Archive for the ‘ மோதிரக்குட்டு ’ Category

புதிய பார்வை

puthiya-parvai.jpgஅந்த நாள் ஞாபகம்
புத்தகப் பார்வை
கழனியூரன்

வேரின் வாசம்

தற்போது பஹ்ரைன் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் அப்துல் கையூம் தான் பிறந்து வளர்ந்த நாகூர் என்ற ஊரைப் பற்றிய கவிதைகளை எழுதி அக்கவிதைகளை மட்டும் தொகுத்து ‘அந்த நாள் ஞாபகம்’ என்ற அழகிய சிறுநூலைத் தமிழ் இலக்கிய உலகுக்குப் படைத்துத் தந்துள்ளார்கள்.
இடைக்காலத்தில் சிலேடை உலா, அந்தாதி, பிள்ளைத்தமிழ் என்று பல்வேறு சிற்றிலக்கியங்களைப் படைக்கும் மரபு, நம் தமிழ்ப் புலவர்களிடம் இருந்தது. அத்தகைய ஒரு மரபைப் பின்பற்றிக் கவிஞர் இந்நூலைப் படைத்துள்ளார்.
எதுகை, மோனை மற்றும் இயைபுத் தொடையுடன் கூடிய ஆசிரிய விருத்தத்தால்  இக்கவிதைகள் அமைந்துள்ளன. இசையோடு பாடுவதற்கு ஏற்ற வகையிலும் இப்பாடல்கள் திகழ்கின்றன.
கடல் கடந்து வாழும் கவிஞர், தான் பிறந்து வளர்ந்த ஊரின் அமைப்பை, அழகை, அவ்வூர் மக்களின் உணவுப் பழக்க வழக்கத்தை, அவர்கள் அணியும் உடைகளை, அவ்வூர் பெற்றெடுத்த இசைவாணர்களை, புலவர்களை, எழுத்தாளர்களை, அரசியல்வாதிகளை,  நாகூர் தர்ஹாவின் மேன்மைகளை, அத் தர்ஹாவை சுற்றி நடைபெறும் சில அறியாமைசார் பழக்கங்களை, அம் மக்கள் பேசும் வட்டார வழக்கு மொழியை என்று ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளார் இந்நூலில்.
தலை நிமிர்ந்து நிற்கும் தர்காவின் கலசம். அந்தக் கலசத்தின் பிம்பம் அருகில் உள்ள அலை அடிக்கும் குளத்தில் விழுகிறது.  இந்தக் காட்சி கவிஞரை கவிதை எழுதத் தூண்டுகிறது.
கிண்ணமென கவிழ்ந்திருக்கும்
     தர்கா கலசம்
          கிழக்குவாசல் குளக்கரையில்
               பிம்பம் பதிக்கும்”
என்று அக்காட்சியை தன் கவிதை மூலம் காட்டுகிறார். ரசித்து அனுபவிக்க நல்ல கவிதை ஒன்று தமிழுக்குக் கிடைக்கிறது.
தேநீரை அந்த ஊர்மக்கள் ‘தேத்தண்ணி’ என்றும், மிளகு ரசத்தை ‘மொளவுத் தண்ணி’  என்றும் விருந்தை ‘சோத்துக் களரி’ என்ற
வார்த்தையாலும், குழம்பை ‘ஆணம்’ என்றும் அவர்கள் சார்ந்த வட்டார வழக்குமொழி நடையில் பேசுவதையும், இறவாரம், யானீஸ் அறை, கலாரி, பலகட்டு மனைகள், வெண்துப்பட்டி, பசியாறல் (சாப்பிடுதல்), சோறு, சூலி, திறப்பு (சாவி), அசதி (சோர்வு), ஊஞ்சல் பாட்டு, மறவை சோறு, சீதேவி, வாங்கனி (வாருங்கள்), போங்கனி (போங்கள்), அகடம் பகடம், காண்டா (உருளைகிழங்கு), போன்ற எண்ணற்ற வழக்குச் சொற்களை மிகக் கவனத்துடன் இத்தொகுப்பில் கவிஞர் பதிவு செய்துள்ளதால், இத்தொகுப்பு நூல் ஒரு நாட்டார் தரவாகவும் திகழ்கிறது.
நல்லிணக்கம் பேணுகின்ற
     நாகூர் போன்று
          நானிலத்தில் வேறுஒரு
               நற்பதி ஏது?
என்று வினவி தாம் பிறந்த ஊரின் பெருமை பேசும் கவிஞர்,
போலிகளும் இவ்வூரில்
     பிழைப்பது உண்டு
          பொட்டலத்து சர்க்கரையை
               புனிதம் என்று
என்ற கவிதையில் அவ்வூரில் உள்ள மாசு மருவையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
இன்றைய நவீன கவிதை உலகில் மரபான இம்முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
அந்த நாள் ஞாபகம் :
அப்துல் கையூம் (மரபுக் கவிதைகள்);
வெளியீடு : சுடர், 57, லெமர் வீதி
காரைக்கால் – 609 602
பக். 62,  விலை ரூ. 20/=
அக்டோபர்  16-31, 2007    * புதிய பார்வை *   27

