Archive for October, 2007

P – 145

சிகரெட் கடைதனில்
சின்னச் சின்ன பெட்டி
          சின்னச் சின்ன பெட்டிக்குள்
          சீராய் அடுக்கிய தீக்குச்சி
தீக்குச்சி முனையில் நஞ்சு
நஞ்சு பூசும் பிஞ்சு விரல்கள்
          பிஞ்சு விரல் நகக்கண்ணில்
          தகதகக்கும் துகள்கள்
தகதகக்கும் துகள்களுடன்
கந்தகக் கிடங்கு
          கந்தகக் கிடங்குகளில் நம்
          கண்மணி சிறார்கள்
அப்துல் கையூம்

P – 146

அழுகையும் ஓர் அழகு !
          சந்தோஷங்கள்
          காவியங்கள் ஆவதில்லை
மலை அழுதால் மழை
அது பூமிச் செழிப்பு
          கரம் அழுதால் வியர்வை
          அது கடும் உழைப்பு
கடல் அழுதால் முத்து
அது நல்ல விலை
          மனம் அழுதால் கவிதை
          அது எழுத்துக் கலை
கைகளை ஏந்தி
கடவுளை நினை
 கண்ணீர்ச் சுரக்கும்
          இதயக் கந்தையை
          கசக்கிக் கட்டு
அர்த்தமுள்ள அழுகை
ஆத்மச் சலவவ
          அழத் தொடங்கி
          அழ வைத்து ஓய்வதுதானே
          அற்ப கால் வாழ்க்கை ..?
அப்துல் கையூம்

P – 147

உலகச் ச்ந்தையில்
இந்தியத் தோலுக்கு
குறைந்த ஊதியமாம்
          இவர்களென்ன
          பிரும்மா பதிப்பகத்தின்
பழுப்பு நிற
மலிவுவிலை
பதிப்புக்களோ ..?
           அப்துல் கையூம்

P – 148

உலா போகும்
நிலாப் பெண்
          ஓய்வெடுக்கும்
          ஒப்பனை மாடம்
தென்றல் தாலாட்டும்
பளிங்குத் தூளி
          நட்சத்திரக் கூட்டத்தின்
          ஒத்திகைக் கூடம்
மேகங்கள் தாகம் தீர்க்கும்
தண்ணீர்ப் பந்தல் 
          சூரிய அதிபரின்
          வெள்ளை மாளிகை
அந்த
தாஜ்மகால் !!
          அப்துல் கையூம்

P – 149

இடுப்பில் ஈரம்
அடுப்பில் பூனை
படுத்ததும் தூக்கம்.
          கட்டுக்கட்டாய் பணம்
          கொட்டக் கொட்ட விழிப்பு
          விட்டு விட்டு  தூக்கம்
அப்துல் கையூம்

P – 150

கடற்காரிகையின்
அலைக் கூந்தலில்
கட்டு மரப் பேன்
          அப்துல் கையூம் 

P – 151

சாலையோரம்
சீராய் அணிவகுப்பு
          தொப்புளில்
          எண்கள்
செக்ஸியாய்
மரங்கள்
          நெடுஞ் சாலையில்
          அழகிப் போட்டியோ ..?
அப்துல் கையூம்

P – 152

p-152.jpg 
“எழுதாதே” என
எழுதியிருந்தது
ஏதோ ஒரு சுவற்றில்
         
          யார் எழுதியது ..?
அப்துல் கையூம்

P – 153

p-153.jpg  

கையிலே தராசு

கண்களில் கருப்புத்துணி

          எடை பார்க்கவோ ..?

          கண்ணாமூச்சி ஆடவோ ..?

வழியேதும் புரியாமல்

விழிப்பிதுங்கி பிரமையாய்

          சிலையாகிப் போன

          நீதி தேவதை ..!

                    – அப்துல் கையூம்

P – 154

p-154.jpg 
பூப் பறிக்க
கோடரி எதற்கு ..?
          கடலையே
          போதுமாம் .. ..
பஸ் ஸ்டாப்பில்
கவிதையாய்க்
கலாய்க்கும்
கல்லூரி மாணவன்
          அப்துல் கையூம்