத் தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்’ ” என்று உருகிக்கொண்டிருந்த சதாசிவம் பிள்ளையின் கால்களை ஓடிச் சென்று கட்டிக்கொண்டு, சோமுவை எட்டிப் பார்த்துப் பல்லைக் காட்டிப் பரிகாசித்தாள், ராஜி.

குழந்தையை ஒரு கையால் அணைத்துப் பிடித்துக் கொண்டு, ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் பிள்ளை.

அதற்குள் அடுக்களையிலிருந்து தாயின் குரல் கேட்கவே சோமு சாப்பிடப் போனான்.

வட்டிலில் பழையதைப் பிழிந்துவைத்து, முதல்நாள் மீன் குழம்புச் சட்டையை அகப்பையால் துழவிக்கொண்டே,

‘என்ன ஊத்தவா?’ எனப்துபோல் சோமுவைப் பார்த்தாள் பங்கஜம்.
 

புது செருப்புக் கடிக்கும்

அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வெளியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை மூடுகிறவரை எங்கு போகவேண்டும் என்றோ, எங்காவது போக வேண்டுமா என்றோவெல்லாம் அவன் நினைக்கவே இல்லை. அவள்மீது கொண்ட கோபமும், தன்னை அவமதிக்கிற மாதிரி தனது உணர்ச்சிகளை அசட்டை செய்துவிட்டுச் சுவரோரமாகத் திரும்பிக் கொண்டு தூங்குகிற அவளுக்குத் துணையாக விழித்துக்கொண்டிருக்கிற – ‘ஏன் படுக்கவில்லையா?’ என்று அவள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிற – அவமானம் தாங்கமாட்டாமல்தான் அவன் வெளியில் வந்து கோபமாகக் கதவை அறைந்து மூடினான்.

அவள் நிஜமாகவே தூங்கியிருந்தால் இந்தச் சத்தத்தில் விழித்திருக்க வேண்டும். இந்தச் சத்தத்தில் பக்கத்துப் போர்ஷன்காரர்கள் யாரேனும் விழித்துக் கொண்டுவிட்டார்களோ என்று தன் செய்கைக்காக அவன் அவமானத்தோடு அச்சம் கொண்டு இருள் அடர்ந்த அந்த முற்றத்தில் மூடியிருக்கும் எதிர் போர்ஷன் கதவுகளைப் பார்த்தான். உள்ளே விடிவிளக்கு எரிவது கதவுக்கு மேலுள்ள ‘வென்டிலேட்டர்’ வழியாய்த் தெரிந்தது. டேபிள்·பேன் சுற்றுகிற சத்தம் ‘கும்’மென்று ஒலித்தது. மணி பதினொன்று இருக்கும். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இருட்டில் தெரியவில்லை. எங்காவது போய்விட்டு விடிந்த பிறகு வந்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது. எப்படிக் கதவைத் திறந்து போட்டுவிட்டுத் தனிமையில் இவளை விட்டுப் போவது என்ற தயக்கமும் ஏற்பட்டது. அவள் வேண்டுமென்றே அடமாகப் படுத்துக் கொண்டு அழும்பு செய்கிறாள் என்று மனத்துக்குப் புரிந்தது.

அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தன் மீதே ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றியது. இதெல்லாம் தனக்கு வீண் தலைவிதிதானே என்று மனம் புழுங்கிற்று. தானுண்டு, தன் வேலையும் சம்பாத்தியமும் உண்டு என்று சுதந்திரமாகத் திரிகிற வாழ்க்கையின் சந்தோஷத்தை அல்லது வெறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தவனை, அப்படியே வாழ்ந்து விடுவது எனத் தீர்மானித்திருந்தவனை இந்தக் கல்யாணம், பெண்டாட்டி, குடும்பம் என்றெல்லாம் இதில் ஏதேதோ பெரிய சுகம் இருப்பதாகவும், மனுஷ வாழ்க்கையின் அர்த்தமே அதில் அடங்கி இருப்பதாகவும் கற்பித்துக் கொள்கிற பைத்தியக்காரத்தனத்தில் சிக்க வைத்த அந்தச் சைத்தானின் தூண்டுதலை எண்ணிப்பார்த்த பெருமூச்சுடன் வீட்டிற்குள் போகாமல் வாசற்படியில் அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு இருளும் நட்சத்திரமும் கவிந்த வானத்தைப் பார்த்தான்.

‘அந்தச் சைத்தான்’ என்ற முனகலில் அவனுக்குக் கிரிஜாவின் நினைவு வந்தது. அவள் எவ்வளவு இனியவள். இங்கிதம் தெரிந்தவள். சைத்தானைக் கட்டிக் கொண்டு வந்து வீட்டில் வைத்துக்கொண்டு அவளைப் போய்ச் சைத்தான் என்று நினைக்கிறேனே- என்று அந்த நினைவைக் கடிந்து கொண்டான் நந்தகோபால். ஆனாலும், தான் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தக் காரணமாக இருந்தவள் அந்த கிரிஜாதான் என்பதால் தனக்கு அவள் மீது வருகிற இந்தக் கோபத்துக்கு நியாயம் இருப்பதாக நினைத்தான் அவன்.

‘இப்போது, இந்த நேரத்தில் அவளைப் போய்ப் பார்த்தால் என்ன?’ என்ற எண்ணம் வந்தது அவனுக்கு. அவளை எப்போது வேண்டுமானாலும் போய்ப் பார்க்கலாம். இந்த ஆறுமாத காலமாக – கல்யாணமாகி ஒவ்வொரு நாளும் இவளோடு மனஸ்தாபம் கொண்டு ‘ஏன் இப்படி ஒரு வம்பில் மாட்டிக் கொண்டோம்’ என்று மனம் சலிக்கிற போதெல்லாம் அவன் கிரிஜாவை நினைத்துக் கொள்ளுவது உண்டு. என்றாலும் அங்கே போகலாம் என்ற எண்ணம் இப்போதுதான் தோன்றியது.

‘தான் இவளைக் கல்யாணம் செய்து கொள்ளுவதற்கு முன்பு எப்படியெல்லாம் இருந்தபோதிலும், இப்போது இவளை இங்கு தனியே விட்டுவிட்டு, அங்கே போவது இவளுக்குச் செய்கிற துரோகமில்லையா?’ என்று நினைத்துப் பார்த்தான். இவள் என்னதான் சண்டைக்காரியாக இருந்தாலும், இவள் மீது தனக்கு எவ்வளவுதான் கோபம் இருந்தபோதிலும், தன் மீதுள்ள வெறுப்பினால், அதற்கு ஆறுதலாக இருக்கும் பொருட்டு, இவள் அந்த மாதிரி ஏதாவது செய்தால் அதைத் தன்னால் தாங்க முடியுமா என்றும் எண்ணி அந்த எண்ணத்தையே தாங்க முடியாமல் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.

கடிகாரத்தின் ஒற்றை மணியோசை கேட்டது. மணி இன்னும் ஒன்றாகி இருக்காது. மூடியிருந்த கதவை லேசாகத் திறந்து கைக்கடிகாரத்தை உள்ளே இருந்து வீசும் வெளிச்சத்தின் ஒரு கீற்றில் பார்த்தான். இவனது வாட்சில் மணி பதினொன்றரை ஆகவில்லை. அடித்தது பதினொன்றரைதான் என்ற தீர்மானம் கொண்டு கதவின் இடைவெளி வழியாக அவளைப் பார்த்தான். அவள் அசையாமல் புரண்டு படுக்காமல் முன் இருந்த நிலையிலேயே முதுகைத் திருப்பிக் கொண்டு படுத்திருந்தாள். இவனுக்குக் கோபம் வந்தது. எழுந்து போய் முதுகிலே இரண்டு அறையோ, ஓர் உதையோ கொடுக்கலாமா என்று ஆங்காரம் வந்தது. “சீ” என்று தன்னையே அப்போது அருவருத்துக் கொண்டான் அவன்.

அப்படிப்பட்ட குரூரமான ஆபாசமான சம்பவங்களை அவன் சிறுவயதில் அடிக்கடி சந்தித்திருக்கிறான். திடீரென நள்ளிரவில் அவனுடைய தாயின் தீனமான அலறல் கேட்கும். விழித்தெழுந்து உடலும் உயிரும் நடுங்க இவன் நின்றிருப்பான். இவனுடைய தந்தை வெறி பிடித்தாற்போல் ஆவேசம் கொண்டு இவனுடைய தாயை முகத்திலும் உடலிலும், காலாலும் கையாலும் பாய்ந்து பாய்ந்து தாக்க, அவள் “ஐயோ பாவி சண்டாளா…” என்று அழுதுகொண்டே ஆக்ரோஷமாகத் திட்டுவாள். இவள் திட்டத் திட்ட அவர் அடிப்பார்…

அந்த நாட்கள் மிகக் குரூரமானவை. மறுநாள் ஒன்றுமே நடவாத மாதிரி அவர்கள் இருவரும் நடந்து கொள்ளுவது – அவள் அவருக்குப் பணிவிடை புரிவதும், அவர் அவளைப் பேர் சொல்லி அழைத்து விவகாரங்கள் பேசுவதும் – இவனுக்கு மிக ஆபாசமாக இருக்கும். இதெல்லாம் என்னவென்றே புரியாத அருவருப்பைத் தரும்.

பதினைந்து வயது வரைக்கும் இந்த வாழ்க்கையை அனுபவித்திருக்கிறான் அவன். அவர்களது சண்டையை விடவும் அந்தப் பெற்றோரின் சமாதானங்கள் அவன் மனசை மிகவும் அசிங்கப்படுத்தியிருக்கின்றன. அவன் தகப்பனாரை மனமார வெறுத்திருக்கிறான். ‘குடும்ப வாழ்க்கையும் தாம்பத்தியம் என்பதும் மிகவும் அருவருப்பானவை’ என்ற எண்ணம் இள வயதிலே அவனுக்கு ஏற்பட இந்த அனுபவங்கள் காரணமாயின போலும்.

இப்போது அவன் தகப்பனார் இல்லை. அவனுடைய விதவைத் தாய் வயோதிக காலத்தில் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தான் சாகுமுன் இவனுக்குக் கல்யாணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்ற தன் ஆசையை இவனிடம் தெரிவிக்கும் போதெல்லாம் அவளது வாழ்க்கையைச் சுட்டிக் காட்டித் தாயைப் பரிகாசம் செய்வான். அவளுக்கு அப்போது வருத்தமாகவும் கோபமாகவும் கூட இருக்கும். விட்டுக் கொடுக்காமல், ‘நான் வாழ்ந்ததற்கு என்ன குறை?’ என்று பெருமை பேசுவாள். கடைசியில் ‘ கலியாணம் பண்ணிக்க முடியாது’ என்று அவள் முகத்தில் அடித்துப் பேசிவிட்டு வந்துவிடுவான் நந்தகோபால்.

பட்டனத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு தனி வாழ்க்கைக்குப் பழகி இப்படியே முப்பது வயது கடத்திவிட்ட அவனுக்குக் கல்யாண ஆசையையும் குடும்பத்தைப் பற்றிய சுய கற்பனைகளையும் வளர்த்து அதற்குத் தயாராக்கியது கிரிஜாவின் உறவுதான். கிரிஜாவுக்கு முன்னால் அவனுக்கு அது மாதிரியான உறவு வேறு எந்தப் பெண்ணோடும் ஏற்பட்டிருந்ததில்லை. அவளுக்கு இவன் மிகவும் புதியவனாக இருந்தான். ஆனால், அவள் அப்படியல்ல என்று இவனுக்கு மாத்திரமல்லாமல் வேறு பலருக்கும் பிரசித்தமாகி இருந்தது. அவளும் அதையெல்லாம் மறைக்கக் கூடிய நிலையில் இல்லை. எனினும் இவனோடு இருந்த நாட்களில் அவள் மிகவும் உண்மையாகவும் அன்பாகவும், ஒரு பெண்ணின் உடனிருப்பும் உறவும் ஓர் ஆணுக்கு எவ்வளவு இன்பமானது, வசதியானது என்பதை உணர்த்துகின்ற முறையிலும் வாழ்ந்தாள். அந்த இரண்டு மாத காலம் மிக மேன்மையான இல்லறம் என்று இந்த நிமிஷம் – இவனை அவமதித்தும் புறக்கணித்தும் வாசற்படிக்கு வெளியே இந்த நள்ளிரவில் நிறுத்தி வைத்துவிட்டு இறுமாப்போடு படுத்துக் கொண்டிருக்கிறாளே, அவள் மீது பற்றிக்கொண்டு வருகிற கோபத்தில் – நினைத்துப் பெருமூச்சும் கண்ணீருமாய்ப் பரிதாபமாக மறுபடியும் உள்ளே திரும்பிப் பார்த்தான் நந்தகோபால்.

நிச்சயம் அவள் எழுந்திருக்கவோ சமாதானமுறவோ போவதில்லை. இந்த ஆறு மாத அனுபவத்தில் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அவனுக்குப் பழக்கமாகிப் போனதால் இதன் தொடக்கமும் இதன் போக்கும் இதன் முடிவும் அவனுக்கு ஒவ்வொரு தடவையும் முன் கூட்டியே தெரிகிறது. என்றாலும் இதனைத் தவிர்க்கத்தான் முடியவில்லை. பிறகு யோசித்துப் பார்க்கையில் அவனது அறிவுபூர்வமான எந்த நியாயத்துக்கும் இந்தச் சச்சரவுகள் ஒத்து வருவதில்லை. நாளுக்கு நாள் இந்த வாழ்க்கை அவமானகரமானதாகவும் துன்பம் மிகுவதாகவும் மாறிக்கொண்டே இருப்பதை எப்படித் தாங்குவது என்று புரியவில்லை.

உள்ளே மங்கிய விளக்கொளியில், கொடிகளில் கிடக்கும் துணிகளும், நிழலில் தெரிகிற சமையலறையினுள் பாத்திரங்களின் பளபளப்பில் அவை இறைந்து கிடக்கிற கோலமும் மிகச் சோகமாய் அவனுக்குத் தெரிந்தன.

ஒரே அறையும் அதைத் தொடர்ந்து கதவில்லாத ஒரு சுவரால் பிரிகிற சிறு சமையல்கட்டும் அதனுள்ளேயே அடங்கிய தொட்டி முற்றமாகிய பாத்ரூம் உள்ள அந்தப் போர்ஷனுக்கு நாற்பத்தைந்து ரூபாய் வாடகை. குடும்பச் செலவுக்கு மாதம் நூற்றைம்பது ரூபாய் ஆகிறது. நந்தகோபாலுக்கு சம்பளம் கிட்டத்தட்ட முந்நூறு ரூபாய். மனமொத்து வாழ்ந்தால் இந்த நெருக்கடி ஒரு துன்பமல்ல. ஆறேழு பேர் சேர்ந்து ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து எல்லா வசதிகளோடும் வாழ்ந்த அந்த ‘மெஸ்’ வாழ்க்கைக்கு இப்போது மனசு ஏங்க ஆரம்பிப்பதன் பரிதாபத்தை நினைத்து அவன் மனம் கசந்தான்.

ஒரு பெருமூச்சுடன் எழுந்தான். கிரிஜாவைப் போய்ப் பார்த்துவிட்டு இரவை அவளுடன் கழிப்பது மனதுக்கு ஆறுதல் தரும் என்று தோன்றியது. ‘வேறு எதற்காகவும் இல்லை’ என்ற நினைப்பில் இதைப் பற்றிய உறுத்தலை உதறி ‘ அவளோடு பேசிக்கொண்டிருப்பது எனக்கு நிம்மதியைத் தரும்’ என்கிற சமாதானத்தோடு புறப்பட்டான். உள்ளே போய் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டான். நைட்லாம்ப் எரிந்து கொண்டிருந்த மங்கிய வெளிச்சத்துடன் நாற்பது வோல்ட் விளக்கையும் போட்டவுடன் வெளிச்சம் கண்ணைக் கூசிற்று.

“ஏய்!…” என்று அவளை மெல்லத் தட்டினான். அவள் அசையவில்லை.

“இப்ப உன்னை கொஞ்சறதுக்கு எழுப்பலே; நான் வெளியே போறேன். கதவைத் தாப்பாப் போட்டுக்க” என்று அவள் புஜத்தைக் கொஞ்சம் அழுத்தி வலிக்கிற மாதிரிப் பிடித்து முரட்டுத்தனமாகத் திருப்பினான்.

அவள் எழுந்து உட்கார்ந்து அவனை வெறுப்புடன் முகம் சுளித்த எரிச்சலுடன் பார்த்தாள்.

இவ்வளவு நேரம் எழுந்திருக்காதவள், தான் போகிறோம் என்றதும் கதவைத் தாழிடத் தயாராய் எழுந்து உட்கார்ந்திருப்பது அவனுக்குக் கோபத்தை உண்டாக்கியது.

‘இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்’ என்று கேட்பதுதானே நியாயம்? ஆனால், அவள் கேட்கவில்லை. ‘போறதானால் தொலைய வேண்டியதுதானே… நான் நிம்மதியாகப் படுத்துக் கொள்ளுவேன்’ என்கிற மாதிரி அவள், அவன் சட்டையை மாட்டிக்கொண்டு நிற்பதைப் பொருட்படுத்தாமல் எழுந்து எரிச்சலுடன் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவன் கட்டிலுக்கடியில் குனிந்து செருப்பைத் தேடினான். கட்டிலின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிற அவளது சேலையின் நிழலோ காலின் நிழலோ மறைத்தது. தான் கட்டிலுக்கடியில் குனிந்து செருப்பைத் தேடும்போது அவள் இப்படி மறைத்துக் கொண்டு – தான் மறைக்கிற விஷயம் அவளுக்குத் தெரியாது என்றும் அவனுக்குத் தெரிந்தது – கட்டிலின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிற காரியம் அவமரியாதை என்று அவனுக்குத் தோன்றியது. அந்தக் கோபத்துடன் அவன் செருப்பைத் தேடி எடுத்துக் கொண்டு நிமிரும்போது கட்டிலின் விளிம்பில் தலையை இடித்துக் கொண்டான். கண்ணில் தண்ணீர் வருகிற மாதிரி வலித்தது. அவள் கொஞ்சம்கூடப் பதட்டம் காட்டாதிருந்தாள். இதே மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் அவளுக்கு இப்படித் தலையில் ஓர் இடியோ, விரலில் ஒரு காயமோ ஏற்பட்டால் தன்னால் பதட்டமுறாமலிருக்க முடியாதே என்று எண்ணிய நினைப்பில் அவன் தன்னிரக்கத்தோடு முகம் திருப்பிக் காலில் செருப்பை மாட்டிக்கொண்டு புறப்பட்டான்.

திறந்த கதவை மூடாமல் நிதானமாக அவன் முற்றத்தில் நடந்து தாழ்வாரத்தில் தூணோரமாக நிறுத்தியிருந்த சைக்கிளின் ‘லாக்’கைத் திறக்கையில் இருட்டில் நிற்கிற தன்னை அவள் பார்க்க முடியாது என்பதால் அவள் வெளியே தலை நீட்டிப் பார்க்கிறாளா என்று கவனித்தான். அவன் மனம் சோர்வு கொள்ளத் தக்க வண்ணம் அவள் கதவைப் பட்டென்று மூடித் தாழிட்டுக் கொண்டாள். அவள் வெளியே தலை நீட்டிப் பார்க்காதது மிகவும் வருத்தம் தந்தது இவனுக்கு. அறைக்குள் எரிந்த நாற்பது வோல்ட் வெளிச்சம் அணைந்து நைட்லாம்பின் வெளிச்சம் வெண்டிலேட்டர் வழியே தெரிந்தது.

நந்தகோபால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தான். வாசற்புறத்தில் முறைவாசல் செய்கிற கிழவி தன் படுக்கையில் உட்கார்ந்து இருமிக்கொண்டிருந்தவள், அவன் வெளியே சென்றதும், ‘திரும்பி எப்போ வருவே அப்பா’ என்று கேட்டு, இவன் ‘இல்லை’ என்று சொன்னதும் பிறகு கதவைத் தாழிட்டாள். வெளியில் வந்து நின்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டபோது, தெரு விளக்குகள் திடீரென அணைந்தது. டைனமோ வெளிச்சம் பளீரென்று வழிகாட்ட அவன் சைக்கிளில் ஏறி மிதித்தான்.

—···—···—···—···

கிரிஜாவின் வீடு மேற்கு மாம்பலத்தில் குண்டும் குழியும் சாக்கடையும் எருமை மாடும் நிறைந்த ஒரு தெருவில் இருக்கிறது. தெருப்புறம் மாடிப் படியுள்ள ஒரு வீட்டின் மேல் போர்ஷனில் அவள் சுதந்திரமாக வாழ்கிறாள். அவளுக்குத் தாய் இருக்கிறாள். அவள் எங்கோ ஒரு பணக்காரர் வீட்டில் ஆயாவாக வேலை செய்கிறாள். எப்போதாவது வந்து மகளைப் பார்த்துவிட்டு அசைவச் சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போவாள். அவள் வேலை செய்கிற வீட்டில் அது கிடைக்காதாம். கிரிஜாவுக்கு இருபத்தைந்து வயதான தம்பி ஒருவன் உண்டு. அவனுக்கு ஏதோ ஒரு சினிமாக் கம்பெனியில் வேலை. அவனும் எப்போதாவது தான் வருவான். அவள் பத்தாவதுவரை படித்திருக்கிறாள். நிரந்தரமாக இல்லாவிட்டாலும் டெம்ப்ரரியாகவே அவள் ஒவ்வோரிடமாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். முப்பது வயதாகிறது. இப்படியரு நிராதரவான நிலையற்ற வாழ்க்கையிலும் அவள் நிறைவோடும் மலர்ச்சியோடும் இருக்கிறாள்.

