டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான்
போன்சாய்
வாழ்த்துரை
இதய ஈஸிஜி
சிறிதுதான்
உண்மையில்பெரிது.
கடுகு சிறிது;
காரம் பெரிது.
குறள் சிறிது;
பெருமை பெரிது.
வாமனன் குள்ளன்;
ஆனால்அவன்
மூவடிகளால்
மூவுலகையும் அளந்தான்.
பெரிய மரங்களை –
வேர்களை வெட்டியும்
கிளைகளைக் கட்டியும்
சிறிதாக்கி வளர்ப்பது
போன்சாய் கலை.
இந்தக் கலையில் வல்ல
ஜப்பானியன்தான்
வாமனன் போன்று
மூவடிகளால் ஆன
‘ஹைக்கூ’ வை அளித்தது.
இது அவசர யுகம்;
அவசர உணவு;
அவசரப் பயணம்;
எல்லாம் அவசரம்.
நீண்ட கவிதைகளை
நிதானமாகப் படிக்க
நேரமில்லை.
இதை உணர்ந்த
கவிஞர் அப்துல் கையூம்
‘போன்சாய்’ கவிதைகளைப்
படைத்துள்ளார்.
இக்கவிதைகள்
போன்சாய் மரங்களைப் போல
சிறியனவாக இருந்தாலும்
பெரிய கருத்துக்களைப்
பேசுகின்றன.
“இந்தக் கிறுக்கல்கள்
என் இதய ஈஸிஜி” என்கிறார்.
இந்த ஈஸிஜி கிறுக்கல்
அவருடைய
இதய ஓட்டத்தை மட்டுமல்ல
நாட்டின் நோய்களையும்
காட்டுவதாக இருக்கிறது.
அப்துல் ரகுமான்
23.03.06
No trackbacks yet.