Archive for November, 2007
வில்லியம்ஸ் வொர்ட்ஸ்வொர்த்தைப் போல ‘அமைதியாக நினைத்துப் பார்த்து’ – Recollections in tranquility – நாகூருக்கு எழுத்தில் உயிர் கொடுத்திருக்கிறார்.
நாகூரைப் பற்றித் தெரிந்துக் கொள்ள விரும்புபவர்களும், நாகூர்க்காரர்களும் இதை சுவையுடன் ரசிக்கலாம்.
தெரியாதவர்களுக்கு இது தகவல் களஞ்சியம். தெரிந்தவர்களுக்கு இது நேயர் விருப்ப மறு ஒளிபரப்பு.
எனக்கு ஒரு ஆச்சரியம். இவ்வளவு விரிவாகவும், இவ்வளவு சுருக்கமாகவும், இவ்வளவு எளிமையாகவும் எழுத முடியுமா? முடியும் என்று கையூம் நிரூபித்திருக்கிறார். மனசாட்சி உள்ள எந்த எழுத்தாளரும் இவரை மனதாரப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாகூர் ரூமி
போன்சாய்
வாழ்த்துரை
இதய ஈஸிஜி
சிறிதுதான்
உண்மையில்பெரிது.
கடுகு சிறிது;
காரம் பெரிது.
குறள் சிறிது;
பெருமை பெரிது.
வாமனன் குள்ளன்;
ஆனால்அவன்
மூவடிகளால்
மூவுலகையும் அளந்தான்.
பெரிய மரங்களை –
வேர்களை வெட்டியும்
கிளைகளைக் கட்டியும்
சிறிதாக்கி வளர்ப்பது
போன்சாய் கலை.
இந்தக் கலையில் வல்ல
ஜப்பானியன்தான்
வாமனன் போன்று
மூவடிகளால் ஆன
‘ஹைக்கூ’ வை அளித்தது.
இது அவசர யுகம்;
அவசர உணவு;
அவசரப் பயணம்;
எல்லாம் அவசரம்.
நீண்ட கவிதைகளை
நிதானமாகப் படிக்க
நேரமில்லை.
இதை உணர்ந்த
கவிஞர் அப்துல் கையூம்
‘போன்சாய்’ கவிதைகளைப்
படைத்துள்ளார்.
இக்கவிதைகள்
போன்சாய் மரங்களைப் போல
சிறியனவாக இருந்தாலும்
பெரிய கருத்துக்களைப்
பேசுகின்றன.
“இந்தக் கிறுக்கல்கள்
என் இதய ஈஸிஜி” என்கிறார்.
இந்த ஈஸிஜி கிறுக்கல்
அவருடைய
இதய ஓட்டத்தை மட்டுமல்ல
நாட்டின் நோய்களையும்
காட்டுவதாக இருக்கிறது.
அப்துல் ரகுமான்
23.03.06
அந்த நாள் ஞாபகம்
வாழ்த்துரை
அந்த நாள் ஞாபகம்
வாழ்த்துரை
இது ஒரு –
புதுவகைத் தலபுராணம்!
– டாக்டர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்
கவிஞர் நாகூர் அப்துல் கையூம் அவர்களுக்குப் பார்க்கின்ற கண்கள் இருக்கின்றன; பதிய வைத்துக் கொள்ளும் இதயம் இருக்கிறது; பாட்டாக எடுத்துச் சொல்லும் திறமையும் பழுத்திருக்கிறது. குலாம் காதிறு நாவலரின் கொள்ளுப் பேரன் என்று இவரைத் தமிழும் அணைத்துக் கொள்ளுகிறது.
இது ஒரு புதுவகைத் தலபுராணம். ஊரும், மக்களும், வாழ்வும், வரலாறும் பொய்முகம் காட்டாமல் நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கிற விந்தை இதனுள் நிகழ்ந்துள்ளது.
உணவு வகை, உடை வகை, உறவு வகை, எல்லாம் தெள்ளிய தமிழ்நடையில் உலா வருவதோடு ஊரின் வரலாற்றில் ஒளிவிளக்குகளாய்ச் சுடர்விடும், புலவர்கள், புரவலர்கள், மருத்துவர்கள் முதல் அடையாளப்பட மாட்டோமா என ஏங்கும் எளிய நிலை மாந்தரும் சமநிலையில் சித்தரிக்கப்படுவதை இந்நூலின் தனிச்சிறப்பாக என்னால் எடுத்து மொழிய முடியும்.