நந்த கோபால் வேலை செய்கிற காஸ்மெடிக்ஸ் கம்பெனியார் எக்ஸிபிஷனில் ஒரு ஸ்டால் போட்டிருந்தார்கள். அங்கு அவள் வேலை செய்து கொண்டிருந்தபோது தான் போன டிசம்பரில் அவளை இவன் சந்திக்க நேர்ந்தது. அவளைப் பார்த்தவுடன் அவளை இதற்கு முன்பு எங்கோ பார்த்த மாதிரியானதொரு இணக்கம் அவள் முகத்தில் இவனுக்குத் தோன்றியது. இந்த ஸ்டாலில் விற்பனைப் பணிப் பெண்ணாக வேலை செய்வதற்காகக் கொண்ட முகபாவமோ அது என்றுதான் முதலில் அவன் நினைத்தான். பிறகுதான் தெரிந்தது; அவன் டெஸ்பாட்சிங் கிளார்க்காக வெலை செய்யும் அந்த காஸ்மெடிக்ஸ் கம்பெனியில் நாள்தோறும் பார்சல் பார்சல்களாக அனுப்பப்படுகிற அந்தப் பவுடர் டின்களின் மேல் இருக்கின்ற உருவமே அவளுடையதுதான் என்று. இரண்டு மாத காலம் மாலை நேரத்தில் மட்டும் ‘பார்ட் டய’ மாக அவனும் எக்ஸிபிஷனிலே வேலை செய்த காலத்தில் அவளுடன் ஏற்பட்ட நட்பின்போது அவளைப் பற்றி அவன் தெரிந்து கொண்டான். ஒரு கெளரவமான நிரந்தர உத்தியோகத்துக்காக அவள் ஒவ்வொருவரிடமும் சிபாரிசு வேண்டியபோது இவன் அவளுக்காகப் பரிதாபப்பட்டான். ஆனாலும் அவளுக்கு உதவும் காரியம் தனது சக்திக்கு மீறியது என்று அவளைப் பற்றிய கவலையிலிருந்து ஒதுங்கியே நின்றான்.

அவள் எல்லோருடனும் கலகலவென்று பேசுவாள். இவனை அவள்தான் முதலில் டீ சாப்பிட அழைத்தாள். இவனோடு பேச்சுக் கொடுத்தாள். இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பும்போது சில நாட்களில் அந்த ஸேல்ஸ் மானேஜர் தான் காரில் போகும் வழியில் இவளை இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச் செல்வார். அவரைப் பற்றி ஆபிசில் ஒரு மாதிரி பேசிக் கொள்வார்கள். அவருடன் அவள் போவது இவனுக்கு என்னமோ மாதிரி இருக்கும். ஒருநாள் அதுபோல் மானேஜர் தன்னுடன் அவளை அழைத்தபோது அவள் நந்தகோபாலைக் காட்டி, ” மிஸ்டர் நந்தகோபால் எங்க வீட்டுக்குப் போற வழியிலேதான் சார் இருக்காரு. நாங்க பேசிக்கிட்டே போயிடுவோம் சார்… என்னாங்கோ மிஸ்டர்?” என்று இவனைப் பார்த்துச் சிரித்தபோது இவனும் சம்மதித்தான்.

அவள் பேசுவது இவனுக்கு வேடிக்கையாக இருக்கும். ‘என்னாங்கோ, சரீங்கோ… ஆமாங்கோ..’ என்று அவள் கொஞ்சம் நீட்டிப் பேசுவாள். அவள் வீட்டில் பேசுகிற பாஷை தெலுங்கு என்று பின்னால் தெரிந்தது இவனுக்கு. படித்ததெல்லாம் தமிழ்தான். தெலுங்கு என்றால், மெட்ராஸ் தமிழ் மாதிரி மெட்ராஸ் தெலுங்காம்.

– ‘அவள் எப்படிச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள்!’ என்று நினைத்துக் கொண்டு சைக்கிளை வேகமாய் மிதித்தான் நந்தகோபால்.

அவள் நிஜமாகவே சந்தோஷமாக இருக்கிறாள் என்று, அவளோடு பழகிய பிறகுதான் இவன் தெரிந்து கொண்டான். எக்ஸிபிஷன் ஸ்டால் வேலை முடிந்த பிறகு டெலிபோன் சுத்தம் செய்து அதில் ஸென்ட் போடுகிற ஒரு கம்பெனியில் வேலைக்கமர்ந்து டெலிபோன் இருக்கிற வீடுகளிலும் கம்பெனிகளிலும் ஏறி இறங்கி வருகையில் ஒருநாள் தெருவில் அவளை இவன் பார்த்தான். இப்படி ஏதாவதொரு கெளரவமான உத்தியோகம் செய்து அவள் சம்பாதித்தாள். வயது முப்பது ஆவதால் இதற்கிடையில் நம்பிக்கை அல்லது தேவை காரணமாகச் சில ஆண்களோடு அவளுக்கு உறவு நேர்ந்திருக்கிறது என்றாலும் அதை ஒரு பிழைப்பாகக் கொள்ளும் இழி மனம் அவளுக்கு இல்லை என்று அவன் அறிந்தான்.

எப்போதாவது இவன் அவளைத் தேடிக் கொண்டு போவான். இருவரும் பேசிக்கொண்டு இருப்பார்கள். இவனுக்கு அவள் காபி மட்டும் தருவாள். அவள் சினிமாப் பத்திரிகைகள் எல்லாம் வாங்குவாள். கையில் காசு இருக்கும் போதெல்லாம் சினிமாவுக்குப் போவாள். நேரம் இருக்கும்போதெல்லாம் சினிமாக்களைப் பற்றியும் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் ரொம்பத் தெரிந்தவள் மாதிரி சுவாரஸ்யமாக அரட்டை அடிப்பாள். சினிமா கம்பெனியில் வேலை செய்கிற அவளுடைய தம்பி ‘ நீ என்ன வேணும்னாலும் செய்… ஆனா சினிமாவிலே சான்ஸீ குடுக்கறேன்னு எவனாவது சொன்னா – அத்தெ நம்பிக்கினு மட்டும் போயிடாதே… நான் அங்கே இருக்கறதுனாலே என் மானத்தெக் காப்பாத்தறதுக்கோசரம் அந்தப் பக்கம் வராதே’ என்று எப்போதோ சொல்லி வைத்திருந்ததைத் தான் உறுதியாகக் கடைபிடிப்பதை இவனிடம் அவள் ஒரு முறை கூறினாள்.

– அவளோடு அவன் இரண்டு மாதம் வாழ்ந்திருக்கிறான். அதை நினைக்கையில் இப்போதும் மனசுக்குச் சுகமாக இருக்கிறது.

அருமையாக நேர்ந்த அந்த வாழ்க்கையை விடுத்து வேறு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட குற்றத்துக்கான தண்டனைதானோ இப்போது தான் அனுபவிக்கிற வேதனைகளும் அவமானங்களும் என்று எண்ணியவாறே அவன் சைக்கிளை மிதித்தான். இன்னும் ஒரு மைலாவது இருக்கும்.

தொடர்ந்து ஒரு வேலையும் கிடைக்காமல் இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நந்தகோபால் வேலை செய்யும் இடத்துக்கு இவனைத் தேடி வந்தாள் கிரிஜா. ஆபீஸ் முடிகிற நேரமானதால் இவளைக் கொஞ்ச நேரம் காத்திருக்கச் செய்த பின் இவளுடனே அவனும் வெளியில் வந்தான். இருவரும் ஓட்டலுக்குப் போயினர். அவள் மிகவும் களைத்திருந்தாள். இவன் இரண்டு காபிதான் சொல்ல இருந்தான். அதை எப்படியோ புரிந்து கொண்டு அவள் சொன்னாள்: “எனக்கு வெறும் காபி மட்டும் போதாதுங்கோ… எதனாச்சும் சாப்பிடணுங்கோ”

அவள் மனசின் வெண்மை இவனைக் கனிய வைத்தது. அன்று அவளை மிகுந்த அன்போடு இவன் உபசரித்தான். பகல் முழுதும் அவள் சாப்பிடாதிருந்தாள் என்றும் இப்போது வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறாள் என்றும் தெரிந்தபோது அவளுக்காக மனம் வருந்தினான். அவள் அவனிடம் ஏதாவது வேலைக்குச் சிபாரிசு செய்யச் சொன்னாள். நம்பிக்கை இல்லாமலே அவன் அவளுக்கு வாக்குறுதி தந்தான். மாலையில் அவளுடன் அவனும் அவள் வீடுவரைச் சென்று சமையலுக்கான பொருள்களைக் கூட இருந்து வாங்கி, அதற்கு இவன் பணம் கொடுத்தான். அன்றிரவு இவனை இவள் தன்னுடன் வீட்டில் சாப்பிடச் சொன்னாள்.

அவள் சமையல் செய்கிற அழகைப் பக்கத்திலிருந்து அவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவு அங்கு அவன் சாப்பிட்டான். அவனுக்குத் தன் தாயின் பரிவும் அவள் கைச் சமையலின் ருசியும் நினைவுக்கு வந்தது. அவள் தன் சமையல் அவன் ருசிக்கு ஏற்கிறதா என்று மிகவும் பக்தி சிரத்தையுடன் வினவி வினவிப் பரிமாறினாள்.

அன்றிரவு இவன் அங்கே தங்க நேர்ந்தது. அந்த இரவில் தான் அவள் தன்னைப் பற்றியும் தன் தாய் தம்பி வாழ்க்கை நிலைமைகளைப் பற்றியெல்லாம் இவனோடு மனம் விட்டுப் பேசினாள். திடீரென்று தோன்றிய ஒரு யோசனையை அவனிடம் அவள் வெளியிட்டாள். அவள் சொன்னாள்: “நீங்க மெஸ்ஸீக்குக் குடுக்கிற பணத்தை இங்கே கொடுத்தால் உங்களுக்கும் சமைச்சுப் போட்டு நானும் சாப்பிடுவேன்… என்னாங்கோ- உங்களுக்கு செளகரியப்படுமாங்கோ?…”

அவன் வெகுநேரம் யோசித்த பிறகு சம்மதித்தான். இதுவரை அவர்களிடையே வெறும் நட்பாக இருந்த உறவு அன்று அவனுக்கொரு புதிய அனுபவமாயிற்று. அது வாழ்க்கையிலேயே அவனுக்குப் புதிது. அதே மாதிரி ஒரு புதிய மனிதனைச் சந்திப்பது அவளுக்கும் முதலும் புதிதுமான அனுபவம்.