Kazhaneeyuran@yahoo.co.in
 

நந்தலாலா

வழினெடுக வரும் வானிலா

– கவிஞர் நந்தலாலா

நீள் கவிதை ‘ஆலமரம்’ என்றால் குட்டிக் கவிதை ‘போன்சாய்’ ஆகும் என்ற புரிதலில் கவிஞர் அப்துல் கையூம் அவர்களின் நல்ல முயற்சியே இந்தத் தொகுப்பு.

சொற்களை வெறும் சொற்களாகவே பயன்படுத்தும் நாம் சாதாரண மனிதர்கள்.

சொற்களுக்குள் சில நேரம் வெடிமருந்தையும் சில நேரம் தேன் சொட்டையும் நிரப்பத் தெரிந்தவர்கள் கவிஞர்கள்.

கண்முன் விரியும் காட்சிகளுக்கு, புலன்களுக்கு புலப்படாத அர்த்தத்தை கவிஞனால் மட்டுமே சொல்ல முடியும். அதனால் அதை ‘படைப்பு’ என்கிறோம்.

‘போன்சாய்’ நல்ல படைப்பு.

போன்சாயை பார்க்கும் நமக்கு முதலில் வருவது ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி. பிறகு சின்ன துக்கம்.

ஆலமரத்தின் அத்தனையயும் அப்படியே சுருக்கமாய் சின்னதாய்.. நம் வீட்டிற்குள். இதில் ஒரு வசதி – முழு மரத்தையும் நம்மால் நம் வீட்டுக்குள் இருந்துக் கொண்டே பார்க்க முடியும்.

ஆனால் – படை ஒதுங்க வேண்டிய ஆலமரம், தன் கம்பீரத்தை இழந்து இப்படி போன்சாய் வடிவில் எனும்போது சின்ன துக்கம் தவிர்க்க முடியாதது.

ஒரு வகையில் மகிழ்ச்சியும் துக்கமும் கலந்தே எல்லாவற்றிலும் இருக்கிறதோ எனத் தோன்றுகிறது.

இனிப்பை அதிகப்படுத்திக் கொண்டே போனால் கசப்பாவதும், சிகப்பை அடர்த்தியாக்கினால் கருப்பாவதும் இயற்கை தந்துள்ள அதிசயம். ஆனால் உண்மை.

காவியங்கள் கடல்கள் என்றால், போன்சாய்கள் நம் வீட்டுக்குள் அலை அடிக்கும் நீச்சல் குளங்கள்.

