Archive for October, 2007

சந்தோஷ மனைவி

many-faces.jpg
மனைவி …
படு சந்தோஷம் !

கூரை
சொந்தமாயிருந்து;

கொஞ்சுவதற்கு
மழலையும் இருந்து;

கழுத்திலே நகை;
கையிலே பணம்;

கைப்பிடிக்குள்
கணவன் இருந்தால் ..?

மனைவி .. ..
படு சந்தோஷம் !!!

                          அப்துல் கையூம்
                          vapuchi@hotmail.com
                           10.07.2007

ஒளவை சொன்ன மொழியாம்

group.jpg

ஆத்திச் சூடி
ஒளவையே ..!

சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா? என்று
சொல்லாட்சி செய்தவளே..!

காந்தி தேசமென்று
கவிஞன் சொன்னதும்

நீ தானம்மா
என்
நினைவில் வந்தாய்.

அன்று
மகாத்மா காந்தி;

அப்புறம்
இந்திரா காந்தி;

அடுத்து
ராஜிவ் காந்தி

சுட்ட பழங்களாக
அல்லவோ
சுருண்டு விழுந்தார்கள்..?

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com
 

காக்காய்க் கடி

lady-faces.jpg

ஓ நந்தலாலா !

காக்கைச் சிறகினிலே
உன் கருமை நிறம்
கண்ணுக்குத் தெரிந்ததாம்
அந்த கவிராஜனுக்கு.

ஓ ப்ரியசகி !

எனக்கோ … .. ..?

உன்னுடன் நான்
பகிர்ந்துக் கொண்ட

அந்த
காக்காய்க் கடி ..

கடவாய்ப் பல்லில்
காலங் காலமாய்
கனிந்தூறிக்
கொண்டிருக்கும்

அந்த
கமர்க்கட்டு
தித்திப்பு.

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com
 

பள்ளித் தோழி

double-faces.jpg 

ஓ தோழி !

அந்த நொண்டியாட்டம்
இன்றுவரை
என் நினைவுகளோடு
முண்டியடித்துக் கொண்டு
ஒன்றாய் வருவதை
நீ அறிய மாட்டாய் ..!

நெற்றிப் பொட்டில்
செங்கல் சில்லை
சமன் செய்து
காயா? பழமா? என்று
கண்ஜாடை செய்வாய்..!

அது காயல்ல ..
கனிந்த நினைவுகள் !!

அப்துல கையூம்

vapuchi@hotmail.com

நினைவுச் சுள்ளிகள்

suvadu.jpg 

தனிமை வனாந்திரத்தில்

நினைவுச் சுள்ளிகளை

ஒவ்வொரு குச்சியாய்

உட்கார்ந்து பொறுக்குகிறேன்

சுள்ளிக் கட்டு ..

சுமையாக இருந்தாலும்

சுகமாக இருக்கிறது

பழையன கழிதல்

போகியோடு நிற்கட்டும்

நண்பா !

கடந்த கால நினைவுகளை

கந்தலென

பொசுக்கி விடாதே !

நிரம்பிய உண்டியலை

குலுக்கிப் பார்க்கிறேன்

நினைவுக் காசுகளின்

‘கிளிங்’ ‘கிளிங்’ சப்தம்

அந்த நாள் ஞாபகம் ..

அது ஒரு ஆலமரம்

நினைவுகள் எனக்கு

நிழல் தருகிறது.

இளைப்பாறுகையில்

இளகுகிறது மனம்.

இதயத்தின் இறுக்கம்

இளகுகிறது ஒரு கணம்.

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com

ஊசியாய் குத்தும் நூல்

lady.jpg

ஒரு
இலக்கிய ரசனை
உடையவனால்தான்
இதுபோன்ற ஒரு படைப்பை
இயற்றிட முடியும் !!!

மெய்யாய்ச் சொன்னால்
உய்…..
நானும் உன்
வாசகன்தான்.

நான் மட்டும்தானா?
ஊஹும்..
நானறியேன் !

உன்
ஒயிலான நடைக்கென்று
ஒரு
வாசகர் வட்டம் !

நீ
வெயிலில் வலம் வந்தால்
இவர்களுக்கு வேர்க்கிறது !

நீ
குடை பிடித்தால்
இவர்கள் நனைகிறார்கள்
மழைச் சாரலில்;
உன்னழகுச் சாயலில் ..

நறுமுகியே..!
நீ
அறிமுகமானதிலிருந்து
பிறமுக மெல்லாம்
வெறும் முகம்தான்

வயப்படுத்தும்
ஒயிலான நடை
உன் நடை !

திரு.வி.க.வின்
தெளிந்த நடையைவிட
திசையிழுக்கும் நடை
உன் நடை !

அண்ணாவின்
அழகு நடையைவிட
அசத்தலான நடை
உன் நடை !

கலைஞரின்
கனிந்த நடையைவிட
கலக்கல் நடை
உன் நடை !

உன்
முகவுரையைக் கண்டு
மோகித்தவன்
நானல்ல ..

உன்
அணிந்துரையைக் கண்டு
அலைபாய்ந்ததல்ல
என் மனம் …

நல்ல
மரபுக் கவிதைக்குப் பிறந்த
புதுக்கவிதை நீ !

இலக்கணமும் நீ
இலட்சணமும் நீ !

இலக்கியமும் நீ
என்
இலட்சியமும் நீ!

உன் உள்ளத்து
உள்ளடக்கம் ..
தன்னடக்கம் ..
எனக்குப் பிடிக்கும்.

உன்
எல்லா பக்கங்களுக்கும்
வாழ்த்துரை
வழங்குவேன் நான்.

உன் மதிப்புரை;
உனக்குத் தெரிய
நியாயமில்லை.

நீ
குறைவாகவே பேசுகிறாய்;
‘ஹைக்கூ’வைப் போல …

உன்
கண்ஜாடை…
கற்பனை விரிக்கிறது;
காட்சிகள் கொடுக்கிறது
படிமங்களைப் போல !

உன்
புன்னகைப் பதிப்புக்கு
விலை மதிப்பில்லை.

படைப்பிலக்கியங்களில்
உன் பெயரை
ஏன் அவர்கள்
போடவில்லை..?
தெரியவில்லை

அனாடமிக்கு
மட்டும்தான்
அகாதெமியோ..?

புத்தகத்திற் கிடையில்
பதுக்கி வைக்கும்
மயிலிறகைப் போல
நானும் உன் புன்னகையை
நம்பிகையுடன்
சேமிக்கிறேன்.

என்னுள்ளம் ..
கன்னிமரா நூலகமாய்
விசாலமாக இருந்தாலும்
உன்
ஒரு நூலுக்குத்தான்
இங்கே இட ஒதுக்கீடு !

நீ என்னை
பாராமல் போகும்
ஒவ்வொரு நொடியும்;
ஒரு யுகமெனக்கு;
என்னே ஒரு
ஆச்சர்யக் கணக்கு ?

உன்
சம்மத வரிகளை
ஒரே ஒரு முறை
தனிமையில் எனக்கு
வாசித்துக் காட்டு..

பொன்னியின் செல்வியே..!
நான்
கல்கியாக
அவதார மெடுப்பேன்
உன்னை
என் வாழ்க்கைச்
சரித்திர நாவலாய்
தொகுக்கும் வரை !

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com