தான் எதனாலோ வெறுத்தும் பயந்தும் ஒதுக்கி வைத்த குடும்ப வாழ்க்கை என்பது, ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்தல் என்பது எவ்வளவு சுகமான, சுவையான, அர்த்தமுள்ள அனுபவம் என்பதை அவன் கண்டு மயங்கினான்.

அந்த வீடும் அந்த வாழ்க்கையும் மிக மிக எளிமையானது. மாடியின்மீது கூரை போட்ட ஒரே அறையில் தான் சமையல், படுக்கை எல்லாம். குளிப்பதற்குக் கீழே வரவேண்டும். குண்டும் குழியுமான தரையில் பாய் விரித்துப் படுக்க வேண்டும். அவளுடைய அம்மாவோ, தம்பியோ – அவர்கள் பகலில்தான் வருவார்கள் – அப்போது அங்கே இருக்க நேர்ந்தால் இப்போதுதான் வந்ததுபோல் நடிக்க வேண்டும். இதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தான் கல்யாணமே வேண்டாம் என்று பயந்திருந்த காரணங்களை அவளிடம் சொன்னபோது அவள் சிரித்தாள். “உங்க நைனா, அம்மாவைக் கொடுமைப்படுத்தினாருன்னா பயந்துகினு இருந்தீங்கோ? ஒரு பொண்ணுக்கு இந்த பயம் வந்தா நாயம்… ஆம்பளைக்கு இதிலே என்னாங்கோ பயம்?… அவரை மாதிரி நீங்க உங்க பெண்சாதியே அடிக்காம இருந்தா சரியாப்பூடுது…”

அவன் அவளிடம் கல்யாணத்தைப் பற்றியும், ஊரிலிருந்து அம்மா எழுதுகிற கடிதங்களைப் பற்றியும் பேசினான். இருவரும் ஒன்றாக வாழ்ந்துகொண்டு தான் இன்னொருத்தியைக் கல்யாணம் செய்து கொள்கிற விஷயமாக அவன் அவளிடம் பேசுவதும், அதற்கு உடன்பாடாக அவளும் அவனை வற்புறுத்துவதும் முரண்பாடான விஷயமாகவோ பொருத்தமற்றதாகவோ இருவருக்குமே தொன்றவில்லை. தனித்தனியாக இருக்கிற நேரத்தில் மனசின் ஆழத்தில் அந்த முரண்பாடு தோன்றியதன் காரணமாகவே அவர்கள் அது குறித்து மிகச் சாதாரணமாகவும் அதிகமாகவும் பேசினார்கள் போலும்.

கடைசியில் ஒருநாள் நந்தகோபால் தன் தாய் வற்புறுத்திச் சொல்கிற, தனது சொந்தத்துப் பெண்ணும், பத்தாவது படித்தவளும், மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டவளூம், இதற்கு முன்னால் இவனே பார்த்து அழகிதான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டவளுமான வத்ஸலாவைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்துக் கடிதம் எழுதியபின் அந்தச் செய்தியை கிரிஜாவிடமும் கூறினான்.

அவள் மனத்தினுள் அவளே உணராத வண்ணம் ரகசியமான ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தாலும் மனம் நிறைந்த சந்தோஷத்துடனும் சிரிப்புடனும் அவனைப் பாராட்டினாள். ‘புது மாப்பிள்ளை புது மாப்பிள்ளை’ என்று பரிகாசம் செய்தாள். என்னென்னவோ புத்திமதிகள் கூறினாள். அவனைவிட அனுபவமும் முதிர்ச்சியும் உடையவள் என்பதால் அவனுக்கு நிறையவும் கற்றுத் தந்தாள். அதற்காக அவன் அவளிடம் மிகுந்த நன்றி பாராட்டினான். பெண் என்றாலே பயந்தும் வெறுத்தும் ஓடிய தன்னைக் கல்யாணத்துக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் தயார்ப்படுத்திய பொறுப்பு அவளுடையதுதான் என்று அவன் நம்பியது மாத்திரமல்லாமல் அவளிடமே அதைத் தெரிவித்தான். அப்போதெல்லாம் என்னவென்று விளங்காத ஓர் உணர்ச்சியுடன் வாய்க்குள் அவள் சிரித்துக் கொள்வாள்.

அவளோடு சேர்ந்து இவன் இருந்த அந்த இரண்டு மாத காலத்தில், பக்கத்திலுள்ள ஒரு நர்சரி பள்ளியில் ‘அன்ட்ரெயின்ட்’ டீச்சராக, ஒரு டெம்பரரி வேலையும் அவள் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். மாலை நேரங்களில் தையல் கிளாசுக்குப் போனாள். ஏற்கனவே அவளுக்கு டெய்லரிங் கொஞ்சம் தெரியுமாம்.

அவனுடைய கல்யாணத்துக்குத் தேதி குறிக்கும்வரை அவன் அவளோடுதான் இருந்தான். பின்னர் அவளேதான் கூறினாள். “நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்கோ. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கிறது கல்யாணத்துக்கு. நீங்க உங்க மெஸ்ஸீக்கே போயிடுங்கோ. உடம்பெ நல்லாப் பாத்துக்குங்கோ… நல்லாச் சாப்பிடுங்கோ… கல்யாணத்துக்கு அப்பாலே ஒரு ·பிரண்டு மாதிரி வந்து பாருங்கோ. எனக்குச் சந்தோஷமா இருக்கும்.”

– அப்போது அவள் கண் கலங்கியதை எண்ணி இப்போது மனம் பொருமிய நந்தகோபால் அவள் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு மாடியை அண்ணாந்து பார்த்தான். மாடி மீதுள்ள கூரையின் சிறிய ஓட்டைகளினூடே உள்ளே விளக்கு எரிவது தெரிந்தது. தீக்குச்சியைக் கிழித்து வாட்சில் மணி பார்த்தான். பன்னிரண்டு.

திடீரென்று தன்னைப் பார்க்கும் அவளுடைய ஆச்சரியத்தை எண்ணிக்கொண்டு, அவளைப் பார்க்கப் போகிற ஆவலில் நெஞ்சு படபடக்க அவன் படியேறினான்.

மேல் படியிலிருந்து அவன் தலை தெரியும்போது காலடிச் சத்தம் கேட்டுத் தையல் மிஷின் அருகே ஸ்டூலில் உட்கார்ந்து, எதையோ ஊசியால் பிரித்துக் கொண்டிருந்த கிரிஜா, “யாரது?” என்ற அதட்டல் குரலுடன் எழுந்தாள்.

“நான் தான்” என்று இவன் பேரைச் சொல்லுவதற்கு முன் அவள் சந்தோஷம் தாங்க முடியாமல் “ஹை! நீங்களா! வாங்கோ” என்று வரவேற்றாள். அவனைத் தழுவிக் கொள்ளப் பரபரத்த கைகளின் விரல்களைத் திருகித் திருகி நெட்டி முறித்துக் கொண்டே, “என்ன இந்த நேரத்திலே? உக்காருங்கோ. சாப்பாடெல்லாம் ஆச்சா?” என்று பலவாறு கேட்டுக்கொண்டே பாயை எடுத்து விரித்து உட்காரச் சொன்னாள்.

“திடீர்னு உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சு – வந்தேன்” என்றான். அவள் கலவரமடைந்தாள். அது அவனுக்குத் தெரியாத வண்ணம் சமாளித்துச் சிரித்தாள். “தாகத்துக்குச் சாப்பிடுங்கோ” என்று தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.

இருவருக்குமே திகைப்பும் படபடப்பும் அடங்கச் சற்று நேரம் பிடித்தது. அவன் அந்தப் புதிய தையல் மிஷினைப் பார்த்து அதைப் பற்றி விசாரித்தான். அவள் தான் டெய்லரிங் பாஸ் பண்ணியதையும், இன்ஸ்டால்மெண்டில் இதை வாங்கி இருப்பதையும், இதில் நிறையச் சம்பாதிப்பதையும், இந்த மாதம் மூணு பவுனில் ஒரு செயின் வாங்கிப் போட்டுக் கொண்டதையும் காட்டி – “ஸ்கூல் வேலையை விட்டுடலீங்கோ” என்று கூறித் தனது நல்ல நிலைமையை விளக்கி அவனைச் சந்தோஷப்படுத்தினாள். அவன் மனசுக்கு அவள் கூறியவை மிகவும் இதமாக இருந்தன. அவன் ரொம்ப மகிழ்ச்சியடைந்தான்.

“நீங்க எப்படி இருக்கிறீங்கோ?… உங்க ‘வய்ப்’ நல்லா இருக்காங்களாங்கோ?” என்று குதூகலமாய் அவள் விசாரித்தபோது அவன் பெருமூச்சுடன் அவளைப் பார்த்து வருத்தமாகச் சிரித்தான்.

அவள் தையல் மிஷின் மீது குவிந்து கிடந்த தைத்த, தைக்க வேண்டிய, வெட்டிய, வெட்ட வேண்டிய புதுத்துணிகளையெல்லாம் எடுத்துப் பிரித்து ஒவ்வொன்றாக ஒரு பெட்டியினுள் மடித்து வைத்து இவனோடு பேசிக் கொண்டிருப்பதற்காக வேலைகளை ‘ஏறக் கட்டி’க் கொண்டிருந்தாள். அவன் ஏதோ வருத்தத்தில் இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது. அதற்காகத்தான் அவன் சந்தோஷப்படத்தக்க விஷயங்களை முந்திக்கொண்டு அவள் சொன்னாள். இதனை புத்திசாலித்தனத்தால் செய்ய வில்லை; நல்லியல்பால் செய்தாள். எனவே இப்போது அவன் வருத்தம் அறிவுக்குப் புரிய, தானும் வருந்தினாள்.

அவன், ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நெஞ்சு நிறையப் புகையிழுத்துக் கூரையை நோக்கி நீளமாக ஊதிவிட்டான். சிகரெட்டின் சாம்பலை மிகக் கவனமாக விரலிடுக்கில் உருட்டி தட்டிக்கொண்டே அவள் முகத்தைப் பாராமல் வருத்தம் தோய்ந்த குரலின் சொன்னான்: “நான் உனக்குச் செஞ்ச பாவத்துக்கு இப்ப அனுபவிக்கிறேன். நான் உன்னையே கல்யாணம் பண்ணிக் கிட்டிருக்கலாம். ஓ! இப்ப என்ன பண்றது?” என்று புலம்பிக்கொண்டிருந்தவனின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டாள் கிரிஜா.

கல்யாணம் முடிந்து தன்னோடு புறப்பட்டபோது அவள் ஆரம்பித்த அழுகையை இன்னும் நிறுத்தவில்லை என்றும், அவளுக்குத் தன்னோடு வாழ்வதில் சந்தோஷமில்லை என்றும், தன்னை அவள் அவமதிப்பதையும், இன்று கூடத் தலையில் அடித்துக் கொண்டதையும் அவன் வாய் ஓயாமல் வத்ஸலாவைப் பற்றிப் பேசித் துயரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தான்.

