போன்சாய் – டாக்டர் அப்துல் ரஜாக்
“போன்சாய்” கவிஞனுக்கு …
உன் குட்டிக் கவிதைகளை படுக்கையில் சாய்ந்து படிக்க ஆரம்பித்தேன். “தலைப்பின்றியே போகட்டும் என் கவிதை” என்றாய். இது முதல் பக்கத்திலேயே உன் முகவரி காட்டும் “நெத்தியடி”. படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்; “போன்சாய்” படித்து முடிக்கும் வரை. உன் தமிழ் ஆர்வம் எனக்குத் தெரியும். அது நீரு பூத்த நெருப்பு என்று அறிந்தேன். உன் கவிதைகள் அனைத்தும் தேன் துளிகள் . அதில் நான் அதிகம் சுவைத்தவை :
- டை – அசால்டாய் தொங்கும் ஆங்கில கோவணம்
- கொடியும் குண்டூசியுமாய் குத்த இடம் தேடும் வெற்று மேனிச் சிறுவன்
- இந்தியத் தாய்க்கு கல்லறை எழுப்பிவிட்ட கற்களை சுமந்து வந்த கர சேவகர்கள்
- புதியதொரு நிறமொன்றை கண்டு பிடியுங்கள் – புதிய கட்சி தொடங்க
- கல்யாண வீடுகளில் காலணிகளின் கூட்டணி மாநாடு
- தலைமேட்டில் மைல்கல் – ஓடிய காலத்து மைலேஜ் கணக்கு
- சிலந்தி வலை பற்றிய வருணனை
- சத்துணவு ஆயாவின் சொத்தைப்பிள்ளை
- கண்ணாடிக் கல்லறை – இன்னும் எவ்வளவோ .. ..
அது சரி. முண்டாசுக் கவிஞனின் மீசையைப் பார்த்துமா உனக்கு மீசை மேல் வெறுப்பு..? மீசையா முத்தத்தின் எதிரி..? மீசை செய்யும் குறும்பின் சுவையை நீ அறியமாட்டாய். உன் கிறுக்கல்கள் இதய ‘ஈ.ஸி.ஜி.’ மட்டுமல்ல. உன் இதய ‘எக்கோ’ மற்றும் ‘ஆஞ்சியோகிராமும்’ அதுதான். நீ ஆரிப் நாவலரின் அடுத்த வீட்டுக்காரன் என்பது நிரூபணம். 28 – ஆண்டுகள் பஹ்ரைனில் புதைத்து வைத்த உன் எண்ணங்கள் என்ற கரித்துண்டுகள் “போன்சாய்” வைரங்களாய் மாறியதோ..?
– டாக்டர் அ.அப்துல் ரஜாக்
பெருந்துறை – 17.07.2007
No trackbacks yet.