நாகூர் மக்களுக்கே உரிய சொல்வழக்குகளும் உயிர்த் துடிப்போடு – இச்சிறுநூலைச் சிறந்த நூலாக்கி இயக்குகின்றன.
இந்நூலைப் படிக்கிறவர்களுக்கெல்லாம் ஆசை ஒன்று இப்படி அரும்பும் –
‘நம் ஊரையும் இப்படியொருவர் பாட்டில் படம் பிடிக்க மாட்டாரா?
நம் முகமும் இதில் இடம் பெறாதா ..?’
நல்வாழ்த்துக்களுடன்
தமிழன்பன்
அரிமா நோக்கு – காலாண்டிதழ்
18.09.2007
ஒப்பில்லா ஓர் இறையின் திருப்பெயரால் …
அன்பிற்கினியீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .. நெஞ்சம் நிறைந்த நல்லாசிகள்.
தாங்கள் எழுதிய கவிதை நூல்கள் இரண்டும் படித்து மகிழ்ந்தேன். உங்கள் புலமையான வரிகள் எனக்கு வியப்பையோ ஆச்சரியத்தையோ சற்றும் அளித்திடவில்லை.
இது புலவர் கோட்டை. நாகூரின் அற்புதம். பெரும் புலவர் வா.குலாம் காதிர் நாவலனாரும் அவரின் சமகால பெரும் புலவர்களும், குறிப்பாக மு.மு.யு.முகம்மது நெய்னா மரைக்காயரும், நாகூர் மண்ணில் படைத்துச் சென்றிருக்கும் தமிழ்ப் புலமையும், கவிதைகளும் புதையலாக இப்பூமியில் தோண்டத் தோண்ட வந்துக் கொண்டே இருக்கும்.
தங்களின் “அந்த நாள் ஞாபகம்” கவிதை நூலில் :
“ஒற்றையிலே போகாத
மாதர் பிராட்டி
உடற்மறைக்க அணிகின்ற
வெண் துப்பட்டி
உற்றவரின் துணையோடு
வெளியே செல்லும்
உயர்ந்த கலாச்சாரத்தின்
உறைவிட மன்றோ..?” – என்று கூறியுள்ளதும்,
“கற்றவரும் பின்பற்றும்
கோஷா ஒழுக்கம்” – என்று குறிப்பிட்டிருப்பதும்,
பாட்டுக்கும், புகழுக்கும் தங்களின் இஸ்லாமிய ஞானத்திற்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
அந்த நாள் நாகூர் கால சூழ்நிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள். இத்தாலியரின் ஆட்டுக்கால் சூப்பையும், ஆட்டிறைச்சி “சாப்ஸ்”ஸின் ருசியையும், பாஜிலால் சாஹிபின் ஆஷுரா பஞ்சா கேளிக்கையையும் எழுதி இருக்கலாம்.
இந்த கவிதை நூலை நீங்கள் இன்னும் சிறப்பாக நம் மக்களுக்கு நீங்கள் வழங்க வேண்டுமென்பது எனது ஆசை. இந்த நூலின் மறுபதிப்பில் நான் எழுதி இருப்பவைகளையும், விடுதலை இயக்கப் போராட்ட மாவீரர் தியாகி M.E.நவாப் சாஹிப் மரைக்காயர் அவர்களின் தியாகத்தையும், தனது வாழ்நாள் முழுதும் நகராட்சி உறுப்பினராக இருந்து மக்கள் பணி புரிந்த மா.சூரிய மூர்த்தி செட்டியாரையும், பிரான்ஸ் காலனி காரைக்காலிலிருந்து ஜப்பான் சில்க்குகள் கடத்தப்பட்டு 5000 பியூஜி சில்க்குகளும் 8 அணாவும், கிரேப் சில்க் பூட்டா சேலை ரூபாய் 4.50 க்கும் விற்பனைச் செய்யப்பட்டதையும் சேர்த்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் மேலும் பல்லாண்டு, பல்லாண்டு வாழவும், பல கவிதை நூல்கள் படைத்து வெளியிடவும் எல்லா வல்ல இறைவனிடம் பிரார்த்தனைச் செய்கிறேன்.
‘ஜெய்ஹிந்த்’
இவண்
தங்கள் வளம் நாடும்
மு.யூசுப் ரஹ்மத்துல்லா சேட்
(சமூக நல ஊழியன்)
12/6, சுப்பு செட்டி தெரு
நாகூர் – 611002
(நாகூரின் மூத்த குடிமகன்களில் ஒருவரான ஜனாப் M. யூசுப் ரஹ்மத்துல்லா சேட் பழம்பெரும் காங்கிரஸ்வாதி என்பது குறிப்பிட்டத்தக்கது. அவரது தேசிய உணர்வு கடிதத்தை முடித்திருக்கும் விதத்தில் நன்கு புலப்படுகிறது)
அறிமுக உரை
மனதை மயக்கும் வெளிச்சப் புன்னகை !
நாகூர் – எங்கள் சம்பந்தக்குடி! பெண் கொடுத்தவர்கள், எடுத்தவர்கள்! சுகதுக்கங்களின் சரிபாதி சொந்தக்காரர்கள், நாங்கள்!
காரைக்கால் பிரஞ்சு யூனியன் பிரதேசமாக இருந்தபோது நாகூர் மாப்பிள்ளைமார்கள் கையில் கடவுச்சீட்டைப் பத்திரமாக வைத்திருந்து ஒவ்வொரு முறையும் பலத்த சோதனைக்குப் பிறகு நாடுவிட்டு நாடு பெயர்ந்து இல்லற வாழ்க்கை நடத்தியது, தனிக்கதை!
எப்போது நாகூர் கந்தூரி வந்தாலும் கொடியேற்றம் தொடங்கி பீரோட்டம் முடிய மச்சானின் பங்களா வீட்டில் கூடாரமிட்டு கும்மாளமிட்ட அந்த இனிய நாட்கள் அற்புதமானவை!
ஒவ்வொருவர் மனதிலும் புதைந்துக் கிடந்த ஈரநினைவுகளை ஒரு வெளிச்சப் புன்னகையாய் அள்ளி வந்துள்ளது கவிஞர் அப்துல் கையூமின் அந்த நாள் ஞாபகம்.
வாழ்வாதாரம் தேடி வளைகுடா ஓரம் ஒதுங்கினாலும் பாழும் மனது இறக்கை கட்டிப் பறந்து சொந்த ஊரின் சந்து பொந்துக்களில் நுழைந்து சுகம் அனுபவித்து தன்னிடம் இரகசியமாய் மொழிந்த அதிசயங்களை இந்நூல்வழி பகிரங்கப்படுத்தி மகிழ்கிறார், கவிஞர் நாகூர் அப்துல் கையூம்.
நபிகள் நாயகம் பிறந்த நன்னாளை ஊர் அழைத்து விருந்து வைத்து கொண்டாடி மகிழும் ஊர் நாகூர்! நா விருந்தளிக்கும் நாகூரின் பெருமையை பாவிருந்தளித்துப் பரிமாறும் கவிஞரின் இதயவாசலில் வாழ்த்துப் பன்னீர்ச் செம்புடன் நான்!
முதலிரவு அறையின் மல்லிகை பூச்சரமும், ஊதுபத்தி மணமும் மட்டுமல்ல; வாழ்க்கைப் பாதையில் வழிநெடுக சந்தித்த அத்தனை அனுபவங்களும் அற்புதமானவை எனச் சத்திய வாக்குமூலம் அளிக்கின்றன, இவரது கவிச்சித்திரங்கள்!
ஒரு சின்னஞ்சிறிய அற்புத விளக்கில் எப்படி பூதத்தை அடைத்து வைத்தான் அலாவுதீன்? என்ற வினா இன்றுவரை என் மனதில் எழும்பிக் கொண்டு இருந்தது! ஒரு கையடக்க புத்தகத்தில் ஒட்டுமொத்த நாகூரின் பாரம்பர்ய சிறப்புகளை பட்டியலிட்டுக் காட்டியுள்ள கவிஞர் அப்துல் கையூமின் கைவண்ணத்தைக் கண்ட பிறகு அலாவுதீனை நினைத்து இப்போது ஆச்சர்ய அலைகள் எழுவதில்லை!
அழகான பெண்ணொருத்தி சிரிக்கும்போது அவள் கன்னக்கதுப்பில் தோன்றும் ஒய்யாரக் குழியில் மனம் ஒட்டிக் கொள்வதைப் போன்று, சுனாமிகளால் சூறையாட முடியாத நாகூரின் பேரழகை காட்சிப்படுத்திக் காட்டும் ஒவ்வொரு வரியிலும் சிக்கிச் சிறைப்பட்டு நகர்ந்து வர முடியாமல் தவிக்கிறது இரசனை மிக்க உள்ளம்!