தையல் மிஷினுக்குப் பக்கத்திலிருந்து எண்ணெய் போடுகிற ‘ஆயில் கேனை’ எடுத்துக் கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையேயுள்ள புண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டே, அவன் புலம்புவதையெல்லாம் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் கிரிஜா.

“பாவங்கோ அது. அறியாப் பொண்ணு தானேங்கோ?” என்று அவள் சொன்னதைக் கேட்டு அவன் ஒன்றும் புரியாமல் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

“உங்களைக் கல்யாணம் பண்ணிக்கினதுனாலேயே உங்களுக்குச் சமமா ஆயிடுவாங்களாங்கோ அவுங்க?… அப்பா அம்மாவுக்கு ரொம்பச் செல்லப் பொண்ணுன்னு நீங்க தானேங்கோ சொல்லியிருக்கீங்கோ? எல்லாரையும் விட்டுட்டு வேற ஒரு ஊரிலே தனியா உங்களேட வந்து வாழறப்ப அந்தக் கொழந்தை மனசு எப்படிங்கோ இருக்கும்? அதெப் புரிஞ்சு நீங்கதான் – அட்ஜஸ்ட் பண்ணி நடக்கணும். நீங்க ‘டிரெய்ன்ட்’ இல்லீங்களா? ஒரு ஆம்பிளைங்கறதே அவுங்களுக்குப் புதுசு இல்லீங்களா? பயமா இருக்கும்ங்கோ; அருவருப்பாகூட இருக்கும்ங்கோ… நான் உங்ககிட்ட அப்படியெல்லாம் இருந்தேன்னா அதுக்குக் காரணம் என்னாங்கோ? நான் ‘எக்ஸ்பீரியன்ஸ்ட்’ இல்லீங்களா? யாருங்கோ ‘வய்·பா’ இருக்கிறதுக்கு டிரெய்ன்ட் ஹாண்ட் கேக்கறாங்கோ? இப்ப சொல்றீங்களே – என்னையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு – அப்ப ஏங்க அது தோணலே? நான் ஏற்கனவே ‘டிரெய்ன்ட்’ங்கற ‘டிஸ்குவாலி·பிகேஷன்’ தாங்கோ அதுக்குக் காரணம்! அதனாலே, உங்க வய்·பை விட நீங்க அனுபவஸ்தர்ங்கிறதை நெனைப்பிலே வெச்சிக்கணும். அவுங்க கொழந்தைன்னு புரிஞ்சுக்கணும். நான் உங்ககிட்டே இருந்த மாதிரி நீங்க அவுங்ககிட்டே இருக்கணும். அப்படித்தான் போகப் போக எல்லாம் சரியாப் போயிடுங்கோ…” என்று அவள் எல்லாவற்றையும் லேசாக்கி விட்டதை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான். இவளிடம் வரவேண்டுமென்று தான் நினைத்தது எவ்வளவு சரியானது என்று எண்ணினான்.

அவன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த – கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற – காரியத்தில் மறுபடியும் முனைந்தாள்.

“என்ன காலிலே?” என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன்.

“போன வாரம் புதுசா செருப்பு வாங்கினேன். கடிச்சிடுச்சுங்கோ. மிஷின் தைக்கறதிலே விரல் அசையறதனாலே சீக்கிரம் ஆற மாட்டேங்குது” என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்: “பார்த்தீங்களாங்கோ… செருப்புக்கூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ… அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களாங்கோ?”

அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுவிட்டான்.

(எழுதப்பட்ட காலம்: 1971)
நன்றி: குருபீடம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் – ஏழாம் பதிப்பு: 1995
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 1 

அக்ரஹாரத்துப் பூனை

எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத்தானிருக்க வேண்டும்.   முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அங்கே, அந்தத் தெருவில் ஓர் பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிருகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே!

நான் பார்த்த ஊரும் – ‘இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது’ என்று உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப் போன அந்த அக்ரஹாரத்து வீடுகளூம், ‘இவர்கள் என்றைக்கும் புதுமையுற மாட்டார்கள்’ என்கிற மாதிரி தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும், அவர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதிலே ஒரு அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது.

நான் இப்போது ரொம்பவும் வளர்ந்து விட்டேன்; ரொம்பவும் விஷயங்கள் தெரிந்து கொண்டு விட்டேன். என்னிடமிருந்த குறும்புத்தனங்கள் எவ்வளவோ நீங்கி விட்டன. ஆனாலும் கற்பனையாக இத்தனை மைல்களூக்கப்பாலிருந்து அந்த ஊரின் தெருவுக்குள் பிரவேசிக்கும் போது – கற்பனையால் தூரத்தை மட்டும்தான் கடக்க முடியுமா? – காலத்தையும் கடந்து நான் ஒரு பத்து வயதுச் சிறுவனாகவே நுழைகிறேன்.

அந்தக் குளத்தங்கரை ஓரமாக நான் வரும்போது, எனது பிரசன்னத்தைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்கள் குளித்து கொண்டிருக்கும்போது, குளக்கரைப் படியிலே நான் சற்று உட்கார்ந்து கொள்கிறேன். அங்கு சுகமாகக் காற்று வரும். குளத்திலே தண்ணீருக்கு மேல் ஓர் அடி உயரத்துக்கு மீன்கள் துள்ளிக் குதிக்கும் – கூழாங் கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாமே – எங்கெங்கே பரந்து என்ன வாரிக் கட்டிக் கொண்டோம்?

வெங்கிட்டு, உத்தண்டம், சுந்தரம், தண்டபாணி எல்லாரும் பெண்கள் படித்துறைக்கும் ஆண்கள் படித்துறைக்குமிடையே உள்ள கட்டைச் சுவரின் மீது வரிசையாக வந்து நின்று, ஒவ்வொருவராக ‘தொபுக்’ ‘தொபுக்’ என்று குதித்த பின்னர், ஈரம் சொட்டச் சொட்ட ஒரு ‘ரிப்பன்’ கோவணத்தை இழுத்துச் செருகிக் கொண்டு மறூபடியும் சுவரின் மீது ஏறி வந்து வரிசை அமைக்கின்றனர்.

நான் எப்போதுமே தனி. என்னை அவர்கள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். நான் துஷ்டனாம்.

நான் அந்தச் சிறுவர்களுடன் சேராமல் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பெரியவர்கள் என்னை உதாரணம் காட்டிப் பேசுவார்கள். நான் விஷமம் செய்யாமல் ‘தேமே’னென்றிருக்கிறேனாம். நான் அடக்கமான பதிவிசான பையனாம்…. ‘சீ, பாவம்டா! அவனையும் சேத்துண்டு வெளையாடுங்களேன். போனா போறது; நீ வாடா அம்பி. அவா உன்னை சேத்துண்டு வெளையாடலேன்னா ஒண்ணும் கொறைஞ்சு போயிட மாட்டே… நீ வாடா, நான் உனக்கு பட்சணம் தர்றேன்… காப்பிப் பொடி அரைக்கலாம் வரயா?…’ என்றெல்லாம் என் மீது அன்பைச் சொரிகின்ற பெரியவர்களின் அரவணைப்பு எனக்கு மனசுக்கு இதமாக வெது வெது என்றிருக்கும். நான் அவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்துக் கொடுக்கிறதிலிருந்து சில நேரங்களில் கால் அமுக்கி விடுவது வரை எல்லாக் காரியங்களும் செய்வேன். என் அம்மா சொன்னால் மட்டும் கேட்க மாட்டேன். ‘போ! போ!’ என்று ஓடுவேன்.

எனக்குப் பத்து வயசாகறதுக்குள்ளேயே என் அம்மாவுக்கு ஐந்து கொழந்தைகள். தாயின் அன்போ அரவணைப்போ எனக்கு நினைவு கூட இல்லை.

என் அம்மா என்னைக் கூப்பிடற பேரே ‘ஏ! கடன்காரா’ தான். ஊருக்கு, தெருவுக்கு, மற்றவர்களுக்குப் பதிவிசாகத் ‘தேமே’னென்று தோற்றமளிக்கிற நான் வீட்டில் அவ்வளவு விஷமங்கள் செய்வேன். என்ன விஷமம்? ஏதாவது ஒரு குழந்தை ஓடி வரும்போது ‘தேமே’னென்று உட்கார்ந்திருக்கும் நான் ‘தேமே’னென்று குறுக்கே காலை நீட்டுவேன்… கீழே விழுந்து ‘ஓ’ வென்று அழும் குழந்தைக்குச் சில சமயங்களில் மோவாயிலிருந்தோ பல்லிலிருந்தோ ரத்தம் ஒழுகும். நான் ‘தேமே’னென்று உட்கார்ந்திருப்பேன். அந்தச் சனிகள் பேசத் தெரியாவிட்டாலும் அழுது கொண்டே, கையை நீட்டிச் சாடை காட்டி, தான் விழுந்ததுக்கு நான் தான் காரணம் என்று எப்படியோ சொல்லிக் காட்டிக் கொடுத்து விடும்கள்!

“கடன்காரா! செய்யறதையும் செய்துட்டுப் பூனை மாதிரி உக்காந்திருக்கியா?” என்று அம்மா வந்து முதுகில் அறைவாள். அறைந்து விட்டுக் “கையெல்லாம் எரியறது… எருமை மாடே!” என்று நொந்து கொண்டு விரட்டுவாள்.

“ஏண்டி அவனை அடிக்கறே! பாவம், அவன் ‘தேமே’ன்னு தானே இருக்கான்” என்று யாராவது அடுத்த வீட்டு – எதிர் வீட்டு மாமி வந்து – அவள் வந்த பிறகு அழ ஆரம்பித்த என்னைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போவார்கள். பட்சணம் கிடைத்த பிறகு நான் சமாதானம் அடைவேன். ஆனாலும் அங்கேயும் ‘தேமே’னென்று இருந்து கொண்டே ஏதாவது செய்து விடுவேன். எப்படியோ பழியிலிருந்து மட்டும் தப்பித்துக் கொள்வேன்… காப்பிப் பொடி அரைக்கிற மிஷின்லே மண்ணைக் கொட்டி அரைக்கிறது… திடீர்னு “மாமி… இங்கே வந்து பாருங்கோ. யாரோ மிஷின்லே மண்ணெப் போட்டு அரைச்சிருக்கா”ன்னு கத்துவேன்.

“வேற யாரு? எங்காத்துக் கடன்காரனாத்தான் இருக்கும்” என்று அவர்கள் வீட்டுக் ‘கடன்கார’னைத் தேடிப் பிடித்து நாலறை வாங்கி வைத்துப் பார்த்தால்தான் ஒரு சந்தோஷம்; ஒரு நிம்மதி.

என் அம்மா மட்டும் என் மேல் அனுதாபம் காட்டுகிற மாமிகளை எச்சரித்துக் கொண்டே இருப்பாள்: “அவனை நம்பாதீங்கோ… பார்த்தா ‘மொசு மொசு’ன்னு பூனை மாதிரி இருந்துண்டு உடம்பே வெஷம்… என்னமோ சொல்லுவாளே, பூனை செய்யறதெல்லாம் வெஷமம்… அடிச்சா பாவம்னு – அந்த மாதிரி…”

அதைக் கேட்டு “ஏண்டா, அப்படியா?” என்று அந்த மாமி என்னைப் பார்ப்பாள். நான் ‘தேமே’னென்று அவளைப் பார்ப்பேன்…

“சீ, போடி! என்னத்துக்குக் கொழந்தையெ இப்படிக் கரிச்சுக் கொட்டறே! நீ வாடா…” என்கிற அந்த அணைப்பும் அன்பும் எவ்வளவு இதமாக, சுகமாக இருக்கும்! ஆனால் அந்த அனுதாபம் காட்டுகிற அவர்களுக்குக் கூட நான் உண்மையாக, வெள்ளையாக இல்லை என்பது எனக்கல்லவா தெரியும்!

சரி! நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்! அந்த அக்ரஹாரத்துப் பூனையெப் பத்தி சொல்ல வந்து – அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியும் என்னைப் பத்தியும்னா சொல்லிண்டு இருக்கேன்! – இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னே பத்து வயசு வரைக்கும் வாழ்ந்திருந்த ஒரு கிராமத்தையும் ஒரு அக்ரஹாரத்தையும் அதிலே வாழ்ந்த மனுஷாளையும் பத்தி இன்னும் எவ்வளவு நாளைக்கி வேணும்னாலும் என்னால் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். எனக்கு அலுக்காது, சலிக்காது. பார்க்கப் போனா, நான் சொல்லிக் கொண்டு, பேசிக் கொண்டு, எழுதிக் கொண்டு இருக்கிற எல்லாமே ஒரு ஊரை, ஒரு தெருவைச் சேர்ந்தவாளைப் பத்திதான். மீனா, ருக்கு, பட்டு, லலிதா, கெளரிப் பாட்டி, ஆனந்த சர்மா, வைத்தா, ராகவய்யர், கணபதி ஐயர், சங்கர சர்மா இவர்கள் எல்லோருக்குமே ஒருத்தரை ஒருத்தர்க்குத் தெரியும். இவா அப்ப இருந்தது, இப்ப எப்பிடி இருப்பான்னு நான் இப்பக் கற்பனை பண்றது, இவர்களிலே சில பேர் எக்கச் சக்கமா பட்டணத்தின் ‘மெர்க்குரி லைட்’ வெளிச்சத்திலே என்னிடம் வந்து சிக்கிக் கொண்டது, காலத்தினுடைய அடிகளினாலே இவர்கள் வளைஞ்சு போனது, உடைஞ்சு போனது, அடிபடாமல் ஒதுங்கி ஓடிப்போனது, அடிபட்டும் ‘ஒண்ணுமில்லை’யென்னு உடம்பெத் தொடச்சு விட்டுண்டது, எங்கேயோ பட்ட அடிக்கு, எங்கேயோ போய் முட்டிண்டது, சமயத்திலே என்னண்டையே வந்து முட்டிக் கொண்டு குட்டு வாங்கிக் கொண்டது இதைப்பத்தியெல்லாம் எழுதறதிலே எனக்குச் சலிப்பே கிடையாது; அலுப்பே கிடையாது. எனக்கு அவா மேலே அப்படி ஒரு பிரேமை. அவா சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு ரொம்ப ஒஸத்தி!

ஆனால், அவர்கள்லே சிலருக்கு இதுவே அலுத்துப் போச்சுப் போலே இருக்கு… ம்ஹ்ம்! பயமா இருக்குப் போலே இருக்கு… என்னமோ சங்கடப் பட்டுக்கறா, ‘என்ன ஸார், அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியே எழுதிண்டு’ன்னு.

நான் என்ன பண்ணுவேன்? எனக்குத் தெரிஞ்சதைத் தானே எழுதுவேன். சரி. இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு எனக்குத் தெரிஞ்ச ஒரு பூனையைப் பற்றி எழுதப் போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ சலிப்போ பயமோ சங்கடமோ வராது. பூனைகள் கதை படிக்கிறதோ, கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத் தான் ‘ஆஷாடபூதி’ மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரி குணமெல்லாம் நிச்சயம் கிடையாது.

எனக்குப் பூனைகளைக் கண்டால் கொஞ்சம் கூடப் பிடிக்கிறது இல்லை. ஒரு அவெர்ஷன்! சாதாரணமா எனக்கு எந்தச் செல்லப் பிராணிகளையும் பிடிக்காது. அருவருப்பா இருக்கும். சிங்கம், புலி இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்! அதையெல்லாம் பார்த்ததில்லையல்லவா? அதனாலே பிடிக்கும்! பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல் போறது மனுஷ இயல்புதானே? அதுவும் பூனை, நாய், பெருச்சாளி இதையெல்லாம் யாருக்குத் தான் பிடிக்கும்? யாருக்குமே பெருச்சாளி பிடிக்காது! – அப்போவெல்லாம் எனக்கு பொழுதுபோக்கே கொலை பண்றதுதான்.

‘தேமே’ன்னு உக்கார்ந்துண்டு ஒரு கட்டெறும்பைப் பிடிச்சு ரெண்டு காலைக் கிள்ளிட்டு அது ஆடற நடனத்தை ரசிக்கிறது… ஒரு குச்சியாலே அதன் நடு முதுகிலே அழுத்திக் குத்தி, அதெ ரெண்டாக்கி, அந்த ரெண்டு துண்டும் எப்படித் துடிக்கிறதுன்னு ஆராயறது; பல்லியெ அடிச்சு, வால் துடிக்கிறதெப் பாக்கறது. தும்பியெப் பிடிச்சு, வாலிலே நூல் கட்டி, சங்கீதம் பாட வைக்கிறது. மரவட்டை, வளையல் பூச்சி, ஓணான் இதுக்கெல்லாம் அந்தக் காலத்திலே நான் ஒரு யமகிங்கரன்! எங்க தெருவிலே நுழையற எந்த நாயும் என்னைப் பார்த்துட்டா அதுக்கப்புறம் தைரியமா முன்னேறி வராது. அப்படியே வாபஸ்தான்!

ஜெயா மாமி வீட்டுத் திண்ணையில் நான் பாட்டுக்குத் ‘தேமே’ன்னு உக்காந்திண்டிருக்கேன். பக்கத்துலே ஒரு குவியல் கருங்கல். நானே செலக்ட் பண்ணிப் பொறுக்கு சேர்த்து வச்சது. அதோ! தூரத்திலே ஒரு நாய் வரது. இதுக்கு முன்னேயே ஒரு தடவை அதை மூணு காலிலே ஓட வச்சிருக்கேன். உடனே நான் தூணிலே மறையறேன். அடிக்கிறவனுக்கே இவ்வளவு உஷார் உணர்ச்சி இருந்தா, அடிபடுகிற அதுக்கு இருக்காதா? இரண்டு காதையும் குத்திட்டு நிமிர்த்திண்டு சட்டுனு என்னைப் பார்த்துடுத்து! ‘டேய்! அடிப்பியா? நான் பாட்டுக்குப் போயிடறேண்டா’ என்பது போல் ஒரு பார்வை. நான் உடனே அதைப் பாக்காத மாதிரி முகத்தைத் திருப்பிண்டுடறேன். அதுக்குக் கொஞ்சம் தைரியம். அந்த எதிர் வீட்டு வரிசை ஓரமா இரண்டு பின்னங்காலுக்கும் நடுவிலே வாலை இடுக்கிண்டு என் மேலே வச்ச கண்ணை எடுக்காமலேயே நகர்ந்து வரது. என் கையெல்லாம் பரபரக்கறது. பல்லைக் கடிச்சுண்டு என்னை அடக்கிக்கிறேன். இதோ அது எனக்கு நேரே வந்துட்டது… சீ! அந்த வேகமெல்லாம் இப்ப வராது. நான் என்ன பண்ணினேன்னு யாருக்கும் தெரியாது. தெருவையே கூட்டற மாதிரி கத்திண்டு என்ன ஓட்டம் ஓடறது அது! தலையிலே குறி வச்சாதான் காலிலே படும். பட்டுடுத்து! நான் ‘தேமே’ன்னு உக்காந்திருக்கேன்.

சத்தம் கேட்டு ஜெயா மாமி உள்ளேருந்து வரா. ‘சடக்’னு திண்ணையிலிருந்து கல்லையெல்லாம் கீழே தள்ளிடறேன்.

“ஏண்டா, நாயை யாரு அடிச்சது?”

“ஐயையோ, நான் இல்லே மாமி.”

“சரி, யாரையாவது கூப்பிடு. வெந்நீர் உள்ளே ஒரு பெருச்சாளி வெளியே போக முடியாம நிக்கறது. யாரையாவது கூப்பிடுடா அம்பி.”

அவ்வளவுதான் ஒரு விறகுக் கட்டையைத் தூக்கிண்டு நான் போறேன். மாமி கத்தறா. “வேண்டாண்டா, வேற யாரையாவது கூப்பிடு. அது உன் மேலே பாஞ்சுடும்.”

வெந்நீர் உள் மூலையிலே அதைக் ‘கார்னர்’ பண்ணிட்டேன் நான். பெருச்சாளி தலையைத் தூக்கி என்னைப் பாத்து சீறிண்டு நிக்கறது. தலையைக் குறிபார்த்து, ‘நச்’னு ஒரு அடி. சனியன்! தன்னையே பிரதட்சிணம் பண்ணிக்கிற மாதிரி சுத்திச் சுத்தி வெந்நீருள் பூரா ரத்தம் கக்கிச் செத்துடுத்து. ஜெயா மாமி பயந்துட்டாள். நானும் பயந்த மாதிரி “மாமி மாமி”ன்னு கத்தினேன். ஜெயா மாமி ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சிண்டா. “நோக்கு இந்த வேலை வேண்டாம்னு சொன்னேனோன்னா… கருமத்தைப் பார்க்காதே… வா. ராக்காயி வந்தால், கழுவிவிடச் சொல்லலாம்.”

பயந்து நின்னுண்டிருக்கிற என்னை ஆதரவா ஜெயா மாமி அணைச்சுக்கிறாள். பெரியவா அணைச்சுண்டா என்ன சுகமா இருக்கு!

அந்தப் பெருச்சாளி என்னைப் பார்த்துச் சீறலைன்னா எனக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. அது மட்டும் என்னைப் பார்த்துச் சீறிட்டுத் தப்பிச்சும் போயிருந்தால் நான் அழுதிருப்பேன்.

