தைலம்

டெரிக் ஓ பிரெயின் குழந்தைகளுக்கு பொது அறிவுப் போட்டி நடத்த பஹ்ரைன் வந்தபோது, ஒரு துண்டுச்சீட்டில் “தைலத்தை கண்டுபிடித்தது யார்?” என்ற கேள்வியை எழுதி நான் தயாராக வைத்திருந்தேன்.  ஒருக்கால் அவருக்கு தெரியாமல் போனாலும் கூட யாரிடத்திலிருந்தாவது சரியான விடை உதித்து வந்து, நம்முடைய சந்தேகம் தீராதா என்ற நப்பாசை மிகுந்திருந்தது.

வேறென்ன? யார் கண்டு பிடித்தார்கள் என்ற உண்மை தெரிந்தால் அவர்களை மனதார திட்டித் தீர்க்கலாமே என்றுதான். என்னுடைய கணிப்பில் சீன தேசத்தைச் சேர்ந்த யாராவது கண்டுபிடித்திருக்க வேண்டும். யார் கண்டது? அது சீன யாத்ரிகர் ஹுவான்-சுவாங் ஆகவும் இருக்கலாம்.

புகையிலை, சிகரெட், மூக்குப்பொடி, சுருட்டு போன்ற கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களையாவது திருத்தி விடலாம். ஆனால் இந்த தலைவலி தைலத்திற்கு அடிமையானவர்களை திருத்தவே முடியாது போலிருக்கிறது.

என் சொந்த ஊர் நாகூரிலும்  அதன் சுற்று வட்டாரத்திலும் பாம் கலாச்சாரம் சற்று அதிகமாகவே தலைவிரித்தாடியது. ஆமாம். டைகர்பாம் கைவசம் வைத்திருக்காத வீடுகளே இல்லை எனலாம்.

இந்தியத் தயாரிப்பிலும் அமிர்தாஞ்சன், சந்து பாம், இமாமி பாம் என்று ஏகப்பட்ட இத்யாதிகள் மலிந்திருந்தன. தைலம் என்ற வார்த்தைக்கு இணையாக நானும் ஆங்கிலத்தில் தேடித்தேடி பார்த்தேன். ஆயில், ஆயின்மெண்ட், லினிமெண்ட், பாம் என்ற வார்த்தைகள் இருக்கிறதே தவிர பொருத்தமான பதம் இல்லவே இல்லை.

வெளிநாட்டில் இருக்கும் தன் மகன் ஊருக்கு வருகின்றான் என்றால் தாய் சொல்லுவாள் “தம்பி வரும்போது குருவித் தைலம், பச்சை தைலம், கிளி தைலம், கோடாலித் தைலம், மீசைக்காரத் தைலம், ஒமேகா தைலம், டைகர் பாம், ஒடுக்கலாம் இதெல்லாம் மறக்காம வாங்கிட்டு வந்துவிடு” என்று அறிவுரை கூறுவாள்.

என் ஊர்க்காரர்கள் தாயகம் திரும்பும்போது பெட்டியில் பாஸ்போர்ட் எடுத்து வைக்க மறந்தாலும் மறப்பார்களே தவிர இந்த அயிட்டங்களை மறக்கவே மாட்டார்கள்.

துபாய், மலேசியா, சிங்கப்பூரிலிருந்து புறப்படுபவர்கள் அங்கு கடைக்காரரிடம் சென்று “ஊருக்கு போகிறேன்” என்று சொன்னாலே போதும். கடைக்காரர் அவராகவே இந்த சாமான்கள் அனைத்தையும் எடுத்து ரெடி பண்ணி வைத்திடுவார்.

மணப்பெண்ணாக புகுந்த வீடு வந்த என் மனைவி சீர் செனத்தியுடன் ஒரு பாட்டில் டைகர் பாமையும் சீதனமாக கொண்டு வந்தாள். நமக்கு பாம் என்றாலே படு அலர்ஜி. கல்யாணமான சில நாட்களில் அவளுக்கு தலைவலி வந்து விட்டது போலும். (இப்படி மூச்சு விடாமல் நான் பேசினால் வராமல் என்ன செய்யும்?)  குன்னக்குடி வைத்தியனாதன் பட்டையாக திருநீரு பூசிக் கொள்வாரே அது மாதிரி பூசிக் கொண்டாள். அப்புறம் நான் ஏன் பள்ளியறை பக்கம் போகிறேன்?

தேன் நிலவுக்கு ஊட்டிக்கு போனோம். தனியாகவா? என்று கேட்காதீர்கள். ஜோடியாகத்தான். எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு புது மனைவியாச்சே ஏதாவது புடவை வாங்கி கொடுக்கலாமே என்று நினைத்து “என்ன வேண்டும்?” என்று ஆசையாக கேட்டபோது அவள் குதுகூலமாக சொன்ன பதில் “இங்கு நீலகிரி தைலம் கிடைக்குமாமே? வாங்கித் தாரீங்களா..? “ஏண்டா கேட்டோம்” என்று ஆகி விட்டது.

இதாவது பரவாயில்லை சிங்கப்பூருக்கு ஒருமுறை சுற்றுலா சென்றோம். அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் சாண்டோசா தீவு, மிருகக் காட்சி சாலை, பறவைகள் பூங்கா, மீன் பண்ணை, ஊர்வன பூங்கா, லிட்டில் இந்தியா என்று எத்தனையோ இடங்கள் இருந்தன. என் மனைவி கறாராக சொன்னால் “எதை நீங்கள் சுற்றி காண்பிக்கிறீர்களோ இல்லையோ எனக்கு கட்டாயமாக டைகர் பாம் தோட்டத்தை சுற்றிக் காண்பித்து விடுங்கள்”. டைகர் பாம் தோட்டத்தில் இலவசமாக அள்ளி கொடுப்பார்கள் என்று நினைத்து விட்டாலோ என்னவோ.

என் உறவுக்காரர் ஒருவர் அவரது அத்தைக்கு பயணத்திலிருந்து வந்த போது நிறைய சாமான்கள் வாங்கி வந்திருந்தார். ஆனால் தைலம் மாத்திரம் கொடுக்க மறந்துவிட்டார். அவ்வளவுதான். பெரிய குடும்ப பகையே ஏற்பட்டு விட்டது.

புத்திசாலித்தனமாக மினியேச்சர் சைஸிலும் தைலம் பாட்டில்களை கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள். பெண்களின் டம்பப்பையில் லிப்ஸ்டிக், கண்ணாடி, சீப்பு, இதர மேக்கப் சாமான்களுடன் இந்த பாழாய்ப் போன தைலக்குப்பியும் பிரதானமாக இடம் பெற்று விடுகிறது.

எந்த இங்கிலீஷ்காரனோ அல்லது காரியோ பையிலே கோடாலித் தைலம் பாட்டிலை வைத்துக் கொண்டு அலைந்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த தைலத்தை இந்தியர்களை கெடுப்பதற்காகவே சீனாக்காரன் கண்டுபிடித்திருக்கான் போலும்.

ஒருமுறை என் நண்பர் தலைவலி மிகுதியால் கடையில் நின்று தலையில் தைலத்தை தடவிக்கொண்டிருக்க, அங்கு வந்த ஒரு அரபி நண்பர் “ஷினு ஹாதி?” (பொருள் : என்ன இது?) என்று கேட்க, அந்த பாட்டில் சமாச்சாரத்தை அப்படியே உள்ளங்கையில் கொட்டி ஏதோ பன்னீரை எடுத்து பூசுவதைப்போல முகம் முழுதும் பூசிக் கொண்டார்.

