சட்டுவம்

நான்தான் சட்டுவம் பேசுகிறேன். சட்டுவம் எப்படிப்பா பேசும்? என்றெல்லாம் குறுக்கு கேள்வி கேட்கக் கூடாது. சுட்டி டிவியிலே ஆடு, மாடு, கோழி, குதிரையெல்லாம் டயலாக் எடுத்து விடலாம். ஈசாப் நீதிக் கதையிலே முயல், நரி, தவளைகள் யாவும் பேசலாம். ஆனால் சட்டுவமாகிய நான் பேசக்கூடாதா? இது என்னப்பா அநியாயம்? 

நான் எங்கே பிறந்தேன்? எங்கே வளர்ந்தேன்? என்று சரியாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால் தற்போது நாகூர் தர்கா அலங்கார வாசலுக்கு எதிரில் உள்ள பாபா பாய் கடையில் புரோட்டா மாஸ்டருடைய கையில் மாட்டிக் கொண்டு முழி முழின்னு கிடந்து முழிக்கிறேன். மனுஷன் என்னை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்துகிறார் என்பதை அறிந்தால் நிச்சயம் நீங்கள் எனக்காக ஒரு சொட்டு கண்ணீராவது விடுவீர்கள். 

நாகூரில் கொத்துப் புரோட்டா என்ற ஒரு அயிட்டம் உண்டு. வெளியூர்க்காரர்கள் நாகூர் வந்தால் இதை இங்கே சாப்பிடாமல் போக மாட்டார்கள். அதற்காக நான் ஆடுகிற ஆட்டம் இருக்கிறதே? அப்பப்பா.. புரோட்டா மாஸ்டர் இன்னொரு சட்டுவத்தையும் எனக்கு ஜோடியாக ஏந்திக் கொண்டு ‘தகதிமி தக தை’. ‘தகதிமி தக தை’ என்று நடனமாட வைப்பார். 

சும்மா சொல்லக் கூடாது. அவரது  நட்டுவாங்கத்தில் நான் நன்றாகவே நடனமாடக் கற்றுக் கொண்டேன். அந்த சுதிலயம், நடனபாவம், நடன முடிவில் முத்தாய்ப்பான அந்த சங்கதியுடன் கூடிய  முத்திரை இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்கென்றே சிலபேர்கள் கடைக்கருகே கூடி விடுவார்கள்.  

அதுவும் வெளிநாட்டு ஆசாமிகளாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்த்ததுபோல் ‘ஆ’.. வென்று வாயைப் பிளந்துக் கொண்டு நின்று விடுவார்கள். 

நான் ஜோடி சேர்ந்து ஆடுகையில் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வைஜயந்திமாலாவும், பத்மினியும் இணைந்து போட்டி நடனம் ஆடுவது போல் பிரமாதமாக இருக்கும்.

அப்போது கடை முதலாளி பாபா பாயின் முகத்தை உன்னிப்பாக கவனிப்பேன். பி. எஸ், வீரப்பா பாணியில் ஒரு விதமான கலாரசனையோடு தலையாட்டியவாறு ரசித்துக் கொண்டிருப்பார். ‘வசிஷ்டர் வாயாலே பிரும்ம ரிஷி பட்டம்’ வாங்கியது போன்ற ஒரு ஆத்ம திருப்தி ஏற்படும். என் பார்வைக்கு அவர் தொப்பி அணிந்த சுப்புடு போல காட்சி தருவார். இன்னும் உற்சாகத்தோடு நான் குதித்து குதித்து ஆடுவேன்.  

இன்றைய பரதத்தை ‘தஞ்சாவூர் நால்வர்’ என அழைக்கப் படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் உருவாக்கினார்களாம்.

அதனால்தானோ என்னவோ குறிப்பாக தஞ்சை மாநிலத்தில் என்னை ஆளாளுக்கு இப்படி ஜதி போட்டு நாட்டியம் ஆட வைக்கிறார்கள்.  நான் சலங்கை கட்டாத பத்மா சுப்ரமண்யம், சேலை கட்டாத ருக்மிணி தேவி  என்று எனக்கு நானே முதுகில் சபாஷ் போட்டுக் கொண்டாலும் அது மிகையாகாது.  

டிஸ்கோ சாந்தி, ஜெயமாலினி எல்லாம்  ஆடுவாரே அது மாதிரி ‘தையா தக்கா’ என்று காலில் சுடுதண்ணீரை கொட்டிக் கொண்டதைப்போல் கிடந்து நான் குதிப்பதில்லை. என்னுடைய ஆட்டத்தில் ஒரு நளினம் இருக்கும். கலையம்சம் இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மோலாக தாளம் தப்பாமல் சீராக ஆடுவதற்கு கடும் பயிற்சி எடுக்க வேண்டும்.   சில ஊர்களில் சட்டுவத்திற்கு பதிலாக எவர்சில்வர் டம்ளரைக் கொண்டு கொத்துப் புரோட்டா போடுவதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.

பாபா பாய் கடையில் நம்முடைய பொழப்பு இருக்கிறதே? அதை ஏன் கேட்கிறீர்கள்? தொடர்ச்சியாக 24 மணி நேர வேலை.  நட்டநடு ராத்திரியில் ஒரு மணிக்கு, இரண்டு மணிக்குக் கூட யாராவது வந்து  “ஓய்.. சூடா ஒரு கொத்துப் புரோட்டா போடுங்கனி” என்று பந்தாவாக ஆர்டர் கொடுப்பார். எப்படித்தான் இவர்களுக்கு செரிமானம் ஆகிறதோ?  அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.  

போதாத குறைக்கு புது மாப்பிள்ளைக்கு வேண்டி இவ்வூரில் ஜாமப் பசியாறல் என்று நடுராத்திரியில் விருந்து வேறு படைப்பார்கள். தெம்புக்காகவாம். அதிலும் இந்த கொத்துப் புரோட்டா ஒரு முக்கியமான பங்கு வகிக்கும்.  

 “ஏண்டாப்பா… உனக்கு இந்த ஒரு அயிட்டத்தை விட்டா வேறு உணவு வகையே தெரியாதா?” என்று நான் அலுத்துக் கொள்வதுண்டு. யாராவது புரோட்டா ஆர்டர் கொடுத்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிக ரிஸ்க் எடுக்காமல் அசல்ட்டாக புரோட்டாவை ஸ்டைலாக புரட்டி புரட்டி போடுவதோடு நம்முடைய வேலை முடிந்து விடும்.   

ஆனால் கொத்துப் புரோட்டா என்று சொல்லும் போது அப்படி இல்லையே? அலாரிப்பு, ஜதிஸ்வரம், ஸப்தம், பாதவரணம், தானவர்ணம் என்று ஆலாபனையோடு மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் என் நாட்டியம் குச்சிப்புடி, குறவஞ்சி, தில்லானா என்று தொடர்ந்து இறுதியில் ‘டண்டணக்கா டண்டணக்கா’ என்று டப்பாங்குத்தில் போய் முடியும்.  

ஆட்டம் முடிவதற்குள் டங்குவார் அறுந்துவிடும். டங்குவார் என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்காதீர்கள்.  எனக்கு சொல்ல வராது. அகராதியிலும் அதற்கான அருஞ்சொற்பொருள் கிடையாது. எல்லோரும் சொல்லுகிறார்களே என்று நானும் பேச்சுக்கு சொல்லி விட்டேன். பெண்டு கழன்றுவிடும் என்று சொல்வார்களே, அதுமாதிரி ஒரு அர்த்தம்.

நீங்களே சொல்லுங்களேன். விடிய விடிய தொடர்ச்சியாக ஏதோ கின்னஸ் சாதனைக்காக ஆடுவதுபோல் ஆடினால் உடம்பெல்லாம் ஆட்டம் கண்டு விடாதா? 

என்னுடைய புரோட்டா மாஸ்டர் இருக்கிறாரே? அவர் ஒரு சுரண்டல் பேர்வழி. ஆமாம். சிலசமயம் என்னை வைத்து தவ்வாவை போட்டு ‘சரக் சரக்’கென்று சுரண்டுவார். “அட.. கூறுகெட்ட ஜென்மங்களா.. ஒரு நடனக் கலைஞனை துப்புரவு தொழிலாளி ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணுறீங்களே” என்று ஆத்திரம் ஆத்திரமாக வரும். 

ஒருசமயம் சோத்துச் சீட்டு கொண்டு வந்த ஒரு பிச்சைக்காரன் பசி வேதனையில் ஒரு புரோட்டா கூடுதலாக கேட்கப் போக, இந்த மாஸ்டர் அடிப்பதற்காக என்னை எடுத்து ஓங்கி விட்டார், “அடப்பாவிகளா என்னை கொலைகாரனாக்கி வேடிக்கை பார்க்காதீங்கடான்னு“ என்று பதறிப்போய் கத்தி விட்டேன். ஆனால் ஓசைதான் வெளியே வரவில்லை. 