கொலை செய்யறதைத் தவிர இன்னொரு பொழுது போக்கும் எனக்கு உண்டு. அது என்னன்னா, கொலை பண்றதையும், கூறு போட்டு விக்கறதையும் வேடிக்கை பார்க்கறது. அந்த அக்ரஹாரத்துக் கடைசீலே ஒரு திடல் உண்டு. அந்தத் திடல்லே இருக்கிறவாளெல்லாம் என்னமோ ஒரு பாஷை பேசுவா. ஆடு, மாடு, கோழி எல்லாம் வச்சிருப்பா. அங்கே ஒரு கடா மீசைக்காரன் இருப்பான். வெங்கிட்டு, சுந்தரம், உத்தண்டம் இவங்களுக்கெல்லாம் அவனைக் கண்டாலே ‘டபிள்ஸ்’ தான். எனக்கு அவனைக் கண்டா பயமே கிடையாது. அவன் எப்போடா நம்ம தெரு வழியா வருவான்னு காத்துண்டே இருப்பேன். அவன் சாயங்காலம் நாலு மணிக்கு எங்க தெரு வழியா அந்தத் திடலுக்கு திரும்பிப் போவான். நான் அவனையே பாத்துண்டிருப்பேன். அவன் மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு துருப்பிடிச்ச கறுப்பு சைக்கிளிலே அவன் வருவான். அந்த சைக்கிளிலே அவனைப் பார்த்தா ஆடு மேலே ஒரு ஆள் உக்காந்து சவாரி பண்றாப்பலே இருக்கும். சைக்கிள் ஹாண்ட் பார்லே ஒரு காக்கி பை இருக்கும். அதுலெ ரத்தக்கறையா இருக்கும்; ஈ மொய்க்கும்; அது உள்ளே இருக்கற கத்தியோட பிடி மட்டும் தெரியும். நான் பெரியவனானப்புறம் அவனை மாதிரியே மீசை வச்சுண்டுடுவேன். இன்னும் பெரிய கத்தியா வெச்சுக்குவேன். யாரானும் சண்டைக்கு வந்தால், வெட்டிடுவேன். பெரியவனானால் நிச்சயமா மனுஷாளையும் வெட்டுவேன். என்னைக் கண்டு எல்லோரும் பயப்படணும். இல்லாட்டா, கத்தியாலெ வெட்டுவேன். – நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்? அக்ரஹாரத்துப் பூனையைப் பத்தியல்லவா சொல்ல வந்தேன்? பரவாயில்லை. பூனையைப் பத்தி சொல்ல இடம் வந்தாச்சு. சொல்லிடறேன்.

எங்க அக்ரஹாரத்திலே ஒரு பூனையும் உண்டு. ரொம்ப ‘நொட்டோரியஸ்!’ பூனைன்னா, ஒரு சின்னப் புலி மாதிரி இருக்கும். உடம்பெல்லாம் வரி வரியா இருக்கும். இந்தச் சனியனுக்கு அக்ரஹாரத்துலே என்ன வச்சிருக்கோ? பூனை மாமிச பட்சிணிதானே! அது மாமிசம் கிடைக்கிற இடத்தையெல்லாம் விட்டுட்டு, இந்த அக்ரஹாரத்துலே இருக்கு. அதனாலே இந்த அக்ரஹாரத்துப் பூனை கம்பல்ஸரியா சைவப் பூனை ஆயிடுத்து. எனக்கும் அதுக்கும் ஓர் ஒத்துமை உண்டு. நானும் ‘தேமே’ன்னு இருப்பேன். அதுவும் ‘தேமே’ன்னு இருக்கும். நானும் விஷமம் பண்ணுவேன். அதுவும் விஷமம் பண்ணும். நானும் எல்லாராத்துலேயும் போய் விஷமம் பண்ணுவேன். அதுவும் எல்லார் ஆத்துலேயும் போய் விஷமம் பண்ணும்.

ஒருநாள் ஜெயா மாமி ‘ஓ’ன்னு அலறிண்டு சபிச்சா: “இந்தக் கட்டேல போற பூனை ஒரு படி பாலையும் சாச்சுக் கொட்டிடுத்தே…! அந்தப் பெருச்சாளியை அடிச்ச மாதிரி இதை யாராவது அடிச்சுக் கொன்னாக் கூடத் தேவலை.”

ஊஞ்சல்லே படுத்துண்டு விசிறிண்டிருந்த மாமா சொன்னார்: “வாயெ அலம்புடி… பாவம்! பாவம்! பூனையைக் கொல்றதுன்னு நெனைச்சாலே மகாபாவம்!” – நான் ‘தேமே’ன்னு நின்னுண்டு கேட்டுண்டிருந்தேன்.

பெருச்சாளியை அடிச்ச மாதிரி பூனையை அடிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். பெருச்சாளி சீறித்தே – ஆனா, பூனை பாஞ்சு கொதறிப்பிடும் கொதறி… பூனை மொதல்லே பயப்படும், கத்தும்; ஓடப் பார்க்கும்; ஒண்ணும் வழியில்லேன்னா ஸ்ட்ரெய்ட் அட்டாக் தான்!… எனக்கு ஞாபகம் இல்லாத வயசிலே ஒரு பூனை என் வயத்தைக் கீறின வடு இப்பவும் அரைஞாண் கட்டற எடத்துலே நீளமா இருக்கே… சின்னக் குழந்தையா தவழ்ந்துண்டு இருந்த பருவம்… பூனையைப் பிடிச்சுண்டு சர்க்கஸ் பண்ணி இருக்கேன். எக்குத் தப்பா கழுத்தெப் புடிச்சுட்டேனாம்…. சீறிக் கத்திண்டு அது என்னைப் பொறண்டறதாம். நான் ‘ஓ’ன்னு அலறிண்டு அதன் கழுத்தை விடாம நெருக்கறேனாம்…. அம்மா இப்பவும் சொல்லுவா… அந்த வடு இப்பவும் அடி வயத்திலே இருக்கு.

அன்னிக்கி சாயங்காலம் எங்க வீட்டுத் தோட்டத்திலே அந்தப் பூனையை நான் பார்த்தேன். எங்கு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் நடுவே வேலியோரமாப் போய்க்கொண்டிருந்தது அந்தப் பூனை. போற போக்கிலே ஒரு தடவை திரும்பிப் பார்த்தது. நானும் பார்த்தேன். மொறைச்சுப் பார்த்தேன். உடனே அதுவும் கொஞ்சம் உஷாராகி நன்னா திரும்பிண்டு என்னையே மொறைச்சுப் பார்த்தது. நான் அது மேலே பாய்கிற மாதிரி குதிச்சுப் பயம் காண்பிச்சேன். அது பயப்படலே. கொஞ்சம் தரையிலே பம்மி நிமிர்ந்தது; அவ்வளவுதான். ‘இது என்ன பயப்பட மாட்டேங்கறதே’ன்னு எனக்குக் கோவம். ஆத்திரத்தோட நானும் மொறைக்கறேன். அலட்சியமா அதுவும் மொறைக்கிறது… அது ஒரு மெளனமான சவால் மாதிரி இருந்தது. சிவப்பா வாயைத் தெறந்து என்னைப் பார்த்துண்டே… ‘மியாவ்!’..ன்னு அது கத்தினப்போ – அது தன் பாஷையிலே என்னை சவாலுக்கு அழைக்கிற மாதிரியே இருந்தது.

‘அதெல்லாம் பெருச்சாளிக்கிட்டே வெச்சிக்கோ… நம்ம கையிலே நடக்காது.’

‘இரு… இரு. ஒரு நாளைக்கு உன்னைப் பிடிச்சுக் கோணியிலே அடைச்சுத் துவைக்கிற கல்லிலே அடிச்சுக்…’

‘மியாவ் – சும்மா பூச்சி காட்டாதே; முதல்லே என்னைப் பிடிக்க முடியுமா உன்னாலே’ – சட்டுன்னு வேலியைத் தாண்டிடுத்து. அடுத்தாத்துத் தோட்டத்துலே நின்னுண்டு வேலி வழியா என்னைப் பார்த்து மொறைக்கிறது.

‘எங்கே போயிடப் போறே? உன்னைப் பிடிக்கலேன்னா பேரை மாத்தி வெச்சிக்கோ’ன்னேன் நான்.

அதுக்குப் பதில் சொல்ற மாதிரி ஒரு சின்ன மியாவ் – ‘பார்ப்போமா?’ன்னு அதுக்கு அர்த்தம்.

‘ம்… பார்க்கலாம்…’ன்னேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கலை. அந்தப் பூனையும் தூங்கலை. ராத்திரிப் பூரா குடுகுடுன்னு ஓட்டு மேல ஓடறது. இன்னொரு பூனையையும் ஜோடி சேர்த்துண்டு ஒரு ராட்சஸக் குழந்தை அழற மாதிரி ரெண்டும் அலறிண்டு ‘காச்சு மூச்சு’ன்னு கத்தி ஒண்ணு மேலே ஒண்ணு பாஞ்சு பிறாண்டிண்டு… எங்க வீட்டு ஓட்டுக் கூரை மேல ஒரே ஹதம். எங்கேயோ ஒரு ஓடு வேறே சரிஞ்சு ‘பொத்’துனு தரையிலே விழறது. திண்ணையிலே படுத்துண்டிருந்த தாத்தா, தடியை எடுத்துத் தரையிலே தட்டி ‘சூசூ’ன்னு வெரட்டறார். ரெண்டும் ஒண்ணு பின்னாடி ஒண்ணு குதிச்சுத் தெருவிலே குறுக்கா ஓடி ஜெயா மாமி ஆத்துக் கூரையிலே ஏறினதை நிலா வெளிச்சத்திலே நான் நன்னாப் பார்த்தேன்.

அடுத்த நாள் அதை வேட்டையாடிடறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன். ஜெயா மாமி ஆத்து வெந்நீருள்ளே ஒரு தட்டு நிறையப் பாலை வெச்சேன். ஒரு கதவை மட்டும் திறந்து வெச்சிண்டேன். ஜன்னல் கதவை மூடிட்டேன். மத்தியானம் சாப்பிடக்கூட ஆத்துக்குப் போகாமே காத்துண்டிருந்தேன்… கடைசிலே மத்தியானம் மூணு மணிக்குப் ‘பூனைப் பெரியவாள்’ வந்தா…. நான் கிணற்றடியிலிருந்து இவ்வளவையும் பார்த்துண்டே இருக்கேன்… மெதுவா அடிமேலே அடி வச்சுப் பூனை மாதிரி போனேன். ‘அவா’ பின்னம் பக்கம் மட்டுந்தான் தெரியறது. ஒரு தட்டுப் பாலையும் புகுந்து விளாசிண்டிருக்கா. ‘டப்’னு கதவை மூடிட்டேன்… உள்ளே சிக்கிண்ட உடனே பாலை மறந்துட்டுக் கதவைப் பிறாண்டறதே!

“மாமி… மாமி, ஓடி வாங்கோ, ‘பெரியவா’ இங்கே சிக்கிண்டா”ன்னு கத்தறேன். மாமி வந்து பாக்கறா… பூனை உள்ளேயே கத்திண்டிருக்கு.

“என்னடா, வெந்நீர் உள்ளே பூனையெ வெச்சு மூடிட்டா நாம எப்படி உள்ளே போறது? நாம உள்ளே போறச்சே அது வெளியே போயிடாதோ!”

“இப்பத்தான் முதல் கட்டம் முடிஞ்சிருக்கு மாமி. அதிலேயே ஜெயம். நீங்க உள்ளே போங்கோ… கடைசி கட்டத்திலே கூப்பிடறேன்.”

மாமி மனசிலே அந்தப் பெருச்சாளி வதம் ஞாபகம் வரது போல இருக்கு.

“அம்பி வேண்டாண்டா. அதை ஒண்ணும் பண்ணிடாதே. ஜன்மத்துக்கும் மகா பாவம், வேண்டாம்.”

“நான் அதைக் கொல்லலை மாமி. கோணியிலே போட்டுக் கொண்டு போய் வெரட்டி விட்டுடறேன்…”

“ஆமா… வெரட்டிட்டு நீ திரும்பி வரதுக்குள்ளே அது இங்கே வந்து நிக்கும்” – ஜெயா மாமி பரிகாசம் செய்து விட்டுப் போனாள். நான் மனத்திற்குள்ளே நெனச்சுண்டேன்; அதைத் ‘திரும்பி வராத ஊரு’க்கு அனுப்பிச்சுட்டுத் தானே வரப் போறேன்.

அக்ரஹாரத்திலே அன்னிக்கு நான்தான் ஹீரோ! விளையாடும் போது என்னைச் சேர்த்துக்காத பையன்களெல்லாம் அன்னிக்கு என் பின்னாடி வரான்கள். நான் பூனையைக் கோணியிலே கட்டிண்டு போறேன். ‘ஹோ’ன்னு கத்திண்டு என் பின்னாடி பையன்களெல்லாம் வரா. எங்கம்மா வாசல்லே வந்து நின்னுண்டு திட்டறா.

“ஏ, கடன்காரா, கட்டேலே போறவனே…. அழிஞ்சி போகாதே; பூனை பாவத்தைக் கொட்டிக்காதே. ஒரு முடி விழுந்தாலும் எடைக்கு எடை தங்கம் தரணும்பா. உங்கப்பா வரட்டும்… சொல்லி உன்னைக் கொன்னு குழியை வெட்டி…”

அதை நான் காதிலேயே வாங்கிக்கலை. கோணியைத் தூக்கிண்டு தெருக் கோடியிலே இருக்கற மண்டபத்திலே போய் உக்காந்துட்டோம் எல்லோரும்.

“கோணியிலேருந்து பூனையை எடுத்து ஒரு கயித்திலே கட்டிப் பிடிச்சுண்டா, வேடிக்கை காட்டலாம்டா”ன்னு உத்தண்டம் யோசனை சொல்றான். ஆனால், பூனைக்கு யார் கயிறு கட்டறது?

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அந்தக் கடா மீசைக்காரன் இப்போ வருவான். அவன் கிட்டே குடுத்தாப் போறும். அப்படியே கோணியோட வச்சு ஒரு ‘சதக்’… ஆட்டம் குளோஸ்!”

“அவன் கிட்டே நீதான் கேக்கணும்” என்று அவன் வருவதற்கு முன்னாடியே பயப்பட ஆரம்பிச்சுட்டான் சுந்தரம். இந்தப் பையன்களை வெச்சிண்டு இந்தக் காரியம் செய்யறது சரின்னு தோணலை; பயந்துடுவான்கள்.

“டேய்! நீங்கள்ளாம் ஆத்துக்குப் போங்கோ. அவன் வெட்டறதைப் பாத்து பயப்படுவேள். அப்புறம் உங்கம்மா என்னை வைவா!” பையன்களையெல்லாம் வெரட்டறேன்.

“அன்னிக்கு அங்கே ஆட்டை நறுக்கினானே… நீ காட்டினியே… நான் பயந்தேனா?… நான் இருக்கேண்டா.”

“ஆனா, ஒண்ணு… இந்த விஷயத்தை யாரும் ஆத்துலே போய் சொல்லப்படாது. சத்தியம் பண்ணுங்கோ!”ன்னு கேட்டேன்.

“சத்தியமா சொல்ல மாட்டோம்.” – எல்லோரும் சேர்ந்து ஒரு கோரஸ்.

கடா மீசைக்காரனை நாங்களெல்லாம் எதிர்பார்த்துண்டிருக்கோம்.

கடைசியிலே சாயங்காலம் நாலு மணிக்கு ஆட்டு மேலே உட்கார்ந்து ஆள் சவாரி பண்ற மாதிரி தெருக் கோடியிலே அவன் வரது தெரியறது. பையன்களெல்லாம் மண்டபத்துலே ஆளுக்கொரு தூண் பின்னாலே ஒளிஞ்சிண்டான்க. “நாங்கெல்லாம் இங்கேயே இருக்கோம். நீ போய் கேளுடா”ன்னு என்னைத் தள்ளி விட்டான்கள். எனக்கென்ன பயம்?

கடா மீசைக்காரன் கிட்டக்கே வந்துட்டான். நான் ஒரு குட் மார்னிங் வச்சேன். அவனும் எனக்கு ஒரு சலாம் போட்டானே!

அவன் என் பக்கத்திலே வந்து இரண்டு காலையும் தரையிலே ஊணிண்டு சைக்கிள்லேருந்து எழுந்திருக்காமலே நிக்கறான். அம்மாடி… அவன் எவ்வளவு உசரம்! நான் அவனை அண்ணாந்து பார்த்துச் சொல்றேன்:

“ஒரு சின்ன உதவி…”

“அதென்ன கோணியிலே?” – அவன் குரல் கிருஷ்ண லீலாவிலே வர்ற கம்சன் குரல் மாதிரி இருந்தது.

“பூனை… ரொம்ப லூட்டி அடிக்கறது. அதுக்காக அதை கொன்னுடறதுக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்.”

“நீயேவா புடிச்சே?” – நான் பெருமையா தலையை ஆட்டறேன். அவன் மண்டபத்திலே ஒளிஞ்சிண்டிருக்கிற பையன்களையெல்லாம் ஒரு தரம் பார்க்கறான். என்னையும் பார்க்கறான். நான் அந்தக் காக்கிப் பைக்குள்ளே இருக்கற கத்தியோட பிடியையே பார்க்கறேன்.

“வெட்டறதுக்குக் கத்தி வேணுமா?”ன்னு அவன் என்னைப் பார்த்துக் கேட்கிறான்.

“ஊஹீம்…. நீங்கதானே ஆடெல்லாம் வெட்டுவேள். அதனாலே நீங்களே இதை வெட்டணும்.”

“ஓ!”ன்னு யோசிச்சிண்டே அந்தக் கத்தியை எடுக்கறான். பெரிய கத்தி! விளிம்பிலே கட்டை விரலை வெச்சு கூர் பார்த்துண்டே அவன் சொல்றான்:

“பூனையை இதுவரைக்கும் நான் வெட்டினதே இல்லே… ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே… நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா?”

“உவ்வே!… வெட்டிக் குழியிலே புதைச்சுடலாம்.”

“அப்பத்தான் பாவம் இல்லே. நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன்? எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திருக்கிறியா?”

“ஓ, பார்த்திருக்கேனே. நீங்க ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே.”

“மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்ப ஆண்டவனைத் தொளுவறது இல்லையா? அதுதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசு கீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை; அது பாவம்! என்னா சொல்றே?”

“இன்னிக்கு மட்டும் ஒரு தடவை விளையாட்டுக்காக இந்தப் பூனையை வெட்டுங்களேன்.”

அவன் லேசாச் சிரிச்சு, என் மோவாயை நிமிர்த்தி, கையிலே ஏந்திண்டே சொன்னான்: (அவன் விரல் எல்லாம் பிசுபிசுன்னு இருந்தது.)

“வெளையாட்டுக்குக் கொலை பண்ணச் சொல்றியா, த்சு… த்சு…! வெளையாட்டுக்கு வெட்ட ஆரம்பிச்சா, கத்தி பூனையோட நிக்காது தம்பி. நான் உன்னைக் கேக்கறேன்? விளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன?…”

எனக்கு உடல் வெடவெடக்கிறது.

“ம்… அந்தப் பூனை விஷமம் பண்றதே?”

“நீ வெஷமம் பண்றது இல்லியா? பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே. சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே! வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டி வெக்கச் சொல்லு”ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப்! திரும்பிப் பார்க்காமே ஓடிட்டுது பூனை. பையன்களெல்லாம் சிரிச்சாங்க. கடா மீசைக்காரனும் சிரிச்சான். நானும் சிரிச்சேன்.

அன்னிக்கு ராத்திரியெல்லாம் நான் அழுதேன். பூனை தப்பிச்சுப் போயிடுத்தேன்னு இல்லே… நான் விளையாட்டா கொலை செஞ்ச வளையல் பூச்சி, மரவட்டை, தும்பி, ஓணான், பெருச்சாளி, பாவம்! அந்த நாய்… எல்லாத்தையும் நெனைச்சுண்டு அழுதேன்…

நான் இப்ப அந்த அக்ரஹாரத்திலே இல்லை. இப்பவும் அந்த அக்ரஹாரத்திலே அந்த மாதிரி ஒரு பூனை இருக்கும்! இல்லையா?

(எழுதப்பட்ட காலம்: 1968)
நன்றி: அனைத்திந்திய நூல் வரிசையில் நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புது டெல்லி,
1973ல் வெளியிட்டு, இதுவரை பல பதிப்புகள் வெளிவந்துள்ள,
“ஜெயகாந்தன் சிறுகதைகள், – ஜெயகாந்தன்” தொகுப்பு.
 

P – 97

நெடுஞ்சாலை
இணைப்புத் திட்டம்

நாடெங்கும் விளம்பரம்
நாளிதழ் தம்பட்டம்

இட்ட அடி நோக
அடுத்த அடி கொப்பளிக்க

குண்டு குழி ரோட்டில்
குடு குடு மூதாட்டி

          – அப்துல் கையூம்

P – 98

பழுதடைந்த
மனித ஊர்தியின்
தலைமேட்டில்

ஏனிந்த
மைல் கல்..?

ஓஹோ ..
ஓடிய காலத்து
மைலேஜு கணக்கோ..?

          – அப்துல் கையூம்