அதற்குப் பிறகு சொல்லவும் வேண்டுமா? மூன்றாம் பிறையில் க்ளைமாக்ஸ் காட்சியில் கமலஹாசன் குரங்கு சேஷ்டை செய்வாரே அது போல செய்த வண்ணம் “ஹா..ஹா..ஹூ…ஹூ..” என்று குதிக்க ஆரம்பித்து விட்டார். பாவம். இதற்கு முன் இந்த தைலம் சமாச்சாரத்தை வாழ்க்கையில் அவர் பார்த்ததே இல்லையாம். கடைசியில்தான் சொன்னார். போகும்போது கடுப்பாகி “வல்லா ஹிந்தி முக் மாஃபி” என்று திட்டிவிட்டு போயிருக்கிறார்.

ஒருமுறை ரதி மீனா சொகுசு பேருந்தில் சென்னையிலிருந்து நாகூருக்கு பிரயாணம் செய்துக் கொண்டிருந்தேன். என் கையில் நாகூர் ரூமியின் “அமைதியைத் தேடி” என்ற புத்தகம் இருந்தது. லயித்துப் போயிருந்தேன். பின் இருக்கையில் யாரோ தைலத்தை தடவ ஆரம்பித்தார்கள். ஏசி காற்றிலே நெடி கும்மென்று தூக்கியது. பஸ் முழுதும் விஷவாயு பரவியது போல் இருந்தது.

சற்று நேரத்தில் என் முன் இருக்கையில் இருந்த பெண்மணியும் எடுத்து பூச ஆரம்பித்து விட்டார். ஒட்டுவார் ஒட்டி என்பார்களே அது இதுதானோ?
நன்றாக இருந்த எனக்கும் தலைசுற்றுவதைப் போல் ஓர் உணர்வு. மற்றவர்கள் பூசும் தைலத்தை முகர்ந்துக் கொண்டு பயணம் செய்வதை விட நாமே எடுத்து பூசிக் கொள்ளலாமே என்றிருந்தது. இனிமேல் எங்கே அமைதியை தேடுவது? புத்தகத்தை எடுத்து பேசாமல் மூடி வைத்து விட்டேன்.

சில நாட்களுக்கு முன் என் ஏழு வயது மகள் மோனா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். உலகம் சுற்றும் வாலிபன் படம் ஓடிக் கொண்டிருந்தது. டைகர் பாம் தோட்டத்தை சுற்றிச் சுற்றி எம்.ஜி,ஆர், “சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா” என்று பாடிக் கொண்டிருந்தார். மோனா மிகவும் ரசித்தபடி காட்சியில் மூழ்கியிருந்தாள். நான் ஓடி வந்து டிவியை நிறுத்தி விட்டேன். மகள் அழுதுக் கொண்டே தாயிடம் சென்று முறையிட, கனல் தெறிக்க வந்து “டிவியை ஏன் ஆஃப் செய்தீர்கள் என்று என் மனைவி கேட்க, என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் ‘ஆடு திருடிய கள்ளன்’ போல் முழி முழி என்று முழித்தேன்.

தலைவலி வந்தால் தலையில் எரிச்சல் ஏற்படும், பாராஸிடமால் மாத்திரை சாப்பிட்டால் ஓடியே போய் விடும். இந்த பாம், தைலம் சமாச்சாரங்கள் இன்னும் எரிச்சலை ஏற்படுத்தி விடுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை. சின்ன எரிச்சலை பெரிய எரிச்சல் விழுங்கி விடுவதால், நிவாரணம் கிடைத்து விட்டதைப் போல் ஒரு போலியான உணர்வு. அவ்வளவேதான்.

இப்படி நான் சொல்லுவதால் யாராவது என்னை நம்புவார்களா என்றால் நிச்சயம் நம்பப் போவதில்லை.  ஒன்று மட்டும் நிச்சயம். இந்த உலகம் உள்ளவரை தைலத்தின் மோகம் அடங்கப் போவதில்லை. அதுவரை என்னைப் போன்றவர்கள் சகித்துத்தான் ஆக வேண்டும்.

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com
 

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: