ஊசியாய் குத்தும் நூல்

lady.jpg

ஒரு
இலக்கிய ரசனை
உடையவனால்தான்
இதுபோன்ற ஒரு படைப்பை
இயற்றிட முடியும் !!!

மெய்யாய்ச் சொன்னால்
உய்…..
நானும் உன்
வாசகன்தான்.

நான் மட்டும்தானா?
ஊஹும்..
நானறியேன் !

உன்
ஒயிலான நடைக்கென்று
ஒரு
வாசகர் வட்டம் !

நீ
வெயிலில் வலம் வந்தால்
இவர்களுக்கு வேர்க்கிறது !

நீ
குடை பிடித்தால்
இவர்கள் நனைகிறார்கள்
மழைச் சாரலில்;
உன்னழகுச் சாயலில் ..

நறுமுகியே..!
நீ
அறிமுகமானதிலிருந்து
பிறமுக மெல்லாம்
வெறும் முகம்தான்

வயப்படுத்தும்
ஒயிலான நடை
உன் நடை !

திரு.வி.க.வின்
தெளிந்த நடையைவிட
திசையிழுக்கும் நடை
உன் நடை !

அண்ணாவின்
அழகு நடையைவிட
அசத்தலான நடை
உன் நடை !

கலைஞரின்
கனிந்த நடையைவிட
கலக்கல் நடை
உன் நடை !

உன்
முகவுரையைக் கண்டு
மோகித்தவன்
நானல்ல ..

உன்
அணிந்துரையைக் கண்டு
அலைபாய்ந்ததல்ல
என் மனம் …

நல்ல
மரபுக் கவிதைக்குப் பிறந்த
புதுக்கவிதை நீ !

இலக்கணமும் நீ
இலட்சணமும் நீ !

இலக்கியமும் நீ
என்
இலட்சியமும் நீ!

உன் உள்ளத்து
உள்ளடக்கம் ..
தன்னடக்கம் ..
எனக்குப் பிடிக்கும்.

உன்
எல்லா பக்கங்களுக்கும்
வாழ்த்துரை
வழங்குவேன் நான்.

உன் மதிப்புரை;
உனக்குத் தெரிய
நியாயமில்லை.

நீ
குறைவாகவே பேசுகிறாய்;
‘ஹைக்கூ’வைப் போல …

உன்
கண்ஜாடை…
கற்பனை விரிக்கிறது;
காட்சிகள் கொடுக்கிறது
படிமங்களைப் போல !

உன்
புன்னகைப் பதிப்புக்கு
விலை மதிப்பில்லை.

படைப்பிலக்கியங்களில்
உன் பெயரை
ஏன் அவர்கள்
போடவில்லை..?
தெரியவில்லை

அனாடமிக்கு
மட்டும்தான்
அகாதெமியோ..?

புத்தகத்திற் கிடையில்
பதுக்கி வைக்கும்
மயிலிறகைப் போல
நானும் உன் புன்னகையை
நம்பிகையுடன்
சேமிக்கிறேன்.

என்னுள்ளம் ..
கன்னிமரா நூலகமாய்
விசாலமாக இருந்தாலும்
உன்
ஒரு நூலுக்குத்தான்
இங்கே இட ஒதுக்கீடு !

நீ என்னை
பாராமல் போகும்
ஒவ்வொரு நொடியும்;
ஒரு யுகமெனக்கு;
என்னே ஒரு
ஆச்சர்யக் கணக்கு ?

உன்
சம்மத வரிகளை
ஒரே ஒரு முறை
தனிமையில் எனக்கு
வாசித்துக் காட்டு..

பொன்னியின் செல்வியே..!
நான்
கல்கியாக
அவதார மெடுப்பேன்
உன்னை
என் வாழ்க்கைச்
சரித்திர நாவலாய்
தொகுக்கும் வரை !

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com