நீச்சல் குளங்களில் குளித்து, களித்து பழகியவனுக்கு கடலில் குளிக்க ஆசை வரலாம். வந்தால் நல்லதுதான். அது போலவே ‘போன்சாய்’ பேரிலக்கியங்களையும் படிக்கத் தூண்டினால் அதுவே அப்துல் கையூமின் வெற்றிதான்.

வெறும் களிப்பு வாழ்க்கையை அலுத்துப் போகச் செய்யும். துன்பத்தின் மிகையோ சோர்வையே எச்சமாக்கும். இரண்டும் கலக்கும்போது வாழ்க்கை அர்த்தமாகும்.

கை அகலக் கவிதை நூலாம் ‘போன்சாய்’ இந்த அனுபவங்களை அள்ளித் தருகிறது.

இதில் உள்ள கவிதைகளுக்கு தலைப்பில்லை – ‘ஏன் இல்லை’ என்பதற்கு – கவிஞர், பிறக்கும்போது பெயருடனா பிறக்கிறோம் என்கிறார். உண்மைதான். பெயரா மனிதனை நிலைக்கச் செய்கிறது? தலைப்பா கவிதையை வாழ வைக்கும்? கவிதைக்குள் உள்ள கவித்துவம்தான் கவிதையை காலம் கடந்து வாழ வைக்கும்.

இப்படி வாழும் கவிதைகளை ‘போன்சாய்’ நிறையவே தருகிறது. ‘தவறுகள் எனக்குப் பிடிக்கும்’ என்ற கவிதை நமக்குள் வேறு ஒரு கதவைத் திறக்கிறதா இல்லையா? இறகுக்கும் சிறகுக்குமான வேறுபாடு எத்தனை நுட்பமானது.

‘கேள்விக்குறிகள் குனிந்து தேடுவது விடைகளையா?” என்று அப்துல் கையூம் கேட்கும்போது விரியும் கற்பனை எத்தனை சுகமானது.

ஒரு நல்ல கேள்வி பல நூறு பதில்களை விடச் சிறந்தது. ஏனெனில் பதில்கள் நின்று போகும். கேள்விகள் மட்டுமே தொடரும்.

ஒரு கவிஞனுக்கு நடப்பும், நவீனமும் புரிந்துள்ளது என்பதற்குச் சான்று –   “ ஒரு புள்ளியை விட்டாலும் இணையமே திறக்காதே” என்ற புள்ளி கவிதை.

கண்ணுறக்கம் சுமக்கும் கனவுகளின் எடையை இவர் யோசிப்பது எனக்கும் பிடிக்கிறது.

‘நிழல்களை’ – ‘நிஜங்களினால் மிதிபடும் போலி’ எனச் சொல்வதும்;

‘கண்ணீர் அஞ்சலி’ பத்திரிக்கை விளம்பரத்தில் – நல்லவேளை என் பெயர் இல்ல என்று திருப்தி அடையும் மனிதனாய் இன்றைய வாழ்வைச்  சொல்வதும்  புதுமை.

எட்டே சொற்கள் – ‘ஓட்டை’ பற்றிய கவிதை. அடைக்கப்பட வேண்டிய ஓட்டையை அடையாளம் காட்டுகிறது.

வீட்டின் வரவேற்பறையில் உள்ள மீன்தொட்டியை மீன்களுக்கான ‘கண்ணாடி கல்லறை’ என்று இவர் சொல்லும்போது – சுதந்திரம் இழத்தல் சாவதற்குச் சமம் என்ற பார்வை பளிச்சிடுகிறது.

பிறை நிலவை – கழன்று விழுந்து சூரியரதக் குதிரையின் லாடமாய்ச் சொல்வது நல்ல கற்பனை. அதைப்போலவே – மரங்கொத்தி மரத்தில் எழுப்பும் சப்தத்தை நுழையுமுன் அனுமதி கேட்பதாய் சொல்வதும் அழகுதான்.

நடந்து போகும்போது வான்நிலா எப்போதும் நம்மோடே தொடர்ந்து வருவது போல – நல்ல கவிதை எப்போதும் தொடர்ந்து வருவது போல – நல்ல கவிதை எப்போதும் நம்முள் தொடர்ந்து வரும். தொடர்ந்து வரும் கவிதைகள் ‘போன்சாய்’ முழுவதும் உள்ளன.

துண்டு துண்டாய் நறுக்கி மாம்பழம் சாப்பிடுவது சொளகர்யமானதுதான். கைகளின் விரல் இடுக்கெல்லாம் சாறு வழிய; உதட்டையும் மீறி மூக்கு வரையில் சாறு படிய முழுமாம்பழமாய் சாப்பிடுவதும் ஒரு தனி ரசனைதான்.

மாம்பழத்துண்டுகளை தட்டு முழுக்க வைத்துள்ள கவிஞர் அப்துல் கையூம் – முழு மாம்பழம் விரைவில் தருவார்.

பஹ்ரனில் இருந்தாலும் தமிழ் அவரை நம்மோடு இணைக்கிறது. அவரது இதயம் தமிழருக்காய்த் துடிக்கிறது.

நந்தலாலா
மாநிலத் துணைத் தலைவர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  

சமரசம்

samarasam.gif  இங்கே கிளிக்

சமரசம் பத்திரிக்கையின் மதிப்புரை

இதழ் : சமரசம் 1 15 ஆகஸ்ட் 2007
மதிப்புரை வழங்கியது : தாழை எஸ்.எம்.அலீ

நாகூர் என்றவுடன் தர்காவே நினைவுக்கு வரும். அங்குள்ள மினாரக்களோடு புறாக்கள் விளயாடும் காட்சி நெஞ்சுக்குள் பகல் கனவுகளாய் நடமாடும்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பிருக்கும். நாகூருக்கோ பல்வேறு சிறப்புகள். அது அலைவாய்க்கரையூர், தொடர்வண்டித் தொடர் முடியும் ஊர், சோழ மண்டலக் கடற்கரையின் நடுவிலுள்ள ஊர், பிரஞ்சு எல்லையிலுள்ள பாரம்பர்ய வணிகர்களின் ஊர், கலையும், இலக்கியமும் கைகோர்த்து நடக்கும் ஊர் எனப் பல்வேறு சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

இவ்வூரில் பிறந்த கவிஞர் அப்துல் கையூம் ‘அந்த நாள் ஞாபகம்’ எனும் பெயரில் தன் இளமைக் கால நினைவுகளை கைச்செண்டு கவிதைகளாய்க் கொண்டு வந்துள்ள பாங்கு போற்றுதற்குரியது.

ஊர்க்கதைகளை நதி போலவோ, சிற்றாறு போலவோ சொல்லாமல் ஊற்றுச் சுரப்பாக கவிஞர் சொல்லியிருப்பதில் எளிமையும் இனிமையும் பீரிடுகிறது.

தர்காவையும் அதன் பிம்பத்தையும் காட்டுகிறார் பாருங்கள் :

‘கிண்ணமென கவிழ்ந்திருக்கும்

     தர்கா கலசம்

          கிழக்குவாசல் குளக்கரையில்

               பிம்பம் பதிக்கும்’

குளக்கரையில் தர்காவின் பிம்பம்; நம் மனங்களிலோ நாகூரின் பல்வேறு பிம்பங்களைப் பதிக்கும் கவிஞரின் கவிதை பொம்மலாட்டங்கள்.

‘அரபுமொழி கலந்தவண்ணம்

      அருந்தமிழ் உரைக்கும்

           அணங்குகளின் சம்பாஷணை

                அசத்த வைக்கும்’

அங்குள்ளவர்களின் உரையாடல் மட்டுமா அசத்துகிறது. கவிஞரின் கைவண்ணமும் அல்லவா நம்மை அசத்துகிறது !

கைவண்ணத்தின் முன்னோடிகளான படைப்பாளிகளைப் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.

‘காலங்கள் கடந்து நிற்கும்

      ஆபிதீன் பாட்டு

           காதற்காவியம் புனைந்த

                சித்தி ஜுனைதா’

இதயத்திற்கு சுவை தந்தவர்களைப் பற்றிக் கூறிய கவிஞர், நாவுக்குச் சுவை தருவதைப் பற்றியும் கூறுகிறார்.

‘நளபாகம் மிளிருகின்ற

      மறவை சோறு

           நால்வராக உண்பதுவோ

                அதுஒரு பேறு’

மறவை எனும் பெரிய வட்ட ‘சஹனில்’ நாலு பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இன்றும் கடலோரக் கிராமங்களில் உண்டு. அதையும் கவிஞர் ஞாபகப்படுத்துகிறார்.

ஓரிடத்தில் இளமைக்கால பறவை வேட்டையை இயல்பாக சொல்கிறார்.

‘சுங்குத்தான் குழல்ஊதி

      சுட்டக் களிமண்

           சூறாவளியாய் தாக்கி

                சுருண்டிடும் குருவி’

நீண்ட குழலை வாயில் வைத்து சுட்ட களிமண் உருண்டையால் குருவியை வேட்டையாடும் பாங்கும் கடலோரக் கிராமங்களிலுள்ள கலையே. வாய்க்காற்று சூறாவளியாக மாறியதை சொல்லாமல் சொல்வது சுருண்டு விழும் குருவிகள்தான்.

அந்த நாள் ஞாபகங்களை சில கவிதைகள் மட்டும் சொல்லவில்லலை; கவிஞரின்  எல்லாக் கவிதைகளுமே ‘செலுலாய்டு பிலிம்’களாக மாறிச் செல்கின்றன.

‘துயில் காணும் நேரத்திலும்

      தொடர்கதை போன்று

           தோன்றுகின்ற பழங்கதைகள்

                 துரத்துது இன்று’

என நூலின் இறுதிக்கு முன் கூறுவது நமக்குந்தான்.

இந்நூலை மிக விரைவாக படித்து முடித்த நம்மை நூலில் உள்ள அந்த நாள் ஞாபகங்கள் நம்மையும் துரத்துவது உண்மைதான்.

நூலை படித்து முடிக்கும்போது அணிந்துரையில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் கூறியது நெஞ்சில் நிழலாடுகிறது.

“கவிஞர் கையூமுக்கு பார்க்கின்ற கண்கள் இருக்கின்றன; பதிய வைத்துக் கொள்ளும் இதயம் இருக்கிறது; பாட்டாக எடுத்துச் சொல்லும் திறமையும் பழுத்திருக்கிறது.”

ஈரோட்டுக் கவிஞர் பழுத்திருக்கிறது எனச் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நாகூர்க் கவிஞர் நூலின் ஒவ்வொரு கவிதையிலும் மெய்ப்பித்திருக்கிறார்.

அறிமுக உரையில் வாழ்த்துக் கூறும் ஹ.மு.நத்தர்சா “நாகூர் தர்காவுக்கு உண்டு ஒரு அலங்கார வாசல்! ஒட்டு மொத்த நாகூரின் பேரழகை எழுத்துப் பூக்களால் சித்தரித்துக் காட்டும் இவரது பேனாவின் உயரம் கண்டு பிரமித்துப்போய் நிற்கிறது நாகூர் மனாரா” எனக் கூறுவது உண்மை என்பதைக் கவிஞர் கையூம் மெய்ப்பித்துள்ளார்.

நாகூர் மினாராவோடு நம்மையும் பிரமிக்கச் செய்திருக்கும் இந்நூலை வெளியிட்டிருக்கும் ‘சுடர்’ பதிப்பகமும் பாராட்டுக்குரியது. காரைக்கால் சுடரில் நாகூரைக் காணும் வாய்ப்பைப் பெறுங்கள்.

– தாழை எஸ்.எம்.அலீ