புலவர்க் கோட்டையெனப் போற்றப்படும் நாகூரின் பெருமையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த எழுதப்பட்டுள்ள மெய்ப்புச் சான்றிதழ் – இந்நூல்!
நாகூர் தர்காவுக்கு உண்டு அலங்கார வாசல்! ஒட்டுமொத்த நாகூரின் பேரழகை எழுத்துப் பூக்களால் சித்தரித்துக் காட்டும் இவரது பேனாவின் உயரம் கண்டு பிரமித்துப் போய் நிற்கிறது நாகூர் மனாரா!
உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணின் அழகைத்தான் புலவர்கள் இதுவரை வருணித்துள்ளனர். எல்லாத் திசைகளிலும் நிலைக் கண்ணாடிகள் வைத்து ஒரு மண்ணின் அழகைக் காட்சிப்படுத்திக் காட்டியுள்ள இந்தப் புதுக்கவிஞரின் ஆறாவது விரலை அலங்கரிக்க காத்திருக்கின்றன ஏராளமான கணையாழிகள்!
நல்வாழ்த்துக்களுடன்
ஹ.மு.நத்தர்சா
தமிழ்த்துறை,
புதுக்கல்லூரி
சென்னை – 14
(ஹ.மு. நத்தர்சா அவர்கள் புதுக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர். படைப்பிலக்கியவாதி. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வழங்கியுள்ளார். புதுவையரசின் 1996- ஆம் ஆண்டிற்கான கம்பன் புகழ்ப்பரிசு பெற்றவர். வரலாற்று ஆய்வுநூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வுக் கோவைகளில் இக்கால் இலக்கியம், நாட்டுப்புற
இலக்கியம் குறித்து ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இஸ்லாமிய சிறுகதைகள் குறித்து ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்திய இலக்கியச் சிற்பிகளை அடையாளம் வண்ணம் சாகித்திய அகாதெமி வெளியீட்டு நூல்கள் வரிசையில் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்களை பற்றிய இவர் எழுதிய படைப்பும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.)
தொடர்பு முகவரி :
முனைவர் ஹ.மு. நத்தர்சா
(துணைப் பொதுச்செயலாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம்)
தமிழ்த்துறை, புதுக்கல்லூரி,
இராயப்பேட்டை – சென்னை 600 014
அலைபேசி – 944176646
டாக்டர் பி.மு.மன்சூர்
Retd. Vice Principal
Head of the research Dept of Tamil
Jamal Mohamed College, Trichy
Joint Secy Islamiya Ilakkiya Kazhagam
உங்களின் போன்சாய் நூலை, அவசரமாக கவிக்கோவும், ஆழமாக நண்பர் நந்தலாலாவும் எழுதிய மதிப்புரை முதல் 159 பக்கங்களையும் பலமுறை படித்தேன். உங்கள் மொழியில் சொல்ல வந்தால் மனதை பாதிக்கும் அருமையான பல கவிதைகள்.
அவைகளில் மிகச் சிறந்தது “இறகுகள் – சிறகுகள்”. சிந்தனயைத் தூண்டுவதாக அமைந்திருந்தது. நீங்கள் சம்மதித்தால் நமது கல்லூரி பாடதிட்டம் (பகுதி-1)-ல் இக்கவிதையை இணைப்பதற்கு பரிந்துரை செய்வேன்.
நெஞ்சில் நிலைத்த சில வரிகள் :
இப்படி பல கவிதைகளில் உங்களின் சமூகப் பார்வை பளிச்சிடுகிறது
மரங்கொத்தி அருமையான படிமம்.கடலை போதும், செக்ஸி மரங்கள், இன்னும் சில கவிதைகள் உங்களின் நகையும், குறும்பும் உணர்த்தின.
பேண்ட் ஜிப்புக்காக எழுதிய முதல் கவிஞர் நீங்கள்தான். தேன் நிலவு – அவள் திறந்த புத்தகம், இவன் புத்தகப் புழு. இது போதும். பிற வரிகள் அர்த்தமிழந்து போகின்றன.
போஸ்ட் மேனுக்காக நீங்கள் விடுத்த கோரிக்கை என்னை 36 ஆண்டுகளுக்கு முன்னர் இழுத்துச் சென்றது. அதுதானே படைப்பின் வெற்றி.
போன்சாய் இந்த பாலையில் பூத்த நறுஞ்சோலை!
ஜமால் நந்தவ்னத்தின் பாரிஜாத மலர்!
ஆசிகளுடன்
P.M. மன்சூர்
August 21, 2007
mansurepm@hotmail.com