சிக்கலில் தொடங்கி
சிக்கலில் முடிவுறும்
மனித வாழ்க்கை
வாழ்க்கையின் கட்டங்கள்
வரிசையாய் சிக்கல்கள்
பூமி தொடங்கிய போதே
சிக்கலும் துவக்கம்
சாத்தானின் சிக்கலில்
சிக்குண்டான் முதற் மனிதன்
சிக்கலைத் தீர்க்க
சிந்தை தெளிந்தோர்
சிகரத்தை தொட்டோர்
கருப்பையில்
சிக்கியதால்தான்
நீயும் நானும்
வாழ்க்கையின் முடிவே
சுவாசச் சிக்கல்தானே ..?
அப்துல் கையூம்
தவறுகள் எனக்கு
தாராளமாய் பிடிக்கிறது !
சின்னச்சின்ன தவறுகள்
கொள்ளை அழகு
கொலம்பஸைக்
கேட்டுப் பார்
ஒரு இந்தியாவைத்
தேடப் போய்த்தான்
அமெரிக்கா கிடைத்தது
ஒரு தவறான முகவரிதான்
உன்னை அறிமுகம் தந்தது
மோதல் தவறுகள்தான்
காதல் வளர்க்குமாம்
முழுதும் உண்மை
உன் ஒரு பக்கத்து
கன்னக் குழி
படைத்தவனின் தவறோ.. ?
தவறுகள் எனக்கு
தாராளமாய் பிடிக்கிறது
அப்துல் கையூம்
ஆகஸ்ட் 15 ..
அகில இந்திய
அளவில்
அனைத்துப்
பள்ளிகளும்
விடியற்காலையில்
பொடிசுகளை கூட்டி
கொடி குத்தி;
மிட்டாய் கொடுத்து;
“விடுமுறை இன்று
வீட்டுக்குப் போ” என்று
விடை தரும் நன்னாள்
அப்துல் கையூம்