புரோட்டா மாஸ்டர் மீதுதான் எனக்கு கோபமேயொழிய கடை முதலாளி பாபா பாய் மீது எனக்கு கோபமே கிடையாது. மாறாக ஒரு அளப்பரிய பாசம். என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய சீதேவியல்லவா?

“சாலிஹான சந்தனக்கட்டை” என்று ஊரார் சிலர் அவரை புகழும்போது எனக்கு பெருமையாக இருக்கும்.  ஒருநாள் ப்ளேட் கழுவுகிற சிறுவன் வேலைக்கு வரவில்லை. முதலாளியே எழுந்து என்னருகில் வந்தார், பாசமுடன் தடவிக் கொடுத்து, அவரே தன் கைகளால் என்னை கழுவி சுத்தம் செய்து வைத்தார். எனக்கு புல்லரித்துப் போய் விட்டது.  

அவருக்காக எப்போதுமே விசுவாசமாக நாம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால்தான் சில சமயம் புரோட்டா மாஸ்டர் என்னை தோசைக்கல் மீது கொதிக்க கொதிக்க வைத்து விட்டு போகும்போது கூட பொறுமையாக சகித்துக் கொண்டிருந்தேன்.  

இடையில் சில நாட்கள் பாபா பாய் கடைக்கு வரவில்லை. காய்ச்சல் வந்து வீட்டில் இருக்கிறார் என்று சொன்னார்கள். துடிதுடித்துப் போய் விட்டேன். கடைக்கு திரும்ப வந்து அவரது ஆசனத்தில் அமர்ந்தபின்தான் நான் நிம்மதி அடைந்தேன்.  

அந்த வேளையில், ஒரு இளைஞன் வந்து “ஜதப்பா, சுள்ளாப்பா ஒரு கொத்துப் புரோட்டா போடுங்க சிங்கம்” என்று குசும்பாக ஆணையிட்டான். ஆடுவதற்கு தயாரானேன்.  தோசைக்கல் மீது அரங்கேறியதும் “நலந்தானா.. நலந்தானா.. உடலும் உள்ளமும் நலந்தானா” என்ற தாளத்துக்கேற்றவாறு ஆடி பாபாபாய் மீது நான் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிக்காட்டிக் கொண்டேன். அதனை அவர் புரிந்துக் கொண்டாரா என்பதை திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.  

வோறொரு நாள் எனக்கும் ஆணம் (கொழம்பு) சட்டியில் ‘அக்கடா’ன்னு கிடக்கின்ற கரண்டிக்கும் இடையே வாக்குவாதம் முற்றி விட்டது.

“ரொம்பத்தான் நீ அலட்டிக்கிறே” என்று அது என்னை சொல்லப் போக, நானும் பதிலுக்கு வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டேன்.

‘தகதக’வென்று கொதிக்கின்ற தோசைக்கல்லுக்கு மேலே நின்று தாளம் தப்பாமல் அது நடனமாடிப் பார்க்கட்டுமே? அப்போது புரியும் என்னோட கஷ்டம்.  

இதே மாதிரி ஒரு சமயம் ராக்கெட்டை பார்த்து விமானம் கேட்டதாம். “நீ எப்படி இவ்வளவு வேகமாக விருட்டென்று பறக்கிறாய்?” என்று. அதற்கு ராக்கெட் சொன்னதாம் “உனக்கு பின்னாடியும் யாராவது நெருப்பு பத்த வச்சாங்கன்னு வச்சுக்கு அப்புறம் நீயும்தான் என்னை மாதிரி துண்டைக் காணோம் துணியைக் காணோமுன்னு பறப்பே” என்று. 

மாரியம்மன் கோவிலில் தீ மிதி செய்கின்ற பக்தர்களைப்போல தினமும் நான் நெருப்பு மீது நின்று ஆட்டம் போடுகிறேன். கழுத்தில் மாலை கிடையாது. (அது ஒன்றுதான் குறைச்சல்) 

என்ன வாழ்க்கை இது? நமக்கு விடிவுகாலமே வராதா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்குவேன். நம்மை யாராவது கடத்திக் கொண்டு போய் விட மாட்டார்களா? நாம் இரண்டாக உடைந்து எதற்கும் லாயக்கில்லாமல் போய் விட மாட்டோமா? என்றெல்லாம் கூட நினைத்துப் பார்ப்பதுண்டு. 

பாபா பாய் கடையை விளம்பரம் செய்வதற்கும், அவரது வியாபரத்தை பெருக்குவதற்கும் நான் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறேன் என்று சொன்னால் அது பொய்யல்ல.  

எப்படி என்று கேட்கிறீர்களா? ‘டக்டக் டட டட’, ‘டக்டக் டட டட’ என்று நான் ஆடும்  ஜதியோசையில் அந்த வழியே செல்பவர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு வந்து கொத்துப் புரோட்டா ஆர்டர் செய்வார்கள்.

பெருமைக்காகச் சொல்லவில்லை. அடியேனுடைய நடனத்தில் அப்படியொரு ஈர்ப்புச் சக்தி. 

விஜய் நடித்த படத்தில் ஒரு பாட்டு வந்தது. “தொட்டபட்டா ரோட்டு மேலே முட்டை பறாட்டாநான் தொட்டுக்கிட சிக்கன் தரட்டா” என்று வரும். தொட்டபட்டா என்பது ஊட்டியிலே இருக்கின்ற மலை உச்சி. அங்கே எந்தக் கடையிலே முட்டை புரோட்டா போடுகிறார்கள்?

“பாட்டு எழுதுனா இவர்களுக்கெல்லாம் யதார்த்தமான முறையில் எழுதவே வராதா?” என்று நான் மனம் புழுங்கிப் போவதுண்டு. 

ஒருநாள் கந்தூரி வரப் போவதாக கடையில் பேசிக் கொண்டார்கள். எனக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. கந்தூரி வந்தால் அவ்வளவுதான். ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்க வேண்டும். இரவு பகல் எந்நேரமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். யாராவது “கொத்து..” என்று சொல்ல வாயெடுத்தாலே புரிந்துக் கொள்வேன், இன்று நம்முடைய கதை கந்தல் என்று. 

எல்லாவற்றிற்கும் மேலாக கந்தூரி வைபவத்தின் கடைசி நாளாக கொடியிறக்குகின்ற தினம் வரும். அன்றைய தினம் எல்லோரும் தங்கள் வீட்டுக்கு ஒரு டஜன் இரண்டு டஜன் என்று கொத்துப் புரோட்டா பார்சல் வாங்கிக் கொண்டு போவார்கள்.

இது யார் ஆரம்பித்து வைத்த பழக்கமோ தெரியவில்லை. அன்றைய தினம் ஊர் முழுக்க கொத்துப் புரோட்டா வாசம் கமகமக்கும். கடைசியில் நாள் முழுவதும் கஷ்டப்படுவது நானாகத்தான் இருக்கும்.   

ஒரு நாளாவது நமக்கு விடுமுறை கிடைக்காதா? ஓய்வு எடுக்க வாய்ப்பு வராதா? என்று தவியாய்த் தவிப்பேன். அதற்காக நான் செய்யாத வேண்டுதல் கொஞ்சநஞ்சமல்ல. 

அந்த நாளும் வந்தது. அன்று என்னை எடுத்து சீண்டுவதற்கு யாருமே வரவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரே ஆச்சரியமாக இருந்தது.

சற்று நேரத்திற்குப் பிறகு “இன்று கடை விடுமுறை” என்று ஒரு போர்டை கொண்டு வந்து யாரோ தொங்க விட்டார்கள். விசாரித்துப் பார்த்தபோது என் இருதயமே நின்று விடும் போலிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

ஆம். கடை முதலாளி பாபா பாய் மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டாராம். ‘எவன் உயிர் கொடுத்தானோ அவனே மீண்டும் எடுத்துக் கொண்டான்” என்று பொருள்படும் ஒரு இறை வசனத்தை கடை ஊழியர்கள் மொழிந்தார்கள்.   

நான் விடுமுறை வேண்டும் என்று வேண்டுதல் புரிந்தததென்னவோ உண்மைதான். ஆனால் இதுபோன்ற ஒரு விடுமுறையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.

பாபா பாய் பரிவோடு தடவிக் கொடுத்த என் தேகத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். எனக்கு முதலாளியாகவும், ஒரு நல்ல ரசிகராகவும் இருந்த ஒரு ஜீவனை இழந்து விட்டேன்.  

அதற்குப் பிறகு நான் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தபோதும் புலம்புவதில்லை. சமாளித்துக் கொள்கிறேன். எதையும் தாங்கும் இதயத்தை பாபா பாயின் மரணம் எனக்கு தந்து விட்டது.  கருமமே கண்ணாக இரவும் பகலும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறேன்.  

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com

    • nagorenaushad
    • February 16th, 2008

    sattuvathai vaithu nagoorin perumai i ippadium sollamudi u ma…?!!!!!!!!!!!! superb

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: